சில விடயங்களை நினைத்துப் பார்க்கவே நடுக்கமாயிருக்கிறது.
என் இளைய சகோதரியின் கணவர் நாகையில் CSI பள்ளியில் பணிபுரிகிறார். அந்தப் பள்ளி கடற்கரையிலிருந்து மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர்கள். சகோதரியின் மகன் மாயவர்த்தில் உள்ள பள்ளியில் +2 படிக்க விரும்பியதால், கடந்த ஒரு வருடமாக சகோதரி மாயூரத்தில்தான் இருக்கிறார். மாமா மட்டும் தினசரி இங்கிருந்து பணிக்கு சென்று வருகிறார். இந்த களேபரம் எல்லாம் நடந்திருக்கும்போது, சகோதரி நாகையில் இருந்திருந்தால் ...., அப்பா...யோசிக்கவே முடியவில்லை
அதிகபட்ச பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மற்றோர் இடத்தில், கார் நிகோபார் தீவுக்கூட்டத்தில் உள்ள கேம்பல் பே - இந்திரா பாயிண்ட் என்னுமிடத்தில் என்னுடைய மூத்த சகோதரி ஐந்தாண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் வசித்து வந்தார். பின் மாமாவுக்கு இந்தியா மாற்றல் கிடைத்து இங்கே இருக்கிறார். எபி செந்தர் என்று அழைக்கப்படும் பூகம்ப மையத்திலிருந்து வெறும் 25 நாட்டிக்கல் மைல் தூரத்தில் இருப்பது இந்திரா பாயிண்ட். எங்கள் வீட்டில் இந்திரா பாயிண்டில் எடுத்த ஃபோட்டோக்கள் எல்லாம் இருக்கின்றன. அந்தமானில் இருந்து வரப்போகும் செய்திகள், இன்னமும் முழுதாக வரவில்லை என நினைக்கிறேன். இழப்பின் வீரியம் ஆகக் கொடியதாக அங்கே இருக்கலாம் எனத் தெரிகிறது. எண்ணூறு கிமி பரப்பளவுக்கு அங்கே எல்லாம் மூழ்கி இருக்கிறதாம். கார் நிகோபார் முற்றிலும் அழிந்ததாக செய்திகள்.
மூன்றாவது சகோதரி வசிப்பது செய்திகளில் அதிகமாக அடிபட்ட சென்னையில். அவருடன் இன்று வரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் தாம்பரம்- சேலையூரில் அவர் பத்திரமாக இருப்பதாக அறிந்தேன்.
இவர்களில் யாருக்காவது, ஏதாவது இதில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், வெறும் செய்திகளை மேய்ந்து மென்று கொண்டு, வக்கணையாக இப்படி எழுதிக் கொண்டிருந்திருக்க மாட்டேன்.
குடும்ப உறுப்பினர்களை, உடைமையை, வாழ்க்கையை இழந்து தவிக்கும் ஜீவன்களுக்கு என் அனுதாபங்களும், அவர்கள் வாழ்க்கை உயிர்க்க என் பிரார்த்தனைகளும்.
No comments:
Post a Comment