Saturday, April 13, 2013

கடந்தவை

கடந்தவை
 ========
 பத்தி பத்தியாய்
 எழுதி வைக்கிறேன்.
 நல்லதென்றும் கெட்டதென்றும்
 நான் நினைப்பதை
 இலக்கிய இலக்கண
 வரையறையை
 வாழ்வியல் விசாரங்களை
 எது எழுதலாமென்பதை
 எப்படி எழுதலாமென்பதை
 யாருக்கு எழுதவேண்டுமென்பதை
 திறனாய்வா
 திரைப்படமா
 இல்லை
 வெறும் வியப்பா
 எதுவாயினும் அதை
 வார்த்தை கத்தைகளுக்குள்
 பொத்தி வைத்து
 என்னை வியந்து கொள்ளும்
 இறுமாப்போடு

விடுபட்டுப்போன அன்பும்
 மனிதமும் நேர்மையும்
 சிரிக்கின்றன வாசகனைப் பார்த்து.

என்றேனும் ஒரு நாள்
 எனக்கும் அது விளங்கக்கூடும்

காலம் கடந்த உண்மைகள்
 காயம் சொரிந்து கொள்ள
 சுகமான வலியே  தவிர
 வேறென்ன.
 பாலைவனத்து நிலவாக
 போனதெந்தன்
 பழுது நோக்கும் பார்வை

இளக்கம் இல்லாமல்
 இலக்கியமா..??

என்னவள் சொன்னது

பாட்டு கேட்டுவிட்டு
தனக்குள்ளே சிரித்ததற்கும் ,
காலணி மாற்றிப் போட்டு
தடுமாறி விழுந்ததற்கும் ,
நீளப் பின்னல் பார்த்துவிட்டு
கண்ணீர் கசிய கவிழ்ந்தததற்கும்,
புதுப்படத்து அரையிருட்டில்
கை தேடிக் கோர்த்ததற்கும்,
தலை சாய்த்து சிரித்தபோது
ஆகாயத்தில் வெறித்ததற்கும்,
"கடிதம் நன்றாய் எழுதுகிறாய் " என்றபோது
முகம் வறல தலை அசைத்ததற்கும்,
சிகை கோதி விளையாடினால்
சிலை போல் சமைந்ததற்கும் ,
அவளின் நினைவே காரணம் எனில்...
எனக்கான நினைவுக்காய்
என்ன உளது உன்னிடம்...
மனசு நுரைக்க ஸ்னேகித்து விட்டு
இன்று பிணமாய் என்னுடன்
கண்மூடி மோகிக்க..
உனக்கு இந்த வாழ்வெதற்கு.??.
என் பிரியம் உனக்கு புரிய...
நானும் உனை பிரிய வேண்டும் எனில்....
அதற்கு நான் தயாரில்லை...
இன்னொரு முறை உன் மனம் கொன்று
எனக்கந்த பிரியம் வேண்டாம்...
என் பிரியம் நிஜமெனில் ...
உனை உயிர்ப்பிக்கட்டும்...!!

அழகிப்போட்டி

நிறம் ஏற்றி
நகச் சாயம் பூசி
சிகை செதுக்கி
சருமம் மினுக்கி
அரிதாரம் அணிந்து
நெஞ்சு நிமிர்த்தி
இதழ் வண்ணத்துடன்
வளைவுகள் வெளித்தெரிய
உடை குறைத்து
ஆயிரம் பேர் பார்க்க
அங்கம் குலுக்கி
பட்டம் வென்ற
உலக அழகி
ஜெயிப்பதற்காய்
சொன்ன பதில்
" புற அழகு
பொருட்டல்ல...!!"

நேற்றான நீ

கடிதங்களை பிரித்து
நாளாயிற்று
நிழற்படத்தை வருடி வருடி
நிஜம் மறக்க நேரமில்லை
இப்போதெல்லாம்
தினவாழ்வு அவசரத்தில்
எதிர்ப்படும்
சிறுசிறு நினைவுக்குமிழ்
வெளிச்சமெலாம்
வைரமென்று நெக்குருகி
நெகிழ்வதில்லை
நான் கூட
கண்முன் வாழ்வும்
அது தரும் சவாலும்
அடி வயிறு வரை தித்திக்கும்
உணர்வுக்கு உந்துதலாய்
ஜனித்த விதை வளர்வதையும்
அதை பாலூற்றி நீரூற்றி
என்னில் படர்ந்த கொடி
சீராட்டுவதையும் கண்டதில்
பொருக்குத் தட்டிய
வெளித்தோலுக்குள்
ரணம் மூடி வளர்ந்த
உள்தோலினுள் கிளரும்
நமைச்சலை மீறிய
சந்தோஷம்
நிஜம்....
திணிக்கப்பட்டதே
இத்தனை இதம் தந்தால்
நழுவிய கனவு
நனவாயின் எத்தனை
சுகித்திருக்கும்...??
வாழ்வு.....
இன்பக்கேணிதான்
முகரத்தான் மனக்குவளை
மலர வேண்டும்       

வாழும் இறப்பாய்

வாழும்போது ஒரு விதமாயும்,
அவன் உயிர் போய் வீழ்ந்தபின்னே
ஒருவிதமுமாய்
மாற்றிப் பேசும் மாந்தரின் செயலுக்கு
நரம்பில்லா அவன் நாக்குதான் காரணமோ
என நான் வியந்ததுண்டு ஒரு காலம் ...!!
**********
நாடாண்ட நடிகன் அவன்..
வாழுங்கால் வல்லவனாய் வாழ்ந்தானே ஒழிய
நல்லவனாய் வாழ்ந்திலன்...
விமரிசனம் தாண்டியவனும் அல்ல..
தாங்கியவனும் அல்ல...
காலன் அவனை அழைத்தபோது
ஊர் கூடி ஓலமிட்டது பொன்மனம் பூமியில் புதைந்ததாக...
ஆதிக்க வெறி பிடித்த ஆண்டை என்பர்
குலகல்வி திணிக்கப் பார்த்த குல்லூகப் பட்டரென்பர்
குறைகள் இல்லாமல் இல்லை, உண்டு அனேகம்
பூவுடல் நீத்தபின் மூதறிஞர் உதிர்ந்தார் என்பர்..
வஞ்சமுள்ள நெஞ்சம் உண்டு கஞ்சம் எனப் பழியும் உண்டு
குற்றமற்ற குணக்குன்று அல்ல..
திரையில் நடித்து , நிஜத்திலும் நடிக்கும்
மாபெரும் நடிகன்,
இயல்பாய் இருக்கப் பணித்தால் கூட
அதைப்போல் நடிக்க மட்டுமே முடிந்தவன்...
தலை சாய்ந்தபோது வையமே வாடியது
சிம்மக்குரலோன் சிதைந்ததாக
அரக்கி எனபர், கொடுங்கோலன் என்பர்
பல அரசுகளை பந்தாடும் படுபாவி என்பர்
நெருக்கடி நிலை கொண்டு வந்த நீலி என்பர்
கணவனை தானே கொன்ற காதகி என கதைப்பர்
தோட்டாக்கள் துளைத்து துடி துடித்து வீழ்ந்தபின்
அவரையே அன்னை என்பர்..
***************
மரணம்....
காலதேவன் தரும் இவ் விசேஷ அந்தஸ்து
மாய்மாலக்காரர்களை கூட
மகாத்மா ஆக்கி விடுகிறது...
மரணம் தின்றபின் மனிதனைப் பாடுவது
அதன் மீது மனிதனுக்கு இருக்கும் பயம் பொருட்டே...
செததபின் ஒலிக்கும் இந்த சிந்து
"எனக்கின்ணும் காலம் உண்டு"
என்றெண்ணும் விடுதலை உணர்வே..
**********
இறப்பில் அல்ல..இருப்பிலேயே நாம்
எப்போது
நேசிக்கப்படப்போகிறோம்...
இரஙகல் கூட்டத்தில் மட்டுமின்றி
இருக்கும்போதே நாம் எப்போது
பாராட்டுப் பெறப்போகிறோம்
உண்மையாய்....
பாராட்டுக்கள் பிணமாலை போலன்றி
நிஜமாலையை நேர்மையாய் பெறும்
அந்த நியாயமான கழுத்து
நம்மில் யாருடையது...???

மிடில் க்ளாஸ்

மூன்று சக்கர சைக்கிளுக்கும்
பாலியஸ்டர் சட்டைக்கும்
பைநிறைய தீபாவளி வெடிக்கும்
முழுவருட லீவுக்கு ஊட்டி மாமா வீட்டுக்கும்
கபில்தேவ் படம் போட்ட கிரிக்கெட் மட்டைக்கும்
அட்மிஷனுக்கு பணம் கேட்ட
விருப்பமான கல்லூரிக்கும்
சம வயசு நண்பர்களுடன்
ஆடித்திரிய சுற்றுலாவுக்கும்,
மனசுக்கு பிடித்தவளை மணப்பதற்கும்
மறுப்பாய் அம்மா சொன்ன பதில்
"நாம மிடில் க்ளாஸ் டா.."
அலுப்படைந்த மனசுக்கு
உருவேற்றி வெறியேற்றி
கணிணி கற்று
மானேஜனுக்கு ஊற்றிக் கொடுத்து
கண்டவனை காக்காய் பிடித்து
தூதரக வாயிலில் பகீரதம் பண்ணி
அயல் தேசம் வந்திறங்கி
லட்சங்களில் கார் வாங்கி
டாலரில் சம்பாதிக்கும் நான்
இன்று வாழ்வதும்
அமெரிக்காவில் அதே வாழ்வுதான்...
வசதி உசந்தது என்னவோ வாஸ்தவம்..
ஐம்பது ரூபாய் கடன் வாங்கினவன்
ஐந்நூறு டாலர் கடன் வாங்குகிறேன்...
மத்தியவர்க்கம் வகை அன்று;குணம்..!!

தாகம்

சாலையில் வாகனம் சற்றே முந்தினும்
சரசரவென்று கிளம்பும் கோபமும்
கற்ற வித்தை குறைவெனினும் நண்பன்
குரலேழுப்பி பேசுகையில் வரும் புழுக்கமும்
மந்தையில் காணாது போகாமல் தனித்து ஒளிர
உள் எரிந்துகொண்டே இருக்கும் வெறியும்
கூட்டமாய் ஓடுகையில் இலக்கு பற்றியெண்ணாது
எதிராளியின் வேகத்தினான பதட்டமும்
பெரியரென சொல்பவர் சிறுமையின்
அடையாளமாய் இருத்தலால் வரும் சீற்றமும்
கட்டியதோடு பெற்ற செல்வமும் அகத்திருக்க
கணநேர தவறலில் தறிகெட விழையும் சிறுமனமும்,
உயிரனைய உறவின் சுயநலம் புரியினும்
கோழையாய் எதிர்கொள்ளும் புரியாப் பொறுமையும்
சரியா.....சரியா...சரியா....??
பதில் கிடைக்கும் நேரம்
அவசியம் இல்லாது போகும்..
வரும் தலைமுறைக்காய் பதில்களை ஈந்தால்
தந்த பதில்களில் நூறு கேள்விகள் முளைத்தெழும்...
கேட்டதும், கிடைத்ததும் , தேடியதும் வீணென
மன்ணில் மண்டியிட்டழ ...
காதருகில் யாரோ சிரிக்கும் சத்தம் கேட்கும்
சிரித்த குரல் இதுவே வாழ்க்கையென விளம்பிப் போகும்.!!

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...