Monday, July 17, 2006

ப்ரைவேட் ப்ராப்பர்டி

சிதம்பரம் அக் 25, 20xx -

சிதம்பரம் கோவில் கொடிமரம் அருகே கைகளை தலைக்குமேல் உயர்த்தி கும்பிட முயன்ற ஏழுமுகச்சாமி என்கிற தமிழறிஞர் கைதி செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே சிவ சிவா என்று சொல்லுதல், சாஷ்டங்கமாக நமஸ்கரித்தல், கற்பூரம் கொளுத்துதல் போன்ற வழிபாட்டு முறைகளை செய்ததற்காக கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இறைவனை வழிபடுதலில் பிரச்சினை ஏதும் இல்லை என்றாலும், யார் வழிபடவேண்டும். யார் சொன்னபடி வழிபடவேண்டும் என்று தீக்ஷிதர்கள் வகுத்து வைத்துள்ள சட்டத்தின்படியே வழிபடவேண்டும் என்று தீக்ஷிதர்களின் அறிவிக்கப்படாத ம.தொ.செ அசினாச்சு அறிவித்தார்.

மேலும் அசினாச்சு சொல்லும்போது, சிதம்பரம் கொவில் ஒரு ப்ரைவேட் ப்ராப்பர்டி. அங்கே என்ன விதிமுறைகள் போட வேண்டும் என்பதை உரிமையாளர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அதனால நடராஜர் தீக்ஷிதர்களுடைய உடைமை என்பதை புரிந்து கொண்டு, சட்டத்தை மதித்து நடந்து கொள்ள வேண்டும்; பெரிய மனது பண்ணி சொல்கிறேன் - கோவில் வாசலில் நின்றுகொண்டு கண்களை மூடியபடி மனசுக்குள் பிரார்த்த்னைகளை
முணுமுணுத்துக் கொள்ளலாம். ஆனால் திருவாசகம், தேவாரம் போன்ற
விஷயங்களை எல்லாம் மறந்தும் யோசிக்கக் கூடாது. அவைகளை ஒன்று நாங்கள் பாடவேண்டும். அல்லது அந்த தமிழ்ப் பாடல்களே பாடக் கூடாது என்று நங்கள் சொன்னால் நீங்கள் அதையும் கேட்க வேண்டும்.

சின்னப் புள்ளத்தனமாக எங்களிடம் வந்து கேட்ட மாதிரி மசூதியிலோ, சர்ச்சிலோ, சரவணா ஸ்டோர்ஸிலோ, குமரன் சில்க்ஸிலோ போய் கேட்க வேண்டியதுதானே?? பெரிய இது மாதிரி எங்களிடம் கேட்க வருகிறீர்கள். இது பக்தி இல்லை. வெறும் வீம்பு. உண்மையான பக்தி இருந்தால் இதெல்லாம் செய்யச் சொல்லாது. வேஷ்டியை துடைக்கு மேல் ஏத்திக் கொண்டு, வருகிற சுற்றுலா பயணிகளிடம் டாலர் கணக்கில் வசூலிக்கச் சொல்லும். பராந்தக சோழன் பொன்னம்பலம் வேய்ந்த கோவிலை வைத்து தலைமுறை தலைமுறையாக பிழைக்கச் சொல்லும். ஏன்னா நாங்க சொன்னதுதான் சாமி. நாங்க பண்ற இத்தனை வேலைகளுக்கும் இவ்ளோ நாள் சாமி எங்களை ஏதும் செய்யாததைப் பாத்தா, எனக்கே பெரியாரை நம்பணும் போல இருக்குது.
என்றார் அசினாச்சு.

Thursday, July 06, 2006

பருப்புப் பஞ்சம்



இரண்டு நாட்களாக நெருப்பு மாதிரி ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது - பருப்புகளைப் பற்றி.

இந்தியாவில் பருப்பு விளைச்சல் குறைந்ததால், பருப்பு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது என்றும் இன்னமும் ஆறு மாதங்களுக்கு இத்தடை அமலில் இருக்கும் என்றும் பரவிய செய்தியால், மளிகைக் கடைகளில் அமோக கூட்டம். சந்தடி சாக்கில் சரக்குகள் பதுக்கப்பட்டன. விற்கின்ற பருப்புகள் இரண்டு மடங்கு விலையில் விற்கப்பட்டன. என்னைப் போல மாமிச பட்சணிகளே ஐந்து கிலோ துவரம் பருப்பு வாங்கி வைத்தேன் எனில், மாமிசம் சாப்பிடாதவர்களின் கதி..??

இனிமேல் " நீ என்ன பெரிய பருப்பா" என்று கேட்பதற்கு சமகால காரணம் யாரும் தேடவேண்டியதில்லை...:-)

இந்திய ஞாபக மிச்சங்கள்

இந்தியப் பயணம் முடிந்த வந்து இப்போதுதான் சற்று ஓய்வாக உட்கார்ந்து யோசிக்கத் தோன்றுகிறது. ஏற்கனவே செய்ய உத்தேசித்து இருந்தபடி பல வேலைகள் செய்ய முடியாமற் போனாலும், உபயோகமாக சில விஷயங்கள் செய்ய முடிந்ததில் திருப்தி. அதில் ஒன்று லேசிக் சர்ஜரி. கடந்த ஐந்து வருடங்களாக என் அத்தான் இதனை செய்துகொள்ளுமாறு என்னை கேட்டுக் கொண்டே இருந்தாலும், பயந்து கொண்டே இருந்தேன். இருக்கிற கண்ணும் போய் விட்டால் என்ன செய்வது என்ற முக்கியமான பயமே இதற்குக் காரணம்.

அந்த பயம் போவதற்கு முக்கியமான காரணம் செல்வாவும், இங்கே சாக்ரமண்டோவில் இருக்கும் இன்னொரு நண்பர் ரவியும். இருவருமே இந்த சிகிச்சையை மேற்கொண்டு பரிபூரண குணம் கண்டவர்கள். இந்த சிகிச்சை தோல்வியில் முடிந்த சில நண்பர்களையும் எனக்குத் தெரியும். ஆனால் அந்த நண்பர்களைப் பற்றி நான் நினைக்க விரும்பவில்லை. மேலும் நான் போட்டிருந்த கண்ணாடியின் தடிமனைப் பற்றி நினைக்கும்போது, உட்படப்போகும் சிகிச்சை அதற்கு மேலும் என் கண்ணை கெடுத்து விட முடியாது என்ற ஆழமான நம்பிக்கை எனக்கு. இணையத்திலே காணக்கிடைக்கும் என் புகைப்படங்களிலே
அந்த சோடாபுட்டியின் தீவிரம் தெரியாது. குளிர்க்கண்ணாடியோ, அல்லது கண்ணாடி இல்லாமலோ நான் இருந்த புகைப்படங்களை இணையத்தில் காணும் என்னை முன்னமே அறிந்த சிலர், " எங்கேடா உன் சோடாபுட்டி ?? " எனக் கேட்பர். :-)

இந்திய விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பிய பின்னர், என் அலுவலக நண்பர்கள் பலர் என்னை அடையாளம் தெரியவில்லை என்று சொல்கிறார்கள். மெல்லப் பழகும் என்று சொல்லிவிட்டு, அவர்களை எனக்கு அடையாளம் தெரியவைத்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்லி விட்டு மெல்ல நகர்ந்து விடுகிறேன். இரவுகளில் மட்டும் Glare கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. மற்றபடி எந்தப் பிரச்சினையும் இல்லை. வீட்டம்மா வாங்கிக் கொடுத்த RayBan குளிர்க்கண்ணாடியை போட்டுக் கொண்டு ரவுசு பண்ணிக் கொண்டிருக்கிறேன்.
கொஞ்ச காலத்துக்கு gym போகக் கூடாது என்று சொல்லி விட்டதால் மாலையில் மிஞ்சும் அந்த நேரங்களை சென்னையிலிருந்து எடுத்து வந்த புத்தகங்களில் கழித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே ஆனந்தமாக இருக்கிறது :-)

விடுமுறையைப் பொறுத்தவரை முதல் பதினைந்து நாட்கள் சகோதரி மகள் கல்யாணத்திலும், அடுத்த பதினைந்து நாட்கள் லேசிக் சிகைச்சைக்காகவும் கழிந்தது. அதற்கு நடுவே மிகச் சில நண்பர்களுடனான சந்திப்பு/ தீர்த்தவாரி மற்றும் ஷாப்பிங் ஆகியவையும் நடந்தது. பிரசன்னாவை சந்திக்கலாம் என நினைத்தேன். இயலவில்லை. சந்தித்தது பிரகாஷை மட்டுமே. வருகிறேன் என்று சொன்ன என் கல்லூரி நண்பர் ராஜ்குமாரும் சொந்த வேலை என்று சொல்லிவிட்டு வரமுடியவில்லை என்றார் ரஜினி ராம்கி நடுவே சற்று நேரம் வந்து போனார்.அவர்கள் இருவரும் மசமசப்பாய் தெரிந்தது என் ஆபரேஷன் கண்களாலா, திரவ மகிமையா அல்லது Bar ல் இருந்த குறைந்த பட்ச வெளிச்சத்தாலா என்பது பட்டிமன்ற டாபிக். ஆனால் நல்லதொரு மாலை நேரம். பிரகாஷின் எழுத்தில் உள்ள நெகிழ்ச்சி, பேச்சில் மிஸ்ஸிங். அது எனக்கு ஏமாற்றமா என்று சொல்லத் தெரியவில்லை. ரஜினி ராம்கி வால் பையன். :-). பிரகாஷ் கில்லி அனுபவங்களை கொஞ்சம் விவரித்தார். விளையாட்டாய் செய்யும் எழுத்தை எத்தனை பேர் எத்த்னை தீவிரமாக நினைக்கிறார்கள் என்ரு கொஞ்சம் புரிந்தது. ஒருநாள் விகடன் நண்பருடன் செலவிட்டேன். அங்கும் கோப்பைகளின் சத்தத்தில் கனவுகள் விரிந்தன. எல்லோருடைய கனவுகளும் நிறைவேற இறைவன் அருளட்டும்.

மீனாக்ஸ் கல்யாணம் போக முடியாமல் போனது. ஜூன் ஏழாம் தேதி சிகிச்சை மற்றும் அதன் பின்னான ஓய்வு என்று சுணங்கிப் போனது. டோண்டு மற்றும் முன்னாள் திராவிட ராஸ்கோலை சந்திக்க முடியவில்லை. காசியுடனும், ஜெயஸ்ரீயுடனும் தொ(ல்)லை பேசினேன். ஜெயஸ்ரீ லேசிக் சிகிச்சைக்கு தைரியம் கொடுத்தார்.

வீட்டம்மாவை ஊருக்கு அழைத்துப் போகாததால் கொஞ்சம் போர் அடித்தது. சூர்யா அம்மா ஞாபகமே இல்லாமல், என்னை சோதனை செய்யாமல்
நல்ல பையனாக இருந்தான். புதுப்பேட்டை என்ற காவியத்தை மட்டும் எங்கள் ஊர் விஜயா தியேட்டரில் செல்வராகவனையும், தியேட்டர் ஓனரையும் கொஞ்சம் சபித்துக் கொண்டே பார்த்தேன். ஊருக்கு திரும்பி வருகையில், கிண்டி லீ மெரிடியனில் குடும்பத்தினருடன் ஒரு சின்னக் கூட்டம்

மற்றபடிக்கு வேறு ஏதும் சுவாரசியமான சம்பவங்கள் அற்ற, குழப்பங்கள் இல்லாத இனிய பயணம். அடுதத முறை போவதற்குள் பயணநேரம் பாதியாகக் குறையும்படி எந்த விஞ்ஞானியாவது எதையாவது கண்டுபிடித்தால் மிக்க சந்தோஷம்.

Wednesday, June 28, 2006

நான்கு இரண்டான கதை

வேண்டி விரும்பி பெற்றதில்லை
பிறப்பிலேயே வரமாகி வந்த வேதனை
இது பிறக்கவே வேண்டாம் என்று
நினைத்ததனால் வந்த வேதனை

கர்ணனுக்கு கவச குண்டலம் போல
காதுக்கும் மூக்குக்கும் கண்ணுக்கும்
பாலமாய் என் பாவமாய் இருபதாண்டாய்
முளைத்திருந்த கண்கள்

அம்மாவுக்கு வேண்டுதலாய் போன
எனக்கு வேண்டாத சுமையான
என் வேகத்தை மட்டாக்கிய
என் இனியர்கள் எனக்கு கூப்பிடுபெயராய்
சூட்டி அழகு பார்த்த

என் கண்ணாடிக் கண்களை....

நெய் மணக்கும் பண்டங்களுக்கே
நானறிந்த அகர்வால் என்ற பெயர்
ஆயுசுக்கும் மெய் சிலிர்க்க என்
கண் திறந்தது இந்தப் பயணத்தில்.

இந்தியாவிலிருந்து திரும்பி இருக்கிறேன்
இரண்டு கண்ணனாக.

தைரியம் தந்த செல்வாவுக்கு நன்றி.

Tuesday, May 09, 2006

ஹை...யா..இந்தியப் பயணம்

கடந்த ஒரு மாதமாக சரியான வேலை. மே மாதம் ஆறாம் தேதி சாக்ரமண்டோ தமிழ்மன்றத்தில் தமிழ்ப்புத்தாண்டு விழாவை ஒட்டிய கொண்டாட்டம். தொண்டரடிப்பொடிகளில் ஒருவனாக இருப்பதால், நிகழ்ச்சியை நடத்துவதில், ஒருங்கிணைப்பதில் மெனக்கெட வேண்டி இருந்தது. தவிர சூர்யா இரு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றான். மற்ற குழந்தைகளுடன் கலந்து கொண்ட நடன/நாடகமாக இருந்ததால் அவனுக்கு பயிற்சிக்காகவும் ஏகப்பட்ட முறை போக வேண்டி வந்தது.

வார இறுதிகள் எல்லாம் இதிலேயே கழிய, ஏகப்பட்ட வேலை சுணங்கிப் போனது. இறையருளால் விழா இனிது நடந்து முடிந்தது. அடுத்தடுத்து வரக்கூடிய பங்கேற்பாளர்களுடன் ஓடி, அவர்களை தயார் செய்து கொண்டிருந்ததில் பாதி நிகழ்ச்சிகள் சரிவர பார்க்கவே முடியவில்லை. இரு மகளிர் நடனங்களை மட்டும் எனக்குரிய "கலை" ஆர்வத்தால் ஓடி வந்து மேடைக்கு முன்புறம் நின்று பார்த்தேன்.

இது முடிய அடுத்து, இந்தியப் பயணத்துக்கான முஸ்தீபுகள். என் தமக்கையின் மகள் திருமணத்திற்காக மே 21 முதல் ஜூன் 18 வரை இந்தியாவில் இருப்பேன்.
இதை தவிர அதே விடுமுறையில் மீனாக்ஷி சங்கர் திருமணத்தையும் கண்டு களிக்கலாம் என்றொரு திட்டம் உண்டு. அதைத் தவிர பெரிய திட்டங்கள் ஏதுமில்லை. ஐகாரஸ் பிரகாஷ்/நண்பர்கள் ஃப்ரியாக இருந்தால், ஒரு தாகசாந்திக்குப் போய் கலாய்க்கலாம் என்ற எண்ணம் உண்டு.

ஸார் ஃப்ரீயா என்று தெரியவில்லை

மற்றபடி வேறென்ன....உங்கள் எல்லோரையும் போலவே நானும் தேர்தல் முடிவுகளை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் எண்ணத்திற்கு மாறாக கலைஞர் கூட்டனி ஆட்சி அமைக்கும் என்று ஆருடங்கள் கூறி வருகிறார்கள். ஆரம்பத்தில் அதிமுக ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அம்மா நடத்திய அரசியல் ஆள்பிடி வம்புகளும், வைகோவின் அசிங்க அரசியலும் கலைஞர் மீது பரிதாபத்தை உண்டாக்கி விட்டது. கிட்டத்தட்ட ஏகப்பட்ட பேருக்கு இத்தகைய மனமாற்றம் நிகழ்ந்து இதனால் திமுகவின் பக்கம் வெற்றி வந்திருக்கிறது. கலைஞர் மீது, அவருடைய குடும்ப ஆட்சி மீது, பேரனுக்கு அவர் தந்திருக்கும் முக்கியத்துவம் மீது எனக்கு ஏகப்பட்ட விமரிசனங்கள் இருந்தாலும், தேர்தல் களத்தில் அந்தக் கிழவர் சுழன்றாடிய வேகத்தைக் கண்டு நிஜமாகவே பிரமித்துப் போனேன். இந்த வயசுக் கிழவர்கள் எல்லாம் மாயவரத்தில் கோவணம் அவிழ்வது கூடத் தெரியாமல் நடந்து கொண்டிருக்க, மைக்கைப் பிடித்துக் கொண்டு ஏரியாவுக்கு ஏற்றபடி, கூட்டத்துக்கு தக்கபடி, ஒரு பக்கா தேர்தல் அறிக்கையைப் போட்டு, அதை எதிர்க்கட்சியையும் ஒத்துக் கொள்ள வைத்து , எல்லோருடைய கவனத்தையும் தன் பக்கம் திருப்பி, இந்தத் தேர்தலின் நாயகராகிப் போனார். து அவரை இயக்குகிறது???. எது அவரை இந்த அளவுக்கு உசுப்புகிறது என்று தெரிந்து கொள்வது நமது அரசியல் கட்சிகளின் இளந்தலைமைகளுக்கு முக்கியம்.



அவருடைய உழைப்புக்கும், வைகோ என்கிற கேவலன் செய்த துரோகத்துக்கும் அவருக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பது என் அவா. அந்த வெற்றி பாமக போன்ற கட்சிகள் பங்கு கொள்கிற கூட்டணி ஆட்சிக்கு வித்திடும் வேளையில்தான் எனக்கு கலக்கம் வரும். அந்தக் காரணத்துக்காகவே ஆரம்பத்தில் திமுக கூட்டணி ஆட்சி வரக்கூடாது என்று வேண்டி வந்தேன்.
ஏனெனில் ஜெயின் கூட்டனி ஆட்சி என்றால் கை கட்டி வாய் புதைதத்து நிற்கும் அரசியல் கட்சிகள், கலைஞ்ர் ஆட்சி என்றால் மல்லுக்கு நிற்கும் என்ற காரணமே.

வெகு மக்கள் விரோத அரசியல் செய்யாத ஜெயலலிதாவும், குடும்ப அரசியலுக்கு தலையாய முக்கியத்தும் தராத கருணாநிதியும், சாதி தாண்டி எல்லா மக்களுக்காகவும் சிந்திக்கும் ராமதாஸும், தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிற ஒரு பேச்சாற்றல் மிக்க வலுவான காங்கிரஸ்
தலைமையும், தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தலையாய பிரச்சினை என்ன என்கிற தெளிவு கொண்ட திருமாவளவனும் என் கனவு.

துரதிர்ஷ்டவசமாக அது வெறும் கனவாக போவதற்கே வாய்ப்புகள் அதிகம்.

Friday, May 05, 2006

இளஞ்சேரன் பாண்டியன்

சேரன் மீது எனக்கு டைரக்டர் என்ற முறையில் பெரிய அபிப்ராயமெல்லாம் கிடையாது. எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டு, மனிதனின் மிக மென்மையான பகுதியை வருடிவிட்டு, சோக உணர்ச்சியை தூண்டிவிட்டு படம் எடுக்கிற ஆசாமி என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதுவும், எதற்கெடுத்தாலும் குய்யோ முறையோ என்று அவர் படங்களில் கட்டிப் பிடித்துக் கொண்டு அழும்போது, எரிச்சலாக இருக்கும். அழுகிற ஆண்களின் மீது எனக்கு நம்பிக்கை வருவதில்லை.

விகடனில் இந்த வாரம் முடிந்து இருக்கும் டூரிங் டாக்கீஸ் அந்த எண்ணங்களை கொஞ்சம் மாற்றி இருக்கிறது. அதிலும் நிறைவுப் பகுதி பலே ஜோர். டைரக்டரின் அப்பாவாயிட்டோமே என்ற கெத்தெல்லாம் பார்க்காமல் பழையூர்ப்பட்டி ஆபரேட்டர் பாண்டி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அபிராமி ராமநாதனிடம் "மொதலாளி" என்றழைத்துப் பேசிய சேரனின் அப்பாதான் சேரனின் இன்றைய வெற்றிக்கும் ஆபரேட்டர்



சேரனின் வாழ்க்கையின் எளிமைதான் அவரது படங்களில் பெருமளவு எதிரொலிக்கிறது என்றாலும் அந்த ரேஞ்சுக்கு கிராமத்து எளிமை எனக்குப் பரிச்சயம் இல்லை. ஆனால் சீக்கிரமே சேரன் அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்து வேறு திசைகளில் யோசிக்க ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது அலுத்துப் போய் விடும். எல்லாக் கதைகளையும் சொந்த அனுபவத்தின் பேரிலேயே எழுதிக் கொண்டிருப்பவன் மட்டும் நல்ல படைப்பாளியாகி விட மிடியாது. அவன் வீச்சு அதிகரித்தால்தான் ரீச்சும்( reach) அதிகமாகும்.

டூரிங் டாக்கிஸ் , பாலகுமாரனின் முன் கதைச் சுருக்கத்திற்கு பிறகு நான் படித்த நல்ல தன்வரலாற்று தொடர். விகடன் பிரசுரமாக அது வெளிவரும்போது அது ஆடும் கூத்து, காலம் என்கிற மாயக்கண்ணாடியில் பலவண்ணங்களில் தெரியும்.

டூரிங் டாக்கீஸ் ஆபரேட்டரின் மகன் சினிமாவில் அரசன் ஆன கதை- இறுதிப்பகுதி

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...