
சேது சமுத்திரத் திட்டம் பற்றிய விவாதங்கள் இன்று இந்தியா முழுதும் பற்றியெறிந்து கொண்டிருக்கும் நிலையில், வேதமேதை அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரிடம், ராமர் பாலம் பற்றிய சர்ச்சைகளுக்கு விளக்கம் கேட்டோம்.
101 வயதைத் தொட்ட நிலையிலும் நிமிர்ந்து உட்கார்ந்து விளக்கம் அளிக்க ஆரம்பித்தார் தாத்தாச்சாரியார்
‘‘ராமர் பாலம் விஷயத்தை ஒரு பிரச்னையாக ஆக்கியது, நமது அரசியல்வாதிகள்தான். உண்மையில் ராமர் பாலம் என்ற பதமே தவறு. அதனை ‘ராமர் அணை’ என்று வேண்டுமானால் கூறலாம். ஏனென்றால், அந்த மணல் திட்டுகள் பால வடிவில் இல்லை. அதை வேத மந்திரங்களை சொல்லி கட்டியிருந்தால் அதற்கு ‘லோகாகிதம்’ உண்டு. அதாவது அழியாத்தன்மை உண்டு. ஆனால், ராமாயண காலத்துக்குப் பிறகு ராமர் அணை பற்றிய பிரஸ்தாபம் எதுவும் இல்லை. ராமாயணம் த்ரேதா யுகத்தில் நடந்த கதை. நாம் இப்போது கலியுகத்தில் இருக்கிறோம். இடையே பல்லாயிரம் ஆண்டுகள் ஓடிப்போய்விட்டன. அது உண்மையான பாலமாக இருந்திருந்தால், ராமாயண காலத்துக்குப் பிறகு மக்கள் அதைப் பயன்படுத்தியிருக்க வேண் டுமே... எனவே, இப்போது ‘பாலம்... பாலம்...’ என்று பிதற்றுவதில் அர்த்தமில்லை.
ராமர் அணை என்று சொன்னேன் அல்லவா? இப்போது பலரும் அதை சேது என்கிறார்கள். சேது என்றால் என்ன? சாம வேதத்தில் ‘சேது முஸ்த்ர துஸ்தாராம்... தானேத அதானாம் குரோதேன அக் ரோதம் சத்யேன அந்ருதம்...’ என ஒரு சொற்றொடர் வருகிறது. அதாவது, ‘துன்பங்களை நீ கடந்து செல்ல வேண்டுமானால் தானத்தைப் பெருக்கு. கோபத்தை ஒழி. உண்மையைப் பேசு’ இங்கே சேது என்ற பதத்துக்கு கடந்து செல்லுதல் என பொருள்.
இந்த வகையில் ராமர் கடலைக் கடந்து இலங்கைக்குச் சென்ற நிகழ்வுதான்
சேது. இது ஒரு வினைச்சொல்... பெயர்ச்சொல் அல்ல. அவ்வாறு கடப்பதற்காகக் கடல் பரப்பின் இடையே மணல் மற்றும் கற்களைப் போட்டு அணை போன்ற தடுப்புகளை ஏற்படுத்தி, அதில் ஒவ்வொரு தடுப்பாக வானர சேனை தாண்டித் தாண்டி இலங்கைக்குச் சென்றதாக வால்மீகி ராமாயணத்தில் சொல்லியிருப்பதைத்தான் ‘சேதுபாலம்’ என கட்டி எழுப்பிவிட்டார்கள் சிலர்.
ராமர் தெய்வமா இல்லையா என்ற கேள்வியும் இப்போது சூடாக எழுந்துள்ளது.
இதற்கு நாம் ஏன் தலையை பிய்த்துக்கொள்ள வேண்டும்? ராமரே சொல்லிவிட்டார். ராவண வதம் முடிந்த பிறகு தேவர்கள் எல்லாம் ராமரை ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள். அப்போது அவர்களிடம் ராமர் சொல்கிறார். ‘ஆத்மானாம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்...’ அதாவது ‘நான் தெய்வமெல்லாம் கிடையாது. நான் தசரதன் என்னும் அப்பாவுக்குப் பிறந்த மனிதன்தான். என்னைப் போற்றாதீர்கள்’ என ராமர் தன் வாயால் சொல்வதாக வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது.
இன்னும் கொஞ்சம் உள்ளேபோய்ப் பார்த்தால்... ராமர் இன்னொரு நாட்டுக்குப் போவதற்காகத்தான் அந்தத் திட்டுகளைக் கட்டினார் அல்லவா? அப்படியென்றால், இப்போது நமது கப்பல்கள் வெளிநாடுகளுக்கு சென்று வருவதற்காகத்தானே அவற்றை அப்புறப்படுத்த வேண்டியிருக்கிறது? இந்த நோக்கமும் ராமரின் நோக்கமும் ஒன்றுதான். ராமர் அக்கரை போவதற்குதானே கட்டினார். வணங்குவதற்காகவா கட்டினார்?
இன்னொரு செய்தி... போர் முடிந்து ராமர் திரும்பு கையில், அவர் கட்டிய அணையைப் பயன்படுத்தவில்லை. அவற்றை அழித்துவிட்டதாகவும் வால்மீகி ராமாயணத்தில் வருகிறது. தனது தனுசுவால் (வில்லால்) ராமர் அழித்த அணைப்பகுதிதான் தனுஷ்கோடி என அழைக்கப்படுவதாகவும் குறிப்பு உண்டு. திரும்பும்போது விபீஷணனுடன் புஷ்பக விமானத்தில் திரும்பினாராம். ஒருவேளை, ராமர் இலங்கை போவதற்கு ஏதாவது விமானம் கிடைத்திருந்தால் இந்தப் பிரச்னையே வந்திருக்காது. எனவே ராமரே அழிக்க முடிவு பண்ணியதை நாம் வீண் நம்பிக்கையால் போற்றி நமது தேசத்தின் பொருளாதாரத்தை அழிக்கவேண்டுமா?’’ என்று தெளிவாக விளக்கங்களை அடுக்கினார் தாத்தாச் சாரியார்.