Sunday, May 15, 2016

குப்பத்து ராஜா

இதுதான் ஊடக அறமா என்ற தலைப்பில் மதுரைப் பல்கலைகழகத்தின் இதழியல் துறைப் பேராசிரியர் விகடனுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்யாருக்கு நாற்காலி என்கிற தலைப்பில் விகடன் ஏடு வெளியிட்ட கட்டுரை எவ்வாறு திமுக சார்பு நிலை எடுத்திருக்கிறது என்பதையும் விகடன் ஏன் மக்கள் நலக்கூட்டணியை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும்  கேள்வி கேட்டு இருக்கிறார்.



தமிழ்மக்களின் நாடித்துடிப்பு என்று சொல்லிக் கொள்கிற ஒரு பத்திரிக்கை தமிழர்களின் கருத்தை மாற்றி அமைக்கிற, தன் சார்பு நிலை பற்றி சொல்கிற வேலையிலிருந்து வெளிவந்து மாமாங்கம் ஆயிற்று பேராசிரியர் அவர்களே. தற்கால வெகுஜன ஊடகங்கள் ( அரசியல் கட்சிகளால் ஆதரிக்கப்பட்டோ / நடத்தப்பட்டோ வெளிவருபவை தவிர)  பொதுமக்கள் நினைப்பதை கண்டுபிடித்து அவர்களுக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்ளும் நுகர்வோர் கலாசாரத்தின் கூறாகி விட்டன.  விகடனில் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் பங்கு இப்போது இருக்கிரது என்ற அடிப்படையில் பலருக்கு கட்டுரையைப் பற்றிய  சந்தேகம் வந்தாலும் கடந்த பல தேர்தல்களாக விகடனின் குரல் எப்படி எதிரொலித்து இருக்கிறது என்று கூர்ந்து அவதானித்தால் உண்மை விளங்கும்

மக்கள் நலக்கூட்டணி  ஒரு பலமான மூன்றாம் அணியாக உருவெடுக்காததற்கு அவர்களே காரணம்.
அங்கு இருக்கும் தலைவர்கள் ஒருவருக்கும் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் தாக்கும் அருகதை இல்லை. இரண்டு கரைகளிலும் ஒதுங்கித்தான் அந்த தலைவர்கள் இதுவரை அரசியல் செய்து வந்திருக்கிறார்கள். வைகோ ஒரு உணர்ச்சிவசப்பட்ட   தலைவர். வானவில்லின் ஏழு நிறங்களையும் தாண்டி அரசியல் அரங்கில் நடனம் ஆடும் வினோதர். இம் என்றால் அழுகை , ஏன் என்றால் கர்ச்சனை என்று காட்டி தன்னை தொடர்பவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தும் கோமாளி. உப்புசப்பிலாத காரணத்துக்காக இத் தேர்தலில்    அவர் போட்டியில் இருந்து விலகினார். அது ஒருபெரிய பின்னடைவு. விஜயகாந்தின் தேமுதிக இன்னொரு சர்க்கஸ் கூடாரம். விஜய்காந்தின் தற்போதைய உடல்நிலை, மனநிலை, அவர் குழறல் எல்லாமே அவருக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கை பாதித்தன. கேப்டனை பிடித்தவரகள் கூட சுதீஷுக்கும் பிரேமலதாவுக்கும் பட்டம் கட்டவா நாம் பிறந்தோம் என்று ஒதுங்கும் அலவுக்கு அவர்கள் இருவரும் பவனி வந்தனர். பத்திரிக்கையாளர்களை தாக்குவது, பொதுவெளியில் நாகரிகம் இல்லாமல் நடந்து கொள்வது, கேலிக்கூத்தான தேர்தல் அறிக்கை இவற்றைத் தொடர்ந்து  கேப்டனும் செல்லாக்காசாகிப் போனார். திருமாவளவனுக்கு அரசியல் அரங்கில் இருக்கும் மதிப்பு ஓட்டுகளாக திரள கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வளரவேண்டும். அது இத்தேர்தலில் சாத்தியமில்லை. தவிரவும் திருமா சாதி ரீதியாக மேடைகளில் பேசும்போது பொது வாக்காளர்களின் ஆதரவை இழக்கிறார். மிச்சம் அந்த அணியில் உள்ள தமாகவும். கம்யூனிஸ்டு கட்சிகளும் மக்களால் பொருட்படுத்தக் கூடிய கட்சிகளாக இல்லை. மொத்ததில் மூன்றாம் அணி  களையிழந்து போனதற்கு அவர்களே காரணம். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக திகழ வேண்டுமெனில் அவர்களை எந்த தேர்தலிலும் சாராமல் தனிப்பெரும் சக்தியாக தமிழகத்தில் வளரவேண்டும்.

இதை யோசிக்கும் போது சீமான் நினைவுக்கு வருகிறார். சீமானின் உணர்ச்சி வேகமும், அவர் பாசிசப் பேச்சும் இப்போது வேண்டுமானால்  கூட்டம் சேர்க்கும். அந்த வெறுப்பரசியல் நெடிய நாள் வேலைக்கு ஆகாது. பதட்டம் குறைந்து, பக்குவம் கூடி இரண்டாம் கட்டத் தலைவர்களை வளர்த்து, கழகங்களின் மாற்றாக திகழ அவர் கனிந்து வர வேண்டும். ஹிட்லரைப் போல பேசுவதும், மாற்று இன/ மொழி மக்களை விரட்டுவதும், திராவிடத்தை பழித்துகொண்டே பெரியாருக்கு சாமரம் வீசுவதும், முப்பாட்டன் முருகன், பாட்டன் பெரியார் என்று வாதிப்பதும் வெறும் உணர்ச்சி வேகங்களே. உணர்ச்சி வேகங்களுக்கும்  நாற்காலிகளுக்கும் தூரம் அதிகம்.

தேர்தல் நெருக்கத்தில் மே 14/15 தேதிகளில் திமுகவே வோட்டுக்கு பணம் கொடுத்ததை நான் அறிவேன். ஜெயலலிதாவின் ஆட்சி மீது  இததகைய வெறுப்பு மக்களுக்கு இருந்தும் கூட அத்தகைய ஆட்சியை அப்புறப்படுத்தும் ஜனநாயகக் “கடமையை” செய்ய  வைக்கக் கூடமக்களுக்கு கட்சிகள்   லஞ்சம் தரும் காலமாகி விட்டது. தேர்தல்களை வாங்கும் போக்கு இரு கழகங்களுக்கும் உள்ளது என்பதே கசப்பான உண்மை. ஆனால், மக்களுக்கு  மாறி மாறி வாக்களிக்க ஒரு மாற்றுக் கட்சியாவது இருக்கிறதே என்று ஆறுதல் மட்டுமே மிச்சம். இப்போது  ஆட்சிக்கு வரும் ஸ்டாலின் தவறு செய்தால் ஐந்தாண்டுகளில் ஜெ கம்பெனிக்கு வாய்ப்பு கிட்டும் அவ்வளவே. ஆனால் இவ்விரு கட்சிகளை தாண்டி தலையெடுக்க தமிழ் மண்ணில்  இம்முறையும் வாய்ப்பு இல்லை.

  திமுகவுக்கு/ ஸ்டாலினுக்கு இத்தேர்தல் ஒரு வாய்ப்பு. அடுத்த தேர்தலுக்குள் கருணாநிதி இருக்கிறாரோ என்னமோ , இத் தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றால், மத்தியிலும் , வட மாநிலங்களிலும் , மற்ற துறைகளிலும் ஊடுருவி உள்ள வலதுசாரி சக்திகளை கட்டுக்குள் வைக்க திமுகவின் எழுச்சி உதவும். ஸ்டாலின் நல்லாட்சி வழங்கி இந்த வாய்ப்பினை  பயன்படுத்திக் கொண்டால்   ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பிரதிநிதியாக தன்னைக் கூறிக்கொள்ளும், ஓட்டுக்களுக்காவது அவர்களை குறிவைக்கும் ஒரு இயக்கம் தன்னை பலப்படுத்திக் கொள்ள அது உதவும். மற்றபடி திமுகவின் ஊழல்களையும் , குடும்ப அரசியலையும் வாக்காளர்கள் திமுகவால் தங்களுக்கு கிடைக்கும் அரசியல் பலத்துக்கான “கமிஷன்/தண்டல்” தொகையாகவே பார்க்கிறார்கள்.

குப்பத்து தாதா அக்கம்பக்கத்து பெருந்தனக்காரர்களுக்கு வேண்டுமானல் பொறுக்கியாக தெரியலாம்.
குப்பத்துக்கு ராஜா அவன்தான்

Sunday, May 01, 2016

கவனம் தி.மு.க !!!

தேர்தலையொட்டி  எடுக்கப்படும் கருத்துக்கணிப்புகளும், உளவுத்துறையின் விவரணைகளும், பொதுவாக மக்கள் மத்தியில் பேசப்படும் பேச்சுகளும் ஜெயலலிதாவின் பதட்டமும் ஒன்றை நாசுக்காக சுட்டுகின்றன.

தேர்தல் முடிவுகள் தி.மு.கவுக்கு ஆதரவாக வரப்போவதையே அவை சொல்லுகின்றன.

பெரிய கட்சிகளுக்கு பலத்த சேதத்தை உண்டு பண்ணும் என்று எதிர்பார்க்கப்ப்ட்ட ம.ந.கூ தலைவர்களின் உணர்ச்சிவயப்பட்ட முடிவுகளால் பிசுபிசுத்து விட்டது. பா.ஜ.க தனித்து விடப்பட்டது. பா.ம.க அடுத்த தேர்தலில் பேரம் பேசும் வலிமையை பெறுவதற்கே தேர்தலை சந்திக்கிறது. சீமான் அடுத்த வை.கோ. இந்த சூழலில் ஆளுங்கட்சி மீதுள்ள அதிருப்தியை முழுக்க முழுக்க அறுவடை செய்யும் கட்சியாக தி.மு.க எஞ்சுகிறது. வெற்றி பெற்றால் அக் கட்சி செய்ய வேண்டுவன என்று  ஒரு பொதுஜனத்தின் பார்வையில் பார்த்தோமானால் :

  1. கலைஞர் முதல்வர் ஆகக்கூடாது. கட்சித்தலைவர் / ஆலோசகர்  பதவியில் இருந்து கொண்டு ஸ்டாலினை முதல்வர் ஆக்க வேண்டும்.  அது அடுத்தகட்ட தலைவர்கள் தலையெடுக்க வழி வகை செய்யும். முதல்வரை  மாற்றும் வல்லமை கட்சித் தலைமைக்கு இருக்க வேண்டும்
  2. கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வளர்க்கப்படவேண்டும் . கலைஞருக்கு அன்பழகனும், ஆற்காடு வீராசாமியும், நாஞ்சில் மனோகரனும், சாதிக் பாட்சாவும்,  விரபாண்டி ஆறுமுகமும் தோள் கொடுத்து நின்றது போல கட்சியின் வாழ்விலும் தாழ்விலும் ஸ்டாலினுடன் உடன் நிற்க ஒரு குழு வேண்டும்.
  3. அழகிரி அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் அல்லது ஸ்டாலின் அமைச்சரவையில் பொறுப்பேற்க வேண்டும். இணைந்து பணிபுரிவதே யாவர்க்கும் பயன் தருவதாக அமையும்.
  4. கனிமொழி  டெல்லி அரசியலில் முழுமூச்சாக ஈடுபட வேண்டும். தயாநிதி மாறன் டெல்லி அரசியலில் மறுபடியும் வந்தாலும் அவர் குடுமி கனிமொழியின் கையில் இருக்க வேண்டும்
  5. கட்சியும் ஆட்சியும் ஒன்றையொன்று சாராமல் தனியே இருக்க வேண்டும். கட்சி பிரமுகர்களின் வியாபாரங்கள்  ஆட்சியை பாதிக்கக் கூடாது.
  6. மத்திய அரசுடன் இணக்கமான முறையில் பணியாற்றி தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் விரைந்து முடிக்கப்பட வேண்டும்
  7. ஆட்சிக்கு எதிரான சீமான், பா.ம.க, ம.ந.கூ போன்ற கட்சிகளின் கோரிக்கைகளை பரிசிலித்து அவைகளில் நியாயம் இருந்தால் அவை நிறைவேற்றப்பட வேண்டும். அவர்களை கட்டுக்குள் வைக்க அதுவே சிறந்த வழி.
  8. சினிமாத்துறையில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது. எல்லோருக்கும் நல்லவனாக இருக்காமல் எங்கெங்கு கண்டிப்பு வேண்டுமோ அதை செயல் படுத்த வேண்டும்.
  9. பூரண மதுவிலக்கை கொண்டுவர முடியாவிடினும் அதை படிப்படியாக கொண்டுவர வேண்டும். கட்சியினரின் சாராய ஆலைகள் கைவிடப்படவேண்டும்.
  10. ஜெயலலிதா மீதுள்ள வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு தண்டனை வாங்கித்தரப்பட வேண்டும் கலைஞர்  பூரண ஓய்வு பெற வேண்டும். இத்தனை வயதில் அவர் இப்படி உழைப்பது கட்சிக்கு அவப்பெயர்.
 

Wednesday, October 14, 2015

கடவுள் பிறந்தார்

உழைக்க அஞ்சா அவனுக்கு
எனைப் போலவே முன்கோபம்...
ஓடி ஓடி பொருளீட்டியோனை
மூடிமூடி இறுக்கிக்கொண்ட 
கருமி என்றனர்
எனை தூற்றுதல் போலவே....
பெண்டிர்க்கு பிரியனாய்
இருந்தவனை ஸ்தீரி லோலன்
என்றனர் நான் வெட்கி நிற்க...
சமய சந்தர்ப்பமறியாது
உரத்த குரலில் வாய்வீசுவான்
என்றனர் என்னை
கேலி செய்தல் போலவே....
சுற்றிச் சுற்றி வந்தாலும்
சுயநலமே கருத்தானவன்
என்று இடித்துரைப்பர்
எனை வைதல் போல்...
நன்றி மறவாதவன்
நாவன்மை கொண்டோன்
நாருசிக்கு அடிமையானவன்
சமையலில் வித்தகன்
தமிழ்க்காதல் கொண்டோன்
இறை பக்தியுள்ளோன்
என நான் முகம் பார்க்கும்
கண்ணாடியாய் அவன் குணங்கள்..
என்னைப் போல பாடும் தொண்டையும்
என்னை போல சிற்றின்ப பிரியனும்
என்னைப் போல் வாயுக் கோளாறும்
என்னைப் போல பேழை வயிறுமான 
என்னை படைத்தவனை...
அமரனான  எந்தையை அன்றியும் ...
அணுக்கமாய் உணர
எனக்கு இனி இறையுண்டோ
இப் பிறப்பில்...
நடுகல் நட்டு முன்னோரை
வணங்கும் தமிழ்வாழ்வு
இந்த நூற்றாண்டிலும்
தொடர்கதையாய்........

Tuesday, September 01, 2015

வானப்ரஸ்தம்

அதிகாலை ஆலயத்து வெளிபி்ரகாரம் போல
கைக்குழந்தை இல்லாத வீடு போல
வார்டன் இல்லா விடுதி போல
பாடகன் இல்லாத கச்சேரி மேடை போல
எங்கள் ”ஸ்ரீ துளசி இல்லம்” ...
நிச்சலனமாய் இருக்கிறது.
வருத்தம் உண்டு ; துக்கம் இல்லை
ஆதங்கம் உண்டு ; ஆயாசம் இல்லை
அடடா என்று தோன்றுகிறது; அய்யோ என்றில்லை.
தெரிந்தவைகளை
சொல்லிக் கொடுத்துவிட்டு
வகுப்பறை நீங்கிய ஆசிரியனை
நினைத்துக் கொள்வதுபோல்
தலைக்கு மேல் உயர்த்தி
கை கூப்பத் தோன்றுகிறது.
விடைபெற்றுக் கொண்டது அந்த
சிநேகமுள்ள சிங்கம்.

Thursday, August 13, 2015

கையளித்தல்


திருமணங்கள் உவகைதான்.
தோழியொருத்தி உருகிவடிய
மற்றொருத்தி 
உயிரில் கலக்கிறாள்
வட்டிலிலும் தொட்டிலிலும்
இட்டுத் தாலாட்டி
முட்டிமோதி அவனை எட்டி
நடக்க வைத்தவளும்
கொட்டி முழக்கும் சபைதனில்
சுற்றம் வாழ்த்த
கட்டிலுக்கு காவலாய்
ஆவலாய் வந்தவளும்
ஒவ்வொரு புறம்..........
அன்னை கண்ணீரில் நனைய
அப்பனுக்கு மட்டும் புரிகிறது
புரையேறுகிறது அவன்
மணநாள் நினைவில்...
வழிவழியாய் வந்த
உறவுக்குழப்பங்கள்
வாழ்வை புதிராக்கும்
என்றென்றும்........
அதீதமாய் நேசிக்கப்படுவதும்
சுகமான சுமைதான்.

Sunday, July 19, 2015

இடமாற்றம்


விண்மீனொன்று
வீதியிறங்கி வந்தது ...
வாசல் மாந்தர்க்கது
வெறும் விளக்காய் தெரிந்தது
அண்மித்த விண்மீனின்
வெம்மை தகிக்க
விளக்கெண்ணை எரித்து
வெளிச்சம் கண்டோர்க்கு
விண்மீன் புரியவில்லை
அதியுஷ்ணம் அதன்
இயல்பென்று விளங்கவில்லை
அவருள்ளில் பொருந்தா
விண்மீன் பாவமாயினும்..
இங்குறைய விதிக்கப்பட்ட
சாபம் அதன் வாழ்வு
தனைநொந்த அது
நுகரப்படா வீரியத்தை
வெளியில் வெறுமனே
வெறுப்புடன் பாய்ச்ச
மண்ணின் மெளடீகம்
தாக்கி அகாலத்தில்
விண்வீதி திரும்பியது
வெந்நீர் அடுப்புகளிலும்
சோற்றுப்பானை சூட்டிலும்
சுருட்டுக் கங்கிலும்
ஆலையின் ஜூவாலையிலும்
சூளையின் தணலிலும்
விளக்குகளிலும்
விழாப் பந்தங்களிலும்
விடா பந்தங்களிலும்
பிறர் அறியாது
தன் வீரியஇயல்பை
பகிர்ந்துவிட்ட
தரையிறங்கிய
மற்றெல்லா விண்மீன்கள்
வான்நோக்கி தேம்புகின்றன.
விண்மீன்கள் வீதிக்கு
இறங்கிவர வேண்டாம்
சுயம் கெடாமல்
அவை இங்கே
இருக்கக் கடவதில்லை
சார்ந்தோர்க்கிரங்கி
சுயம் கெட்டவை
விண்மீனாய்
தொடர்வதில்லை.


Sunday, July 05, 2015




சமத்துவம் காண

ஆன்றோரே அவையோரே
அன்புள்ளம் கொண்டோரே...
சமத்துவ நாற்றாங்கால் தமிழகம் தன்னில்
வளமேவ வளர்ந்து விட்டு
தமிழ்நாட்டின்பால் கொண்ட நேசம்
இன்னமும் மாறாமல்
அயலக மண்ணில் நலமும் வளமும்
பலமும் பெற்று உரைபவரே...
தான் பெற்ற உதவியனைத்தும்
தன்னிலும் இன்னும் தாழ்ந்தோர்
பெறவேண்டுமென்ற உள்ளம் கொண்டு
தொண்டிலே பழுத்த பழமாகி விட்ட
தூய எண்ணம் கொண்டோரே.....
கேளுங்கள் நான் செப்புவதை...

கவியரங்க தலைப்புகளில்
இதுவரை எடுக்காத தலைப்பு என்று
வழங்கினர் இத் தலைப்பு..
சமத்துவம் காண...
அதுவே என் தலைப்பு..

என்னடா அதிசயம் இதுவா யாரும்
எடுக்காத தலைப்பு ?
அத்துணை இலகுவா இவ் விடயம் ?
என்று நான் வியக்கும் வேளையில்.....
வசிப்பது அமெரிக்கா என்பது
சிந்தையில் எட்டியது.
வெள்ளையும் பழுப்பும் கருப்பும்,
ஆணும் பெண்ணும்
திருநங்கையும்
சனநாயகம் குடியரசு
பச்சை கட்சிகளும்
சரிநிகர் சமானமாய்
சமத்துவம் பூண்டு
அரசாட்சி செய்யும் தேசத்தில்
சமத்துவம் காண -என்பது
ஏக்கமாய் எப்படித் தோன்றும்?
வெள்ளை மாளிகையையே
நிறம் கடந்த மாளிகையாய்
மாற்றிய
நிஜமான தலைவர்கள்
இருக்கும் தேசத்தில்
சமத்துவம் காண என்பது
ஏக்கமாய் எப்படித் தோன்றும்??.
இல்லாது போனால் தானே
எல்லாரும் ஏங்குவர்..
இத்தலைப்பு நாடி
எல்லோரும் ஏகுவர்

சமத்துவம் காண என்பது
ஏக்கமாய் இன்னும் ஒலிக்க
இது என்ன இந்தியாவா...?  ...
நல் இமயமும் நலங்கொழிக்கும் கங்கைநதியும்
வெல்லத் தமிழ்நாட்டிம் மேன்மை மிகு பொதிய மலையும்
செந்நெல் வயல்களும் செழுங் கரும்புத் தோட்டங்களும்
தின்னக் கனிகளும் தெவிட்டாப் பயன்மரங்களும்
இன்பமும் செறிந்திருக்கும் இப் பெரிய தேசத்தில் ….
காவி அங்கே
மேவி வரும் வேளையிது
பிறப்புசார் தகைமைகள்
பல்லக்கேறும் தருணமிது
நம்நாடு நீங்கினாலும் விழிப்புடன்
சற்றே நாம் இருந்திடல் வேண்டும்
இல்லையேல் சமத்துவம் என்பதை
வீதியில் விட்டுவிட்டு
வலிமையுள்ளது எஞ்சும் என்ற
காட்டு வேதத்தை
நாட்டுக்குள் கொண்டு வந்து
பேதம் வளர்ப்பர்
வயிறு புடைத்தவனுக்கும்
வாழ்வே பசிப்போராட்டமாய்
போனவனுக்கும் ஒரே அளவில்
உணவு படைப்பர்...
பிறப்பிலேயே கால் இழந்த முடவனை
பந்தயத்தில் ஓடச் சொல்வர்.
இவர்கள் சொல்லும் சமத்துவம்
சமத்துகள் சொல்வது.....

சமத்துவம் அஃதன்று.

சமத்துவம் காண என்பது
வாடிய பயிரைக் கண்டு தானும்
வாடிய வள்ளலார் போல
கடையனுக்கும் அன்பு காட்டும்
கருணைப் பெருங்கடலாய் உறைவதே
வரப்புயர நீர் உயரும் நாட்டில்
சிலர் மட்டும் தன் தரப்பு உயர
தன் அறிவு உயர உயர
வறண்டு போவர்
கனியாது இருண்டு போவர்.....
காயிலேயே வெம்பிப் போவர்.   
நாயினும் கீழாய் போவர்.
ஒதுக்கீடு வேண்டாம் என்ற
எண்ணத்தோடு சமத்துவம்
சாகடிக்கும் இவர் சொல்லட்டும்
எந்த ஒதுக்கீடு கொண்டு
அமெரிக்காவில் இத்தனை
எளியர் சிறக்கின்றார்
விண்ணிலேறி பறக்கின்றார்

சமத்துவம் காண என்பது
நலம் பயக்கும் செயல் செய்ய
விழையும் நானிலத்தின்
தலைவனுக்கு
ஒரு தீராப் பெருங்கனவு
தன்குடிகள் அனைவர்க்கும்
நாட்டின் வளங்களை
சரியாய் பகிர்ந்து தரும்
உத்தம யோசனை இது
இல்லையேல்
பள்ளிக்கு வரமுடியாத
பசிவாதை தீர்க்க
மதிய உணவு எங்கே கிடைத்திருக்கும்?
நிஜ வாழ்க்கை நியாயங்களுக்கு
நெருங்கியும் வராத
நீச ஞாயங்களால்
ஒரு தலைமுறையே
தவித்திருக்கும்
அறிவொளி கிட்டா
அந்தகாரத்தில் ...
கிளரொளி இளமை
கெட்ட பின்னும்......

சமத்துவம் காண என்பதே அரசின்
தலையாய தத்துவம் என்ற
பெருங்கொள்கையாய் போன
நாற்பதாண்டில்
தமிழகம் கல்வியில் தலை
நிமிர்ந்து நிற்கிறது.
செல்வத்தின் சாயல்
செம்மையாய் விழுகிறது.
வறியவர்கெல்லாம் வாழ்வு
வந்தது
எனவே இப்போதே
எழுதி வைப்போம்
எளியவர்களின் சரித்திரம்
கடையனுக்கும் கலைமகளும்
தனலட்சுமியும்
தயை செய்தார்ளென..
இல்லையேல் களப்பிரர்களின்
காலம் மீண்டு எழுந்தது என்று
முதுகுடுமி பெருங்கனவான்
மீளவும் எழுதி வைப்பர்.

சமத்துவம் காண என்பது
பிறப்பிலே பெற்ற இழிவை
பெற்ற கல்வி வாயிலாக
துடைத்தெறியும் தூய வேள்வி...
பெற்ற கல்வியை ஆதாரமாக்கி
அதிகாரம் படைத்தோரை
கேள்வி கேட்கும் அற்புத வேள்வி
நிலத்திலே பார்க்கின்ற கண்களை
நிமிர்ந்து நேரே நின்று
நிலவு பார்க்கச் சொல்லும்
நிசமான அக்கறை கொண்ட
நீண்டநாள் ஆசையில் விளைந்த
வசமான யோசனை.

சமத்துவம் காண என்பது
பிறப்பு தாண்டியும்
ஆண் பெண்
சாதி மதம்
உயர்ந்தோர் தாழ்ந்தோர்
உடல் மன  ஊனமுற்றோர்
என்ற எல்லைகள் கடந்து
பெருங்கடலாய் பொங்கும்போது
நாடு சிறக்கும் வீடு சிறக்கும்
நம்பிக்கை பிறக்கும்
நீதி பிழைக்கும்
நானில மாந்தர்க்கு.
அதுவரை கொண்ட உறுதி
குறையாமல்
வரும் தலைமுறைக்கும்
அளித்து வருவோம்
எம் படிப்பினைகள்.
நாற்றங்காலில் பயிர்கள்
செழிக்கட்டும்.
பிறப்பின்பால்  இழிவுறாத
இறுதி உயிர் வளரும்வரை
சமத்துவம் காண என்பது
நம் கொள்கையாய் தொடரட்டும்



நன்றி வணக்கம்.

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...