Tuesday, March 30, 2004

விட்டுடுங்க ஸீனியர் எல்லே... tramp00011_mod

===============================

பாஸ்டன் பாலாவின் வலைப்பூவில் இன்று ரங்கபாஷ்ய லீலைகள் என்று
ஒரு புராணம் ஓடிக்கொண்டிருக்கிறது. அங்கே கொடுத்திருந்த சுட்டிகளில்
தட்டி தட்டி முட்டி மோதி வெளியே வந்த பிறகும் ராயர் காப்பி கிளப்பின்
மலரும் நினைவுகள் உள்ளே ஓடிக் கொண்டிருந்தன. சேர்ந்த புதிதில்
எது செக்கு, எது சிவலிங்கம் என்று தெரியாமல் காத்தடிக்கும் திசைக்கு
அங்கே 'American Beauty ' இலைக்குப்பை போல சுழன்றாகிக்கொண்டிருந்தது
நினைவுக்கு வந்து, கம்ப்யூட்டர் மானிட்டரைப் பார்த்து பைத்தியம் போல
சிரித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

மரத்தடிக்கு வந்து ரங்கபாஷ்யம்காருவின் அறிமுக மடல்கள், அவரைப் பற்றி
அவர் குழுவைப் பற்றி, எல்லே சுவாமி ஸார் எழுதிய ட்ராமாவைப் படித்து விட்டு
மணி சுவாமிநாதனின் மடலையும் படித்து விட்டு, ' இத்தனை பேரில எழுத
இவங்களுக்கெல்லாம் எங்கய்யா நேரம் கிடைக்குது ' என்று அலுத்துக் கொண்டே
கடைசியில் இங்கே தட்டினேன்.

சிரிக்க ஆரம்பித்தவன் இதுவரை நிறுத்த முடியவில்லை. இன்னமும்
என் பீர்த்தொப்பை குலுங்கிக் கொண்டிருக்கிறது.

எல்லே சீனியருக்கு Internet Chaplin என்ற பெயரை தாராளமாகத் தரலாம்.

அட தேவுடா ...தேர்தல்டா..
==========================

தேர்தல் மேடையில் திடீரென்று முதல்வர் ஜெயலலிதா 'மம்முத ராசா'
பாட்டுக்கு டான்ஸ் ஆடினார். சுற்றியிருந்த மக்கள் எல்லாம் ' அம்மா ஆட்டத்தை
பாத்து எவ்வளவு நாளாச்சு ' என்று மெய்மறந்தனர் - தினமலர் செய்தி 30-03-2004.

மேலே கூறியது போல சீக்கிரமே ஏதாவது நடந்தாலும் ஆச்சரியப்படாதீர்கள்.
தேர்தல் நேரம் எது வேணுமானாலும் நடக்கலாம்.போனவாரம் ஓசூர் பகுதி கிராமத்தில்
நடந்தது போல. தேர்தல் செய்திகள் கவர் செய்யும் விகடன், கூட்டத்தில் கலைஞர்
தெலுங்கில் மாட்லாடினார் என்று புளகாங்கிதப்பட்டுப் போயிருக்கிறது.

karunanithi-history1

தமிழ், தமிழ் என்று முழங்கும் இனமானக் காவலர், சங்கத்தமிழ், குறளோவியம்
தொல்காப்பியப் பூங்கா , உரோமாபுரிப்பாண்டியன் போன்ற தமிழ் படைப்புகளின்
சொந்தக்காரர், தன்னுடன் மாறுபாடு கொண்டவர்களை மொழியின் பேராலும்,
இனத்தின் பேராலும் ( மலையாளி எம்.ஜி.ஆர், மலையாளி ஜெயமோகன், கன்னட
ஜெயலலிதா, புதுடில்லி வடவர்...... ) வம்புக்கிழுத்து பகடி செய்யும் கலைஞர்
தேர்தலுக்காக இன்னமும் என்னவெல்லாம் 'பாண்டி' ஆடப்போகிறாரோ
என்று வேடிக்கை பார்ப்பது விநோதம்தான். அதுமட்டுமல்ல, 'பலபாஷை பேசுவது
சிலருக்கு ( அவர்கள் 'தொழிலுக்கு') வசதியாய் இருந்திருக்கலாம்' என்று சிலகாலம்
முன்பு ஜெயலலிதாவைப் பார்த்து மட்டமாக கமெண்ட் வேறு அடித்து இருக்கிறார்.

தேசிய நீரோட்டமும், ஜெயிக்க வேண்டுமென்ற வெறியும் இந்த வயசிலும்
இவரை என்ன பாடு படுத்துகிறது பாருங்கள்...



Monday, March 29, 2004

Sea Biscuit
=======

டாகுமெண்டரி ஸ்டைலில் ஆரம்பிக்கும் படம் முதலில்
ஹென்றி ·போர்டைப் பற்றி பேசுகிறது. முற்றிலும் ஆட்டோமேட்
செய்யப்பட்ட அவருடைய தொழிற்சாலையில் தன் கற்பனாசக்தியை
விரயம் செய்ய விரும்பாத ஒரு தொழிலாளி சார்லஸ் வேலையை
ராஜினாமா செய்து விடுகிறான். சைக்கிள் கடை வைத்துப் பிழைக்கும்
அவன் கடை வாசலில் நின்றுபோன ஒரு செல்வந்தரின் காரை விஷயமே
தெரியாமல் 'சரி செய்கிறேன் பேர்வழி' என்று ஒத்துக்கொண்டு
கார் தொழில்நுட்பம் கற்கிறான். ஒரு பாட்டிலேயே பணக்காரன்
ஆகிவிடும் தமிழ் சினிமா ஸ்டைலில் அவனும் மிக சீக்கிரமே
"ப்யூக்" கார் டீலர் ஆகிறான். நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும்
இருக்கும் அவன் வாழ்வில் ஸ்டாக் மார்க்கெட் க்ராஷ் ஒரு பெரிய
மாறுதலை உண்டு பண்ணுகிறது. செல்வம் அனைத்தையும் இழந்த அவன்
தன் செல்ல மகனையும் ஒரு கார் விபத்தில் இழக்கிறான். விளைவாக அவன்
மனைவியும் விட்டு விலகுகிறாள்.

மார்த்தா இரண்டாம் மனைவியானபின், அவளுக்குச் சொந்தமான குதிரைத்
தொழுவத்தில் டாம் ஸ்மித் என்பவனை சந்திக்கிறான். குதிரைகளடு பழகி,
குதிரைகளோடு பேசி, அவற்றின் நுணுக்கம் அறிந்த மனித நேயமுள்ள ஸ்மித்,
சார்லஸை கவர , ரேஸ் குதிரைகளை தயார் படுத்தலாம் என்று
ஸீ பிஸ்கட் என்ற குதிரையை $8000 க்கு வாங்குகிறார்கள். தன் அலைவரிசையிலேயே
இருக்கும் ரெட் போலார்ட் என்ற ஜாக்கியையும் ஏற்பாடு
செய்கிறார்கள். ரேஸ்குதிரை என்ற இலக்கணத்திலேயே இல்லாத
அந்தக் குதிரையை 3 வருடங்களில் மாபெரும் புகழ்
அடைய வைக்கிறார்கள். நடுவில் ஜாக்கிக்கு கால் உடைகிறது. குதிரைக்கும்
கால் உடைகிறது. மீண்டு எழுந்து மறுபடியும் சாதனை படைக்கிறார்கள்.
" we did not fix him. He fixed us " என்ற ஜாக்கியின் பின்னணிக் குரலோடு படம் முடிகிறது.

seabiscuit3


சரித்திரக்கதைகளில் குளம்படி சத்தம் கேட்டதைத் தவிர எனக்கும்
குதிரைக்கும் ஸ்நானப்ராப்தி கூட இல்லை. ரேஸ் என்றால் எனக்கு கிண்டி
தான் ஞாபகம் வரும். படம் முடியும்போது, கடைசி ரேஸில் அந்தக் குதிரை
ஜெயிக்கும் போது என் கண்ணில் ஆனந்த பாஷ்பம். டைரக்டர் கேரி ராஸ்
செய்த மாயம் அது.

seabiscuit

ஏகப்பட்ட டீடெயில்களுடன் , இழைத்து இழைத்து இந்தப்
படம் பண்ணியிருக்கிறார். சார்லஸ் ஆக ஜெ·ப் ப்ரிட்ஜஸ், டாம் ஆக க்ரிஸ்
கூப்பர், ரெட் போலார்ட் ஆக "ஸ்பைடர்மேன்" டோபி என்று இந்த உண்மைச்
சம்பவத்தில் எல்லோரும் கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.

அருமையான இசை, உறுத்தாத ஒளிப்பதிவு - தேவையான இடங்களில் கேவா கலர்,
பீரியட் ·ப்லிம் என்பதால் அதிக சிரத்தையோடு தெர்ந்தெடுக்கப்பட்ட உடைகள் ,
நல்ல வசனங்கள் என்று எல்லாமே நல்ல படம் விரும்புவோர்க்கு விருந்து.
படம் கொஞ்சம் ஸ்லோதான்.

ஆனால் உட்கார வைக்கிறார்கள்.

மேல் பார்வைக்கு குதிரை பற்றிய படம் என்றாலும், இதில் 'அபிராமி பட்டருக்கு'
மன்னிப்பு வழங்கி அருள் தந்த அன்னையின் 'டச்' இருக்கிறது.

Friday, March 26, 2004

மகேந்திரதனுஷ்
================

பாலுமகேந்திரா.

காமிராக்காரர் டைரக்டராகவும் இருந்தால் நிகழக்கூடிய
எல்லா அற்புதங்களையும் தன் படத்தில் செய்து காட்டியவர்.
காதல் கதை என்றாலும், த்ரில்லர் என்றாலும், நகைச்சுவை
என்றாலும், ஸ்கூல் பசங்களின் கதை என்றாலும், டீவி தொடர்
என்றாலும் அவருக்கே உரித்தான மயிலிறகால் வாசனை தூவும்
'டச்' எல்லாப் படத்திலும் இருக்கும்.ஒருபடைப்பாளியாக அவரை
மிகவும் பிடிக்குமென்றாலும், விகடனில் வரும் 'இவன்தான் பாலா'
அவரை ஒரு தோழனாகவும் அறிமுகப்படுத்துகிறது. அவருடைய
நாயகிகள் எல்லோருமே எனக்கு பிடிக்கும். ஷோபா, அர்ச்சனா,
ஈஸ்வரிராவ், மெளனிகா என்று எல்லாமே 'ப்ளாக் ப்யூட்டீஸ்'.

தனுஷை வைத்து புதுப்படம் எடுப்பதாக கேள்வி. காதாநாயகி
கலைப்பிதா பாரதிராசாவின் கண்டுபிடிப்பு ப்ரியாமணி. வயசின் வேகம் ,
மனசின் தாகம் என்று விகடன் எழுதி இருந்த அவர் பேட்டியை எல்லாரும்
கண்டிப்பாய் படித்திருப்பீர்கள். 'அழியாத கோலங்கள்' இந்து டீச்சரையே
என்னால் மறக்க முடியவில்லை. இந்தப் படம் என்ன பாடு படுத்த்..தப் போகிறதோ...??
baalu

இந்த ஸ்டில் ( ஹி..ஹி) 'அது ஒரு கனாக்காலம்' படத்திலிருந்தாம்.
இந்த வயசில் , இந்த போஸில் யாரவது ஒரு பெண்ணுடன் உட்கார்ந்திருந்தால்
என்ன ஆகியிருப்பேன் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்கிறது...( என் நாக்குதாங்க...!!!!!)

Thursday, March 25, 2004

வேதனையாய் இருக்கிறது
=========================

மதி நடந்தது என்ன என்பதை தெளிவாகச்
சொல்லி விட்டார். இப்போது பாரத்தை இறக்கி வைத்த
நிம்மதியில் திருப்தியாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஆனால் , இந்த விஷயத்தை அணுகுவதில் மக்களின்
அணுகுமுறைகள் , நாகரீகம் மீறி, ஒரு எல்லையை கடந்து
கொண்டு இருப்பதைப் பார்த்து நரக வேதனையாய்
இருக்கிறது.

ஆப்பு அடிக்கிறேன் பேர்வழி என்று கிளம்பியவரின்
வலைப்பதிவில், பின்னூட்டம் தந்திருக்கும் ஆட்கள்
இரண்டு தரப்பையும் ரெப்ரசண்ட் செய்வதாய் நினைத்து
கொண்டு முகமூடி பெயர்களில் கேட்கக்கூசும் வார்த்தைகளை
உபயோகப்படுத்தி இருக்கிறார்கள்.

சண்டையோ, சச்சரவோ, மனிதர்கள் போடுவதாக இருக்கட்டும்
..எல்லை மீறாதீர்கள்.

வலைப்பதியும் நண்பர்களே, பின்னூட்டங்கள் தரம் தாழ்ந்த
முறையில் எழுதப்பட்டிருந்தால், அதை தயவு செய்து நீக்கி
விடுங்கள்.

அது உங்கள் கடமை...


கோவில் ...???
=========

நான் இருக்கும் இடம் கலி·போர்னியா மாநிலம் என்றாலும், தென்னிந்தியர்கள்
அதிகமில்லை. எனக்கு இருக்கும் நண்பர் கூட்டத்திலே பாதிக்கும் மேல்
மராட்டியர்கள். எனவே கோயில்கள் என்று அதிகம் ஏதும் கிடையாது.
அல்லது கோயில் என்று நான் நினைக்கும் லட்சணங்களோடு ஒன்றும்
இல்லாமல் இருந்தது. லிவர்மூர் என்ற இடத்தில் இருக்கும் பிரசன்ன
வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு போக வேண்டுமென்றால் கிட்டத்தட்ட
200 மைல் போகவர ஆகும். எனவே கடந்தும் உள்ளும் இருப்பவனை,
'உள்'ளேயே கும்பிட்டு வந்தேன்.

மளிகை சாமான் வாங்கும் கடையில் புது கோவில் ஒன்று
வருவதாய் எழுதி இருந்தது. முதன்முறை சென்றபோது சந்தோஷமாய்
இருந்தது. ஆனாலும் தலைமை போல தெரிந்தவர், எப்போது பார்த்தாலும்
'சிலை வாங்க வேண்டும், நகை வாங்க வேண்டும். மண்டபம் கட்ட
வேண்டும் ' என்று ஒரே அறிவிப்பாக செய்து கொண்டிருந்தார்.
'சரி..பரவாயில்லை,,,ஆரம்ப நிலையில் இருக்கும் கோயிலுக்கு இம்
மாதிரியான வியாபார முகம் இருப்பது தப்பில்லை ' என்று சமாதானப்படுத்திக்கொண்டு,
விசேஷமான பூஜைகள் இல்லாத, கோயிலில் அதிகம் கூட்டம் இல்லாத வார
நாள் மாலை நேரங்களில் சென்று வந்தேன். இம்மாதிரியான தருணங்களில்
அங்கு கிடைத்த அமைதியும் , நிம்மதியும், விடுதலை உணர்வும்,
ஸ்ரீ அபயாம்பிகா சமேத ஸ்ரீகெளரிமாயூரநாதர் சன்னிதியில் எனக்குக்
கிடைத்ததை ஒத்ததாக இருந்தது.

அங்கு இருந்த அர்ச்சகர் ஒருவரைப் போல இந்தியக் கோவில்களில் கூட
நான் கண்டதில்லை. அவ்வளவு பணிவு. பக்தி. ஈடுபாடு. பூஜை செய்வதிலும்,
மந்திரங்கள் சொல்வதிலும், கோவிலை அமைதியாக , சுத்தமாக வைத்துக்
கொள்வதிலும் அவ்வளவு நேர்த்தி. குளிரெடுக்கும் பின்னிரவு வேலைகளிலும்
கூட கோவிலை திறந்து வைத்துக்கொண்டு , வருபவர்களை நன்றாக நடத்திக்
கொண்டு இருந்தார். தலைமைக் குருக்கள் கோவிலை பிரபல்யப்படுத்தும்
முயற்சியிலும், நன்கொடை வ்சூலிலும் ஊர் ஊராக சென்று கொண்டிருக்க ,
இவருடைய ஆத்மார்த்தமான பணி எந்தக் குறைவும் இல்லாமல்
கோவிலில் தொடர்ந்தது. வீடுகளில் பூஜைகள் செய்ய அழைக்கப்பட்டபோதும்,
கோவிலுள் தரும் ஒவ்வொரு பைசாவுக்கும் அவர் சிரத்தையாக ரசீது கொடுத்தபோது
நிஜமாகவே சந்தோஷம்.ஆர் (religious) விசாவில் வந்த இவர், அமெரிக்கா வந்த
வெகு நாட்கள் கழித்தே மனைவியையும் , மகனையும் அழைத்துக்கொள்ள
முடிந்ததை அவருடன் பேசின சந்தர்ப்பங்களில் அறிந்து கொண்டேன்.

போன வாரம் கோவிலுக்குப் போனபோது அவர் இல்லை. யாரோ
இன்னொருவர், இடுப்பில் கைகளை வைத்து அடியாள் போல் நின்றுகொண்டு,
'என்ன ஆச்சு தெரியுமா....இங்க முன்னாடி இருந்தவர் ரொம்ப மோசமா
நடந்துண்டாராம். பூஜை சரிவர பண்ணாம, கோயிலை நேரா நேரத்திற்கு திறக்காம,
அட்டூழியம் பண்ணியிருக்கார். கோவில் பணத்தைக் கூட கொஞ்சம் சுருட்டீட்டதா
கேழ்வீ...அதனால நிர்வாகத்துல அவரை வேலைய விட்டு அனுப்பீட்டா ' என்று வந்திருந்த
பக்தர்களிடம் வம்பு பேசிக்கொண்டிருந்தார்.

திரும்பி கர்ப்பக்கிரகத்தில் உள்ள மூலவரைப் பார்த்தேன்.

நின்றாவது கொன்றால் சரிதான்.


Wednesday, March 24, 2004

சின்னா
=======

எப்போது சொன்னாலும் 'சின்னா கம்மினாட்டி' என்று சொல்வதே வழக்கம்.
செல்லமாக கூப்பிடும்போது ஜித்து என்றே கூப்பிடுவேன். இந்திரஜித் என்பதன் சுருக்கம் அது.
பெரியவர்களுடன் பிரச்சினை செய்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக விளையாடுபவன்.
இரண்டு சகோதரிகள், ஆறு சகோதரர்கள் உள்ள குடும்பத்தில் கடைக்குட்டி
யாகையால், பெரியவர்களின் தவறுகள், கபடங்கள், சூது-வாதுகள், அதட்டல்கள்,
அமட்டல்கள் , அலட்டல்கள் எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பம் விட்ட மலை
முழுங்கி மகாதேவன். முறுக்கு மீசை வைத்துக் கொண்டு ஏதோ ஒரு கல்யாணத்தில்
பார்த்தபோது பளபளவென்று 'தேவர்மகன்' கமல் போல இருந்தான்.சொல்லும் வார்த்தையில்
ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். கூரான அடிப்பார்வையோடு, தொண்டைக்குள் எழும்
அவுட்டு சிரிப்போடு அவன் பேசுதைக் கேட்டால் திருவாளர் பசுபதி ' வினை வழியுது பாரு '
என்பார். என்றோ அவர் கூட போட்ட சண்டையில் இன்றுவரை அவன் எங்கள்
வீட்டு வாசல்படி மிதித்து இல்லை. விசேஷங்களுக்கெல்லாம் கல்யாண சத்திரம்
வந்து ஓதியிட்டு , சாப்பிடாமல் போய் விடும் ரோஷக்காரன். குளிரோ மழையோ
25 வருஷமாக காலையில் எழுந்து எங்கள் கோவிலுக்கு நைவேத்தியத்தோடு
பூஜை செய்து விட்டு அரக்க பரக்க திருவள்ளுவர் ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன்
வேலைக்கு செல்வான். 'அக்னி நட்சத்திரம்' பார்த்து விட்டு , எலெக்ட்ரிக் ட்ரேயினில்
தீப்பொறி உதிர்ந்து போவதை முதன் முறையாக எடுத்த பி.சி.ஸ்ரீராமை சிலாகித்ததும்,
பத்தாவது எக்ஸாமில் நான் வாங்கிய 447 மார்க்குக்கு மாயவரம் பஸ் ஸ்டாண்ட்
முக்குக் கடையில் அவன் வாங்கிக் கொடுத்த ஒஸ்த்தி சாக்லேட்டும், ரொம்ப நாள்
கழித்து பார்த்த்போது ' இந்த வண்டி எப்ப வந்தது என்று செல்லத் தட்டுடன் சொன்னதும்
அவனுடனான என் அந்தரங்கத் தருணத்தின் சில சாம்பிள்கள். அதே போலத்தான் திருவாளர்
பசுபதியுடனான சண்டைகளில் அவன் கீழ்த்தரமாக நடந்து கொண்டதும்,
பார்த்து பார்த்து அவரை எல்லா இடங்களிலும் கேவலப்படுத்தியதும். பெரிய குடும்பங்களில்
நிகழும் குடும்ப அரசியலுக்கு பலியாகி, தாயினால் அலைக்கழிக்கப்பட்டு கண்மூடித்தனமாக
அலைந்தவன்.

சிறுநீரகம் பழுதாகிப் போனதால், இருதய வால்வுக்கான அறுவை சிகிச்சை
மேற்கொள்ள இயலாமல் , எல்லா மருத்துவர்களும் கைவிட்டு, நீர் ஆகாரமாக
சாப்பிட்டுக் கொண்டு மாயவரம் மருத்துவமனையில் கிடக்கிறான் அவன் என்று
நேற்றிரவு அப்பா சொன்னபோது , எனக்கு ஏற்பட்ட உணர்ச்சிகளில் இந்த
முழு ஜென்மத்துக்குமான வேதனை இருந்தது.

சின்னா என் சிற்றப்பன் என்று சொல்வதை விட எனக்கு அனுக்கமான
ஸ்நேகிதன் என்று சொல்வதே பொருத்தம்.


அவனுக்கு எது நல்லதோ, அது, சிக்கிரம் நடக்க இறையருள் சித்திக்கட்டும்

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...