Saturday, April 13, 2013

தாகம்

சாலையில் வாகனம் சற்றே முந்தினும்
சரசரவென்று கிளம்பும் கோபமும்
கற்ற வித்தை குறைவெனினும் நண்பன்
குரலேழுப்பி பேசுகையில் வரும் புழுக்கமும்
மந்தையில் காணாது போகாமல் தனித்து ஒளிர
உள் எரிந்துகொண்டே இருக்கும் வெறியும்
கூட்டமாய் ஓடுகையில் இலக்கு பற்றியெண்ணாது
எதிராளியின் வேகத்தினான பதட்டமும்
பெரியரென சொல்பவர் சிறுமையின்
அடையாளமாய் இருத்தலால் வரும் சீற்றமும்
கட்டியதோடு பெற்ற செல்வமும் அகத்திருக்க
கணநேர தவறலில் தறிகெட விழையும் சிறுமனமும்,
உயிரனைய உறவின் சுயநலம் புரியினும்
கோழையாய் எதிர்கொள்ளும் புரியாப் பொறுமையும்
சரியா.....சரியா...சரியா....??
பதில் கிடைக்கும் நேரம்
அவசியம் இல்லாது போகும்..
வரும் தலைமுறைக்காய் பதில்களை ஈந்தால்
தந்த பதில்களில் நூறு கேள்விகள் முளைத்தெழும்...
கேட்டதும், கிடைத்ததும் , தேடியதும் வீணென
மன்ணில் மண்டியிட்டழ ...
காதருகில் யாரோ சிரிக்கும் சத்தம் கேட்கும்
சிரித்த குரல் இதுவே வாழ்க்கையென விளம்பிப் போகும்.!!

வெளி

முடிவற்ற விழிப்புணர்வே விடுதலையின் விலையாமென்ற *
மூத்தோரின் வாக்கினை எண்ணும் போழ்தில்
சுதந்திரமென்றெதனைச் சொன்னார் எனும்
கேள்வி முளைக்கும்....
***
வாழுகின்ற வாழ்க்கை நிலை பற்றி பெருமிதம் கொள்ளுகையில்
அதன் நிலையாமயின் நினைவு வந்து சுரீரென்று தைக்கும்
நன்று செய்தாய் நம்பி என பணியிடத்தில் புகழப்படுகையில்
என்னிலும் கூர்மையானோர் நினைவு வரும்
தோற்றப்பொலிவு கண்முண் தெரிகையில் இதனால்
தோற்றோர் பட்டியல் நினைவு வரும்
சுயநலமற்று விட்டு கொடுத்தோமே என இறுமாந்திருக்கையில்
தனைப் பெற்ற தாயவளின் நினைவு வரும்
நாள் முழுக்க வேலை செய்தும் கூலிக்கே அல்லாடும்
ஏழையொருவனின் சாயந்திர நேரத்து சதிராட்டத்தை
விளைவுகளை யோசியாமல் அவன் வீசி வீசி பேசுவதை
மனத்துள் கனம் கொள்ளாது அக் கணத்துக்காய் அவன் வாழ்வதை
சிந்தனைக்குள் குறுகாமல் அவன் குதியாட்டம் போடுவதை
அன்றைய நாளில் அவன் வெற்றியை மனதார ருசிப்பதை
காணுகையில்............
புலம்பலில் இறங்கும் மனது, பொருமலில் தொடர்ந்து
கேள்வியில் திணறும்
*******************
சுதந்திரமென்றெதனைச் சொன்னார்....??
பிரச்சினைகளினின்றும் சுதந்திரமா...
சூழல்களின் சுழல்களினின்றும் சுதந்திரமா...
சிந்தனையற்று சும்மா இருக்கும் சுதந்திரமா...
எனில் இதுவே துறவோ...??

வளர்சிதை மாற்றம்

கிட்டிப்புல் செய்து தரவும்
பள்ளியில் விட்டு வரவும்
கிரிக்கெட்டு மட்டைக்கு
வண்ணம் பூசவும்
தோளில் தூக்கி சாமி ஆடவும்
ஆட்டுப்பால் கறந்து பார்க்கவும்
காட்டாமணக்கில் குமிழி ஊதவும்
பால்யத்தில் பாதி நேரம்
என் தாத்தாவின் வயதை ஒத்த
வீட்டாள் முனுசாமி கூடத்தான்
சாப்பிடும் நேரம் மட்டும்
அவன் கொல்லை நடையிலும்
நான் கூடத்திலும்...
அவன் நீர் குடித்த குவளை கூட
நீர் தெளித்தே வீட்டுள் வரும்
வளர்ந்து , கிளைத்து
முதிர்ந்து வெளிப்படர்ந்து
திரைகடலோடி
வெள்ளையை தவிர
மற்றதெல்லாம் கறுப்பெனவே அறிந்த
அயலகத்து மக்களுள்
இத்தனை கலந்தும்கூட
கண்ணுக்குத் தெரியாதொரு
சுவரை கடந்து விட்டு
தூக்கி வெளி வீசப்பட்ட
அந்த ஓர் நாளில்
சட்டென
கனவு கலைந்தது..

யாதுமாகி

தவறவிட்ட தருணங்கள்
தழும்பாகி
சொரிந்துகொள்ள
உணக்கையான
காயமாகி
உள்ளுக்குள் அடிபட்ட
ஊனமாகி
அவசியத்தை
வலிக்குள் பொதித்த
நிகழ்கால தேடலின்
மையமாகி.......
டாஹோ
மலைத்தொடரில்
க்ராண்ட் கான்யான்
பள்ளத்தாக்கில்
கோல்டன் கேட்
பாலத்தில்
நயாகரா
நீர்வீழ்ச்சியில்
எங்கேயோ கூடப்படித்த
கருணாநிதியும்
அகஸ்மாத்தாய் சந்தித்த
ஆராவமுதனும்
அப்பாவின் பால்ய
நண்பரும்
சிங்கப்பூர் செல்வசேகரனும்
தட்டுப்பட
எங்கே நீ....???

உனக்காக

அருகே கிடத்தி
கதை சொல்லி தூங்க
வைக்க தகப்பனுக்கு
சமயமில்லை
ஆதுரமாய் சோறூட்டி
விக்கலுக்கு நீர் தர
அன்னைக்கும்
வாய்க்கவில்லை
ஆண்டுக்கோர்முறை
தூர தேசத்தில் இருந்து
பரிவோடு எனை பார்க்க
பாட்டி மட்டும் வருவாள்..
பள்ளியில் என் ப்ரிய
மெக்ஸிகன் ஸ்நேகிதி
பின் என் கறுப்பின
விளையாட்டு தோழன்
அரிதாய் சில ஐரோப்பிய
சகாக்கள்
பகலின் தனிமையில்
என் ஜன்னலோரக் குருவி
கலர் கலராய் முகம் காட்டி
வெறுமை கொல்லும்
கார்ட்டூன் டீ.வி
திடுக்கென்ற விழிப்பு
தரும் துர்சொப்பனங்கள்
இத்தனை மட்டுமே
இருக்கும் என் சிறு உலகுள்
அம்மா . அப்பா மட்டும் ஓடி ஓடி
பொருள் சேர்ப்பர்
எல்லாம் எனக்காம்....!

நெறி

ஸ்நேகம் கொண்டவளையே
மணமும் சேய்து நிறைவாய்
வாழும் நண்பனை கண்டு
எரிச்சல் மூண்ட போதும்
இத்தனை காலமும் கண் மூடி
ரசித்த பாட்டுக்கள் திடீரென
அபத்தமாய் போனதும்
பஸ்ஸில் வயோதிகர் பக்கத்தில் நிற்க
அடமாய் உட்கார்ந்திருந்த போதும்
எத்தனை குவளை விஸ்கியிலும்
ஏறவே ஏறாத போதையிலும்
கடையாள் விநோதமாய் பார்க்க
நீ தடுத்திருந்த பளீர் பச்சையில்
உடுத்த எடுத்தபோதும்
சாலை கடக்க சிரித்து நடக்கும் ஜோடியொன்று
தினவு தீரவே அலைவதாய் நினைத்தபோதும்
தேடித்தேடி பட்டினத்தாரில் நட்டதையும்
தொட்டதையும் படித்தபோதும்
சட்டென்று எழுத கவிதைகளே கிடைக்காது
போனபோதும்தான்
தெரிந்தது...
உன்னை இழந்ததில் உண்மையில்
நான் இழந்தது எதுவென்று....

மகாபலி

நிகழ்கால உவப்புகளும்
எதிர்கால கனவுகளும்
நெஞ்செலாம் நிறைந்துவழிய
நுரைக்க நுரைக்க காதலிக்க
எனக்கும் ஆசைதான்....
வாலிப உச்சத்தில்
காணாத உயரங்களும்
போகாத தூரங்களும்
எட்டிவிட,
வார இறுதி விடுமுறைகள்
எனக்கும் வேண்டும்தான்...
வேலைநாட்களில் கணிப்பொறியும்
ஓய்வுவேளையில் ஒயின் குப்பியும்
காரோடு  வீடுமாய்
பூந்தொட்ட நடுவில்
புதுசாய் கட்டின பெண்ணோடு
சொகுசாய் குடியிருக்க
எனக்கும் விருப்பம்தான்...
மனிதனாய் வாழ விடவில்லை
இம் மண்ணுலகம்
மாவீரனாய் சாகிறேன்
சாதாரணனாய் வாழ இயலவில்லை
ரணப்பட்ட நிணமாகி
சரித்திரனாய் சாகிறேன்
மனிதம் செத்து மரணம்
தழுவும் என்னை
உலகம் அழைப்பதோ
மனிதவெடிகுண்டு
என்று....!!!

 

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...