Tuesday, December 07, 2004

மற(றை)க்கப்படும் மறுமொழிகள்

கற்றதும் பெற்றதும் தொடரில் எழுத்தாளர் சுஜாதா கீழ்கண்டவாறு ஆரம்பித்துவிட்டு ....

அகாடமியில் இந்த வருஷம் கச்சேரிகள் இல்லையென்றும், சில ஆர்வலர்கள் சேர்ந்து ஒரு மினி சீசன் நடத்தப் பிரயத்தனப் படுவதாகவும் அறிகிறேன். கர்நாடக சங்கீதம், சென்னையில் இன்று அப்பர் மிடில் கிளாஸ் பிராமணர்கள் மட்டும் வருஷத்துக்கு ஒரு மாசம் பேணிவரும் சங்கீதமாகக் கருதப் படுகிறது. கேரளாவிலும், ஒரு அளவுக்குக் கர்நாடகாவிலும் அப்படி இல்லை. ஏனோ தமிழ்நாட்டில் மட்டும் இதெல்லாம் அவாள் சங்கீதமாகி விட்டது!

தொடர்ச்சியாக பத்து யோசனைகளில் இவற்றையும் சொல்லி இருந்தார்.

8.கர்நாடக இசையை ஆதரித்து, நல்ல தமிழ்ப் பாடல்கள் இயற்றுவது.
9.ஆண்டின் திரைப்படங் களில் சிறந்த கர்நாடக இசை சார்ந்த பாடலுக்கு அவார்டு கொடுப்பது
.

சங்கீதத்தின் அவசியத்தையும், மனிதனை செம்மைப்படுத்தும் அதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்து அதனை எல்லார்க்கும் பரவலாக்க, தமிழிசையை ஊக்குவிப்பது என்று தொனி எழ அவர் சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது.

போன வருடம் சங்கீத சீசனில் பா.ம.க ஏற்பாடு செய்த தமிழிசை விழாவில் தயிர் சாதப் பொட்டங்களுக்காக நடந்த அடிதடி பற்றி டாக்டர்.வாஞ்சி 01-01-2004 அன்று ராயர் காப்பி க்ளப்பில் எழுதி இருந்தது இங்கே :

இராம. கிருஷ்ணன் "முழுக்க பாரதிதாசனைக் கேட்கணும்னா, ஓவ்வொரு ஆண்டும் மாணவர் நகலகம் அருணாசலம் நடத்து இயலிசைநாடக மன்ற இசை விழாவுக்குப் போங்க! அதை இந்த ஆண்டு முதல் பா.ம.க. நடத்துறதாக் கேள்வி. "என்று எழுதியிருந்தார். மழைக்கு ஒதுங்குவது போல் நானும் இந்த பா.ம.க.வின் பொங்குதமிழ்ப்பண்விழாவிற்குச் சென்றிருந்தேன்.நான் பணிபுரியுமிடத்திலிருந்து பூசனிக்காய் எறிதூரத்தில் அந்த அரங்கம் இருந்ததால் சென்றேன்.மத்தியானம் குறவஞ்சிப்பாடல்கள் என்று ஊரெல்லாம் விளம்பரத்தை அடித்துஒட்டியிருந்தார்கள்.ரெனவே சரியாக 2 மணிக்கு அங்கே வந்து சேர்ந்தேன். அரங்கின் வெளியேயிருந்தஒலிபெருக்கி உள்ளே பாடியதைச் சாலையில் செல்பவர்கள் கேட்டு இன்புறும் நோக்கத்தில்சாலையைக் கடப்பதற்கு முன்பே எனக்கு வடமொழியும் தமிழும் மாறி மாறிப் பாடிக் காட்டியதைத் தந்துகொண்டிருந்தது. பாட்கர் தமிழில் வடமொழியைவிட எவ்வளவு அழகாகச் சொல்லப் பட்டிருக்கிறதுஎன்பதைத் தனது 100 % பிராமணியத் தமிழில் விளக்கிக் கொண்டிருந்தார்.சாலைப் போக்குவரத்து குறைந்து நான் அரங்கத்தில் நுழையும் முன்னே அவர் "2006 இல் பாட்டளி மக்கள்கட்சியே ஆட்சி பிடிக்க வேண்டும்" என்று வாழ்த்தி வணங்கி விடை பெற்றார்.

நான் நல்ல இடமாகத் தேர்ந்தெடுத்து நாற்காலியில் அமரும்போது போது மேடையில் ஒருவர்நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தார்.பளபளக்கும் பட்டுப்புடவையுடன் எவரையும் அரங்கத்தில் காணும். வேஷ்டியுடன் நிறைய பேர் இருதனர்.எனக்கு அருகில் இருந்தவர், சாப்பாடு போட்ட பிறகு வள்ளுவர் கோட்டம் போய் பார்த்துவிட்டுவந்துவிடலாம் என்று கூட வந்தவரிடம் கூறிக்கொண்டிருந்தார். அடுத்து பாடப்போகிறவரைப் பற்றிஅறிமுகத்தை முடித்து பாடப் போகிறவர் தொண்டையைச் செரும அரங்கத்தில் ஏகப்பட்ட ரகளை. சாப்பாடுவிநியோகம் செய்து கொண்டிருந்தனர். எங்கள் கிராமத்தில் (புழுங்கலரிசிக்காக) நெல்லை வேகவைக்கப்பெரிய கொப்பரை வைத்திருப்பார்கள். அந்த கொப்பரை நிறைய சுட சுடச் செய்திகளோடுசாம்பார்சாதத்தையும் உள்ளடக்கியதினத்தந்திப் பொட்டலங்கள் இருந்தன.பால்கணியிலிருந்து ஒருவர் கிழ்நோக்கி "அண்ணன் இங்கே இருக்கார் இங்க இருபது பொட்டலம்அனுப்புங்கப்பா" என்றார். மேடையில் மீண்டும் பேச்சாளர் தோன்றி, "அனைவருக்கும் தேவையான அளவுஉணவுப் பொட்டலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அன்பர்கள் அமைதியாக அவற்றைப் பெற்று உண்டு இசையைரசிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்" என்று இடைமறித்து அறிவித்தார்.இசைஞர் காவடிச் சிந்து எழுதியவர் அண்ணாமலை ரெட்டியார் என்று குறிப்பிட்டு பிறந்த இடம், தாய்தந்தை பெயர், அவருக்கு வந்த வியாதி போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தார். ("இசையும்அவரே, ஆய்வுரையும் அவரே" என்று முன்னதாக அவர் அறிமுகப்படுத்தப் பட்டிருந்தார்).
எல்லா நாற்காலிகளிலும் அங்கே விநியோகம் செய்யப்பட்டிருந்த அச்சடித்த துண்டுக் காகிதம் இருந்தது.மாம்பலத்தில், "பெரிய அய்யா, சின்ன அய்யா படங்களுடன் கூடிய லெட்டர் பேடுகள், வரவேற்பறையில்மாட்டிக் கொள்வதிலிருந்து பர்ஸில் வைத்துக் கொள்ளும் வரை எல்லா அளவிலும் அவரது புகைப்படங்கள்"எல்லாம் எங்கே மொத்தமாக வாங்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.என்னுடைய முன் வரிசையிலிருந்தவர் தயிர் சாதம் தொண்டையை அடைக்கிறது, நிறைய தயிர்ஊற்றிப் பிசைந்திருக்கலாம் என்றார். ஐந்தாவது முறையாக மேடையில் உணவுப் பஞ்சமில்லா அரங்கத்தில்அமைதி காக்க வேண்டிப் பேச்சாளர் தோன்றிய போது எழுந்து வந்தேன். பா.ம.க. கட்சிப்பிரசுரங்கள்,கட்சித்தலைவர், தலைவரது புதல்வர் படம் பொறிக்கப்பட்ட சாவிக்கொத்துகள் வியாபாரம் சுறுசுறுப்பாகநடந்து கொண்டிருந்தது.


அதற்கு மறுமொழியாக இராம.கி அவர்கள் கீழ்க்கண்டவாறு எழுதி இருந்தார்.

உங்களது பார்வை ஒருவிதமானது. சொல்லுவதற்கு என்ன இருக்கிறது? உங்கள் பார்வை உங்களுக்கு! நண்பர்இரா.மு. வேறு நறுக்கென்றும் சுருக்கென்றும் சொல்லுகிறார்.

நானொன்றும் பா.ம.க ஆளில்லை. அதே பொழுது, இதுபோன்ற முயற்சிகளை நீங்கள் பார்ப்பதுபோல் பார்க்கமாட்டேன். மேலே இருந்து கீழே பார்ப்பது ஒருவகை. கீழே இருந்து, பக்கவாட்டில் பார்த்து கூட இருக்கும்உடன்நெஞ்சன் (எப்படிச் சொல்லுவீர்கள்? சக ஹ்ருதயன்....இல்லையா?) பார்வை உயர தன்னால் இயன்ற படிவழி சொல்லிக் கொடுப்பது இன்னொரு வகை. கானாப் பாடுகிறவன் ஆர்வ மிகுதியில் கரகரப்பிரியாபாடும் போது தப்பும் தவறுமாகத் தான் தொடங்குவான். ஏனென்றால் அவன் நடக்க வேண்டிய தொலைவு கூட.
இசை பற்றி ஒரு காலத்தில் சற்றும் தெரியாத நான் கூட "அலை பாயுதே" வைத் தட்டுத் தடுமாறித்தான்தொடங்கினேன். கூடவே புரிந்து நகர "வேயுறு தோளி பங்கனும்" " மன்னுபுகழ் கோசலைதன் .... என்னுடையஇன்னமுதே இராகவனே தாலேலோ" வும், மானா மதுரைக்குப் போகும் மச்சான் - எங்க சின்ன மச்சான், எங்கபெரிய மச்சானும் " கைகொடுத்தன. ஓசை சற்றே கை வந்தது.
இது போன்ற முயற்சிகள் தொடங்கும் போது முதலில் முட்டாள் தனமாகத் தான் இருக்கும். பெர்னாட்சாவின்பிக்மேலியன் நினைவிற்கு வருகிறது. கால காலமாக இந்த இசையின் அருமை தெரியாது ஒதுக்கி/ஒதுங்கிஇருந்த கூட்டம், நீங்கள் அந்த அரங்கில் பார்த்த கூட்டம், தட்டுத் தடுமாறி எழுகிற கூட்டம், திடிரென்றுநடந்துவிடாது. பட்டு விழுந்துதான் நடை போடும்; அதனால் என்ன? விழுந்து எழாமல் மிதிவண்டி கற்றவர்யார்? இத்தனை கால அழிம்புகளுக்கும் பிறகு, அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்தை டாக்டர்அய்யாவிற்காகக் கேட்க முற்படுகிறார்கள் அல்லவா? இது ஒரு தொடக்கம், வாஞ்சி. இதற்குப் பலன்கிடைக்கும். கேள்வி ஞானம் ஒரு நாள் அடிப்படை ஞானமாக மாறும்; நாளடைவில் அவர்களில் நூற்றில் ஒருத்தன்சிந்து பாடுவதில் பெரிய ஆளாக வருவான். வரட்டுமே? சிந்து பாடுவதில் JKB மட்டும் தான் இருக்கவேண்டுமா, என்ன?

கீழை நாட்டுக் கிழவன் ஒருத்தன் (அவன் தலைவனும் கவிஞனும் கூட) சொன்னானாம்; புரட்சி என்பது ஓவியம்அல்ல; இரவுச் சாப்பாட்டு விருந்தும் அல்ல; அது நளினமாகவும் ஒயிலாகவும் என்றைக்கும் இருக்க முடியாது; அதுமாந்தர்களால் நடத்தப் படுவது.


ஈதிப்படி இருக்க சமீபத்தில் அரவக்கோன் க்ளப்பில் எழுதி இருந்த இந்தக் கடிதத்திற்கு, அன்பர் திருமலை கருணாநிதியின் தமிழிசைப்பற்றைப் பற்றி சோ அடித்த கமெண்ட்டை போட்டுவிட்டு, கடந்த தமிழிசை விழாவிலே தயிர்சாதப் பொட்டலங்களுக்கு நடந்த அடிதடி பற்றி டாக்டர் வாஞ்சி சொன்னது நினைவு வருகிறது என்பதோடு மட்டும் நிறுத்தி விட்டார்.

என் கேள்வி மிக எளிமையானது. தமிழிசை பற்றி பேசவில்லை. கர்நாடக இசை , தனித்தமிழ் பற்றியும் வாக்குவாதம் வேண்டாம். பா.ம.க ஏன் தமிழிசையில் திடீர் ஆர்வம் கொண்டிருக்கிறது என்ற கேள்விக்குள்ளும் புக வேண்டாம். அட...ஒரு விவாதம் நடந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக நடந்த அத்தனை தகவல்களையும் மறந்து விட்டு தமிழிசை விழாவில் தயிர்சாத அடிதடி என்பதை மட்டும் வணிக நாளேடுகள் போல ஃப்ளாஷ் பண்ண வேண்டுமா..?? என்பதுதான்.

எகலப்பை உள்ளவர்கள் இந்த திரியில் உழுது பாருங்கள். முழு விவரம் இங்கே உள்ளது - மறுமொழி மறுவாதங்களுடன்.

உங்கள் தகவலுக்காக. வேறு தாவல்களுக்கு இல்லை.



No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...