Saturday, September 04, 2004

நேரானவர்களுக்கு

இனிய ராஜ்குமார்,

சார்வினையோ, எதிர்வினையோ இல்லை என்ற அறிவிப்போடு நீ எழுதி இருந்தாலும், நேராக, நேர்மையாக, உன் பெயரிலேயே அதை எழுதி இருப்பதால் அந்த விஷயத்தை தொட்டவன் என்ற முறையில் இதற்கு பதில் அளிப்பது என் தார்மீகக் கடமையாகிறது.

சமகால நிகழ்வுகளை குறித்து கவனமில்லாமல் பழைய கதை பேசித் திரியும் வலைப்பூக்கள் கொஞ்சம் கூட இல்லை என்பது நமக்குத் தெரியும். " எதில் பார்த்தாலும் தமிழக அரசியலும், தமிழ் சினிமாவும், தமிழக நடப்புகளை மட்டுமே அயலகத்தமிழர்கள் முழங்கி வருகிறார்கள். அயல்நாட்டைப் பற்றியும் அவர்கள் எழுதினால் எங்களைப் போன்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும்" என்று நீ கூட எழுதி இருந்தாய். ஆனால், பெரியாரின் 125 வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்கள் என்ற செய்தியை மடற்குழுவில் பகிர்ந்து கொண்ட உடனேயே, பெரியாரின் பிராமண எதிர்ப்பு நிலையை காரணம் காட்டி, அதை திசை திருப்பும் நிகழ்ச்சி நடந்தது.

இது மட்டுமல்ல, இதற்கு முன்னர் கூட அவர் இதைப் போலவே முழங்கி வந்திருக்கிறார். யாரும் இதைப் பொருட்படுத்துவது இல்லை என்ற நிலை இருந்தாலும், பதில் சொல்லாமலேயே மெளனம் காத்தால், திரும்பித் திரும்பி சொல்லப்படும் பொய், உண்மையாகி விடக்கூடிய சாத்தியம் இருந்தால் நான் வாய் திறந்தேன். மற்றவர்களை திருப்திப்படுத்துவதற்கும், என் திருப்திக்கும் என்று எனக்கு இரு முகங்கள் இல்லை. எனவே அதை என் பதிவிலேயே என் பெயரிலேயே எழுதினேன்.

"திரும்பத் திரும்ப சமகால நிகழ்வுகளையும், அசிங்கங்களையும் சுட்டிக்காட்டி, உலகத்தில் உள்ள மற்றெல்லாரையும் குற்றம் சாட்டி விட்டு தப்பித்துக்கொள்ள பார்க்காதீர்கள். இன்றைய அவலங்கள், சாதிப்பிரிவினைகள் எல்லாம் ஓரிரவில் முளைத்தெழுந்ததல்ல. ஓராயிரம் ஆண்டுகளாக நம்மை பீடித்திருக்கும் நோய். இத்தகைய மனோபாவங்கள் உருவாகக் காரணம் என்ன..?? யார் உபதேசித்து இது நடந்தது. கல்விமான்கள், ஆசிரியர்கள் என சமூகத்தை வழிநடத்திச்செல்லும் பெரும்பொறுப்பு ஏற்ற இனம் இத்தகைய நம்பிக்கைகளை சமூகத்திலே ஏன் புகுத்தியது என யோசித்துப் பாருங்கள்" என்று கேட்கிறேன். அதற்காக இன்றிருக்கும் அசிங்கங்களை, ஜாதியின் பெயரால நடக்கும் கூத்துக்களை , ஜாதிக் கட்சிகளை நான் ஆதரித்திருக்கிறேன் என்று உன்னால் ஒரு உதாரணம் காட்ட முடியுமா..?? நடக்கின்ற கேவலங்களுக்கு நாமெல்லாரும் கூட்டுப்பொறுப்பு ஏற்கவேண்டும். நான் செய்யவில்லை. நீ செய்யவில்லை என்று ஆள்காட்டி வேலை பார்க்கக் கூடாது என்ற வரலாறை துணைக்கழைத்தேன்.

வரலாறைப் படிக்காத சமூகம், தன் கடந்த கால தவறுகளை மறந்தும், தெரிந்தே அதை மூடி மறைக்கவும் வரும்பும் சமூகம், தன் பாரம்பரியத்தின் பலமும் பலவீனமும் தெரியாத சமூகம், எதிர்காலத்தை நோக்கி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. அதை முதலில் நினைவு கொள். வரலாறு நினைத்துப் பார்க்க தேவை இல்லாத சொகுசான இடத்தில் நாமெல்லாரும் இருக்கிறோம் என்பதற்காக, ஒடுக்கப்பட்டவர்கள் எல்லாரும் இப்போது இன்புற்று வாழ்கிறார்கள் என்று நீ நினைத்தாயானால், நீ மகிழ்ச்சியாக, கவிதை எழுதிக் கொண்டிரு என்று வாழ்த்துவதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை.

பெரியாரின் காலத்தில் இருந்த பிராமண ஆதிக்கம் இன்றும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது என்று நான் எங்கும் சொல்லவில்லை. ஆனால் அதே அளவிற்கு பிராமண எதிர்ப்புப் பிரசாரமும் இன்று குறைந்திருக்கிறது என்பதனையும் ஒப்புக்கொள்கிறாயா..??. அது குறைந்திருப்பதால்தான், வரலாறை திரும்பிப்பார்க்க தேவை இல்லை என்று உன்னைப் போன்றவர்கள் நினைப்பதால்தான், " நாங்கள் ஒன்றும் செய்யவில்லை" என்று அவரவர்கள் கை கழுவி விடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்களுடைய ஆளுமையை ஏற்றுக்கொள்ளாத பிற இன மக்களை எல்லோரும் கேள்வி கேட்போம். ஆனால் அவன், உயர்ந்த சாதி என்ற அடையாளம் கொண்டோரால், இன்னமும் புத்தி ரீதியாக, மன ரீதியாக அவமானப்படுத்தப்படுவதையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்கிறேன்.
அவன் "இடம்" எது என்று அவனுக்கு சொல்லப்படும்போது, அவன் தனக்குக் கீழானவர்கள் என்று சொல்லப்பட்டவர்களிடத்தில் தன் ஆளுமையை செலுத்துகிறான் - இன்னமும் வேகத்தோடு. ஓரிடத்தில் விதைக்கப்பட்ட வினை, மற்றொரு இடத்தில் விருட்சமாகிறது. விதைப்பை நிறுத்துங்கள் என்கிறேன். எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்கிறேன். நம் கேள்விகள் எல்லாத் திசைகளிலும் கேட்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

நீ கேட்க விரும்பாத கேள்விகளுக்காக, உன்னையே நீ திருப்திப்படுத்திக் கொண்டு "எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்" என்ற மாய உலகில் வாழ்வது போல நான் வாழ விரும்பவில்லை. இதனால் எனக்கு வரக்கூடிய தொல்லைகள், கிடைக்கக்கூடிய புது எதிரிகள், இன்னமும் ஜாடைப் பேசித் திரியும் முகமூடிகள் ஆகியவை பற்றி எனக்கு கவலை இல்லை.

நான் எதற்கும் தயார்.


No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...