Wednesday, June 08, 2005

ஹையா..நானும் எழுதிட்டேன்...

"புத்தகம் எதுக்குப் படிக்கணும் சுந்தர்ராஜன். நம்மளோட யோசனைக்கு மிஞ்சின எதை புஸ்தகத்துல புதுசா எழுதிடப் போறாங்க" என்று கேட்ட கல்லூரி கால ஸ்நேகிதிதான் என்னை புரட்டிப் போட்ட முதல் புத்தகம். கிட்டத்தட்ட அதே சாயலான கேள்வியை இன்று காலையில் தன் வலைப்பதிவில் எழுதிய முகமறியா நண்பன் வைரமணி என்னை வாய் பிளக்க வைத்த சமீப காலப் புத்தகம். சக மனிதர்கள் மீதான கனிவை மனிதர்கள் அல்லாமல் புத்தகங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள ஏலுமா என்ன..??

ஆனால் இப்படியெல்லாம் யோசிக்க பிறக்கும் போதே வாய்ப்பதில்லை. எங்காவது தொடங்கத்தான் வேண்டி இருக்கிறது. காதலர்களுக்கிடையேயான அர்த்த்ம் பொதிந்த மெளனத்துக்கு வர, முதலில் அவர்கள் பேசி பழக வேண்டுமல்லவா..??

அப்படித்தான் நான் படிக்க ஆரம்பித்த கதையும்.

இன்னெதென்றில்லை..எது கிடைத்தாலும் படித்த காலம் ஒன்று உண்டு. எங்கள் பகுதியில் எனக்கு அடையாளமே " அட..இவ்ளோ பெரிய கண்ணாடிய போட்டுகிட்டு ரோட்டுல படிச்சிகிட்டே போவானே..அவனா.." என்பதுதான். ஆனால் நண்பர்கள் சொல்லிக் கொள்வது போல அத்த்னை உயர்வான புத்த்கங்கள் இல்லை. ரத்னபாலா, பாலமித்ரா, அம்புலிமாமா, பூந்தளிர், இரும்புக்கை மாயாவி, மந்திரவாதி மாண்ட்ரேக், வேதாளர் தொடங்கி குமுதம், விகடன், கல்கண்டு, ராணி, சாவி, குங்குமம், இதயம், தாய் என்றாகி
ராணிமுத்து, மோனா, மாலைமதி, பாக்கெட் நாவல் பக்கங்களில் விழுந்து பிறகு கிடைதத சந்து பொந்துகளில் எல்லாம் தேர்வு என்ற ஒன்று இல்லாமலேயே படித்த காலமது. முக்கிய காரணம், காசு கொடுத்து வாங்கிப் படிக்க அப்போது வசதி இல்லை. அக்கம்பக்க வீடுகளில் இரவல் வாங்கி, நண்பர்களிடம் கெஞ்சி படித்த காலம். தாத்தா வீட்டு ஓட்டைப் பெட்டியில் கிடந்த பொன்னியின் செல்வன் மட்டும் நாலாவது/ஐந்தாவது படிக்கும் போதே படித்த முதல் நல்ல எழுத்து.

கல்லூரி காலத்தில் நல்ல தமிழ் நட்பு வட்டம் இருந்தாலும் அப்போதும் ரொம்ப நல்ல புத்த்கங்கள் ஏதும் படித்தேனில்லை. சின்ன வயதில் இருந்து சுஜாதாவை தொடர்ந்து வந்திருந்தாலும், எல்லோரையும் போல வயசுக் காலத்தில் பாலகுமாரன் அதிகம் படிக்க ஆரம்பித்தேன். இப்போதைய பாலகுமாரன் எப்படி இருந்தாலும், அந்த நாளைய பாலகுமாரன் மனசுக்கு ரொம்ப அணுக்கமானவராக இருந்தார். பிறகு பிழைப்பு, உத்தியோகம், வாழ்க்கை என்றெல்லாம் அலைந்த தருணங்களில் படித்தது கூட இப்போதெல்லாம் நினைவில் இல்லை. அதெல்லாம் ஆங்கில அறிவுக்காக படித்ததும் மற்றும், சுய முன்னேற்ற நூல்கள் மட்டுமே.

சமீபமாக இணைய நண்பர்களின் வாயிலாக பல நல்ல புத்தகங்களின் அறிமுகமும், விமர்சனமும் கிடைத்து, இணையம் மூலம் மாயவரத்தில் வாங்கி வைத்திருக்கிறேன். ஜூலையில் இங்கு வரும் பெற்றோர் கொண்டு வருவார்கள் என்று காத்திருக்கிறேன். வெகு நாளைக்குப் பிறகு மொத்த்மாக படிக்கப் போகும் பெரிய மூட்டை அது.

என்னிடம் இருக்கும் மொத்த புத்தகங்கள் - 150 முதல் 200 வரை ( ஆங்கிலமும் சேர்த்து)

என்னளவில் மறக்க முடியா புத்தகங்கள் :

முன்கதை சுருக்கம் - பாலகுமாரன்

பொன்னியின் செல்வன் - கல்கி

மோகமுள் - தி. ஜானகிராமன்

பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா

ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம் - இரா.முருகன்

வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி

அக்னிச்சிறகுகள் - கலாம்

மனம் இறக்கும் கலை - ஓஷோ

ஆங்கிலத்தில் படித்தவை எல்லாம் பெரும்பாலும் பொழுதுபோக்கு இனிப்பு தடவி ஆங்கில அறிவை விருத்தி செய்ய படித்தது. உள்ளடக்கம் சார்ந்து புத்தகங்கள் தேர்வு செய்து இனிதான் படிக்க வேண்டும்.

அதுதான் இத்தனை புத்தகங்கள் கொடுத்திருக்கிறீர்களே.

கடற்கரையில் நின்று கொண்டு வாயைப் பிளந்து பார்க்கும் பூனை ஞாபகம் வருகிறது எனக்கு.

கூப்பிட யாரும் மிஞ்சி இருக்கிறார்களா என்று தெரியவில்லை. நான் கூப்பிட விரும்பியவர்கள் எல்லாம் ஏற்கனவே கூப்பிடப்பட்டு/எழுதி விட்டார்கள். மண்டையை சொறிந்து கொண்டு ஞே என்று முழிக்க வைத்து, படிக்க வேண்டியவைகளின் பட்டியலை நினைவு படுத்திய என் ரூம்மேட்டுக்கு

... தேங்கஸ்.

15 comments:

  1. நன்றி சுந்தர்... ஆட்டத்தில் கலந்து கொண்டதற்கு...

    //எல்லோரையும் போல வயசுக் காலத்தில் பாலகுமாரன் அதிகம் படிக்க ஆரம்பித்தேன். இப்போதைய பாலகுமாரன் எப்படி இருந்தாலும், அந்த நாளைய பாலகுமாரன் மனசுக்கு ரொம்ப அணுக்கமானவராக இருந்தார். //

    உண்மை.... உண்மை.... உண்மை...

    ReplyDelete
  2. ஹையா..நானும் படிச்சிட்டேன்..."

    ReplyDelete
  3. மூக்கன், நான் வழக்கெல்லாம் போடமாட்டேன். என் பெயரைச் சொல்லலாம். :)

    எனக்கும் பாலகுமாரனின் ஆரம்பகால எழுத்தில் விருப்பமிருந்தது. ஆனால் ஒரு சின்ன நெருடல் படிக்கும் போது தட்டுப்படும், அதை பொருட்படுத்தாது போய்க்கொண்டிருந்தேன். அவரது சாதுர்யம் கொஞ்சகாலத்துக்கு பிடித்திருந்தது. சொல்லப்போனால் தி.ஜானகிராமனை அவரது எழுத்து மூலம்தான் அறிந்துகொண்டேன். அதற்காக எனக்கு ஒரு நன்றியறிதல் உண்டு. பிற்காலத்தில் எது என்னை நெருடியதோ அது அங்கு விருட்சமாக வளர்ந்திருந்தது. எனது நண்பன் ஒருவன் மிக மோசமாக அவரிடம் திட்டுவாங்கினான், அவரது புத்தகத்தைப் படித்துக்கொண்டிருப்பதைச் சொன்னபோது. ஆனால் ஜெயகாந்தனுக்காக வருத்தப்பட்டதைப்போல நான் வருந்தவில்லை.

    வால்கா முதல் கங்கை வரை நான் குறிப்பிட விட்டுப்போனது. ஓஷோவின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் விரும்பவில்லை. அவரது ஆங்கிலப்புத்தகங்கள் பிடிக்கும். முதலில் படித்த ஞானத்தின் பிறப்பிடம் நன்றாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தது.

    மோகமுள் யமுனா சொன்னது மிக அதிகம். கும்பகோணத்தில் துக்கம்பாளையத் தெருவில் போய்ப்பார்த்தேன். யமுனா நடந்திருக்கவேண்டும். அதற்காக அந்தக் கல்லூரியில் படிக்க விரும்பினேன். இடம் கிடைக்கவில்லை. சுந்தருக்குக் கிடைத்தது.

    மோகமுள்ளைப் பற்றி பின்னொரு சமயம் எழுதவேண்டும். நன்றிகள்!

    ReplyDelete
  4. மிக polarised ஆக போய்க் கொண்டிருந்த தமிழ் வலைப்பதிவுலகில், இந்த புத்த்க சங்கிலி அனைவருக்கும் பொதுவான ஒரு நெகிழ்வுத்திரியில் பற்றிக்கொண்டு இணக்கமான சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதை எழுதும் இந்தக் கணத்தில் என் கண்களில் நீர்த்திரையிட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பேசக்கூடாதென்றில்லை. தன்னைப் போலவே பிறரை எண்ணும் பெருந்தன்மை நம் எல்லோர்க்கும் வாய்த்துவிட்டால், நம்மில் நிலவும் கருத்து பேதங்களைக் கூட சுமுகமாகப் பேசலாம் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நம் நண்பர்கள் சிலரின் "மூத்தோர் வழி வந்த" மன அழுக்குகள் கரைய அந்த பராசக்தி அருளட்டும்.

    என்றென்றும் அன்புடன்

    ReplyDelete
  5. //இதை எழுதும் இந்தக் கணத்தில் என் கண்களில் நீர்த்திரையிட்டுக் கொண்டிருக்கிறது. //

    அச்சச்சோ தொட்சிக்க கண்ணு. அழக்கூடாது என்ன? அட்சாலும் புட்சாலும் அண்ணன் தம்பி இல்லைன்னு ஆயிருமா. அழுதே கண்ணு.

    ReplyDelete
  6. /நம் நண்பர்கள் சிலரின் "மூத்தோர் வழி வந்த" மன அழுக்குகள் கரைய அந்த பராசக்தி அருளட்டும்./
    மூக்கன் கலைஞரை அநியாயமாக இங்கே இழுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அதுபோலவே, நான்தான் மார்டேன் கேர்ள், பொடிச்சி என்று விடாப்பிடியாக எண்ணிக்கொண்டிருப்பதையும்... (இல்லை என்று அவர் மறுக்கலாம்) வசந்தன் என்னில கேஸ் போட்டால், நான் ஆரிலையும் நாலு பேரில கேஸ் போடவேணுமெல்லோ? நாலுபேருக்கு எல்லாத்தையும் பரப்புற "பிரமித்து இச்கீம்" வாசிச்சபுத்தகம் எழுதுற பதிவுக்குப் பிறகு இந்தத்தன்மானங் கா/கக்கும் கேஸ் விசயத்திலதான் ஒழுங்காய் வேலை செய்யும்போலை தெரியுது

    ReplyDelete
  7. இது கொஞ்சம் உணர்ச்சிவசமான ஆட்டந்தான் போலிருக்கு!

    ReplyDelete
  8. சுந்தர்
    பாலகுமாரனின் எழுத்தில் அய்ன்ராண்டின் சாயல் இருப்பதாக சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன். பல பெண் எழுத்தாளர்கள் செய்யாத ஒன்றை, சிந்திக்க கூடிய சில பெண் கதாபாத்திரங்களை படைத்ததற்காகவாவது அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  9. //மிக polarised ஆக போய்க் கொண்டிருந்த தமிழ் வலைப்பதிவுலகில், இந்த புத்த்க சங்கிலி அனைவருக்கும் பொதுவான ஒரு நெகிழ்வுத்திரியில் பற்றிக்கொண்டு இணக்கமான சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.// இந்நிலை தொடர்ந்தால் மகிழ்ச்சி.

    ReplyDelete
  10. //பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா
    //

    YOU TOO, BRUTUS, sorry, SUNDAR :)

    ReplyDelete
  11. எனக்குப் பிடித்தது என்பதில் மூன்றை எனக்கும் பிடித்தது என்று பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறேன்!
    அந்தச் சுந்தர் பதிவில் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன். நம்மையொத்தவர்கள் என்று அறிவதில் ஒரு நிறைவு ஏற்படத்தான் செய்கிறது.

    ReplyDelete
  12. கருத்து சொன்ன நண்பர்களுக்கு நன்றி.

    எ.அ.பாலா..!! Same to you. (புரிஞ்சுதா)

    உங்களுக்காக நயனதாரா படம் போட்ருக்கேன். பாத்தேளா..?? :-)

    ReplyDelete
  13. இரண்டு சுந்தர் ஒரு வைரமணி பதிவுக்காகவே இந்த ஆட்டத்தை ஆரம்பித்தவர்களுக்கு ஒரு நன்றி சொல்லலாம்

    ReplyDelete
  14. ஈழநாதன்,

    எண்ணக்குமிழிகள் படிச்சீங்களா..??

    படிச்சவுடனேயே எலுமிச்சம் பழத்தை தலையில் தேச்சு, நீர் மோர் கொடுத்து தலையை தட்னா மாதிரி பட்டுனு இறங்கிருச்சு.:-)

    http://kumizh.blogspot.com/2005/06/blog-post_11.html


    போலாம்..ரை..ரை...ட்!!

    ReplyDelete
  15. இப்போதுதான் இந்தப் பின்னூட்டம் பார்க்கிறேன்.எல்லாரிடமும் எல்லாவற்றையும் எதிர்பார்க்கமுடியாது என்பது என் கொள்கை சிலரிடம் விமர்சனம் எதிர்பார்க்கலாம்,சிலரிடம் படித்த புத்தகங்களின் பெயரைக் கேட்கலாம்,இன்னும் சிலர் கேள்விப்பட்ட புத்தகங்கள் பற்றிச் சொல்வார்கள்.அதை நாம் எவ்வளவு புரிந்து பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில்தான் எனது கவனம்.எல்லோரினது பதிவும் எனக்குப் பிரயோசனமும் திலீப்குமாருக்கு தலைவலியும்(அப்பாடா ஒரு மூட்டை புத்தகம்)

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...