Tuesday, May 09, 2006

ஹை...யா..இந்தியப் பயணம்

கடந்த ஒரு மாதமாக சரியான வேலை. மே மாதம் ஆறாம் தேதி சாக்ரமண்டோ தமிழ்மன்றத்தில் தமிழ்ப்புத்தாண்டு விழாவை ஒட்டிய கொண்டாட்டம். தொண்டரடிப்பொடிகளில் ஒருவனாக இருப்பதால், நிகழ்ச்சியை நடத்துவதில், ஒருங்கிணைப்பதில் மெனக்கெட வேண்டி இருந்தது. தவிர சூர்யா இரு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றான். மற்ற குழந்தைகளுடன் கலந்து கொண்ட நடன/நாடகமாக இருந்ததால் அவனுக்கு பயிற்சிக்காகவும் ஏகப்பட்ட முறை போக வேண்டி வந்தது.

வார இறுதிகள் எல்லாம் இதிலேயே கழிய, ஏகப்பட்ட வேலை சுணங்கிப் போனது. இறையருளால் விழா இனிது நடந்து முடிந்தது. அடுத்தடுத்து வரக்கூடிய பங்கேற்பாளர்களுடன் ஓடி, அவர்களை தயார் செய்து கொண்டிருந்ததில் பாதி நிகழ்ச்சிகள் சரிவர பார்க்கவே முடியவில்லை. இரு மகளிர் நடனங்களை மட்டும் எனக்குரிய "கலை" ஆர்வத்தால் ஓடி வந்து மேடைக்கு முன்புறம் நின்று பார்த்தேன்.

இது முடிய அடுத்து, இந்தியப் பயணத்துக்கான முஸ்தீபுகள். என் தமக்கையின் மகள் திருமணத்திற்காக மே 21 முதல் ஜூன் 18 வரை இந்தியாவில் இருப்பேன்.
இதை தவிர அதே விடுமுறையில் மீனாக்ஷி சங்கர் திருமணத்தையும் கண்டு களிக்கலாம் என்றொரு திட்டம் உண்டு. அதைத் தவிர பெரிய திட்டங்கள் ஏதுமில்லை. ஐகாரஸ் பிரகாஷ்/நண்பர்கள் ஃப்ரியாக இருந்தால், ஒரு தாகசாந்திக்குப் போய் கலாய்க்கலாம் என்ற எண்ணம் உண்டு.

ஸார் ஃப்ரீயா என்று தெரியவில்லை

மற்றபடி வேறென்ன....உங்கள் எல்லோரையும் போலவே நானும் தேர்தல் முடிவுகளை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் எண்ணத்திற்கு மாறாக கலைஞர் கூட்டனி ஆட்சி அமைக்கும் என்று ஆருடங்கள் கூறி வருகிறார்கள். ஆரம்பத்தில் அதிமுக ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அம்மா நடத்திய அரசியல் ஆள்பிடி வம்புகளும், வைகோவின் அசிங்க அரசியலும் கலைஞர் மீது பரிதாபத்தை உண்டாக்கி விட்டது. கிட்டத்தட்ட ஏகப்பட்ட பேருக்கு இத்தகைய மனமாற்றம் நிகழ்ந்து இதனால் திமுகவின் பக்கம் வெற்றி வந்திருக்கிறது. கலைஞர் மீது, அவருடைய குடும்ப ஆட்சி மீது, பேரனுக்கு அவர் தந்திருக்கும் முக்கியத்துவம் மீது எனக்கு ஏகப்பட்ட விமரிசனங்கள் இருந்தாலும், தேர்தல் களத்தில் அந்தக் கிழவர் சுழன்றாடிய வேகத்தைக் கண்டு நிஜமாகவே பிரமித்துப் போனேன். இந்த வயசுக் கிழவர்கள் எல்லாம் மாயவரத்தில் கோவணம் அவிழ்வது கூடத் தெரியாமல் நடந்து கொண்டிருக்க, மைக்கைப் பிடித்துக் கொண்டு ஏரியாவுக்கு ஏற்றபடி, கூட்டத்துக்கு தக்கபடி, ஒரு பக்கா தேர்தல் அறிக்கையைப் போட்டு, அதை எதிர்க்கட்சியையும் ஒத்துக் கொள்ள வைத்து , எல்லோருடைய கவனத்தையும் தன் பக்கம் திருப்பி, இந்தத் தேர்தலின் நாயகராகிப் போனார். து அவரை இயக்குகிறது???. எது அவரை இந்த அளவுக்கு உசுப்புகிறது என்று தெரிந்து கொள்வது நமது அரசியல் கட்சிகளின் இளந்தலைமைகளுக்கு முக்கியம்.



அவருடைய உழைப்புக்கும், வைகோ என்கிற கேவலன் செய்த துரோகத்துக்கும் அவருக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பது என் அவா. அந்த வெற்றி பாமக போன்ற கட்சிகள் பங்கு கொள்கிற கூட்டணி ஆட்சிக்கு வித்திடும் வேளையில்தான் எனக்கு கலக்கம் வரும். அந்தக் காரணத்துக்காகவே ஆரம்பத்தில் திமுக கூட்டணி ஆட்சி வரக்கூடாது என்று வேண்டி வந்தேன்.
ஏனெனில் ஜெயின் கூட்டனி ஆட்சி என்றால் கை கட்டி வாய் புதைதத்து நிற்கும் அரசியல் கட்சிகள், கலைஞ்ர் ஆட்சி என்றால் மல்லுக்கு நிற்கும் என்ற காரணமே.

வெகு மக்கள் விரோத அரசியல் செய்யாத ஜெயலலிதாவும், குடும்ப அரசியலுக்கு தலையாய முக்கியத்தும் தராத கருணாநிதியும், சாதி தாண்டி எல்லா மக்களுக்காகவும் சிந்திக்கும் ராமதாஸும், தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிற ஒரு பேச்சாற்றல் மிக்க வலுவான காங்கிரஸ்
தலைமையும், தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தலையாய பிரச்சினை என்ன என்கிற தெளிவு கொண்ட திருமாவளவனும் என் கனவு.

துரதிர்ஷ்டவசமாக அது வெறும் கனவாக போவதற்கே வாய்ப்புகள் அதிகம்.

Friday, May 05, 2006

இளஞ்சேரன் பாண்டியன்

சேரன் மீது எனக்கு டைரக்டர் என்ற முறையில் பெரிய அபிப்ராயமெல்லாம் கிடையாது. எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டு, மனிதனின் மிக மென்மையான பகுதியை வருடிவிட்டு, சோக உணர்ச்சியை தூண்டிவிட்டு படம் எடுக்கிற ஆசாமி என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதுவும், எதற்கெடுத்தாலும் குய்யோ முறையோ என்று அவர் படங்களில் கட்டிப் பிடித்துக் கொண்டு அழும்போது, எரிச்சலாக இருக்கும். அழுகிற ஆண்களின் மீது எனக்கு நம்பிக்கை வருவதில்லை.

விகடனில் இந்த வாரம் முடிந்து இருக்கும் டூரிங் டாக்கீஸ் அந்த எண்ணங்களை கொஞ்சம் மாற்றி இருக்கிறது. அதிலும் நிறைவுப் பகுதி பலே ஜோர். டைரக்டரின் அப்பாவாயிட்டோமே என்ற கெத்தெல்லாம் பார்க்காமல் பழையூர்ப்பட்டி ஆபரேட்டர் பாண்டி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அபிராமி ராமநாதனிடம் "மொதலாளி" என்றழைத்துப் பேசிய சேரனின் அப்பாதான் சேரனின் இன்றைய வெற்றிக்கும் ஆபரேட்டர்



சேரனின் வாழ்க்கையின் எளிமைதான் அவரது படங்களில் பெருமளவு எதிரொலிக்கிறது என்றாலும் அந்த ரேஞ்சுக்கு கிராமத்து எளிமை எனக்குப் பரிச்சயம் இல்லை. ஆனால் சீக்கிரமே சேரன் அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்து வேறு திசைகளில் யோசிக்க ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது அலுத்துப் போய் விடும். எல்லாக் கதைகளையும் சொந்த அனுபவத்தின் பேரிலேயே எழுதிக் கொண்டிருப்பவன் மட்டும் நல்ல படைப்பாளியாகி விட மிடியாது. அவன் வீச்சு அதிகரித்தால்தான் ரீச்சும்( reach) அதிகமாகும்.

டூரிங் டாக்கிஸ் , பாலகுமாரனின் முன் கதைச் சுருக்கத்திற்கு பிறகு நான் படித்த நல்ல தன்வரலாற்று தொடர். விகடன் பிரசுரமாக அது வெளிவரும்போது அது ஆடும் கூத்து, காலம் என்கிற மாயக்கண்ணாடியில் பலவண்ணங்களில் தெரியும்.

டூரிங் டாக்கீஸ் ஆபரேட்டரின் மகன் சினிமாவில் அரசன் ஆன கதை- இறுதிப்பகுதி

Monday, March 20, 2006

திங்கள் சூசகம்

ஹி..ஹி..




111 இடங்களில் தனித்துப் போட்டி




இவருக்கு அதுக்குள்ள ரிசல்ட் எப்படித் தெரிஞ்சது..??




டேய் ..மூக்கு..!! ஜாக்கிரதை. என் நெலமை உனக்கும் வந்துரப் போவுது...!!

சாகஸ ஞாயிறு

ஒரே திருவிழாக் கூட்டம்தான். அந்த இடத்துக்குச் செல்லும் எல்லா நெடுஞ்சாலைகளும் ட்ராஃபிக் ஜாமில் மாட்டி, திக்கித் திணறின. ஏழெட்டு மைல் முன்பிருந்தே மினுக்கும் பலகைகள் வேறு வழிகளை நாடச்சொல்லி கெஞ்சின.
மக்கள் கேட்கவில்லை.குளிர்காலம் முடிந்து வெய்யில் கிட்டத்தட்ட "சுள்"ளென்று உறைக்குமாறு அடிக்கும் நேரம். எல்லோரும் ஓவர்கோட் போட்டுக் கொண்டு, முன்னெச்சரிக்கையாக சன்ஸ்கிரீன் பூசிக் கொண்டு(ம்), மடக்கு நாற்காலிகள், பெட்ஷீட்டுகள், குளிர் கன்ணாடிகள், சிப்ஸ்/பிஸ்கட், குழந்தை குட்டிகளுடன் பெரிய்ய்ய பேரணியாகவே கிளம்பி விட்டார்கள்.

மாயூரத்தில் அஞ்சாம் திருவிழாவுக்கு தேர் பார்க்கப் போவது போல இருந்தது.

இது அமெரிக்க விமானப் படையின் முக்கியமான நிகழ்ச்சி. மக்கள் தொடர்புக்கு அருமையான வாய்ப்பு. சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றே சொல்லுவேன். சாக்ரமண்டோவில், மேத்தர் ஃபீல்ட் என்ற இடத்தில் உல்ள ஏர்ஃபோர்ஸ் பேஸில், எல்லா வகையான பறக்கும் ஊர்திகளையும் கொண்டு வந்து வானில் சாகஸம் நிகழ்த்திக் காட்டும் ஏர் ஷோ. தலைக்கு 15$.
இத்துடன் கார் பார்க்கிங், மற்றும் உள்ளே சுற்றுலா பொருட்காட்சி திடலில் சாப்பாடு விற்பது போல அநியாய விலையில் சாப்பாட்டு/பீர் கடைகள்.
அடேங்கப்பா...இவங்க எது செஞ்சாலும் பெரிசா தான் இருக்குது. அபான வாயு விட்டாக் கூட மைக் வெச்சுத்தான் விடுவாங்க போல ;-)

ஆனா, இந்த நிகழ்ச்சி, உண்மையிலேயே பிரம்ம்ம்ம்....மாண்டம்தான்.

முதலில் கிளைடர் வகை குட்டி விமானங்கள். வானில் எல்லாப் பக்கமும் உரண்டு, புரண்டு, திரும்பி, கவிழ்ந்து, ஏறி, இறங்கி, வானத்திலேயே ஜாங்கிரி பிழிவது போலவும், ரங்கோலி போடுவது போலவும் ஆட்டம் காட்டி கிலி கிளப்பின. இவர்கள் இட்லியும் தேங்காய் சட்னியும் சாப்பிட வேண்டுமென்றால், அரிசி, உளுந்து, தேங்காய், பொட்டுக்கடலை, கொஞ்சம் ப.மிளகாய் , உப்பு, தண்ணீர் குடித்து விட்டு ஏறினால் போதும் என்று நான் அடித்த கமெண்ட் புரிந்து கொண்டு சிரிக்க யாரும் இல்லாமல் காற்றில் கரைந்தது. காரணம் வீட்டம்மாவும் பசியில் இருந்தார்.

அவ்வப்போது ஹெலிகாப்டர்கள் வந்து ஆட்களை மீட்பது, பாராசூட்டில் இறக்கி விடுவது, கீழே காயம்பட்டவனை காப்பற்றி தூக்கி செல்வது என்று செய்து காட்டின. கூட்டம் சற்றே அசந்து கால் பரப்பி உட்கார்ந்தபோது கிளைடர் விமானங்களில் இருந்து பலத்த சத்தத்துடன் குண்டு வீசி நெருப்பை கிளப்பி சூடேற்றின.



பிறகு வந்தன ப்ளூ ஏஞ்சல் வகை விமானங்கள். அத்தனை வேகத்தில், அத்தனை துல்லியமான இடைவெளியில் அத்தனை அழகாக ஆறு விமானங்கள் பறந்து நான்கண்டெதேஇல்லை. வேறு யாராவது படம் பிடித்துக் கொண்டு வந்து காட்டியிருந்தால் கண்டிப்பாக
க்ராஃபிக்ஸ் என்று லொள்ளி இருப்பேன். அத்தனை ஆச்சரிய சாகசம்.
நம்மூரில் இப்படிப்பட்ட ஏர்ஷோக்கள் குடியரசு தின, சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் பகுதியாக இருக்குமோ என்னவோ, இது போல எங்கும் மக்கள் தொடர்புக்காக நடத்துவது மாதிரி தெரியவில்லை. இப்படி எல்லாம் நிகழ்ச்சிகள் நடத்தினால், நம் பாதுகாப்புப் படை மீது நிஜமாகவே மரியாதை பிறக்கும். "மிலிட்டரிக்காரனா,,?? வம்பு பிடிச்ச பயலுங்கப்பா..?? ரம்மையும், கோழியயும் தின்னு கொழுத்துபுட்டு, ஊருக்கு லீவுல வந்தா கண்ட இடத்தில் வம்பு வளத்துகிட்டு திரியறானுங்க" போன்ற புகார்கள் குறையும்.

நேற்று காலை பத்து மணிக்கு உள்ளே போன நாங்கள் வீட்டுக்கு வரும்போது மணி ஆறரை. வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு அடித்துப் போட்டாற்போல தூங்கிவிட்டு, காலையில் ஆபீஸ் விரையும்போது, மேலே ஒரு அலுமினியப் பறவை ஆடாமல், அசையாமல் நேராகச் சென்றது.

ஆச்சரியமாக இருந்தது. பைலட்டுக்கு போர் அடிக்காது..?? ;-)

Wednesday, March 01, 2006

லல்லல்லா...லாலு

இந்திய அரசியலில் உச்சபட்ச கேலிக்கு உள்ளாகும் ஆட்களில் லாலுவும் ஒருவர் என்பது புதிய செய்தி இல்லை. அவருக்காகவே ஸ்பெஷலான ஜோக்குகள், அவருடைய பேட்டி க்ளிப்பிங்குகள், அவருடைய குழந்தைகளின் எண்ணிக்கை என்று எல்லாமெ நமக்கு ஜோக்குதான்.



என்னுடைய காலேஜ் சீனியர் - ஐ.ஆர்.எஸ் நண்பர் பாலா, தன்னுடைய பேட்ச்சில் இருந்த பீஹார் நண்பர்கள் லாலுவின் மேல் வைத்திருந்த அபார மதிப்பை, எனக்கு ஒரு காலத்தில் சொன்னார். மீடிவாவின் சித்தரிப்புக்கு மாறாக லல்லு எவ்வளவு நல்ல மனிதர் என்றும் அவர் சொன்னபோது நம்பவில்லை.

இந்த வார விகடனில் வந்திருக்கும் கலக்குறாரு லாலு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. உங்கள் பார்வைக்கு :


ஒரு நல்ல ஜோக் சொல்லுங்களேன்’ என்று யாராவது கேட்டால் தடுமாற வேண்டிய தேவையே இல்லை. சும்மா ‘லாலு’ என்று சொன்னாலே போதும்! சிரிப்பு தானாகவே வரும்! அப்படி ஒரு காமெடியனாக பலராலும் சித்திரிக்கப்பட்டு வருகிறவர்தான் முன்னாள் பீகார் முதல்வரும் இந்நாள் ரயில்வே துறை அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ்! அப்படிப்பட்டவர் கடந்த இரண்டு வருட காலமாகப் பலரும் பாராட்டும் அளவுக்கு ரயில்வே பட்ஜெட்டை சமர்ப்பித்துக் கொண்டிருப்பது, ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமான விஷயம்! ரூபாய் 14,293 கோடி உபரி பட்ஜெட்டாக இந்த முறை பட்ஜெட்டைத் தாக்கல் செய்து அசத்தியிருக்கிறார் லாலு.

‘Right person at right place and at right time’ என்பார்கள் ஆங்கிலத்தில். சரியான நேரத்தில், சரியான இடத்தில் இருக்கும் மிகச் சரியான ஆளுக்கு எல்லாமே நன்றாக நடக்கும்’ என்பதுதான் இதன் பொருள். கடந்த சில ஆண்டுகளாகவே நம் நாட்டின் தொழில்துறை நல்ல முன்னேற்றத்தைச் சந்தித்து வருகிறது. முன்னேறி வரும் எந்த ஒரு நாட்டிலும் போக்குவரத்துத் துறை முக்கியத் துவம் பெறும். அதிலும் சரக்குப் போக்குவரத்துத் துறை அதிவேகத்தில் முன்னேறும். இப்படி ஒரு தருணத்தில்தான் லாலு பொறுப்பேற்றார். Ôகாக்கை உட்காரப் பனம்பழம் விழுந்ததுபோல தற்செயலாக நடக்கும் நிகழ்வுகளுக்கு லாலு பெயர் தட்டிச் செல்கிறார் எனச் சொல்பவர்களும் உண்டு.

முதலில் லாலு என்ன செய்திருக்கிறார் எனப் பார்ப்போம். மக்களை நேரடியாகப் பாதிக்கும் விஷயம் என்பதால், இரண்டாம் வகுப்புக் கட்டணத்தில் பொதுவாகவே யாரும் கைவைப்பதில்லை. லாலுவும் இரண்டாம் வகுப்புக் கட்டணத்தை உயர்த்த வில்லை. அதேசமயம், முதல் வகுப்பு மற்றும் ஏ.சி. கட்டணங்களை பத்து சதவிகிதத்தில் இருந்து பதினைந்து சதவிகிதம் வரை குறைத்துள்ளார். ஐந்நூறு ரூபாய்க்கும் ஆயிரம் ரூபாய்க்கும் விமானப் பயணம் சாத்திய மாகியுள்ளதைக் கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள சமயோசிதமான முடிவு இது. நடுத்தட்டு மக்களும் பயணம் செய்யும் விதமாகத் தற்போதைய ஏ.சி. 3 டயர் கட்டணத்தைவிட 25 சதவிகிதம் குறைவான கட்டணத்தில் ஏ.சி. பயணத்துக்கும் வழிவகுத்திருக்கிறார். ‘ஏழைகள் ரதம்’ (கரீப் ரத்) என்ற பெயரில் இதற்கென தனி ரயிலே அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. ரயில்வேக்கு முக்கிய வருவாயே சரக்குப் போக்குவரத்தில் இருந்துதான். பல எண்ணெய் நிறுவனங்கள் குழாய் மூலமாக பெட்ரோலியப் பொருட்களைக் கொண்டுசெல்ல ஆரம்பித்திருப்பதால், அது ரயில்வேயைப் பாதிக்கலாம் என்பதை உணர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான சரக்குப் போக்குவரத்துக் கட்டணத்தை 8 சதவிகிதம் குறைத்துள்ளார். மற்ற சரக்குப் போக்குவரத்துக் கட்டணமும் பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை. இரும்பு, எண்ணெய், சிமென்ட் போன்ற விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு சீஸனைப் பொறுத்துக் கட்டணத்தில் இருபது முதல் முப்பது சதவிகிதம் வரை சிறப்புக் கழிவு அறிவிக்கப்பட்டுள்ளது. சிமென்ட் மட்டுமல்லாது, அதன் தயாரிப்புக்குத் தேவை யான மூலப் பொருட்களையும் இனி ரயில் மூலமாகவே கொண்டுவருவார்கள் என்பதால், இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒரு தேர்ந்தெடுத்த பிசினஸ்மேன் போல லாலு பரிணாமம் எடுத்திருப்பதையே இது காட்டுகிறது! அதிலும், சாலைப் போக்குவரத்தையே நம்பி இருந்த நிறுவனங்கள், சரக்கு லாரிகளில் ஓவர்லோடுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புக்குப் பின் கொஞ்சம் உடைந்து போயிருந்தன. இந்நிலையில் அவர்களுக்கு லாலுவின் பட்ஜெட் ஒரு வரப்பிரசாதம்தான். கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள ரயில்வே முன்வந்திருப்பது, அதன் சிந்தனை ஓட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காண்பிப்பதாக அமைந்துள்ளது. அதேபோல பாராட்டப்பட வேண்டிய துணிச்சலான முயற்சி, கன்டெய்னர் ரயில்களில் தனியாருக்கு அனுமதி. அதேபோல, பயன்படுத்தப்படாமல் நாடெங்கும் கிடக்கும் ரயில்வேக்கு சொந்தமான ஏகப்பட்ட இடங்களைப் பல வகைகளில் தனியார் பயன்பாட்டுக்கு வாடகைக்குக் கொடுத்து காசு பார்த்திருப்பதும் சரியான முயற்சியே!

குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சமும் லாலுவின் பட்ஜெட்டில் உண்டு. இதுவரை சுமார் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் 80 வகை சரக்கு களாகப் பிரிக்கப்பட்டு, அதற்குத்தக்க போக்குவரத்துக் கட்டண விகிதம் அமைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது இந்த எண்ணிக்கை 28 வகைகளாகப் பிரிக்கப்பட்டு, கட்டண விகிதம் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. லாலுவுக்குப் பாராட்டுக் கிடைப்பதற்கு ரயிவே நிர்வாகத்தின் திறமையான நடவடிக்கைகளும் ஒரு காரணம். ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குப் பொருட் களை எடுத்துச் செல்வதற்கு ஆகும் செலவான ‘காஸ்ட் ஆஃப் காரேஜ்’ டன் ஒன்றுக்கு 61 பைசாவில் இருந்து 51 பைசாவாகக் குறைந்திருப்பது, ரயில்வேயின் செயல்பாட்டில் ஏற்பட் டுள்ள முன்னேற்றத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கான டி.ஏ. காரணமான செலவு அதிகரித்திருக்கும் அதே தருணத்தில், அதையும் மீறி ரயில்வே லாபத்தில் இயங்குவது, அதன் நிர்வாகம் மற்றும் ஊழியர்களின் சிறப்பான செயல்பாட்டைக் குறிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. தேர்தலை மனதில் வைத்து பால்காரர்கள், விவசாயிகளுக்குச் சலுகை என்பது போக, வழக்கம்போல புதிய ரயில்களுக்கான அறிக்கைகள் என்று இருந்தாலும், தமிழகத்துக்குத் தேவையான பல முக்கிய வழித்தடங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு திருப்திகரமாக அமைந்துள்ளது. புதுக்கோட்டை காரைக்குடிக்கு இடையிலான அகல ரயில்பாதை போன்ற மக்களின் நீண்டகால கோரிக்கைகளில் சில இந்த பட்ஜெட்டில் இடம்பிடித்திருப்பதற்கு கூட்டணிக் கட்சிகளில் யார் காரணம் என்ற போட்டாபோட்டி வராமல் இருந்தால் சரி!
2001ம் ஆண்டில் 350 கோடி ரூபாயாக இருந்த ரயில்வேயின் கையிருப்பு இன்று லாலுவின் கீழ் 11,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது! எந்த ஒரு தனியார் நிறுவனம்கூட நினைத்துப் பார்க்க முடியாத தொகை இது! இன்றைய நிலையில் லாலு மட்டும், ஏதாவது ஒரு மல்டி நேஷனல் கம்பெனிக்கு வேலை கேட்டு மனு செய்தாரென்றால், அவரைக் கொத்திக்கொண்டு போய்விடுவார்கள்! நிர்வாகம் தெரியாதவர் என எள்ளி நகையாடப்பட்ட சில தலைவர்கள், பின்னர் நிர்வாகத்தில் பின்னி எடுத்தது நாம் கண்ட ஒன்றுதான். அவர்கள் செய்ததெல்லாம் ஒன்றுதான்... ‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’எனும்குறள் போல தனக்குத் தெரியாத விஷயத்தில் தேவையில்லாத தலையீடுகள் செய்யாமல், மக்களுக்கு என்ன தேவை என்பதை மட்டும் சொல்லி விட்டு, அவற்றை நிறைவேற்றும் பொறுப்பை உரிய அதிகாரிகளிடம் விட்டுவிடுவார்கள். அதைதான் லாலு செய்திருக்கிறார்... நிர்வாக சீர்திருத்தம் செய்தேன்... சலுகைகளை வாரிக்கொடுக்க முடிந்தது என்று ஒரே வரியில் இந்த பட்ஜெட்டை தானே விமர்சித்திருக்கிறார் லாலு!

Friday, February 24, 2006

புஷ்பராஜா நேர்காணல்



" எல்லோரும் ஈழ விடுதலைக்காகப் போராடினோம். எனினும், நாங்களும், மற்ற ஆயுதக் குழுக்களும் விடுதலை பற்றிய தத்துவக் கோட்பாட்டில் தெளிவில்லாமல் இருந்தோம். இது சகோதரக் கொலையில் கொண்டு போய் எங்களை நிறுத்தியது"

"ஈழத்துக் கவிஞர் சிவசேகரத்தின் கவிதை ஒன்று...

துரோகி எனத் தீர்த்து
முன்னொரு நாள் சுட்ட வெடி
சுட்டவனைச் சுட்டது
சுடுமாறு ஆணை
இட்டவனைச் சுட்டது
குற்றஞ் சாட்டியவனை
சாட்சி சொன்னவனை
தீர்ப்பு வழங்கியவனைச்
சுட்டது
தீர்ப்பை ஏற்றவனைச்
சுட்டது
சும்மா இருந்தவனையுஞ்சுட்டது....."

"தேதியை நிச்சயித்தபடி வரும் மரணத்தில் சில சௌகரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அடுத்து நாம் செய்ய வேண்டிய பணிகளைத் திட்டமிட்டு, துரிதமாக முடிக்கலாம். எழுத விரும்புவதை எழுதலாம். சந்திக்க விரும்பும் நண்பர்களைச் சந்தித்து அளவளாவி மகிழலாம். ஆனால், என்ன ஒன்று... இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கப் போகிறோம் என்பதால், ஆசை கட்டுக்கடங்காமல் நீண்டு கொண்டே போகிறது. இத்தனை ஆசைகளும் இவ்வளவு நாள் எங்கே இருந்தன என்று தெரியவில்லை. இறுதித் தேர்வை எழுதும் மாணவன் போல் என்னை உணர்கிறேன்."

"ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தைத் துவங்கிவைத்தவர்களில் நானும் ஒருவன் என்கிற முறையில், ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.ஈழப் போராட்டத்தைப் பொறுத்தவரை, இன்றைக்குப் புலிகள் யாராலும் வெல்ல முடியாத ராணுவமாக இருக்கிறார்கள். இனி வருங்காலத்தில் ஈழச் சமூகத்தின் மீதான பெரும் பொறுப்பு புலிகளின் மீது சுமத்தப்பட்டு இருக்கிறது. ஒற்றை அமைப்பாக ஈழ விடுதலையைச் சுமக்கும் புலிகள்தான் எதிர்காலத்தில் ஈழத்தில் அமைதியையும் சுதந்திரத்தையும் கொண்டுவர வேண்டும். கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களில் லிருந்து புலிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.ஈழத்தின் அருகில் இருந்து இந்தப் பிரச்னையைத் தீர்த்துவைக்க வேண்டிய இந்தியா, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறது"


ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் - புஷ்பராஜா

உணர்ச்சி பூர்வமான, நெகிழ்வான கட்டுரைக்கு விகடனுக்கு நன்றி.


புத்தகம் தொடர்புடைய சில சுட்டிகள்:

சுந்தரவடிவேல் பாரா வெங்கட் டிசே

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...