Tuesday, December 14, 2004

டா கிங் மறைவு

C:\Documents and Settings\spasupat\My Documents\My Pictures\daking

தலைக்கு தொப்பி போட்டு, முகத்துக்கு இன்னமும் கொஞ்சம் ரோஸ் பவுடர் தடவி இருந்தால், கருணாநிதியையும், எம்.ஜி.ஆரையும் கலந்து செய்தது போல இருப்பார் ஃபெர்னாண்டோ போ . பிலிப்பினோ சூப்பர் ஸ்டார். சமீபத்தில் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டங்களின் போது வழக்கமாக நடத்தப்படும் ஒரு பார்ட்டியில் பீர் குடித்துக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு வந்து காலமானார். அவருக்கு வயது 65.

இத்தனை வயதிலும், படங்களில் நடித்துக் கொண்டு நம்மூரின் ஹீரோக்கள் போல ஏழைப்பங்காளன் வேடங்களில் நடித்து நடித்தே லட்சக்கணக்காண ரசிகர்களை பெற்றிருந்தவர். சமீபத்திய தேர்தலில் இப்போதைய அதிபர் எஸ்டராடாவை கிட்டத்தட்ட தோற்கடித்திருக்க வேண்டியவர், மயிரிழையில் வெற்றி வாய்ப்பை தவற விட்டார். " Breakfast, Lunch, Dinner" என்ற கவர்ச்சியான கோஷத்தோடு தேர்தலை அணுகியவர், சரியான செயல் திட்டங்களை அறிவிக்காததால், படித்த வாக்காளர்களாலும், பத்திரிக்கைகளாலும் நிராகரிக்கப்பட்டு மண்ணைக் கவ்வினார். இப்போதைய அதிபர் அர்ரோயாவுக்கு முந்தைய அதிபர் எஸ்டராடாவும் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர் என்றாலும், அதிபராவதற்கு முன் மேயராகவும் செனட்டர் ஆகவும் ஏகப்பட்ட காலம் பணி புரிந்தவர். ஆகவே சினிமா கவர்ச்சியோடு சேர்த்து, கொஞ்சம் மூளையும் இருந்ததால் மக்கள் நம்பினர். ஆனால் போவுக்கு எந்த விதமான அரசியற் பின்புலமும் இல்லை. வெறும் ரசிகர்களையும், சினிமா கவர்ச்சியையும் நம்பியே இத்தனை தூரம் முன்னேறி வந்ததற்கு, அவருடைய தனிப்பட்ட நல்ல குணங்கள், ரசிகர்களோடு நல்ல உறவைப் பேணுவது, ஒற்றை மனைவியோடு மட்டும் இத்தனை காலம் இருப்பது போன்ற பல நல்ல விஷயங்கள் காரணமாக காட்டப்படுகின்றன.

பெரும் ஊழலிலும், ஊதாரித்தனத்திலும் திளைத்த அதிபர் மார்க்கோஸ் காலத்திலிருந்தே பிலிப்பைன்ஸின் தொல்லைகள் அதிகரித்தது என்றுதான் சொல்ல வேண்டும். அப்போது ஆரம்பித்த நெருக்கடியை அடுத்து வந்த எந்த அதிபர்களாலும் சரி செய்ய முடியவில்லை. வருடத்துக்கு ஏறக்குறைய இருபது சூறாவளிகளும், அதன் விளைவான வெள்ளங்களும் தாக்கும் பிலிப்பைன்ஸின் விநோதமான நிலப்பரப்பு, பலிகொள்ளும் உயிர்களும் ஏராளம்.

யார் வந்து சரி செய்வது என்று தெரியாமல், ஊழலிலும் நெருக்கடியிலும் சிக்கி சீரழிவதிலும், பவுடர் மூஞ்சுகளை பார்த்து ஏமாந்து போய் ஓட்டுப் போடுவதிலும் இருக்கும் ஒற்றுமைகள் இந்தியாவையும் பிலிப்பைன்ஸையும் ஏறக்குறைய ஒரே இடத்தில் வைத்திருக்கிறது. " இந்திய, இலங்கை, பிலிப்பினோ பணிப்பெண்கள் தேவையா" என்று சிங்கப்பூர் தமிழ்முரசு பத்திரிக்கையில் அடிக்கடி வாசித்த ஞாபகம் இருக்கிறது.இந்தியாவும், பிலிப்பைஸும் மட்டுமல்ல, ஏறக்குறைய பெரும்பாலான ஆசிய நாடுகளில் அரசியல் மற்றும் கலைத்துறைக்கு இருக்கும் தொடர்புகள் மற்றும் சீரழிவுகள் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டிய சமாசாரம்.

தகவல் உதவி தந்த பிலிப்பினோ நண்பர் டேனியல் பர்னஹாவுக்கு நன்றி.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...