Tuesday, July 12, 2005

என் ரண்டு சல்லி....

போலி பெயர்களில் பின்னூட்டங்கள், ஆபாச பின்னூட்டங்கள், பல முக சேஷ்டைகள் என்று தமிழ்மணம் அதகளப்பட்டுக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்/ வேண்டாம் - இதை கண்டுகொள்ளவேண்டாம் என்று இன்னொரு பக்கம் வாதப்பிரதிவாதங்கள்,
கண்டுகொள்ளவேண்டும் என்றால் யார்..?? தமிழ்மணமா, ப்ளாக்கரா யாருக்கு பொறுப்பு என்று அதிலும் பேதங்கள்.

பத்து ஆசாமிகள். பதினோரு மூக்குகள் என்று சொலவடை உண்டு. அதுதான் நடந்து கொண்டிருப்பதாக தோன்றுகிறது. அதற்கு காரணம் சிந்திக்கதெரிந்த நம் எல்லாருக்குமே நம் சிந்தனைதான் கரெக்ட் என்கிற நினைப்பு இருப்பதுதான். அதிலும் தவறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

என்னுடைய யோசனை என்னவென்றால் நடவடிக்கை எடுப்பது, சந்தேக வளையத்துள் இருப்பவரை பகிஷ்கரிப்பது, இந்த வலி எல்லோருக்கும் வர வைக்க மனிதனாகவும், வாலியாகவும், கஜேந்திரபாலனாகவும் அவதாரம் எடுத்து குடைச்சல் கொடுப்பதை தவிர இன்னொரு வழி, சண்டைக்காரனை அழைத்துப் பேசுவதுதான்.

பின்லேடனுக்கே ஒரு நியாயம் இருக்கும் இக்காலத்தில், ஒரு சாதாரண, முன்கோபியான, சந்தர்ப்பவசத்தினால் தீவிரவாதியாகிப்போன நம்மாளை, " அட ..வா ..தம்பி..நடவடிக்கை ஒன்றும் இல்லை. என்னாச்சு உனக்கு. எது உன்னை இதை செய்யத்தூண்டியது. உனக்கு இப்போ என்ன வேண்டும். எது நடந்தால் அமைதி அடைவாய்" என்று கேட்கலாம். காரணங்கள் தெரிந்து பேச்சு வார்த்தை நடந்தால் ஒரு வேளை மனமாற்றம் நிகழலாம். பேச்சு வார்த்தை நடந்தால்தான் எதாவது தவறாக புரிந்து கொண்டு, யாராவது போட்டுக் கொடுத்து இதெல்லாம் நடந்ததா என்பதும் தெரிய வரும். சுனாமிக்கு உருவாக்கபட்ட வலைமேடை செயலியை இதற்கு உபயோகப்படுத்தலாம். சந்தேக வளயத்துள் உள்ளவரும் சாட்சி இருக்கிறதா..?? நிரூபிக்க முடியுமா என்றெல்லாம் கேட்காமல் ஒத்துழைத்து பேச்சு வார்த்தைக்கு சம்மதித்தால் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

இதற்கு ஆக்ஷன் எடுத்தால் அது வேறு பெயரில் வேறு இடங்களில் தொடரும். ஒரு ஆசாமிக்கு பதிலாக ஒரு கூட்டம் சேரும். எனவே கேட்பதற்கு கோழைத்த்னமான அணுகுமுறை போல தோன்றினாலும், எனக்குத் தெரிந்து பிரச்சினை குறைவான அணுகுமுறை இது.

இது நடக்கவில்லை என்றால் மாலன் சொல்கிறபடி யாஹூ சேவையை உபயோகித்து, தான் விரும்பிய( மாற்றுக் கருத்து கொண்டவர்கள் ஆனாலும் சரி) நண்பர்கள் மட்டும் வலைப்பதிவில் பின்னூடம் இடுமாறு ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம். தமிழ்மணம் யாஹூ பதிவுகளையும் கண்டு கொள்வதால் இதில் சிக்கல் இருப்பதாக தோன்றவில்லை. யாஹூவுக்கு வர விருப்பம் இல்லாதவர்கள் விரும்பினால் தொடர்ந்து ப்ளாக்கரிலேயே உழைத்து பிரச்சினையை சரி செய்து கொள்ளலாம்.

ஏதாவது நடக்கக்கூடியதா சொல்லி இருக்கெனா..??

Wednesday, June 29, 2005

என்னதான் சொல்கிறார்..??

உம்மணாமூஞ்சிக்காரர்களுக்கு சொல்கிறாரென்றால் சரி எனலாம். ஏனென்றால் அவர்களுக்கு அது சிகிச்சை மாதிரி.

பேசுங்கள் என்று ஒரு பகுதி எழுதி இருக்கிறார் மதன் இந்த வார குமுதத்தில்.
மதன் மீது எனக்கு அபிமானம் உண்டென்றாலும், சமீப காலங்களில் அவருடைய
அட்வைஸ் எல்லாம் ஒரு "ரேஞ்சு"க்குத்தன் இருக்கிறது.

இந்தப் பிள்ளை எப்போ பேசும்னு நினைக்கனும்..?? ஏண்டா பேசுதுன்னு யாரும் நினைக்கக்கூடாது என்பார் என் தாயார். ஓட்டைப் பானையில் நண்டை விட்டா மாதிரி நான் சிறுவயதில் அவ்வளவு பேசுவேன். கிட்டத்தட்ட 1998 வரை அப்படித்தான் - இல்லை, அவசரப்படாதீர்கள். கல்யாணம் 1999ல் தான் ஆனது.

நிறைய கேக்கணும். காது, மூடாத அவயம். ஞானவாசல் என்று பாலகுமாரன் எங்கோ எழுதினார். அதையும் தவிர, வாயை திறந்து வாங்கிக் கட்டிக்கொண்ட பல சம்பவங்கள் நடந்தன. ரகசியமே தங்காதனால், எல்லோரும் ரிப்போர்ட்டர் என்று ( விகடன் ரிப்போர்ட்டர் பயிற்சியை இணைத்து) ரவுசு விட்டார்கள். அதில் ரிப்போர்ட்டராக முடியாமல் தோற்றுப் போன தலைகளும் அடக்கம் என்பது தனிக் கதை.

எப்போது பேச்சைக் குறைத்தேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் மெல்ல மெல்ல குறைந்து விட்டது. சின்ன வயதில் திட்டிய அதே அம்மா இப்போதும் திட்டுகிறார் - நான் மிக அழுத்தக்காரனாகி விட்டேனென்று. என் வாழ்க்கையில் நான் உருப்பட ஆரம்பித்ததே, பேச்சைக் குறைத்த பின்தான் சுற்றுப்புறத்தில் உள்ள, நம்மை விட நல்ல ஆத்மாக்கள், அறிவுஜீவிகள் எல்லாம் அமைதியாக இருப்பதை பார்க்க ஆரம்பித்த பிறகு பேசுவது குறைந்தது என நினைக்கிறேன். கிட்டத்தட்ட எழுதுவதற்கும் இது நடக்க ஆரம்பித்து இருக்கிறது இப்போது.

அதைவிடவும், பேசிக்கொண்டே இருப்பதில், நம் இரைச்சல் நமக்கே தாங்காதது போல, மனசு ஆழ்ந்து யோசிப்பதே இல்லை. பேச்சு குறைய குறைய யோசனை அதிகமாகிறது. மற்றவர்கள பேசுவதை கேட்க முடிகிறது. அதிகமாக தேவை இல்லாமல் பேசுபவன் முன்னே உட்கார்ந்து பாருங்கள். கொஞ்ச நேரத்தில் ( நாம் பேசாது இருப்பதால்) தான் உளறுவது தெளிவாகத் தெரிந்து அவன் நிறுத்தி விடுவான். மேலுன் பேசாமல் இருப்பதால் EQ பெரிய அளவில் முன்னெறுகிறது என்று தகவல்களும் உண்டு.

தமிழ்நாட்டில் பாதி வேலை பாழாவதே பேச்சில்தான். திண்ணயிலும் , புழக்கடையிலும் கும்மகோணம் வெற்றிலையும், சீவலும், சுண்ணாம்பும், ஜாதிக்காயும் வைத்து வாயில் அதக்கிக் கொண்டு பேசிப் பேசியே எத்தனை தஞ்சாவூர் குடும்பங்கள் வீணாகப் போயிற்று தெரியுமா..??

பேசச் சொல்கிறாராம்..ம்..ஹும்..

மதன் சன் டீவிக்கு வரப் போகிறார் என்று சந்தோஷத்தில் இருந்தேன். இன்னொரு அரட்டை அரங்கம் தான் இவருக்கும் ஐடியா போலருக்கு.

என்னவோ போங்க...

Tuesday, June 28, 2005

பிறப்பும் பிழைப்பும்

அழுக்கையே சுவாசித்து
இருட்டையே மோகித்து
இண்டு இடுக்களிலும்
சந்து பொந்துகளிலுமே
குடித்தனம் செய்கிறாய்

கழிவறையில் காண்கிறேன்.
சாளவத்தில் காண்கிறேன்
சமையலறையில் காண்கிறேன்
அட..புத்தக அலமாரி கூடவா..??

எத்தனை மருந்தடித்தாலும்
வெவ்வேறு ரூபங்களில்
அவதரித்துக் கொண்டே இருக்கிறாய்
உன்னைப் பார்த்தால்
இல்லை..இல்லை
உன் வாசம் தெரிந்தால் கூட
அருவறுப்பும் பயமும் யாவர்க்கும்.
உனக்கோ யாரை பார்த்தாலும்
பயமும் அவநம்பிக்கையும்
வெறுப்பில் தின்று, வெறுப்பை விழுங்கி
என்ன சாதிக்கிறோம்
என்றெண்ணியோ
கொஞ்ச நாள் கலந்து வாழ விழைந்தாய்
கலக்கவே முடியாதபடி
உன் அழுக்கும், உன் மீதுள்ள அருவறுப்பும்
உன்னை மறுபடியும் தனியனாக்கின.
மீசை இருந்தும் முறுக்க முடியாத்
அல்பன் நீ..
காட்டு விலங்குகள் கூட நிச்சலனமாய்
வாழும் காலத்தே
வீட்டுள் இருந்தும் அமைதி கிட்டா
ஜீவன் நீ..
அணு ஆயுதப் போர் முடிந்தாலும்
நீ இருப்பாயாம்..
என்ன லாபமுனக்கு..?
பிணங்க யாரும் இல்லாமலேயே
தானாக சாவாய் நீ அதன்பின்..

மல்லாக்கத் தூக்கிப் போட்டு
மிதிக்கலாமே என்கிறான் நண்பன்.
கருமம்....
உனது ரத்தம் கூட அழுக்கு
கண்டாலெனக்கு வாந்தி வரும்
பிழைத்துப் போ.

பிகு:

பெற்றோர் ஊரிலிருந்து வருவதால் வீடு சுத்தம் செய்யும் வேலை நடக்கிறது. கரப்பு ... கரப்பு... என்றொரு ஜீவனை அடிக்கடி காண்கிறேன் மூன்று நாளாய்.
அதன் தரிசனம் தந்த அருவறுப்பில் விளைந்த கவிதை ( ?!!)

Monday, June 27, 2005

மப்பும் மாப்பும்

நேற்று ராத்திரி ஒரு கல்லூரி கால நண்பனிடமிருந்து ஒரு ஈமெயில். என்னுடைய ஹாஸ்டல் தினங்களில் அறைத்தோழன். ஆர்வமாக பார்த்தால் ஏதோ ரிங்கோ இன்விடேஷன் என்றது. இது மாதிரி கொஞ்ச நாளாகவே என் நண்பர்களிடமிருந்து, வெவ்வேறு வெப்சைட்டுகள்- எஸ் எம் எஸ் செய்திகளை பரிமாற வழிவகுப்பவை என்றெல்லாம் போட்டு இன்விடேஷன் வரும். ஆனால் அது ஒரு வகையான விளம்பர உத்தி, அவர்களுக்குத் தெரியாமலேயே வருகிறது என்று ரொம்ப சிந்தித்து, டெலீட் பொத்தானை அழுத்தி விடுவது வழக்கம்.

நேற்று, என் நேரம். லேசாக மப்பில் இருந்தேன். மப்பில் இருந்தால் எனக்கு எல்லாமே கொஞ்சம் சீரியசாக தெரியும். இந்த இன்விடேஷனையும் சீரியசாக
எடுத்துக் கொண்டு அவன் கேட்டிருப்பதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டே வந்தவன், ஒரு பொத்தானை அழுத்திய உடன்தான் தெரிந்தது...அது என்னுடைய யாஹூ முகவரி புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருந்த எல்லா பெயர்களுக்கும் ஒரு ரிங்கோ இன்விடேஷனை அனுப்பி விட்டது என்று.

ஐயகோ...தவறிழைத்து விட்டோமே என, காலையில் பார்த்தால் failed delivery என்று கிட்டத்தட்ட நூற்றுக்கும் அதிகமான மெயில்கள். சரி..என்று உட்கார்ந்து எல்லாருக்கும் ஒரு மாப்பு கடிதம் போட்டு விட்டேன்.

போட்ட ரெண்டாவது நிமிடம் எல்லே வில்லோன் " நான் அப்பவே நினைச்சென்" என்று பதில் மடலில் கண்ணடித்தார். யாஹூ மெஸஞ்சர்ல யாரை வறுத்துகிட்டு இருக்காரோ..?? :-)

ஆகவே சோதரர்களே...சரி..சரி..உங்களுக்குத் தெரியும்.

Monday, June 20, 2005

பாவக்கறை


கல்யாணமான மூணாம் நாளே
அடி விழ தொடங்கிச்சாம்

கொஞ்சம் விவரமறிந்த பெரியவள்
இதே போலொரு சண்டையில்
கைவிரலை நெட்டி முறித்தபடியே
சொன்னது
நினைவிலாடுகிறது.

வெள்ளிக்கிழமை படம் துலக்கி
பொட்டு வைக்காததற்கும்
அடுக்களையில் அகஸ்மாத்தாய்
ஓடிய அதிர்ஷ்டக்கரப்பிற்கும்
சற்றே அதிகமாய் கொதித்துவிட்ட
ரசத்திற்கும்
ஈரம் சொட்டக் குளியறையில் கிடந்த
உள்பாவாடைக்கும்
அந்திசாய விளக்கு
ஏற்றாததற்கும்
அத்தைக்கு காப்பியில்
சர்க்கரை குறைந்ததற்கும்
விசேஷநாளில் வீட்டுக்கு
விலக்கானதற்கும்
அதிகமாய் சிரித்ததற்கும்
உடல் உபாதையில் அசந்து
கண் அயர்ந்ததற்கும்
பிள்ளைகள் மார்க்கு
குறைந்த்தற்கும்

இத்த்னை கால்மாய் நீ
வாங்கிய அடிகளும்
அதன் வடுக்களும் உனக்கு
மற்ந்ததோ இல்லையோ
எனக்கு மற்க்கவில்லை
என் அம்மா...

பொண்டாட்டி தாசனென்று
யார் சொன்னாலும்
பாதகமில்லை என்றுதான்
எனைப் பெற்றவனின் பாவங்களை
இப்போதிருந்து கரைக்க
விழைகிறேன் என்னிலிருந்து
பார்க்கும் பெண்களின்
பாதெமெலாம் நான்
கழுவினால் கூட
தீராது அவன் பாவம்

நீ போனால்தான் உன் அருமை
விளங்கும்
என்கிறேன்.
சாபம் தராதே
என் அருமை அப்படியா
தெரியவெண்டும்
என்கிறாய்.

அம்மா நீ
எனக்கு மட்டுமா..??

Thursday, June 16, 2005

நந்தா எனும் நண்பர்

கூடப் பழகியவர்களை கொலை வழக்கில் சிக்கியதாக பத்திரிக்கைகளில் படிக்கும்போது எப்படி இருக்கும் உங்களுக்கு...??

எனக்கு திக் என்று இருந்தது.

திருவாரூர் முரா.சன்ஸ் ஜவுளிக்கடை எங்கள் நெக்ஸஸ் கம்யூட்டர்ஸ் வாடிக்கையாளர்கள். 1997/98 லேயே ஏறத்தாழ இருபத்தி இரண்டு டெர்மினல்கள்/பிரிண்டர்கள் மற்றும் ஒரு நாவெல் சர்வர் இருந்தது அவர் கடையில். வியாபாரம் சொல்லி மாளாது. கும்பகோணத்தில் இருந்து பஸ் பிடித்து எப்போது திருவாரூர் போய் இறங்கினாலும் கடை ஜே ஜே என்றுதான் இருக்கும். அத்தனை வேலை நெருக்கடியிலும் உபசாரம் பலமாக இருக்கும். பக்கத்து ஹோட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட காஃபி டிபனுக்கு பிறகுதன் வேலையே. வருஷத்துக்கொருதரம் சுளையாக மெயிண்டனன்ஸ் காண்ட்ராக்ட் பணமும் வந்து விடும்.

அப்போதுதான் எனக்கு நந்தகோபாலைத் தெரியும். அவர்தான் இப்போது கொலைவழக்கு/ விசாரனை என்று அலைக்கழிந்து கொண்டு, தலைமறைவு வாழ்க்கை நடத்துவதாக ஜூ.வி சொல்கிறது. பேர் நந்தகோபால் என்றாலும், நான் நந்தா என்றுதான் விளிப்பேன். மற்ற எல்லாருக்கும் சின்னதம்பி. உயரமான உருவம். ஆளை மயக்கும் பேச்சு. நெற்றியில் நீளக்கீற்றாக குங்குமம். பிஸினஸில் கெட்டி. அந்தக் குடும்பமே வேதாத்ரி மகரிஷியின் பக்தர்கள். என்னைக்கூட ஒருமுறை ஆசிரமத்துக்கு வரும்படி அழைத்தார்கள்

சுற்றுப்பட்ட ஊர்களில் இருந்து திருவிழாவுக்கு வருவது போல கூட்டம் கூட்டமாய் மக்கள் வந்து வாங்கிக் கொண்டே இருப்பார்கள். அதனால் பணத்துக்கும், வியாபாரத்துக்கும், ஊர் செல்வாக்குக்கும், புகழுக்கும் குறைவே இல்லை. வேண்டும் என்று சொன்னால், தானாகவே வருவதற்கு ஆட்கள் அவருக்கு உண்டு. பெண்ணை ஏமாற்றி, கடைசியில் கொலை செய்து விட்டதாக வழக்கு இப்போது. இதில் உள்ளூர் திமுக தலைகளும் ஏகபட்டது தெரிகின்றன.

என்ன ஆகிறது மனிதனுக்கு..?? எல்லாம் கிடைத்தவுடன் எதையாவது வலிந்து பிடித்து இழுக்கச் சொல்கிறதா..?? தானாக கிடைப்பதை விட, வலிய மேலே போய் விழுவதுதான் ஒசத்தி என்று தொன்றிப் போய் விடுகிறதா..?? ஆன்மிகம், அருமையான குடும்பம் எல்லாம் போதவில்லையா..?? இல்லை எதிலும் ஆழ்ந்து ஈடுபடாமல் உலகத்துக்காக நடித்துக் கொண்டிருக்கிறோமா..??
அண்ணாச்சி, பெரியவால்(ள்) தொடங்கி ஜவுளிக்கடை அதிபர் எல்லோருமே மகளிர் விஷயத்தில் தாறுமாறாக இருப்பதாக செய்திகள் வருவது, என்னை ஒத்த சபல புத்திகாரர்களுக்கு எல்லாம் தலையில் நங் என்று தட்டி வைக்கத்தானா..?? இல்லை மேற்சொன்னவர்கள் எல்லாம் உள்ளே இருக்கும் கடவுளுக்கு கட்டுப்படாமல் சந்தனக்காப்பு/வைரவேல் அணிந்த பொம்மைகளை ஆராதிக்கிறவர்களா..??

கடிக்கக் கற்றுக் கொள்ளுமுன் பல் விழுந்துவிடும் போலிருக்கிறது.

Wednesday, June 15, 2005

என்னுயிர்த் தோழன்

அவருடைய கண்கள் கலங்கி தத்தளிக்கின்றன. குரல் கம்முகிறது.நேரத்துக்கு சரியாக சாப்பிடாமல், தூங்காமல் ஏற்பட்ட வயிற்று உபாதையின் விளைவாக பக்கத்து க்யூபிக்கிளில் அடிக்கடி "சத்தம்" செய்கிறார். சாதாரண நாட்களில் இதெல்லாம் நடக்கவே நடக்காது. அவருடைய வயசுக்கு, நிமிர்ந்து விடு விடென்று நடப்பவர், எங்கும் எழுந்தே செல்வதில்லை. தன் தோழனுக்காக கடந்த பதினைந்து நாட்களாக ஓடியும், அவனை இழந்த வருத்தத்தை அடி அடியாக சொல்கிறவரைப் பற்றி யாராவது ரெண்டு வருஷம் முந்தி சொல்லியிருந்தால், தொப்பை குலுங்க சிரித்திருப்பேன்.

இப்போது முடியவில்லை. காரணம், வற்றத் தொடங்கி இருக்கும் தொப்பை மட்டுமல்ல, மாறியிருக்கும் மதிப்பீடுகளும்.



தமிழ்நாட்டில் எனக்குத் தெரிந்து என் நண்பர்கள் வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் மிகக்குறைவு. நாய் வளர்ப்பது தான் அதிகம் என்றாலும், என் இயற்பியல் ஆசிரியை வீட்டில் மட்டுமே நான் பூனையை செல்லப் பிராணியாக கண்டிருக்கிறேன். உறிஞ்சி உறிஞ்சி தயிர்சாதம் சாப்பிடும் பூனை அது. என் தாயாரின் அதீத சுத்தம் ( பற்றிய உணர்வு) காரணமாக, நாய் பூனை போன்ற பிராணிகளுக்கு எங்கள் வீட்டில் அனுமதி இல்லை. நாய் என்றால் கடித்துவிடும். கண்ட இடத்தில் பிஸ் அடிக்கும். பூனை மயிர் உதிர்ந்தால் ஆகாது. ஆஸ்துமா வரும். தவிரவும் பூனை அழுக்கு பிராணி போன்ற உபரி ஆலோசனைகள் நிறையவே கிடைக்கும்.

பெற்றவர்களை வயது வந்த பிள்ளைகள் விட்டுவிட்டு விலகிப்போகும், வயதான காலத்தில் பெரியவர்களை பெரும்பாலும் ஹோமுக்கு அனுப்பும், இருபத்து மூன்று வருஷ மணவாழ்க்கையை தடாலென்று அறுத்துவிட்டு புத்தம் புதுசாக கல்யாணம் பண்ணிக் கொண்டு வெட்கப்படும் அமெரிக்க சமூகத்தில், பிராணிகளை போற்றும் குணம் ஆச்சரியமளித்தது முதலில். ஆனால் இப்போதுதான், மற்ற இடங்களின் தாங்கள் எதிர்கொள்ளும் வெறுமையை ஈடுகட்ட இவர்கள் பிராணிகளை நாடுகிறார்களோ என்ற சம்சயம் வருகிறது

முதல் பாராவின் நாயகன் ஜீன் க்லாட்ஸ் ஒரு பூனையை பதினாறு வருடங்களாக வளர்ந்து வந்தார். அவருகே வயசு அறுபத்தி நாலு. அந்தத் தாத்தா, உடல் உபாதை ஏதும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார். ஆனால் பூனைக்கு ஏகப்பட்ட தொந்தரவு - அதுக்கும் வயசாயிப் போச்சே. அதற்கு டயாபட்டீஸ் என்பதால், தினம் இருவேளை இன்சுலின் ஊசி போட்டு விட்டு, காலை மாலை வேளைகளில் வாக்கிங் கூட்டிப் போய் விட்டு, அதற்கு சரியான சிசுருஷை செய்து வந்தார். நடுவில் வேறு பிரச்சினைகளும் சேர்ந்து கொள்ள, நுரையீரலில் நீர் கோர்த்துக் கொண்டு, முன்று நாள் பெட் ரெஸ்டில் இருந்து வந்தது. அதற்கு ஜன்னி வந்தபோது இவர் ஆடிப்போனார். எல்லா கவனிப்புகளையும் தாண்டி போன வாரம் ஞாயிறு அன்று அது இறந்து போனவுடன்தான், தாத்தா நொந்து போய்விட்டார். கிட்டத்தட்ட $ 10,000 செலவு செய்ய தயாராய் இருந்தவர், ஏற்கனவே அதன் சிகிச்சைக்காகவே $3000 செலவு பண்ணி இருப்பார்.

இந்தப் பணத்தில் எத்தனை குழந்தைகளுக்கு பால் தரலாம் என்று யோசிக்க நேர்ந்தாலும், அந்தப் பூனை இல்லாமல் ஜீன் தாத்தாவும் ஒரு விதத்தில் ஏழை என்று தோன்றுவதால் அப்படியெல்லாம் மட்டையடியாக இப்போது யோசிக்கமுடியவில்லை.

"இந்தப் பூனைக்கு இவ்வளவு செய்கிறீர்களே. இந்தியாவில் மனிதர்கள் கூட தன்னை இப்படி பார்த்துக் கொள்வதில்லையே" என்றேன் ஒருமுறை.

" நான் பின்னே வேறு என்னதான் செய்வது வீட்டில் " என்றார் அவர்.

வயசான காலத்தில் கல்யாணம் செய்து கொண்டு, குழந்தைகள் ஏதும் இல்லாமல்
மனைவியுடனும் மனஸ்தாபத்துடன் தனித்தீவாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர், நிஜமாகவே இனி என்ன செய்வார் வீட்டில்..??

"இன்னொரு பூனை ..? என்றேன்.

"சான்ஸே இல்லை. எனக்கு என் கிட்டி கேட்டை மறக்கவே முடியாது" என்றார்

புதுப்பூனையோ இல்லை புதுப்பெண்ணோ, தாத்தா சந்தோஷமாயிருந்தால் சரிதான்.

( போட்டோவில் தாத்தாவின் தோழன் கிடி காட் ( kitty cat) . இரண்டரை வ்ருடங்களுக்கு முன்பு எடுத்ததாம். அப்பவே கிழடு தெரிகிறது பாருங்கள். )

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...