Tuesday, December 07, 2004

மற(றை)க்கப்படும் மறுமொழிகள்

கற்றதும் பெற்றதும் தொடரில் எழுத்தாளர் சுஜாதா கீழ்கண்டவாறு ஆரம்பித்துவிட்டு ....

அகாடமியில் இந்த வருஷம் கச்சேரிகள் இல்லையென்றும், சில ஆர்வலர்கள் சேர்ந்து ஒரு மினி சீசன் நடத்தப் பிரயத்தனப் படுவதாகவும் அறிகிறேன். கர்நாடக சங்கீதம், சென்னையில் இன்று அப்பர் மிடில் கிளாஸ் பிராமணர்கள் மட்டும் வருஷத்துக்கு ஒரு மாசம் பேணிவரும் சங்கீதமாகக் கருதப் படுகிறது. கேரளாவிலும், ஒரு அளவுக்குக் கர்நாடகாவிலும் அப்படி இல்லை. ஏனோ தமிழ்நாட்டில் மட்டும் இதெல்லாம் அவாள் சங்கீதமாகி விட்டது!

தொடர்ச்சியாக பத்து யோசனைகளில் இவற்றையும் சொல்லி இருந்தார்.

8.கர்நாடக இசையை ஆதரித்து, நல்ல தமிழ்ப் பாடல்கள் இயற்றுவது.
9.ஆண்டின் திரைப்படங் களில் சிறந்த கர்நாடக இசை சார்ந்த பாடலுக்கு அவார்டு கொடுப்பது
.

சங்கீதத்தின் அவசியத்தையும், மனிதனை செம்மைப்படுத்தும் அதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்து அதனை எல்லார்க்கும் பரவலாக்க, தமிழிசையை ஊக்குவிப்பது என்று தொனி எழ அவர் சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது.

போன வருடம் சங்கீத சீசனில் பா.ம.க ஏற்பாடு செய்த தமிழிசை விழாவில் தயிர் சாதப் பொட்டங்களுக்காக நடந்த அடிதடி பற்றி டாக்டர்.வாஞ்சி 01-01-2004 அன்று ராயர் காப்பி க்ளப்பில் எழுதி இருந்தது இங்கே :

இராம. கிருஷ்ணன் "முழுக்க பாரதிதாசனைக் கேட்கணும்னா, ஓவ்வொரு ஆண்டும் மாணவர் நகலகம் அருணாசலம் நடத்து இயலிசைநாடக மன்ற இசை விழாவுக்குப் போங்க! அதை இந்த ஆண்டு முதல் பா.ம.க. நடத்துறதாக் கேள்வி. "என்று எழுதியிருந்தார். மழைக்கு ஒதுங்குவது போல் நானும் இந்த பா.ம.க.வின் பொங்குதமிழ்ப்பண்விழாவிற்குச் சென்றிருந்தேன்.நான் பணிபுரியுமிடத்திலிருந்து பூசனிக்காய் எறிதூரத்தில் அந்த அரங்கம் இருந்ததால் சென்றேன்.மத்தியானம் குறவஞ்சிப்பாடல்கள் என்று ஊரெல்லாம் விளம்பரத்தை அடித்துஒட்டியிருந்தார்கள்.ரெனவே சரியாக 2 மணிக்கு அங்கே வந்து சேர்ந்தேன். அரங்கின் வெளியேயிருந்தஒலிபெருக்கி உள்ளே பாடியதைச் சாலையில் செல்பவர்கள் கேட்டு இன்புறும் நோக்கத்தில்சாலையைக் கடப்பதற்கு முன்பே எனக்கு வடமொழியும் தமிழும் மாறி மாறிப் பாடிக் காட்டியதைத் தந்துகொண்டிருந்தது. பாட்கர் தமிழில் வடமொழியைவிட எவ்வளவு அழகாகச் சொல்லப் பட்டிருக்கிறதுஎன்பதைத் தனது 100 % பிராமணியத் தமிழில் விளக்கிக் கொண்டிருந்தார்.சாலைப் போக்குவரத்து குறைந்து நான் அரங்கத்தில் நுழையும் முன்னே அவர் "2006 இல் பாட்டளி மக்கள்கட்சியே ஆட்சி பிடிக்க வேண்டும்" என்று வாழ்த்தி வணங்கி விடை பெற்றார்.

நான் நல்ல இடமாகத் தேர்ந்தெடுத்து நாற்காலியில் அமரும்போது போது மேடையில் ஒருவர்நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தார்.பளபளக்கும் பட்டுப்புடவையுடன் எவரையும் அரங்கத்தில் காணும். வேஷ்டியுடன் நிறைய பேர் இருதனர்.எனக்கு அருகில் இருந்தவர், சாப்பாடு போட்ட பிறகு வள்ளுவர் கோட்டம் போய் பார்த்துவிட்டுவந்துவிடலாம் என்று கூட வந்தவரிடம் கூறிக்கொண்டிருந்தார். அடுத்து பாடப்போகிறவரைப் பற்றிஅறிமுகத்தை முடித்து பாடப் போகிறவர் தொண்டையைச் செரும அரங்கத்தில் ஏகப்பட்ட ரகளை. சாப்பாடுவிநியோகம் செய்து கொண்டிருந்தனர். எங்கள் கிராமத்தில் (புழுங்கலரிசிக்காக) நெல்லை வேகவைக்கப்பெரிய கொப்பரை வைத்திருப்பார்கள். அந்த கொப்பரை நிறைய சுட சுடச் செய்திகளோடுசாம்பார்சாதத்தையும் உள்ளடக்கியதினத்தந்திப் பொட்டலங்கள் இருந்தன.பால்கணியிலிருந்து ஒருவர் கிழ்நோக்கி "அண்ணன் இங்கே இருக்கார் இங்க இருபது பொட்டலம்அனுப்புங்கப்பா" என்றார். மேடையில் மீண்டும் பேச்சாளர் தோன்றி, "அனைவருக்கும் தேவையான அளவுஉணவுப் பொட்டலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அன்பர்கள் அமைதியாக அவற்றைப் பெற்று உண்டு இசையைரசிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்" என்று இடைமறித்து அறிவித்தார்.இசைஞர் காவடிச் சிந்து எழுதியவர் அண்ணாமலை ரெட்டியார் என்று குறிப்பிட்டு பிறந்த இடம், தாய்தந்தை பெயர், அவருக்கு வந்த வியாதி போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தார். ("இசையும்அவரே, ஆய்வுரையும் அவரே" என்று முன்னதாக அவர் அறிமுகப்படுத்தப் பட்டிருந்தார்).
எல்லா நாற்காலிகளிலும் அங்கே விநியோகம் செய்யப்பட்டிருந்த அச்சடித்த துண்டுக் காகிதம் இருந்தது.மாம்பலத்தில், "பெரிய அய்யா, சின்ன அய்யா படங்களுடன் கூடிய லெட்டர் பேடுகள், வரவேற்பறையில்மாட்டிக் கொள்வதிலிருந்து பர்ஸில் வைத்துக் கொள்ளும் வரை எல்லா அளவிலும் அவரது புகைப்படங்கள்"எல்லாம் எங்கே மொத்தமாக வாங்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.என்னுடைய முன் வரிசையிலிருந்தவர் தயிர் சாதம் தொண்டையை அடைக்கிறது, நிறைய தயிர்ஊற்றிப் பிசைந்திருக்கலாம் என்றார். ஐந்தாவது முறையாக மேடையில் உணவுப் பஞ்சமில்லா அரங்கத்தில்அமைதி காக்க வேண்டிப் பேச்சாளர் தோன்றிய போது எழுந்து வந்தேன். பா.ம.க. கட்சிப்பிரசுரங்கள்,கட்சித்தலைவர், தலைவரது புதல்வர் படம் பொறிக்கப்பட்ட சாவிக்கொத்துகள் வியாபாரம் சுறுசுறுப்பாகநடந்து கொண்டிருந்தது.


அதற்கு மறுமொழியாக இராம.கி அவர்கள் கீழ்க்கண்டவாறு எழுதி இருந்தார்.

உங்களது பார்வை ஒருவிதமானது. சொல்லுவதற்கு என்ன இருக்கிறது? உங்கள் பார்வை உங்களுக்கு! நண்பர்இரா.மு. வேறு நறுக்கென்றும் சுருக்கென்றும் சொல்லுகிறார்.

நானொன்றும் பா.ம.க ஆளில்லை. அதே பொழுது, இதுபோன்ற முயற்சிகளை நீங்கள் பார்ப்பதுபோல் பார்க்கமாட்டேன். மேலே இருந்து கீழே பார்ப்பது ஒருவகை. கீழே இருந்து, பக்கவாட்டில் பார்த்து கூட இருக்கும்உடன்நெஞ்சன் (எப்படிச் சொல்லுவீர்கள்? சக ஹ்ருதயன்....இல்லையா?) பார்வை உயர தன்னால் இயன்ற படிவழி சொல்லிக் கொடுப்பது இன்னொரு வகை. கானாப் பாடுகிறவன் ஆர்வ மிகுதியில் கரகரப்பிரியாபாடும் போது தப்பும் தவறுமாகத் தான் தொடங்குவான். ஏனென்றால் அவன் நடக்க வேண்டிய தொலைவு கூட.
இசை பற்றி ஒரு காலத்தில் சற்றும் தெரியாத நான் கூட "அலை பாயுதே" வைத் தட்டுத் தடுமாறித்தான்தொடங்கினேன். கூடவே புரிந்து நகர "வேயுறு தோளி பங்கனும்" " மன்னுபுகழ் கோசலைதன் .... என்னுடையஇன்னமுதே இராகவனே தாலேலோ" வும், மானா மதுரைக்குப் போகும் மச்சான் - எங்க சின்ன மச்சான், எங்கபெரிய மச்சானும் " கைகொடுத்தன. ஓசை சற்றே கை வந்தது.
இது போன்ற முயற்சிகள் தொடங்கும் போது முதலில் முட்டாள் தனமாகத் தான் இருக்கும். பெர்னாட்சாவின்பிக்மேலியன் நினைவிற்கு வருகிறது. கால காலமாக இந்த இசையின் அருமை தெரியாது ஒதுக்கி/ஒதுங்கிஇருந்த கூட்டம், நீங்கள் அந்த அரங்கில் பார்த்த கூட்டம், தட்டுத் தடுமாறி எழுகிற கூட்டம், திடிரென்றுநடந்துவிடாது. பட்டு விழுந்துதான் நடை போடும்; அதனால் என்ன? விழுந்து எழாமல் மிதிவண்டி கற்றவர்யார்? இத்தனை கால அழிம்புகளுக்கும் பிறகு, அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்தை டாக்டர்அய்யாவிற்காகக் கேட்க முற்படுகிறார்கள் அல்லவா? இது ஒரு தொடக்கம், வாஞ்சி. இதற்குப் பலன்கிடைக்கும். கேள்வி ஞானம் ஒரு நாள் அடிப்படை ஞானமாக மாறும்; நாளடைவில் அவர்களில் நூற்றில் ஒருத்தன்சிந்து பாடுவதில் பெரிய ஆளாக வருவான். வரட்டுமே? சிந்து பாடுவதில் JKB மட்டும் தான் இருக்கவேண்டுமா, என்ன?

கீழை நாட்டுக் கிழவன் ஒருத்தன் (அவன் தலைவனும் கவிஞனும் கூட) சொன்னானாம்; புரட்சி என்பது ஓவியம்அல்ல; இரவுச் சாப்பாட்டு விருந்தும் அல்ல; அது நளினமாகவும் ஒயிலாகவும் என்றைக்கும் இருக்க முடியாது; அதுமாந்தர்களால் நடத்தப் படுவது.


ஈதிப்படி இருக்க சமீபத்தில் அரவக்கோன் க்ளப்பில் எழுதி இருந்த இந்தக் கடிதத்திற்கு, அன்பர் திருமலை கருணாநிதியின் தமிழிசைப்பற்றைப் பற்றி சோ அடித்த கமெண்ட்டை போட்டுவிட்டு, கடந்த தமிழிசை விழாவிலே தயிர்சாதப் பொட்டலங்களுக்கு நடந்த அடிதடி பற்றி டாக்டர் வாஞ்சி சொன்னது நினைவு வருகிறது என்பதோடு மட்டும் நிறுத்தி விட்டார்.

என் கேள்வி மிக எளிமையானது. தமிழிசை பற்றி பேசவில்லை. கர்நாடக இசை , தனித்தமிழ் பற்றியும் வாக்குவாதம் வேண்டாம். பா.ம.க ஏன் தமிழிசையில் திடீர் ஆர்வம் கொண்டிருக்கிறது என்ற கேள்விக்குள்ளும் புக வேண்டாம். அட...ஒரு விவாதம் நடந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக நடந்த அத்தனை தகவல்களையும் மறந்து விட்டு தமிழிசை விழாவில் தயிர்சாத அடிதடி என்பதை மட்டும் வணிக நாளேடுகள் போல ஃப்ளாஷ் பண்ண வேண்டுமா..?? என்பதுதான்.

எகலப்பை உள்ளவர்கள் இந்த திரியில் உழுது பாருங்கள். முழு விவரம் இங்கே உள்ளது - மறுமொழி மறுவாதங்களுடன்.

உங்கள் தகவலுக்காக. வேறு தாவல்களுக்கு இல்லை.



Monday, December 06, 2004

பண்டிகை தினங்கள்

கடேசி குவார்ட்டர் என்று ஏற்கனவே இங்கே எழுதி இருந்தேன். இது கிட்டத்தட்ட அதனுடைய தொடர்ச்சிதான்.

கிறிஸ்துமஸ் வர இன்னமும் இரண்டு வாரம்தான் இருக்கிறது. குளிர் அதிகம். பண்டிகை கூட்டமும் அதிகம். இரவில் எங்கள் குடியிருப்புப் பகுதியே விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாய் ஜொலிக்கிறது. எல்லா கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது வருவதைப் போலவே, இப்போதும் ஒரு படம் வந்திருக்கிறது என்றாலும், இதைப் போல இன்னொரு படம் வர முடியாது என் டீம்மேட் ஜீன் தாத்தா சொல்கிறார். இன்னமும் நான் இரண்டையும் பார்க்கவில்லை.

போன கிறிஸ்மஸ் நாங்கள் அபார்ட்மெண்டில் இருந்தோம். வாங்கிவந்த கலர் பல்புகளை வாசலில் உள்ள பந்தல் மாதிரி உள்ள roof ல் தொங்கவிட்டு விளக்கெரிந்தபோது ஜூனியர் மூஞ்சில் சூரியகோடி பிரகாசம். எங்களுக்கு இதிலெல்லாம் ஈடுபாடு இல்லை என்றாலும், கிறிஸ்மஸ் மரம் வைத்து, புகை போக்கி வழியாக தாத்தா இறங்கி வந்து கிஃப்ட் கொடுப்பார் என்றெல்லாம் கதை விட்டு, கிறிஸ்மஸ் காலையில் எழுப்பி, பரிசு கொடுத்தோம். மறுபடியும் அண்ணாச்சி மூஞ்சு முழுக்க 1000 வால்ட் பல்பு போட்டார்.

இந்த வருடம் இன்னமும் கிறிஸ்மஸ் மரம் வைக்கவில்லை. போனமுறை லோக்கல் சித்தி விநாயகர் கோவிலில், கிறிஸ்மஸ் மரத்தைப் பற்றி அங்கு உள்ள ஐயர் ஒருவர் உயர்வாக சொல்ல, ( நம் புராணங்களில் இந்த தேவதாரு மரத்தைப் பற்றி குறிப்புகள் இருக்கின்றன. அதிலிருந்து வரும் காற்று உடம்புக்கு நல்லது...) , போனமுறை ஒரிஜினல் மரம் வாங்கினோம். வருடா வருடம் வாங்க வேண்டி இருக்கும் என்பதால், இந்த முறை ப்ளாஸ்டிக் மரம்தான் வாங்க வேண்டும். இன்னம் கொஞ்சம் கலர் பல்பு வாங்க வேண்டும். அபார்ட்மெண்டில் போட்டிருந்த துளியூண்டு பல்பு மாலையை இந்த வீட்டின் முன் போட்டால், சரத்குமாருக்கு நாலு முழ வேஷ்டி கட்டியது மாதிரி இருக்கிறது.

அமெரிக்க பண்டிகைகளின் கோலாகலம் இப்படி இருக்க, நம் பண்டிகைகள் கொண்டாடுவது ரொம்ப சோகம் இங்கே. ஜே ஜே என்று கொண்டாடிய தீபாவளியையும், பொங்கலையும், மற்ற பண்டிகைகளையும் தனியாக கொண்டாட வேண்டி இருக்கிறது. கிறிஸ்மஸ் கேக்கையும், தேங்க்ஸ் கிவிங் பரங்கியையும் வெளியுலகில் கிடைக்கும் வெளிச்சத்திலிருந்து சுவீகரித்துக் கொள்ளும் பையன், முறுக்கையும், அதிரசத்தையும் தீண்டவே மாட்டேன் என்கிறான். வேண்டாம் என்று நாசுக்காக மறுத்து விடுகிறான். அவனுக்காகவாவது எல்லாவற்றையும் கொண்டாடி காட்ட வேண்டும் என்று தோணுகின்ற சமயத்திலேயே, அதெல்லாம் அவனுக்கு தேவைப்படுமா என்றும் கேள்வி எழுகிறது. எனக்காவது, கொஞ்ச காலம் கழித்து மாயவரத்தில் போய் செட்டில் ஆகும் நப்பாசை இருக்கிறது. இந்த சூழலில் வளரும் அவனுக்கு, இங்கிருக்கும் ஆட்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதுதான், கலந்து பழக ஏதுவாக இருக்கும் என்றும் யோசனை தோன்றுகிறது இந்த ஒரு காரணத்திற்காகவே, இதுவரை தமிழில் சரளமாக பேச எழுத சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கூட தோன்றாமல் இருக்கிறது.

மனித வாழ்க்கை என்பது இத்தனை கேள்விகளால் உருவாக்கப்பட்டது என்று யாரும் எனக்கு சொல்லி இருந்தால், வண்ணத்துப்பூச்சியாக பிறந்து வர வரம் கேட்டிருப்பேன்.

டூ லேட்...!!


இதன் தொடர்பில், முன்னர் எழுதியவைகள் :

பாலம்

ஜீஸஸ் க்ரைஸ்ட் யாரப்பா
கேட்டான் பிள்ளை..
முருகன் தம்பியோ..??
சந்தேகம் அவனுக்கு....
பள்ளியில் நண்பரெல்லாம்
கிறிஸ்மஸ் கொண்டாடயில்
சர்ச்சில் ஜபிக்கையில்
கிறிஸ்மஸ் மரம் வைக்கையில்
சான்டா க்ளாஸ¤டன் பேசுகையில்
வீட்டில்
'தனந்தரும் கல்வி தரும்'
சொல்லும் குழப்பம் அவனுக்கு...
அலைந்து தேடி
கிறிஸ்மஸ் மரம் வாங்கி
அலங்கரித்து
லைட் பொருத்தி
ஓய்ந்து போய்
போர்ச்சுகல் ஒயினும்
கோழி வறுவலுமாய்
உட்காருகையில் போன் வந்தது
..'அண்ணாமலை தீபம்டா இன்னைக்கு..
பெரிய கார்த்திகை..
வாசல்ல ரெண்டு
வெளக்கேத்தி வை.
.இன்னைக்காவது 'சுத்தமா' இரு..
என்றார் அப்பா..

தனியே

கிறிஸ்துமஸ¤க்கு ஜெபிக்கவில்லை
லேபர் டே வீக் எண்ட்
ஒரு அர்த்தமும் தரவில்லை
ஹலோவீன் வேஷமும்இல்லை எனக்கு..!!
தாங்ஸ் கிவிங்...
கேட்கவே வேண்டாம்...

தீபாவளியும்..சரஸ்வதிபூஜையும் ...
பொங்கலும்..கொண்டாடிவிட்டு
காரில் போகையில்
பரபரவென்று நெற்றி சந்தனத்தை
அழித்தழித்து
திரு திரு வென விழித்தபடி
ஓடிக்கொண்டிருக்கின்றன நாட்கள்...!!

Saturday, December 04, 2004

NaaCh - A Movie by RGV

" Ye Gandha hai. Lekin ye Dhandhaa hai" என்று ராம் கோபால் வர்மா ஒரு டைரக்டர் கதாபாத்திரம் மூலமாக பேசி இருக்கிறார். உண்மையில் தனக்குள் இருக்கும் பல துண்டுகள் தொடர்ந்து நடத்தும் வாக்குவாதங்களையே இதில் படமாக்கி இருக்கிறார் எனத் தோன்றுகிறது.

C:\Documents and Settings\Sundar\My Documents\My Pictures\Naach1

(படத்தில் டைரக்டர் மற்றும் அந்தரா மாலி)

ராம்கோபால் வர்மாவின் ட்ரீட்மெண்ட் இப்போது கொஞ்சம் முதிர்ச்சியாக இருக்கிறது. ரங்கீலா படத்தைப் போல இதற்கும் சினிமாத் துறை தான் களம். ஆனால் அதில் உள்ள ட்ராமா இதில் கிடையாது. பாத்திரங்கள் அழுத்தமானவர்கள். (ஒரே ஒரு இடத்தை தவிர) அதிகம் பேசாமல், வெறுப்பானாலும், கோபமானாலும், காத்லானாலும், திமிரானாலும் அடர்த்தியான செறிவான மெளனத்தில் ( தாங்க்ஸ் ஆசிப்பு :-) ) காட்டி விடுகிறார்கள்.

சிறுகதையை நாவலாக்கினால் என்ன கொடுமை நடக்குமோ, அதை விட கொடுமை இந்தப் படத்துக்கு நடந்திருக்கிறது. சங்கரமடத்தின் புனிதம் போல மகா வீக்கான, நோஞ்சலான ஸ்டோரி லைன். நடிகர்களின் நடிப்பில் சின்ன சுவாமிஜியின் அழுத்தம். அங்கிருக்கும் பணத்தைப் போல க்தாநாயகியின் கவர்ச்சி. விஷயம் வெளியே வந்த வேகத்தைப் போல மகா ஸ்லோவான திரைக்கதை.

அபிஷேக் பச்சன் அருமையாக நடித்திருக்கிறார். அவர் ஆகிருதிக்கும், உயரத்துக்கும், ஸ்கூல் பையன் மாதிரி மாலியின் முன் I love you..I love you என்று சொல்லிச் சொல்லி அவர் அவமானப்படுத்தப் படுகையில் நமக்கே ஐயோ பாவமே என்றிருக்கிறது. நெய், பச்சை கற்பூரம் போட்டு அல்வா சாப்பிட என்றே பிறந்த மாதிரி ஒர் மூஞ்சோடு சஜித் தேஷ்முக். அந்த்ரா மாலி..?!!! - நான் காலி. சில க்ளோஸ் அப்புகளில் எங்கள் தெருவில் இட்லி வியாபாரம் செய்த ஜானகி அம்மாள் போல வயதான களை. பாலுமகேந்திராவின் கதாநாயகிகள் எல்லாம் கொஞ்சம் கிராமத்து லட்சணமாக இருப்பது போல, ராமின் கதாநாயகிகள் எல்லாம் "கோவா" களையாக இருக்கிறார்கள். சர்...ர்ரியான கட்டை. கூடப் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி "உரித்த கோழி மாதிரி இருக்கிறாள்" என்றார்.
சிக்கனமான ரிப்பன் உடைகள். அதைவிட சிக்கனமான சிரிப்பும், இடையும். ஆனால் உடம்புக்கும், முஞ்சிக்கும், படத்தில் அவர் கேரக்டருக்கும் சம்பந்தமே இல்லை. சரியான தலைகனம் பிடிச்ச டீச்சரம்மா...!! இசை அருமையாக இருக்கிறது . யாரென்று தெரியவில்லை. காமிராவும் அருமை.

படம் ஸ்லோவாக இருப்பது ஒரு குறையில்லை எனில் தாராளமாக முயற்சிக்கலாம்.

Friday, December 03, 2004

இடைவெளி

முகமே தெரியவில்லை
முதல் முதலாய் பார்த்தபோது
முகடுகள் தெரிந்து விட்டால்
முகமெங்கே தெரிகிறது.

வெறித்துப் பார்த்தலில்
விவேகம் இல்லை என
பலவீனமாய் மூளை நினைவுறுத்த
மனசு மட்டும் இடைவெளியில்
தெரிந்த
தரிசனத்துக்கு சண்டித்தனம் செய்யும்

பேனாவுக்கு கை நீட்டியும்
பேச்சுக்கு புன் சிரித்ததிலும்
வணக்கத்துக்கு தந்த தலையசைப்பிலும்
பேர் சொன்ன அறிமுகத்திலும்
குறைந்தது
இடைவெளி மாத்திரமில்லை
கொஞ்சம் வெம்மையும் கூட

பழகவும் பேசவும்
பகிரவும் மலரவும்
இறகாச்சு மனசெனக்கு.
பேசாத விஷயம் அங்கே
ஏதும் மீதம் இல்லை
இப்போதெல்லாம்.
மணிக்கணக்கில்
பேசிப் பிரிகையில்
எங்காவது தெரிந்திருக்கலாம்.
ஏதும் விலகி இருக்கலாம்.

யாரதைப் பார்த்தார்கள்.

மனசும் மூளையும்
சேர்ந்திணையும் மாயாஜாலம்
தோழமை தந்த வரம்.

Thursday, December 02, 2004

மாதர் சங்கம் - 1982

கண்ணாடி என்கிற பிரயோகத்தையே சந்தேகப்படுத்தும் விதமாக எப்போதும் மணல்கயிறு கிஷ்மு மாதிரி மூக்கிலேயே தொங்கிக் கொண்டிருக்கும் சோடாபுட்டி. மெலிந்த தேகம். எப்போதும் கலைந்து கிடக்கும், அம்மா தேய்த்துவிட்ட yendeluxe தேங்காய் எண்ணையோடு கோரை முடித தலை. நெற்றியில் பளிச்சென்று தெரிய வேண்டுமென்பதற்காக பாண்ட்ஸ் பவுடரில் (விபூதிக்) கீற்று. வாய்க்குள் சதா ஏதாவது ஒரு பாட்டு. தெருவில் நடந்து கொண்டே கதைப் புத்தக வாசிப்பு. சட்டைப் பையில் "சிவந்த மண்" வாங்கித் தின்ன, பெருஞ் சண்டைக்குப் பிறகு அம்மா கொடுத்திருக்கும் அஞ்சு காசு. மேற்சொன்னவைகளோடு சுற்றிக் கொண்டிருந்த ஒரு பொடியன் சடாரென்று ஒரு நாள் பிரபலமானான்.

மாயவரம் மாதர் சங்கம் சார்பாக நடந்த பாரதி நூற்றாண்டு விழாவில் " மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்ற தலைப்பில் 1982 ஆம் வருடம் பேச்சுப் போட்டி. அப்போது அவன் ஆறாவது படித்துக் கொண்டிருந்தான். உருவத்துக்கு சம்பந்தமில்லாத கணீர் குரலோடு அப்பா எழுதி கொடுத்த தமிழ், சரளமாக நாவில் விளையாட, அந்தப் பேச்சுப் போட்டியில் அவனுக்கு முதல் பரிசு. பாரதி புண்ணியத்தில் கழுத்தில் விழுந்த முதல் மாலை. தமிழில் பேசினால், திறமையை காட்டினால், கைதட்ட, பரிசு தந்து ஊக்கப்படுத்த நான்கு பேர் இருக்கிறார்கள் என்று புரிந்து போக, புகழ் போதைக்காக, மேலும் மேலும் பட்டிமன்றங்கள், பேச்சுப் போட்டிகள் என்று கலந்து கொண்டு வளர்ந்தாலும், விவரம் தெரியாத வயதில் பேச்சுப் போட்டிக்காக நெட்டுரு பண்ணிய பாரதி மட்டும் இன்று வரை தொடர்கிறான். கவிஞனாக வசீகரித்த அவன், இப்போது, விவரம் தெரிந்த இந்த வயதில் கவிஞன் என்ற எல்லையைத் தாண்டி தமிழ் சமூகத்தில் அரிதாகத் தோன்றும் மாமனிதர்களில் ஒருவனாக மனதுள் இருக்கிறான். இணையம் முழுக்க விரவிக் கிடக்கும் அவன் பற்றிய தகவல்கள், அவன் மேல் வெறிபிடித்த பாரதி பித்தர்கள் தரும் செய்திகள் என்று ஒவ்வொன்றும் கேட்கக் கேட்க அதிசயமாய்த்தான் இருக்கிறது. வாங்கி வைத்த பாரதி கவிதைகள் தொகுப்பை என்றாவது ஒரு நாள் ஹரிமொழியின் துணையோடு முழுதாய்ப் படித்து விட முடியும் என்கிற பேராசை இன்னமும் பாக்கி இருக்கிறது.அது நீண்டகாலத் திட்டம் . திசைகள் தந்திருக்கும் பாரதி சிறப்பிதழ் அமர்க்களமாக வந்திருக்கிறது. அது இன்றைய திட்டம்

C:\Documents and Settings\spasupat\My Documents\My Pictures\Subramaniya+Bharathi

பாரதிக்கு, நல்லவனாய்ப் பிறந்து தொலைத்ததால் கிறுக்குப் பார்ப்பான் என்று இகழப்பட்ட அந்த விராட் புருஷனுக்கு, இந்தத் துரும்பின் நினைவு அஞ்சலி...

Wednesday, December 01, 2004

பெங்களூரும், டெல்லியும்

நல்ல விஷயமே கண்ணுல படாதா என்று கேட்காதீர்கள். பெங்களூரி பிஷப் காட்டன் பள்ளியில் ராக்கெட் விட்ட சேதியை படிச்சதும் நெஞ்சு கொள்ளாத பூரிப்பு வந்தது. டெல்லி கொடூரத்தைப் பத்தி படிச்சதும், காணாப் போச்சு.

சவுத் டெல்லி ஸ்கூல்ல +1 படிக்கிற ரெண்டு பிள்ளைகள் ஸ்கூலை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார்கள். கூடப் படிச்ச, பழகின, காதலிச்ச பொண்ணோட தான் தப்பு பண்ணியதை வீடியோ எடுத்து வித்திருக்கிறான் ஒரு அயோக்கிய நாய். 100 ரூவா விலை. 'சாமி ' படம் விக்கிற வீடியோ கடையில எல்லாம் இப்ப இதான் ஹாட் ஐட்டமாம். வெளிநாட்டுல பொம்பிளை பிள்ளைகளை வளத்தா, சீரழிஞ்சு போய்டுவாங்கன்னு, வயசுப்பிள்ளைகளை இந்தியா கூப்பிட்டுட்டு போயிடணும்னு அமெரிக்காலேர்ந்து கிளம்பற எத்த்னையோ குடும்பங்களை எனக்குத் தெரியும். இந்தியா நாம் விட்டுட்டு வந்த மாதிரியே இருக்குன்னு நினைச்சுகிடாதீங்க...!! எதை எதை காப்பி அடிக்கக்கூடாதோ, அதை எல்லாம் நம்ம பிள்ளைங்க கத்துக்கிடுது.

இந்த மாதிரி தப்பு பண்ணிணதுக்கு, அந்த பையன் மூச்சா கூட போக முடியாதபடி லுல்லாவை வெட்டி அரபி ஸ்டைல் தண்டணை கொடுக்கணும்.

ஆதவன் தீட்சண்யா

இவர் பெயரை நேசமுடன் வெங்கடேஷோ அல்லது பா.ராகவனோ எழுதிப் படித்திருக்கிறேன். இவருடைய சில கவிதைகளை தட்ஸ்டமில்.காமில் இன்று படிக்க நேர்ந்தது. அருமையாக எழுதப்பட்ட கவிதைகள். உங்கள் வாசிப்புக்கு

ராயர் காப்பி க்ளப் மூலமாக ஏற்கனவே அறிமுகமான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் தோழர் நா.முத்துநிலவன் கவிதையும் அற்புதம்.

நாத்திகம் பரப்ப நாமே ஒரு கருவியாவோம் என்று ஜகத்குரு(?!!!) சற்றேனும் நினைத்திருப்பாரா..??

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...