வார இறுதிகள் எல்லாம் இதிலேயே கழிய, ஏகப்பட்ட வேலை சுணங்கிப் போனது. இறையருளால் விழா இனிது நடந்து முடிந்தது. அடுத்தடுத்து வரக்கூடிய பங்கேற்பாளர்களுடன் ஓடி, அவர்களை தயார் செய்து கொண்டிருந்ததில் பாதி நிகழ்ச்சிகள் சரிவர பார்க்கவே முடியவில்லை. இரு மகளிர் நடனங்களை மட்டும் எனக்குரிய "கலை" ஆர்வத்தால் ஓடி வந்து மேடைக்கு முன்புறம் நின்று பார்த்தேன்.
இது முடிய அடுத்து, இந்தியப் பயணத்துக்கான முஸ்தீபுகள். என் தமக்கையின் மகள் திருமணத்திற்காக மே 21 முதல் ஜூன் 18 வரை இந்தியாவில் இருப்பேன்.
இதை தவிர அதே விடுமுறையில் மீனாக்ஷி சங்கர் திருமணத்தையும் கண்டு களிக்கலாம் என்றொரு திட்டம் உண்டு. அதைத் தவிர பெரிய திட்டங்கள் ஏதுமில்லை. ஐகாரஸ் பிரகாஷ்/நண்பர்கள் ஃப்ரியாக இருந்தால், ஒரு தாகசாந்திக்குப் போய் கலாய்க்கலாம் என்ற எண்ணம் உண்டு.
ஸார் ஃப்ரீயா என்று தெரியவில்லை
மற்றபடி வேறென்ன....உங்கள் எல்லோரையும் போலவே நானும் தேர்தல் முடிவுகளை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் எண்ணத்திற்கு மாறாக கலைஞர் கூட்டனி ஆட்சி அமைக்கும் என்று ஆருடங்கள் கூறி வருகிறார்கள். ஆரம்பத்தில் அதிமுக ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அம்மா நடத்திய அரசியல் ஆள்பிடி வம்புகளும், வைகோவின் அசிங்க அரசியலும் கலைஞர் மீது பரிதாபத்தை உண்டாக்கி விட்டது. கிட்டத்தட்ட ஏகப்பட்ட பேருக்கு இத்தகைய மனமாற்றம் நிகழ்ந்து இதனால் திமுகவின் பக்கம் வெற்றி வந்திருக்கிறது. கலைஞர் மீது, அவருடைய குடும்ப ஆட்சி மீது, பேரனுக்கு அவர் தந்திருக்கும் முக்கியத்துவம் மீது எனக்கு ஏகப்பட்ட விமரிசனங்கள் இருந்தாலும், தேர்தல் களத்தில் அந்தக் கிழவர் சுழன்றாடிய வேகத்தைக் கண்டு நிஜமாகவே பிரமித்துப் போனேன். இந்த வயசுக் கிழவர்கள் எல்லாம் மாயவரத்தில் கோவணம் அவிழ்வது கூடத் தெரியாமல் நடந்து கொண்டிருக்க, மைக்கைப் பிடித்துக் கொண்டு ஏரியாவுக்கு ஏற்றபடி, கூட்டத்துக்கு தக்கபடி, ஒரு பக்கா தேர்தல் அறிக்கையைப் போட்டு, அதை எதிர்க்கட்சியையும் ஒத்துக் கொள்ள வைத்து , எல்லோருடைய கவனத்தையும் தன் பக்கம் திருப்பி, இந்தத் தேர்தலின் நாயகராகிப் போனார். எது அவரை இயக்குகிறது???. எது அவரை இந்த அளவுக்கு உசுப்புகிறது என்று தெரிந்து கொள்வது நமது அரசியல் கட்சிகளின் இளந்தலைமைகளுக்கு முக்கியம்.

அவருடைய உழைப்புக்கும், வைகோ என்கிற கேவலன் செய்த துரோகத்துக்கும் அவருக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பது என் அவா. அந்த வெற்றி பாமக போன்ற கட்சிகள் பங்கு கொள்கிற கூட்டணி ஆட்சிக்கு வித்திடும் வேளையில்தான் எனக்கு கலக்கம் வரும். அந்தக் காரணத்துக்காகவே ஆரம்பத்தில் திமுக கூட்டணி ஆட்சி வரக்கூடாது என்று வேண்டி வந்தேன்.
ஏனெனில் ஜெயின் கூட்டனி ஆட்சி என்றால் கை கட்டி வாய் புதைதத்து நிற்கும் அரசியல் கட்சிகள், கலைஞ்ர் ஆட்சி என்றால் மல்லுக்கு நிற்கும் என்ற காரணமே.
வெகு மக்கள் விரோத அரசியல் செய்யாத ஜெயலலிதாவும், குடும்ப அரசியலுக்கு தலையாய முக்கியத்தும் தராத கருணாநிதியும், சாதி தாண்டி எல்லா மக்களுக்காகவும் சிந்திக்கும் ராமதாஸும், தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிற ஒரு பேச்சாற்றல் மிக்க வலுவான காங்கிரஸ்
தலைமையும், தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தலையாய பிரச்சினை என்ன என்கிற தெளிவு கொண்ட திருமாவளவனும் என் கனவு.
துரதிர்ஷ்டவசமாக அது வெறும் கனவாக போவதற்கே வாய்ப்புகள் அதிகம்.