Friday, October 08, 2004

எங்கே செல்லும் இந்தப் பாதை ....

எச்சரிக்கை :

முழுக்க முழுக்க இது என் சொந்தக்கதை. கிட்டத்தட்ட என் Resume வின் தமிழாக்கம். வேறு உருப்படியான வேலை இல்லாதவர்கள், "ஒரு விளையாட்டுப் பையன் வளர்ந்த கதை" யை படிக்க வேண்டுமானால் உள்ளே போகலாம். மீறி நுழைந்து வருத்தப்பட்டால், நான் ஜவாப்தாரி இல்லை.

%%%%$$$$?????@@@@@*********%%%%%%

அம்பத்தூர் தொழிற்பேட்டையில், திருமங்கலம் முக்கில் இருந்து நேராக உள்ளே போனால், எலெக்ட்ரா பவர் சப்ளை சிஸ்டம்ஸ் இன்னம் இருக்கிறதா என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட ஒரு லேத் பட்டறை சைஸ்தான். உள்ளே பீரோ பீரோவாக, டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சில் உபயோகப்படும் பேட்டரி சார்ஜர்களை தயார் செய்து கொண்டிருப்பார்கள். ரோட்டிலிருந்து கொஞ்சம் உள்ளடங்கி இருக்கும், சுண்ணாம்பு கற்கள் வழி எங்கும் கொட்டிக் கிடக்கும் அந்தக் கம்பெனிதான் என் முதல் கம்பெனி.

காரைக்குடி எஞ்சினியரிங் கல்லூரியில் படித்துவிட்டு, பாட்டும், கூத்தும், கலாட்டாவும், பத்திரிக்கைப் பணியும் பண்ணியது போக மிஞ்சிய கொஞ்சூண்டு நேரத்தில் படித்து, நான் சேர்ந்த முதல் வேலை. இப்போதைய என் ஒரு மணி நேர சம்பளத்தை விட மிகக் குறைந்த மாதச்சம்பளம். அப்போது அது எனக்கு ஒரு பொருட்டில்லை. ஏனெனில் சம்பளத்துக்காக நான் வேலை பார்க்கவில்லை அப்போது. மேஜர் ஆகி, கல்யாணத்துக்கு காத்திருக்கும் மகளை பார்த்தால் எத்தனை கலவரம் பெற்றவர்களுக்கு வருமோ, அதைப் போலவே படித்து வேலைக்கு காத்திருக்கும் மகனைப் பார்த்தாலும் வரும் என்ற உண்மை பரிபூரணமாக தெரிந்ததால், பெற்றவர்களின் கண்ணிலிருந்து தப்பினால் போதும் என்ற அவசரத்தில் சென்னைக்கு ஓடி சேர்ந்த வேலை அது. கொஞ்சம் காத்திருந்தால் வேறு ஏதாவது கெளரவமான வேலை கிடைத்திருக்கக் கூடும். ஆனால், பத்து நிமிடம் கழித்து வரும் எக்ஸ்பிரஸ் பஸ்ஸை விட, நகர்ந்து கொண்டிருக்கும் பாடாவதி டவுன் பஸ்ஸில் ஏறும் அவசரக்கார முட்டாள்தனம்..!! கோடம்பாக்கம் லிபர்டி தியேட்டர் அருகே ஜாகை - இப்போதைய "அவள் விகடன்" ஆசிரியர் ம.கா.சியோடு. நூறடி ரோட்டில் 70-ஜெ பிடித்து திருமங்கலம் முக்கில் இறங்கி வேலைக்கு போக வேண்டும்

வேலைக்கு சேர்ந்த பின் தான் கொடுமை தெரிந்தது. டெஸ்டிங் இஞ்சினியர் வேலை. இந்தப் பையன் இங்கே ரொம்ப நாள் தங்க மாட்டான் என்று தெரிந்தே என்னவோ, பிழிந்து தள்ளினார்கள். அப்பா ஒரு நாள் அங்கே பார்க்க வந்தார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சேர்ந்தால் இளநிலை பொறியாளர் பதவியோடு ஜீப்பும் தருவார்கள் என்று ஆசை காட்டி ஓய்ந்த அந்த மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிக்கு, வீம்புக்கு கஷ்டப்படும் தன் பிள்ளையைப் பார்த்து வருத்தமாயிருந்திருக்கக்கூடும். ஒன்றும் சொல்லாமல் ஊர் போய்ச்சேர்ந்தார். அந்த அளவு அரசுப்பணி வெறுப்பு எனக்கு...

ஒரே மாதம் தான் வேலை செய்தேன். அதற்குள் மும்பையில் இருந்த குடும்ப நண்பருக்கு கடிதமெழுதி, அவர் வீட்டுக்கு போய் இறங்கி, நாரிமன் பாயிண்ட் கட்டிடங்களில் ஏறி இறங்கி ரெஸ்யூம் கொடுத்து கிடைத்த அடுத்த வேலை HCL - communication division ல் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் வேலை.
சேல்ஸ் வேலை விட டெக்னிகல் வேலைதான் பிடிக்குமென்றாலும் புவ்வாவுக்கு வழி...?? ஏனெனில் அதற்குள் நண்பரின் வீட்டைத் துறந்து அந்தேரி வெரசோவாவில் தனியே தங்கி இருந்தேன்.

HCL ல் இருந்தாலும், எனக்கு கம்ப்யூட்டர் துறையில் வேலை செய்ய விருப்பம். இத்தனை ஐ.டி புரட்சி எதுவும் நிகழ ஆரம்பித்திராத 1993 அது. எனவே கடைசியில் wipro/ ATT dealer ஒருவரிடம் கஸ்டமர் சப்போர்ட் இஞ்சினியராக சேர்ந்தேன். கம்பெனி பெயர் ஏவிசி இன்கார்பரேட்டட். கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் வேலைதானே ஒழிய திருப்தியான சம்பளம் ஒன்றுமில்லை. ஆனாலும் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்க வேண்டுமே என்று பல்லைக் கடித்துக் கொண்டு ஆறுமாதங்கள் வேலை பார்த்த பிறகு Zenith Computer Systems ல் வேலை கிடைத்தது. இது நல்ல நிறுவனம் என்பதால் அதிக சம்பளம் மற்றும் இதர சலுகைகளுடன், ஹிந்துஸ்தான் லீவர் - சர்ச்கேட் அலுவலகத்தில் ரெஸிடெண்ட் இஞ்சினியராக நியமிக்கப்பட்டேன். கார்ப்பரேட் ஆஃபிஸ் என்பதால், அந்த அனுபவம் எனக்கு பலவகையில் உதவியாக இருந்தது. நடுரோட்டில் கண்கட்டு அவிழ்க்கப்பட்ட நாய்க்குட்டி போல மிரள மிரள விழித்த காலங்கள் அவை.

மறுபடியும் அப்பா குறுக்கிட்டார்.

என்னைப் பார்க்க பாம்பே வந்த அவர், அதன் நவநாகரீக வேகத்தில் மிரண்டு போய், " அதான் எக்ஸ்பீரியன்ஸ் கிடைத்து விட்டதே ..மெட்ராஸ் வாடா" என்று பணித்து விட்டு ஊருக்குப் போனார். வேலை தேடி அடுத்த மாதத்தில் சேன்னை Nexus computers ல் வேலைக்கு சேர்ந்தேன். ஆரம்ப கட்ட பயிற்சி முடித்து, திருச்சி கிளைக்கு போஸ்டிங் செய்து, கும்பகோணம் சர்வீஸ் சென்டரை பார்த்துக் கொள்ளச் சொல்லி அங்கே என்னை அனுப்பியபோது வருஷம் 1994. அதன் பின்னர் நெடுதுயில். காரணம் நெக்ஸஸ் சூழ்நிலை. இரண்டாவது கல்லூரி வாழ்க்கையோ என சந்தேக/சந்தோஷப்படும் அளவிற்கு ஏகப்பட்ட இளைஞர்கள். கை நிறைய சம்பளம், போனஸ், வகையறா, சிறிய இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் கிடைத்த கல்லூரி ஸ்நேகிதியின் நட்பு ..இத்யாதி..இத்யாதி.

கிளைத்தலைவர் அமெரிக்க வேலை கிடைத்துப் போனதும், ஸ்நேகிதிக்கு ஆன திடீர் கல்யாணமும் என்னை திருச்சியில் இருந்த கிளப்ப, இவைகளை மறக்க 1998 ல் சென்னை Hexaware Infosystems Ltd ல் சேர்ந்தேன். நந்தனம் சிகனல் அருகே இருக்கும் இவர்களுடைய சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் சென்டர் சிஸ்டம் அட்மின் வேலை. அதுவும் அலுத்து, 1999 மே யில் சிங்கப்பூர். சிங்கப்பூரில் keppel Tatlee Bank / DBS / Chase Manhattan Corp ல் sigmasoft என்ற கம்பெனி வழியாக கன்சல்டண்ட் உத்தியோகம். நடுவே 1999 நவம்பரில் ஒரு வழியாக கல்யாணம் பண்ணிக் கொள்ள சம்மதித்தேன். கல்யாணம் பண்ண சூட்டில் கர்ப்பமாக்கி விட்டு, மனைவியை பிள்ளைப் பேறுக்கு இந்தியா அனுப்பி விட்டு, 2000 ஆகஸ்டில் Covansys Corp ல் சேர்ந்து அமெரிக்கா வந்தபோதுதான், டாட் காம் குமிழி வெடித்து, பொருளாதாரம் தள்ளாடி Rececession ஆரம்பித்து, பின் பின்லேடன் தயவால் அது இன்னமும் பிரச்சினையாகி, ஏகப்பட்ட உருளல்களுக்குப் பின், வீடு வாங்கி, பச்சை அட்டை கிடைத்து, கலிபோர்னியா அரசுத்துறையில் - Calpers சேர்ந்து விட்டு போன வாரம் அம்மாவுக்கு ஃபோன் செய்தபோது சொன்னேன்.

" ஏண்டா...நாங்க சொல்லும்போதெல்லாம் கவர்மெண்ட் வேலை வேண்டாம் வேண்டாம் என்று சொல்லிட்டு, இப்ப மட்டும் கலிஃபோஓஓ..ர்னியா கவர்மெண்டில வேலைக்கு சேர்ந்திருக்கியே" என்றாள்.

நியாயமான கேள்விதானே...!!!!

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...