Thursday, May 12, 2011

கருவின் கவிதை



ஆச்சரியமாக இருக்கிறது...
எப்படி ஆரம்பித்தது வாழ்க்கை.?
குவளையில் பிறந்து
ஆருரில்
கையெழுத்து பத்திரிக்கை நடத்தி
தமிழ்க்காதல் தொடங்கியது
திராவிடம் நோக்கி திரும்ப
வெண்தாடி வேந்தரையும்
வெள்ளைமனத் துரையையும்
தலைவர்களாய் வரித்து
தமிழும், சமுதாயமும்
அரசியல் நோக்கி நகர்த்த
தொடங்கிய பயணம்..
எத்தனை போராட்டங்கள்
எத்தனை ஊர்வலங்கள்
எத்தனை பாராட்டுரை எத்தனை ஏற்புரை
எத்தனை பட்டங்கள் பதவிகள் மாலைகள் பொன்னாடைகள் மகிழ் விழாக்கள்
எததனை தேர்தல்கள்
எததனை துரோகங்கள்
எத்தனை எத்தர்கள்
அவர்களிடம் கற்றறிந்த பாடங்கள்
எததனை தொண்டர்கள்
குழி பறிக்கும் சீடர்கள்
எத்தனை நடிகர்கள்
கடந்து சென்ற தென்றல்கள்
வேர்விட்ட உறவுகள்...விழுதுகள்..
எல்லாம் தாண்டி .......

தகப்பன் என்ற பெயர் மட்டும் மிச்சமின்று

இந்த தேர்தல் முடிவு
எனக்கு மாலையா...? மலர்வளையமா???

Friday, April 01, 2011

ஆனந்த விகடனின் சேவை


ஆச்சரியமாக இருக்கிறது. என்ன ஆச்சு.. ஆனந்த விகடனுக்கு? ஒரேயடியாக விஜயகாந்தை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டு இருக்கிறது? மறைமுகமாக அம்மாவுக்கு ஆனந்தக் கும்மி வேறு?


தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளரை அடித்ததாக பிரச்சினை கிளம்பி, அதை விஜயகாந்தே ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதை இவர்கள் இந்த வார கட்டுரையில் இல்லவே இல்லை என்று சத்தியம் செய்து வக்காலத்து வாங்கி இருக்கிறார்கள். மக்கள் தொலைக்காட்சி இந்த க்ளிப்பிங்ஸில் எக்ஸ்ட்ரா சத்தம் சேர்த்து, லூப்பில் போட்டு ஆகாத்தியம் செய்கிறார்கள் என்றால், ஆ.வி இதை இல்லவே இல்லை என்று தாண்டவமாடி இருக்கிறது . இவர்களுக்கும் மக்கள் டீவிக்கும் என்ன வித்தியாசம்?


ராமதாஸை, கேப்டன் கேள்விகளாக கேட்டால் விகடனுக்கு குதூகலம் கொப்பளிக்கிறது. இதே ராமதாஸ் கொஞ்ச மாதங்களுக்கு முன்னால் மு.க வை கேள்விகளாக கேட்டுக் கொண்டிருந்தபோது அவரை நாயகனாக்கி விளையாடிப் பார்த்தார்கள். தமிழ்நாட்டு சாணக்கியனோ விஜயகாந்தின் அடிதடி மேட்டரை இதை “ஒரு மேட்டரே இல்லை” என்று திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார்.


மு.கவின் குடும்பம் கொள்ளை அடிக்கிறது என்று சொல்பவர்கள் கண்களுக்கு சசிகலாவும், சுதீஷும், பிரேமலதாவும், அந்தந்த கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்களாக தெரிகிறார்கள் போலும்.


மு.க இலங்கைத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தினால், புலி ஆதரவு, சட்டம் ஒழுங்கு மோசம் என்று நடனம் ஆடுவார்கள். பத்மநாபா கொலைக்கும், ராஜீவ் காந்தி கொலைக்கும் இந்த ஆள்தான் காரணம் என்று கமிஷன் கமிஷனாக இழுப்பார்கள். சர்வதேச அமுத்தல்களுக்கு பயந்து இந்திய அரசே இலங்கை விவகாரத்தில் விழி பிதுங்கி நின்று விலை போனபோது, தமிழக அரசு என்னவோ அமெரிக்க அரசாங்கத்தின் அங்கம்போல அதன் செயலற்ற தன்மைக்கு குறை கூறியதோடு நில்லாமல் தமிழினத்தையே ஏமாற்றி விட்டதாக கூக்குரல் இட்டார்கள்.


எம்.ஜி.ஆர் இலவசங்களை அறிவித்தால் அவரை பொன்மனச் செம்மல் என்பார்கள். கால தேச வர்த்தமானங்களுக்கேற்ப மு.க அதை மாற்றினால் மு.க மக்களை பிச்சைக்காரர் ஆக்குகிறார் என்று நாக்கில் நரம்பில்லாமல் புளுகுவார்கள். சொல்லிவிட்டு அம்மையார் அதையே காப்பி அடித்து தன் தேர்தல் அறிக்கையில் போடுவதையும் ராஜ தந்திரம் என்று மெச்சி உச்சிமோர்ந்து ஆனந்த பாஷ்பம் பெருக்குவார்கள்.


கூட்டிக் கழித்துப் பார்த்தால், எல்லாக் கால கட்டங்களிலும் மு.கவின் எதிரணியில் இருப்பவர்களை பத்திரிக்கைகள் என்ன காரணத்துக்காகவோ போஷாக்குடன் வளர்த்து வந்திருக்கின்றன. காரணம் அவரவர்களுக்கு தெரியும்.


தமிழக அரசியலில் ஊழல் கறை படியாத அரசியல்வாதிகள் வெகு சொற்பம். சமூகத்தில் குறிப்பிட்ட அளவு மாறுதல்களை கடந்த ஐம்பதாண்டு கால அரசியல் பணிகள் மூலம் கொண்டு வந்ததற்காக கருணாநிதியின் ஊழல்களை அவர் தனக்காக வசூலித்துக் கொண்ட சர்வீஸ் சார்ஜ் ஆகத்தான் நினைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. அவர் இருந்ததன் அடையாளம் அவர் இல்லாமல் போகும்போதுதான் தெரியப் போகிறது. அவர் மறைவுக்குப் பின தமிழர்கள் என்ன வேண்டுமானாலும் பண்ணிக் கொள்ளட்டும். அவருடைய கடைசி தேர்தலை கேவலபடுத்தி விட்டால் பழையனூர் நீலியின் புத்தம்புதிய காட்சிகள் மறுபடியும் தமிழக அரசியலில் அரங்கேறும்.

Thursday, December 23, 2010

கனிகிரி

கருவிலிருந்து
உனை உயிர்த்த துளிதான்
எனையும் முகிழ்த்திற்று
என் அன்னை உன் அன்னைக்கு
இளையாளென்றால்
உன் அன்னை இன்னொரு கொடிக்கு
உன்னிலும் நான் கற்றவள்
மொழி கலை கவிதை சாதுர்யம்
இவை அனைத்தும் கருவிலிருந்து
நான் செய்தத் நேரடிக் கொள்முதல்
எனிலும் எதிலும் நான்
இரண்டாமவள்
வீடு செல்வம் அரசியல் பதவி
வாரிசுரிமை ஊடக ஒளிர்வு....
ஊழல் புரிந்ததாய் இலைமறை காயாய்
செய்தி கசியும்போதே விலகும்
கட்சிக் கண்மணிகள்
உன்னிடம் குழைகின்றன
நீ செய்தாததாய் இன்னோரு
ஊழல் எங்கேயும் உண்டா..
பெண் ஆணென்ற பால்பேதம்
ஊழலிலுமா.?
ஜெ ஜெ நமோஸ்துதே:

செய்தி :
http://www.rediff.com/news/report/alagiri-kanimozhi-share-cold-vibes-on-delhi-flight/20101223.htm

Tuesday, December 07, 2010

சமீபத்திய சந்தோஷம்



சமீபத்திய தமிழ் மன்ற விழாவில் பாடியபோது ஐஃபோனில் புத்திரன் சுட்ட வீடியோ. தகவல்களுக்கு -
http://www.sactamil.org/KulirKaalaKondattam2010.html
பட்டிமன்றம், அரட்டை அரங்கம், பாட்டுக் கச்சேரி என்று ஒரே கோலாகலம்தான். நிழற்படங்கள் விரைவில் -

Friday, October 22, 2010

புதிய ஜீனோ


ஆன்மிகமே உருவெடுத்த ஆத்மா
கனிவும் கருணையும் கலந்த
பூலோக தேவன்
எளிமையும் அன்பும்
இறைவன் பரிசளித்ததாய் அலர்ந்த
நேசத்துகுரிய நிர்மலன்
ஹவுஸ்புல் ஆகி
கல்லா நிரம்பினால்தான்
மலை இமயம் செல்கிறான்
நிச்சலனமாக
சிலருடைய் சாந்தத்துக்கும்
அமைதிக்கும் ஆன்மிகத்துக்கும்
விலை 318 கோடி
சிட்டி..பணம் பணம் ..!
பாபா.. கதம் கதம் !!

Thursday, October 21, 2010

கேவல்கள்


இழந்த காதலிகள்
திரும்ப கிடைத்தாலும்
இழந்ததின் சோகம்
தீர்வதில்லை...
இன்னமும் சில பாடல்களினை
கேட்கும்போது
தன்னிரக்கத்தில்
கண்ணீர் சுரக்கிறது
சமயங்களில் தேடப்பட்டவள் இவள்
இல்லையோ என
சந்தேகப்படும் அளவுக்கு.. !!
பதட்டத்தில்....
பயணத்தில் எதிர்கொண்ட
பல தென்றல்களை
மனம் பரபரவென்று புரட்டியபிறகு
புரிகிறது
தேடப்பட்டவள் கிடைத்தாள்
ஆனால் தொலைந்தவளாகவே
கிடைக்கவில்லை
நட்பு காதலாவது சாதாரணம்
காதல் நட்பாவது சதாரணம்

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...