இஞ்சினியரிங் காலேஜ் போன பின்னும் பாட்டுப் பைத்தியம் போகவில்லை. ஹாஸ்டலில் இரவு நேரங்களில் கச்சேரி வைத்துக் கொண்டு, கல்லூரி கலை விழாக்களில் பாடிக்கொண்டு, இருந்ததில் ஆரம்பித்தது கல்லூரி ம்யூசிக் ட்ரூப்புக்கு கருவிகள் வாங்க அலைவது என்று கொஞ்சம் தீவிரமாகியது. மேடையில் பாடுவது கடலை சாகுபடிக்கும் உபயோகப்பட்டது என்கிற ஒரு கொசுறுப் பயன் கூட .
மூன்றாவது வருடம் படிக்கும்போது, காரைக்குடியில் சுப்ரமணியபுரம் சிவன்கோவிலுக்கு அருகே ஒரு பாட்டு டீச்சர் அகப்பட்டார். அவர் சொன்னதன் பேரில் காலை நாலு மணிக்கெல்லாம் எழுந்து, நீராகாரத்தில் நெய் விட்டுக் கொண்டு சாதகம் பண்ணப் புறப்பட்டதில், என் தாயாருக்கு பயம் வந்து விட்டது. " என்னடா..படிக்கறதுக்கு கூட இத்த்னை சீக்கிரம் எழுந்ததில்லை..இது என்ன..?? " என்று ஆச்சரியப்பட்டவருக்கு, என் கூடவே பாட்டு கற்றுக்கொள்ள வரும் இன்னோரு பெண் மேலும் கோபம் + சந்தேகம் + வருத்தம் வர, அந்த வகுப்பும் "ஊத்தி" மூடப்பட்டது.
அதற்கப்புறம் ஓடுவதற்கே நேரம் சரியாக இருந்ததால், பாட்டு க்ளாஸ் மட்டுமல்ல, பாடுவதே மறந்து விட்டது. காரில் போகும்
போது பாடிக் கொண்டே ஓட்டினால், "CD palyer வேணா போட்டுக் கொள்ளுங்களேன் " என்கிறாள் சூர்யாவின் அம்மா. இத்தனை நாள் கழித்து கிடார் க்ளாஸ் சேர்ந்திருக்கிறேன். மெக்ஸிகன் வாத்தியார். ஏராளமான இளைஞர்கள் என்று கனஜோராக ஆரம்பித்த வகுப்பு, படு கடினமாக இருக்கிறது. வெளிப்பார்வைக்கு மிக எளிதாகத் தெரிந்த வாசிப்பு, அவ்வள்வு இலகு இல்லை . இத்தனைக்கும் கார்ட்ஸ் கூட தாண்டவில்லை. நரம்பை அழுத்திப் பிடித்து கொண்டு strum செய்வதில் விரல் நரம்புகள் வலிக்கின்றன. கைகளில் அழுந்தி கிடார் நரம்புகள் சோதிக்கின்றன. கைகளை ஆர்க் மாதிரி வளைத்துகொண்டு வாசிக்க முடியாமல், எல்லா நரம்புகளிலும் விரல் பட்டு அபஸ்வரம் தட்டுகிறது. வாத்தியார் வேற கோபக்காரர். க்ரூப்பாக கார்ட்ஸ் வாசிக்கும்போது, கொஞ்சம் தவறினாலும் அக்னிப்பார்வை வீசுகிறார். கூட வாசிக்கும் அமெரிக்க இளசுகளோ குளத்தில் போட்ட மீன் குஞ்சுகள் மாதிரி வாசித்துத் தள்ளுகிறார்கள்.
இத்தனை பயத்திலும், சங்கடத்திலும், ஆரம்பப் பள்ளிக்கூடத்துக்கு வழி தவறி வந்துவிட்ட அரைக்கிழம் போல திரு திருவென்று விழித்துக் கொண்டிருக்கிறேன்.
இதெல்லாம் முன்னாடியே முடிச்சுருக்கணும். என்ன பண்ண..??
Life would have been much more better if second thoughts had come first.
No comments:
Post a Comment