Sunday, October 10, 2004

சலாம் பாம்பே - மீரா நாயர்

பத்திரிக்கைகளிலும், பெரியவர்கள் சொல்லியும் கேள்விப்பட்ட படம். இன்று டிவிடியில் பார்த்தேன்.

salaam_bombay
ஆதரவற்ற குழந்தைகளை பற்றிய சித்தரிப்பில், நந்தா, புதிய பாதை, அன்று உன் அருகில், நாயகன் போன்ற படங்களுக்கெல்லாம் முன்னோடி இது. பல வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டது என்ற "ப்ழைமை" வாசனை கொஞ்சமும் அடிக்காமல், இன்று அந்தப் படத்தை ஒட்டிப் பார்க்க முடிந்தது எனில், வந்த காலத்தில் எத்தனை ஃப்ரெஷ்ஷாக இருந்திருக்கும் இந்தப் படம்..??!!!.

கையில் இருக்கும் பணத்தை ரயில்வேஸ்டேஷன் கவுண்டரில் கொடுத்து, அருகில் இருக்கக்கூடிய ஏதோ ஒரு பெரிய நகரத்துக்கு டிக்கட் தருமாறு கேட்டு சிறுவன் கிருஷ்ணா வந்து இறங்கும் ஊர் பம்பாய். துயரத்தோடு தெருவில் நின்று சதை விற்கும் கிராந்த் ரோட்டு விலைப்பெண்களுக்கு டீ எடுத்துத் தரும் வேலை. நடுவில் அவன் சந்திக்கும் அவன் வயதொத்த தெரு நண்பர்கள், போதை விற்று கடைசியில் போதையாலேயே செத்துப்போகும் "சில்லம்" , "வேலை" பார்க்கும் அம்மாவை தொந்தரவுபடுத்தாமல் வெளியே விளையாட அறிவுறுத்தப்படும் மஞ்சு, கூட்டிக்கொடுக்கும் தொழிலோடு போதை தலைமை வேலை பார்க்கும் பாபா, எங்கிருந்தோ அழைத்து வரப்பட்டு 'சீல்' உடைக்காமல் ஒரு கிழவனுக்கு விற்கப்படும் ஸ்வீட் சிக்ஸ்ட்டீன், என்று பலவகை மக்களின் நடுவே வாழும் கிருஷ்ணா, கடைசியில் கிராமத்துக்கு போவதற்காக தான் வைத்திருக்கும் பணத்தையும் பறிகொடுத்து, குற்ற நிழலில் முழுதாக ஒதுங்கி, ஒரு கொலையையும் செய்துவிட்டு, திண்ணையில் ஒதுங்கி அமர்ந்து அழத்துவங்கும்போது படம் முடிகிறது.

salaam

படம் பார்க்கும் உணர்வே இல்லை. பாத்திரங்களுக்கு அநாயாசமாக பொருந்தி இருக்கும் குழந்தைகளும், நடிகர்களும், காமத்திபுராவின் அழுக்கு சந்துகளிலும், கோழி வெட்டும் கடைகளிலும், குறுகலான ரேழியோடிய வீடுகளுக்குள்ளும், நூறாண்டு பழைமை மற்றும் துயரத்தோடு அழுது வடிந்து நிற்கும் வீடுகளிலும், கிட்டத்தட்ட ரியாலிடி ஷோ ரேஞ்சுக்கு வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள்.

வசனம் அதிகம் இல்லை. இயல்பான காட்சி அமைப்பிலும், எல்.சுப்ரமணியத்தின் இசையிலும் அழகாக படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார் மீரா. தெருக்களும், குறுக்கே நெடுக்கே போகும் மின்சார ரயில்களும், படத்தில் நடித்திருக்கின்றன. நமக்கு இன்று நடந்திருக்கும் நல்லவைகளுக்கெல்லாம், நிஜமாகவே புண்ணியம் பண்ணி இருக்கிறோம் என்ற எண்ணமும், வாழ்கின்ற வாழ்க்கையின் தரமும், இந்தக் குழந்தைகளை பார்க்கும்போது சுளீரென்று தாக்கியது.

எந்தரோ மகானுபாவலு...அந்த்தரிகி வந்தனமு....!!!

2 comments:

  1. நிறைய வருடங்கள் முன்பு (கிட்டத்தட்ட 15 வருடங்கள் இருக்கலாம்) தூர்தர்ஷனினல் நள்ளிரவில் இந்தப் படத்தை ஒளிபரப்பினார்கள். தூர்தர்ஷனில் முதன்முதலில் தமிழ் சப்டைட்டிலுடன் ஒளிபரப்பான தமிழ்த் திரைப்படம் இதுதான். மீண்டும் ஒருமுறை பார்க்கும் எண்ணம் மேலிடுகிறது.

    ReplyDelete
  2. பிரசன்னா, வணக்கம்.
    மறுவாசிப்பு செய்ய வேண்டிய புத்தகக்களும், மறுமுறை பார்க்கவேண்டிய படங்களும் இங்கேயும் அதிகம் உண்டு.

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...