Wednesday, June 15, 2005

கிசுகிசு பொழிப்புரை



முரண் நகை மாதிரி இருக்கும் இந்த தலைப்பில் அர்த்தமிருக்கிறது. எழுத்தாளர் உஷா ராமச்சந்திரன் ஆரம்பித்த இந்த மேட்டர் கழுகார் ரேஞ்சுக்கு பறந்து போயிருக்கிறது இப்போது.

கொஞ்ச நாள் முன்பு ஒரு பேட்டியில், "உங்களுக்கும் கெளதமிக்கும் இருப்பது நட்பா..?? என்ற கேள்விக்கு நம்ம உலகநாயகன் " ம்..ஹும். அதையும் தாண்டிப் புனிதமானது" என்று பதிலிறுத்தபோதே பட்சி சொன்னது - என்னவோ மேட்டர் இருக்கு என்று. சாதாரணமாக, கமலிடம் பத்திரிக்கையாளர்கள் பர்சனல் மேட்டர் பேசினாலே முகத்தில் அடித்த மாதிரி சொல்லக்கூடியவர், என்னடா இப்படி பேசுகிறார் என்று நினைத்தேன். கெளதமிக்கு பயங்கரமாக உடம்பு சரியில்லை என்பதையும், அவரை கமல்தான் கண்ணுங்கருத்துமாக பார்த்துக் கொள்கிறார் என்றும் இந்த வாரம் படித்தபோது, வருத்தமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது- இதே வரிசையில்.

கமல் நல்ல நடிகன் என்றபோதும், பர்சனலாக அவரை திரைப்படவுலகில் யாரும் நல்ல மனிதர் என்று சொல்ல மாட்டார்கள். அவருடைய நெருங்கிய சிநேகிதர்கள் வருத்தத்தை கதையாய் எழுதுவார்கள். மனைவிகள் தொடர் எழுதுவார்கள். டைரக்டர்கள் அறை வாங்கிய கதையை எழுதுவார்கள். மலர் விட்டு மலர் தாவும் வண்டர், ஸ்த்ரீ லோலர் என்று ஆளுக்காள் காரணப் பெயர்கள் வேறு. சிவாஜிக்கு நான் பையன் மாதிரி என்று சொல்லிக் கொண்டவர், சிவாஜியின் சிலையை செய்த ஸ்தபதி ஒருவரை கவுரவக் குறைச்சலாய் நடத்தியது சமீப செய்தி. அதனால்தான் அவரிடமிருந்து உணர்ச்சி பூர்வமான பேட்டியோ, இல்லை இன்னாருக்கு நான் நெருக்கம் என்று சொல்லிக் கொண்டோ பேட்டி வரும்போது நம்புவதற்கு கடினமாயிருக்கும். அதையும் தாண்டி கமல் என்னும் திறமையான கலைஞனுக்கு தமிழ்நாட்டு மக்கள் அளித்திருக்கும் கெளரவம் ஜகப்பிரசித்தம் - எழுத்தாளர் அசோகமித்திரன் சொல்வதுபோல் அடையாள மறைப்பு விஷயம் அல்ல இது.

ஒரு நடிகைக்கு உடம்பு சரியில்லை என்றாலே " ஓ..எய்ட்ஸா இருக்கும்" என்று அனுமானிக்கிற " சிறப்பு" பெற்றிருக்கும் சமூக அமைப்பில், தனிவாழ்க்கையில் தான் தந்த/ பெற்ற இத்தனை காயங்களோடு , வயசான காலத்தில் கவுதமி மாதிரி நோயுற்ற ஸ்நேகிதியை கவனித்துக் கொள்ள ஒரு ப்ளேபாய் நடிகனால் முடியுமென்றால்,

அது மனசுய்யா....

Tuesday, June 14, 2005

புருஷன்

என்ன பிடிக்கவில்லை
என்று கேட்கிறாய்
என்ன சொல்வதென்றும்
எத்தனை சொல்வதென்றும்
யோசித்து மாய்கிறேன்

சத்தம் வர மெல்வதையும்
பல்கறையுடன் சிரிப்பதையும்
சங்கீதம் அணைத்துவிட்டு
அசட்டு நாடகத்தை
ரசிப்பதையும்
நீர் தளும்பகீழ் சிந்திய
நம் செல்வத்தின்
கண்நீர் சிந்த வெளுப்பதையும்
சேற்றிலே கை வைத்து
சாந்துக்கு குழைப்பதுப்போல்
சோற்றிலே உழப்புவதையும்
நின்றுகொண்டே நீரொழித்து
கழிப்பறை கோலமிடுதலையும்
அக்குளைச் சொறிந்துகொண்டே
அடுக்களைக்குள் வருவதையும்
அயலார் முன்னிலையில்
அநாகரீகமாய் நடப்பதையும்
ஏகத்துக்கு மதுவருந்தி
இரவெலாம் உளறுவதையும்
ஊர்மேய்ந்து நீ வர
அதுவே உள்ளிருக்கும்
எனக்கும் விருப்போவெனும்
குற்றக் குமைச்சலில்
எனை சீண்டுவதையும்
கேட்கவே பிறந்தோன் போல
கூசும் கேள்வியாய் கேட்டு
வாய் வீசுவதையும்
மெல்லிய உணர்வெதுவும்
இல்லவே இல்லாமல்
ஆண்மை என்பதை
முரடு என்று மொழி பெயர்க்கும்
என் அசட்டு ஆம்பிளையே...

கேள்வியாய் கேட்டுவிட்ட
ஓவென்று உன் கதறலில்
இருக்கச் சம்மதித்தவளை
முன்னிலும் வேகமாய்
வெறியோடு பின்னிரவில்
புணருமுன்னை கண்டெனக்கு
ஆயாசமாய் இருக்கிறது.

நானென்ன வெறும் துவாரமா..?
எனில் நீ எதற்கு ஆறடியில்

Monday, June 13, 2005

Closer

மாண்டீயின் பதிவிலோ பின்னூட்டத்திலோ இந்தப் படத்தைப் பற்றிய சிபாரிசைப் பார்த்தேன். எடுத்தேன்.



டைட்டான படம் என்று சொல்வார்களே. அப்பேர்ப்பட்ட படம். வசனங்கள் முஞ்சைக் கிழித்து உள்ளிருக்கும் உண்மையை ரத்தமும், நிணமுமாக அறிமுகப்படுத்துகிறது. நல்லவனாக இருக்கும் ஒருவன், அநியாயமாக சீண்டப்பட்டு குதறப்பட்டால், எந்த அளவுக்குப் போகிறான் என்பதை பார்க்கையில் அய்யோ என்று வருகிறது. சில படங்களின் காட்சி அமைப்புகளில் தெரியும் அதீதமான விஷயங்கள், அது செக்ஸோ/ வன்முறையோ கொஞ்சம் ஜீரண பிரச்சினையை உண்டு பண்ணும். ஆனால் சில படங்களில் காட்சிகளின் துணையற்று வெறும் வசனங்களும், முகபாவங்களுமே திகைப்பை உண்டுபண்ணி அடி வயிற்றில் கல்லைக் கட்டிப் போட்டது போல இருக்கும். க்ளோஸர் இரண்டாம் வகை.

செய்தித்தாளின் ஆபீச்சுவரி எடிட்டர் லாரி என்ற ஒருவன் லண்டன் தெருக்களில் ஆலிஸ் என்றொரு இளம்பெண்ணை சந்திக்கிறான். பழக்கத்தில் காதலாகி மணந்து கொள்கிறான். கொஞ்ச நாளில் அன்னா என்ற இன்னொருத்தியை சந்திக்கிறான். போட்டோகிராஃபரான அவள் மேலும் இவனுக்கு ஒரு "இது". அவள் ஏற்கனவே விவாகரத்தானவள். எடிட்டர் கல்யாணமானவன் என்று தெரிந்த அவள் மறுக்கிறாள்.

இதற்கிடையில், எடிட்டர் இனையத்தில் பெண் பெயரில், சாட் பண்ணிக் கொண்டிருக்கும்போது, எவனோ ஒருத்தனை ( டான்), சீண்டி விட்டு, போட்டோகிராபரின் பெயரை தன் பெயராகச் சொல்லி, நேரில் சந்திக்க அழைக்கிறான். துரதிருஷ்டவசமாக சந்திக்க வரச் சொன்ன அந்த இடத்தில் போட்டோகிராபர் இருக்க, தேடி வரும் இணைய ஆசாமி டான் போட்டோகிராபரை மணந்து கொள்கிறான்.

கொஞ்ச நாள் கழித்டு ஒரு புகைப்பட கண்காட்சியில் இரு ஜோடிகளும் ( பரஸ்பரம் அறிமுகப்படுத்தப்படாமல்) தனித்தனியே சந்திக்கிறார்கள். எடிட்டருக்கும், போட்டோ அம்மணிக்கும் தீப் பிடிக்கிறது. விஷயம் இரண்டு பக்கமும் தெரிந்து விட, இரண்டு ஜோடிகளும் நாலு ஆசாமிகளாகி, பிறகு மூன்றாகிறார்கள் - எடிட்டரும் போட்டொ அம்மணியும் ஈருடல் ஓருயிர் ஆவதால். சோகத்தில் டான் தண்ணி அடித்துக் கொண்டு ஸ்ட்ரிப் க்ளப், பார் என்று அலைய, ஆலிஸ் தன்னுடைய பழைய தொழிலான ஸ்ட்ரிப்பர் வேலைக்குப் போய் விடுகிறாள். யதேச்சையாக ஒரு க்ளப்பில் அவளை சந்திக்கும் டான், அவளுடைய சோகம் தன் சோகத்தை ஒத்ததென்று சொல்லி அவளை மணக்க விருப்பம் தெரிவிக்கிறான். " I dont want to be your revenge fuck" என்றவள் மறுக்க, இவன் அல்லாடுகிறான். டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து வாங்க வரும் மாஜி மனைவியான போட்டொ அம்மணியை மறுபடியும் சேர்ந்து வாழ வற்புறுத்த, அவள் கையெழுத்து வாங்குவதிலேயே குறியாக இருக்கிறாள். "சரி .. For old times sake, கட்டக் கடேசியா ஒரு முறை படுத்துக்கலாம். அப்பதான் சைன் போடுவேன்" என்றவன் பிடிவாதம் பிடிக்க, பரிதாபப்பட்ட அவள் சம்மதிக்கிறாள். பேச்சுவாக்கில், சந்தேகப்பட்ட எடிட்டரிடம், படுத்துக் கொண்ட விஷயத்தை பகிர்ந்து கொள்ள, அவன் அவளை சந்தேகப்படுகிறான். " அட போடா ஜாட்டான் ( நன்றி: டோண்டு ஸார்) என்று வீசிவிட்டு மறுபடியும் டாக்டருடன் போய் செட்டிலாகி விடுகிறாள் இவள்.

கண்ணீரும் கம்பலையுமாக வரும் எடிட்டரிடம், "உனக்கு ஃபோட்டோ அம்மணி கிடையாது. நீ அலிஸிடம் போ. நான் அவளை ஸ்ட்ரிப் க்ளப்பில் பார்த்தேன். அவள் உன்னை ஏற்றுக் கொள்வாள் என்றவன், எடிட்டர் கிளம்பும் தருணம் அவனுடைய மிச்ச சொச்ச வாழ்க்கையயும் காலில் போட்டு நசுக்க
" ஆலிஸை நான் அனுபவித்தேன்" என்று சொல்லி ஒரு பொய் குண்டைப் போட்டு அனுப்புகிறான். இந்த விஷம் எடிட்டர் மனசில் அடி வண்டலாய் இருந்தாலும், ஆலிசை அவன் மறுபடி ஏற்றுக் கொள்கிறான். ஆனால் கொஞ்ச நாள் கழித்து சந்தித்த விஷயத்தைப் பேசுகையில், டான் உடனான ஸ்ட்ரிப் க்ளப் சந்திப்பில் ஒன்றுமே நடக்கவில்லை என்றவள் சொல்ல, மறுபடியும் அவளை சந்தேகப்பட்டு ஆபிச்சுவரி எடிட்டர் ரோட்டுக்கு வருகிறான்.ஆலிஸ் எல்லாவற்றையும் புறங்கையால் துடைத்து விட்டு, அமெரிக்கத் தெருக்களில் அக்கம்பக்கத்து ஆண்களை எல்லாம் ஜொள் வெள்ளத்தில் நனைய விட்டு நடந்து கொண்டு புது வாழ்க்கையை தொடங்குகிறாள்.

நடாலி போர்ட்மேன், பர்ஸூ( ஜூலியா ராபர்ட்ஸ்),ஜூட் லா, க்ளைவ் ஓவன் நடித்த இந்தப் படம் சமீப காலங்களில் பார்த்ததில் மிகச் சிறந்த படம். ஃபேமிலி சப்ஜெக்டிலேயே ஹாரர் எஃபக்ட் கொட்ண்டு வந்து, படம் முழுதும் வயிற்றில் ஆட்டோ ஓடும் உணர்வு வந்த படம். மொத்த பாத்திரங்களிலும் அசத்தோ அசத்தென்று அசத்தியவர் ஆலிஸாக நடித்த நடாலி. நேரில் இந்த மாதிரி பெண்களைப் பார்த்தால் நான் டவுசரிலேயே சூச்சு போய் விடுவேன் என்றாலும் எனக்கு அவளை ரொம்பப் பிடித்தது. அவளின் உறுதியும், ஒற்றைச் சொல்லில் அநாயாசமாக நிராகரிக்கும் coldness ம், ம்...கலக்குகிறார் அம்மணி.

எனக்கு ஒன்று புரியவில்லை. நிஜ வாழ்க்கையில் நான் கேள்விப்பட்ட சம்பவங்களிலும், சினிமாவிலும் அம்மணிகள் யாருடனாவது ஓடிப்போனால், ஆண்பிள்ளைகள் பின்னாலேயே போய், அழுது கதறி, மறுபடியும் தன்னுடன் வாழ வருமாறு அழைக்கிறார்கள். கொஞ்சம் கூட தன்மானமும், சுய கெளரவமும் இல்லாமல், இப்படிப் போய் அழைப்பதற்கு காரனம் லவ் என்கிறார்கள்.இதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தன்னை மதிக்காத இன்னொரு உயிரை, இப்படி வெட்கங்கெட்டத்தனமாக பின்னே போய் கெஞ்சுவதற்கு பெயர் லவ்வா..?? அது பரஸ்பர மரியாதையிலும் நெருக்கத்திலும் ஏற்படுவதில்லையா..?
தன்னை உதாசீனப்படுத்தி, இன்னொருவனை தெரிவு செய்யும் - பெண்கள் அத்தனை சீக்கீரம் இம் மாதிரி முடிவுகள் எடுப்பதில்லை - அவளை லவ் பண்ணுவது அத்தனை தேவையா..?? பெண்கள் வீக்கர் செக்ஸ் அல்ல. ஆண்களதான் என்று சொல்வதை ஆணித்தரமாக நிரூபணம் செய்யும் உதாரணம் இது.

குழந்தைகளுடன் பத்திரமாக தூங்க வைத்து விட்டு பார்க்க வேண்டிய படம் இது.

Friday, June 10, 2005

புல்லரிக்குதுபா....



ஹோம்லியா உள்ளே நுழைஞ்சீங்க... திடீர்னு தடாலடியா கிளாமரில் கலக்கறீங்களே?

‘‘சினிமா என் தொழில்! செய்ற வேலைதான் எனக்குத் தெய்வம். இப்பவும் ஷ¨ட்டிங் ஸ்பாட்டில் போய் நின்னதும் மண்ணைத் தொட்டுக் கும்பிடுவேன். பூஜை போடும்போது, டைரக்டர் காலில் விழுந்து வணங்குவேன். தமிழ் சினிமா எனக்குச் சோறு போடுது. எங்கேயோ இருந்தவளைத் தூக்கி வந்து, தொட்டிலில் போட்டுத் தாலாட்டுது. அந்த நன்றி என் மனசில் இருக்கு!

சினிமாவில் எனக்கு என்ன மாதிரி வாய்ப்புகள் வருதோ, அதில் எனக்கு ஏத்த கேரக்டர்களில் நடிக்கிறேன். பாவாடை& தாவணி போட்ட ஸ்கூல் பொண்ணா நடிச்சேன். திருத்தமா சேலை கட்டின பொண்ணாவும் செய்தேன். இப்போ ஜீன்ஸ், டாப்ஸ்னு சிட்டி பெண்ணா சிம்புவின் படத்தில் கலக்குகிறேன். சிம்ரன், சிம்ரன்னு தமிழ்நாட்டு ஜனங்க கொண்டாடினாங்களே, அவங்க என்ன கிளாமர் ஆர்ட்டிஸ்ட்டா? கதையும் கேரக்டரும்தான் முக்கியம். சும்மா சேலை மட்டும்தான் உடுத்துவேன்னு சொன்னால், என்னைத் தூக்கி ஓரமா உட்கார வெச்சிடுவாங்க. எனக்கு ரொம்ப காலம் சினிமாவில் இருக்கணும்னு ஆசை! என்கிறார் நயன்தாரா.

பொண்ணு பொழைச்சிக்கும்டோய்...

Wednesday, June 08, 2005

ஹையா..நானும் எழுதிட்டேன்...

"புத்தகம் எதுக்குப் படிக்கணும் சுந்தர்ராஜன். நம்மளோட யோசனைக்கு மிஞ்சின எதை புஸ்தகத்துல புதுசா எழுதிடப் போறாங்க" என்று கேட்ட கல்லூரி கால ஸ்நேகிதிதான் என்னை புரட்டிப் போட்ட முதல் புத்தகம். கிட்டத்தட்ட அதே சாயலான கேள்வியை இன்று காலையில் தன் வலைப்பதிவில் எழுதிய முகமறியா நண்பன் வைரமணி என்னை வாய் பிளக்க வைத்த சமீப காலப் புத்தகம். சக மனிதர்கள் மீதான கனிவை மனிதர்கள் அல்லாமல் புத்தகங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள ஏலுமா என்ன..??

ஆனால் இப்படியெல்லாம் யோசிக்க பிறக்கும் போதே வாய்ப்பதில்லை. எங்காவது தொடங்கத்தான் வேண்டி இருக்கிறது. காதலர்களுக்கிடையேயான அர்த்த்ம் பொதிந்த மெளனத்துக்கு வர, முதலில் அவர்கள் பேசி பழக வேண்டுமல்லவா..??

அப்படித்தான் நான் படிக்க ஆரம்பித்த கதையும்.

இன்னெதென்றில்லை..எது கிடைத்தாலும் படித்த காலம் ஒன்று உண்டு. எங்கள் பகுதியில் எனக்கு அடையாளமே " அட..இவ்ளோ பெரிய கண்ணாடிய போட்டுகிட்டு ரோட்டுல படிச்சிகிட்டே போவானே..அவனா.." என்பதுதான். ஆனால் நண்பர்கள் சொல்லிக் கொள்வது போல அத்த்னை உயர்வான புத்த்கங்கள் இல்லை. ரத்னபாலா, பாலமித்ரா, அம்புலிமாமா, பூந்தளிர், இரும்புக்கை மாயாவி, மந்திரவாதி மாண்ட்ரேக், வேதாளர் தொடங்கி குமுதம், விகடன், கல்கண்டு, ராணி, சாவி, குங்குமம், இதயம், தாய் என்றாகி
ராணிமுத்து, மோனா, மாலைமதி, பாக்கெட் நாவல் பக்கங்களில் விழுந்து பிறகு கிடைதத சந்து பொந்துகளில் எல்லாம் தேர்வு என்ற ஒன்று இல்லாமலேயே படித்த காலமது. முக்கிய காரணம், காசு கொடுத்து வாங்கிப் படிக்க அப்போது வசதி இல்லை. அக்கம்பக்க வீடுகளில் இரவல் வாங்கி, நண்பர்களிடம் கெஞ்சி படித்த காலம். தாத்தா வீட்டு ஓட்டைப் பெட்டியில் கிடந்த பொன்னியின் செல்வன் மட்டும் நாலாவது/ஐந்தாவது படிக்கும் போதே படித்த முதல் நல்ல எழுத்து.

கல்லூரி காலத்தில் நல்ல தமிழ் நட்பு வட்டம் இருந்தாலும் அப்போதும் ரொம்ப நல்ல புத்த்கங்கள் ஏதும் படித்தேனில்லை. சின்ன வயதில் இருந்து சுஜாதாவை தொடர்ந்து வந்திருந்தாலும், எல்லோரையும் போல வயசுக் காலத்தில் பாலகுமாரன் அதிகம் படிக்க ஆரம்பித்தேன். இப்போதைய பாலகுமாரன் எப்படி இருந்தாலும், அந்த நாளைய பாலகுமாரன் மனசுக்கு ரொம்ப அணுக்கமானவராக இருந்தார். பிறகு பிழைப்பு, உத்தியோகம், வாழ்க்கை என்றெல்லாம் அலைந்த தருணங்களில் படித்தது கூட இப்போதெல்லாம் நினைவில் இல்லை. அதெல்லாம் ஆங்கில அறிவுக்காக படித்ததும் மற்றும், சுய முன்னேற்ற நூல்கள் மட்டுமே.

சமீபமாக இணைய நண்பர்களின் வாயிலாக பல நல்ல புத்தகங்களின் அறிமுகமும், விமர்சனமும் கிடைத்து, இணையம் மூலம் மாயவரத்தில் வாங்கி வைத்திருக்கிறேன். ஜூலையில் இங்கு வரும் பெற்றோர் கொண்டு வருவார்கள் என்று காத்திருக்கிறேன். வெகு நாளைக்குப் பிறகு மொத்த்மாக படிக்கப் போகும் பெரிய மூட்டை அது.

என்னிடம் இருக்கும் மொத்த புத்தகங்கள் - 150 முதல் 200 வரை ( ஆங்கிலமும் சேர்த்து)

என்னளவில் மறக்க முடியா புத்தகங்கள் :

முன்கதை சுருக்கம் - பாலகுமாரன்

பொன்னியின் செல்வன் - கல்கி

மோகமுள் - தி. ஜானகிராமன்

பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா

ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம் - இரா.முருகன்

வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி

அக்னிச்சிறகுகள் - கலாம்

மனம் இறக்கும் கலை - ஓஷோ

ஆங்கிலத்தில் படித்தவை எல்லாம் பெரும்பாலும் பொழுதுபோக்கு இனிப்பு தடவி ஆங்கில அறிவை விருத்தி செய்ய படித்தது. உள்ளடக்கம் சார்ந்து புத்தகங்கள் தேர்வு செய்து இனிதான் படிக்க வேண்டும்.

அதுதான் இத்தனை புத்தகங்கள் கொடுத்திருக்கிறீர்களே.

கடற்கரையில் நின்று கொண்டு வாயைப் பிளந்து பார்க்கும் பூனை ஞாபகம் வருகிறது எனக்கு.

கூப்பிட யாரும் மிஞ்சி இருக்கிறார்களா என்று தெரியவில்லை. நான் கூப்பிட விரும்பியவர்கள் எல்லாம் ஏற்கனவே கூப்பிடப்பட்டு/எழுதி விட்டார்கள். மண்டையை சொறிந்து கொண்டு ஞே என்று முழிக்க வைத்து, படிக்க வேண்டியவைகளின் பட்டியலை நினைவு படுத்திய என் ரூம்மேட்டுக்கு

... தேங்கஸ்.

Monday, June 06, 2005

அட கெரகமே...

அலுவலக சம்பந்தமான பயிற்சி வகுப்பு இந்த வாரம் முழுவதும் எனக்கு காலையில் வகுப்பில் உட்கார்ந்திருந்தபோது, மரியாதைக்குரிய ஒரு நண்பரிடமிருந்து தொலைபேசி அழைப்பு.

"என்னய்யா...உம் பேரை இப்படி புடிச்சி இழுத்து விட்டுட்டு இருக்காங்க. நீங்க வகுப்புல உட்கார்ந்திருக்கீங்க" என்றார் நக்கலாக.

" ஆமாம் சார். காலையிலேயே படிச்சேன். இதுக்கெல்லாம் என்னத்த பதில் சொல்றதுன்னு விட்டுட்டேன். நானெல்லாம் தமிழ்த்தாய்க்கு சாப்பாடு போடணும்னோ, வியாபாரம் பண்ணனும்னோ இணணயத்துக்கு வரலை சார். விகடன் குமுதம் படிச்சு போரடிச்சு போயி, சரி நாமளும் எழுதலாம். நம்மளை மாதிரி எழுதறவங்களையும் படிக்கலாம்னு நினைச்சுத்தான் வந்தேன். இப்ப பாத்தா, நெலமை ரொம்ப கட்டுக்கடங்காம போயிட்டா மாதிரி இருக்கு. எழுதறதை தவிர, அதையும் தாண்டி ரொம்ப பேரு வாழ்க்கையில முக்கால்வாசி நேரத்தை இதுலயே செலவிடறாங்க போலிருக்கு. போன் பண்ணி, சாட் பண்ணி, முகமூடிப் பேருலயே நாலஞ்சு வலைப்பூ ஆரமிச்சு வச்சுகிட்டு, அவன் இவனோட சொந்தக்காரன். இவன் அவனோட மச்சான், மாமன்னு வேண்டாத வேலையை பேசிக்கிட்டு அலையறானுங்க. கடைசில அவனுகளுக்குளேயே அடிச்சிகிட்டப்புறம் இந்த மாதிரி கருமம் புடிச்ச சமாசாரமெல்லாம் வெளியே வருது. நம்மளை பொறுத்தவரைக்கும் எது செஞ்சாலும் சொந்தப் பேருலதான் செய்யறதால ( நண்பர் சுரேஷ் கண்ண் கூட ஒருகாலத்தில என்னைத் திட்டிக் கொட்டினார். ஆச்சரியப்பட்டார். இப்ப இதெல்லாம் பாத்த பின்னாடி சொந்த பேருல பேசற அது என்ன "மை".. அந்த மையோட மகிமை அவருக்கு புரிஞ்சிருக்கும்.) இந்த கருமத்துலயெல்லாம் இறங்கிகிட்டு ஸ்டேட்மெண்டு விடணுங்கறே அவசியமில்லே.நீங்களும் இதெல்லாம் கண்டுக்காதீங்க. ஜாலியா ஏதாவது எழுதுங்க சார். நடிகை படம் வேணுன்னா சொல்லுங்க, நான் தர்றேன்னேன்.

ஆனாலும் பாருங்க. சாயங்காலம் வந்ததுக்கு அப்புறம் மிச்ச சொச்ச சிங்காரத்தையும் படிச்சு முடிச்சேன். "நரகலை" ( :-) ) மிதிச்ச மாதிரி இருந்துச்சு. மத்ததை விடுங்க, நாங்க போன்ல பேசிக்கிட்டதையாவது ஏதோ சொல்லணும்னு தோணிச்சு. ஏன்னா, நாள் கழிச்சு சொன்னா "முதிர்ச்சி" ங்கிற பக்குவத்தையும், நம்மைப் பத்தி யாராவது கண்டமாதிரி பேசினா நமக்கு விளம்பரம் குடுக்கறாங்கன்னும் நினச்சுக்கிற "பக்குவம்" இன்னமும் வரலை பாருங்க.

அதான் சொல்லி வச்சேன். வர்ட்டா...:-)

Friday, June 03, 2005

இப்போதும் எழுத வைப்பது...

வேறென்ன ...விகடன் தான்.

இந்த வார விகடனில் பல நல்ல பேட்டிகள். முக்கியமாய் என்னைக் கவர்ந்தது மணிரத்தினம் மற்றும் பாலு மகேந்திராவின் பேட்டிகள்.

டைம் பத்திரிக்கையால் நாயகன் படமும் இந்தியப் படங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டிருப்பதை படித்ததும் எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஆனால் அதில் முழுதாக ஒப்புதல் இல்லை. நாயகன் முதல் முறை பதின்ம வயதுகளில் பார்த்தபோது ஒரு பிரமிப்பு தோன்றியது நிசம். எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான அப்ரோச் - தயாரிப்பாளருக்கே தெரியாமல் ஆழ்வார்பேட்டை பையன்கள் எல்லாம் சேர்ந்து எடுத்து விட்ட நல்ல படம் என்று கமல் ஒரு முறை சொன்னார். அதற்குப் பிறகு நாயகன் பலமுறை பார்த்து விட்டேன். அதன்பிறகு அதை விட நல்ல படங்கள் பலதை பார்த்து விட்டதாலோ அல்லது வெளிதேச படங்கள் பார்த்த பாதிப்போ - என்னவோ தெரியவில்லை - நாயகன் படத்தின் சில காட்சிகளில் இருந்த மிகையான ட்ராமடைசேஷன் கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. கமர்ஷியல் ரசிகர்களுக்காக சேர்க்கப்பட்டிருந்த சில காட்சிகள் தனியாக தெரிந்தது. மணியே ஒத்துக் கொள்வது போல அவர் கமர்ஷியல் டைரக்டர்தான் என்றாலும், டைம் பத்திரிக்கை - காட்ஃபாதரை தழுவி எடுக்கபட்ட ஒரு இந்தியப்படத்திற்கு ( இதுவும் கமல் பேட்டியில் சொன்னதுதான்) கொடுத்திருக்கும் இடம் கொஞ்சம் அதிகம்தான் எனத் தோன்றியது. ஆனால் ஒன்று சொல்லவேண்டும், மணியின் அடக்கமான பேட்டி இருக்கிறதே அதுதான் என்னை மிக மிக ஆச்சரியப்படுத்திய விஷயம். ஒரு படம் எடுத்துவிட்டு அது ஜெயித்தவுடன் துள்ளுகின்ற ( தினகரன் பரிசு விழாவில் சிம்புவின் பேச்சு) ஆட்கள் நிறைந்த இந்த உலகத்தில், இத்தனை காலம் சொல்லிக்கொளும் வகையில் தரமான படங்களைக் கொடுத்தவர் பேசும் இத்தனை அடக்கமான பேச்சு - உண்மையில் நாயகன் மணிதான்

பாலுசாரின் பேட்டியும் இதம் - சிஷ்யன் பாலாவைப் பற்றி சொல்லும் சில வரிகள் கொஞ்சம் மிகையாக இருந்தால் கூட - உணர்வு ரீதியான ஆசாமி என்பதால் அதையும் மன்னித்து விடலாம். "அது ஒரு கனாக்காலம்" எப்போது வரும் என்று எதிர்பார்க்க வைக்கிற ( மார்க்கெட்டிங்கோ..??) சித்தரிப்பு கலந்த ஒரு பேட்டி. மற்றபடி கருப்பு கதாநாயகர்கள் ஜெயிப்பதைப் பற்றி அவர் சொல்வது கொஞ்சம் ஓவர்தான். மில்ஸ் அண்ட் பூன் கதைகளிலேயே கதாநாயக வருணனை Tall , dark and handsome என்றுதான் வருகிறது. தமிழ்நாட்டுப் பெண்களில் உளவியலும் கிட்டத்தட்ட இதே ரேஞ்சுக்குத்தான் என்பதற்கான அந்தரங்கக்காரணங்கள் பாலுவுக்கு தெரியாததில்லை. ஆனால் சமையலையும் க்ரியேட்டிவிட்டியையும் இணைத்து அவர் சொன்ன வாக்கியம்தான் சிக்ஸர். எனக்கு அதில் பரிபூரணமான ஒப்புதல் உண்டு - நானே உணர்ந்திருக்கிறேன் என்ற வகையில். பாலுமகேந்திராவின் ஈழப்பின்புலம் எனக்கு சமீப நாள்வரை தெரியாது. அவருடைய கடைசி ஆசையும் படிக்க நெகிழ்ச்சியாக இருந்தது.

பொதுவாகவே விகடனின் விருந்து இப்போது கொஞ்சம் சுவைதான் என்றாலும், சுஜாதாவின் கற்றதும் பெற்றதுமில் கணையாழி பற்றி, இஸ்லாம் பற்றி, நியூமராலஜி பற்றி, ராமாநுஜன் பற்றி எழுதி இருக்கும் எல்லாவற்றையும் விட்டு விட்டு கவிஞர் எஸ். வைத்தீஸ்வரனின் மிகச்சாதாரண ஒரு கவிதைக்கு போடும் இந்தப் படத்தில் இருக்கிறதுதான்

....நெம்பர் 1 க்கான ரகசியமோ..??

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...