Thursday, January 12, 2006

வாழ்த்துகள் மலேசியா ராஜசேகரன்!!!!

இந்த வார அவள் விகடனில் ஒரு பணிப்பெண்ணின் தன்மானப் போராட்டம் என்ற தலைப்பில் மலேசியா ராஜசேகரன் சென்ற பதிவில் குறிப்பிட்ட "டிப்ஸ்" சம்பவம் வந்திருக்கிறது.

வாழ்த்துகள் ராஜசேகரன் ஐயா.

அவள் விகடனில் இருந்து:

சீனாவின் உட்புறங்களில் பெரும்பாலான ஊர்களில் உணவருந்தும் விடுதிகளிலும், கேளிக்கை மையங்களிலும் வேலை செய்யும் பணியாளர்கள் வாடிக்கையாளர்களிடம் ‘டிப்ஸ்’ வாங்க மறுத்துவிடுவார்கள். இதற்கு காரணம் என்னவென்று பல சீன நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில், ‘‘சீனாவின் உட்பகுதிகளில் இன்னமும் சீன பாரம்பரிய இயல்புகள் அப்படியே உள்ளன. செய்யும் வேலைக்கான ஊதியத்தில் நாங்கள் குறியாக இருப்போம். அது அல்லாது, ‘சன்மானம்’ என்று தரப்படுவதை வாங்குவது என்பது எங்கள் கலாசாரத்தில் ஒரு இழிவான செயலாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது!’’ என்றார்கள்.

இதுகுறித்து நான் நேரில் கண்ட சுவாரஸ்யமான ஒரு சம்பவம்... ஒருமுறை, சீனாவில் உள்ள ‘ஹ§னான்’ மாநிலத்தின் தலைநகரமான ‘சங்ஸா’ என்கிற ஊருக்கு போயிருந்தேன். அங்கு நானும் ஒரு நண்பரும் ஒரு உணவகத்தில் உணவருந்தி கொண்டிருந்தோம். அப்போது எங்கள் மேசைக்கு அடுத்து இருந்த மேசையில் நடுத்தர வயதுடைய அமெரிக்க தம்பதி இருவர் இருந்தனர்.
தங்களின் சாப்பாட்டுக்கான பில் செட்டில் செய்யப்பட்டு, மீதியாக வந்த சில்லறையில் இருந்து 30 யுவானை (ஹிஷி$ 3.50) எடுத்து அந்த அமெரிக்கர் தங்களுக்கு உணவு பரிமாறிய சீனப் பணிப்பெண்ணிடம் ‘டிப்ஸாக’ நீட்டினார். அந்தப் பெண் அதை வாங்க மறுத்துவிட்டார். எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் பிடிவாதமாக இருக்கவும், அந்த அமெரிக்கர் தன் புருவங்களையும், கைகளையும் தோள்களையும் ‘சரணடைந் தேன்’ என்கிற பாணியில் உயர்த்திக் காட்டிவிட்டு, அந்தப் பணத்தை எடுத்து தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு கிளம்பினார்.


மனைவியிடம் பேசிக்கொண்டே உணவகத்தின் வாசல் வரை போனவர், திரும்பிப் பார்த்தபோது, அந்தப் பணிப்பெண் கையில் சில தட்டுகளோடு உணவகத்தின் பின்னே இருந்த சமையற்கட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்.
உடனே, அந்த அமெரிக்கர் மிகுந்த களிப்புடன், சிறு பிள்ளை போல் கிடுகிடு என்று ஓடி வந்து, அவர் சாப்பிட்டு முடித்த மேசையின் மீது அந்த 30 யுவானை வைத்துவிட்டு, கிடுகிடு என்று ஓடி மனைவியோடு, வீதியில் சென்ற கூட்டத்தில் கலந்துவிட்டார்.


சமையற்கட்டிலிருந்து வெளிவந்த அந்தப் பணிப்பெண் மேசை மீது இருந்த பணத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டார். பணத்தை சட்டென்று எடுத்துக்கொண்டு உணவகத்தின் வெளியே ஓடினார். இதற்கிடையில் எங்களின் சாப்பாடு முடிந்து நானும், நண்பரும் உணவகத்திலிருந்து கிளம்பி வீதிக்கு வந்துவிட்டோம். எனக்கு இந்த நாடகம் எப்படி முடிகிறது என்று பார்க்க ஆவல் அதிகமாக இருந்ததால், அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து நானும் சென்றேன்.

பணிப்பெண் அந்த அமெரிக்க தம்பதியை தேடியபடி, நான்கைந்து நிமிடங்கள் இங்கும் அங்குமாக அலைந்த பிறகு, உணவகத்தில் இருந்து ஒரு 50 மீட்டர் தூரத்தில், ஒரு குறுக்குச் சாலையில் அவர்கள் ஒரு டாக்ஸியில் ஏறிக் கொண்டிருப்பதை பார்த்து, அவர்களை நோக்கி ஓடினார். பின்தொடர்ந்து சென்ற நான், டாக்ஸி நின்றிருந்த இடத்துக்கு 10 மீட்டர் தூரத்திலேயே என் நடையை நிறுத்திக்கொண்டு, நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். டாக்ஸியை அணுகிய அந்தப் பணிப்பெண் ஓட்டுனரின் கதவைத் தட்டி டாக்ஸியை நிறுத்திவிட்டு, பின்புறம் அமர்ந்திருந்த அமெரிக்க தம்பதி யிடம் ஜன்னல் வழியாக அந்த 30 யுவானை நீட்டியபடி, முதுகையும், தலையையும் குனிந்து குனிந்து சீனத்தில் ஏதேதோ கூறி கெஞ்சினார். விடாது போராடி, அந்த அமெரிக்கரிடம் பணத்தை ஒப்படைத்த பின்னரே, அங்கிருந்து நகர்ந்தார்.

நான் நாற்பது நாடுகளுக்கு போய் வந்த அனுபவம் உள்ளவன். இத்தகைய ‘தன்மான உணர்வை வெளிக்காட்டும்’ ஒரு சம்பவத்துக்கு ஒப்பான சுற்றுப்பயண நிகழ்வை நான் வேறு எங்குமே பார்த்தது கிடையாது. & மலேசியா

ராஜசேகரன்

Thursday, January 05, 2006

இரண்டு முறை காணாமல் போன பதிவு

1. சீன சமூகத்தில் படிப்பு

சீனர் தம் பிள்ளைகளின் படிப்பில் அளவுக்கு அதிகமான நாட்டம் காட்டுவர். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சீனர்கள் வீடு வாசல்களை விற்று தம் பிள்ளைகளை படிக்க வைப்பது என்பது ஒரு மிச சாதாரண நிகழ்வு. இப்போது எல்லா இன மக்களும் தம் பிள்ளைகளின் படிப்பின்பால் அதிகமான நாட்டம் காட்டுகிறார்கள் என்பது உண்மைதான் என்றாலும், சீனர்களிடம் இந்த தாக்கம் எப்போதும் சற்று கூடுதலாகவே இருந்திருப்பதாக தான் நான் நினைக்கிறேன். எனக்கு தெரிய மலேசியாவில் ஒரு 30 - 40 வருடங்களாக மார்க்கட்டில் காய்கறி விற்கும் சீனர் கூட இரவு பகலாக உழைத்து தம் பிள்ளைகளை ஐரோப்பா, அமெரிக்கா என்று அனுப்பி சிறந்த பல்கலைகழகங்களில் நல்ல படிப்புக்களை படிக்க வைத்து விடுவார். இது ஏதோ அத்தி பூத்தார் போல் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் நிகழ்வு என்று நினைக்காதீர்கள். மலேசியா முழுவதும் உள்ள ஒவ்வொரு நகரங்களிலும், சிற்றுர்களிலும் இது ஆயிரக்கனக்கான சீன குடும்பங்களால் செயல் படுத்தப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வு.
சீனர்கள் படிப்பிற்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், எல்லா இனங்களுக்கும் பொருந்தும் பொதுவான காரணங்களை எல்லாம் தாண்டி அவர்களுக்கென்று பிரத்தியேகமான பாரம்பரிய சரித்திர காரணங்கள் சில உள்ளன. அவற்றில் முக்கிய இரண்டை இங்கு விளக்குகிறேன் :-

அ). ( Confuciunism ) கன்பியூசியனிசத்திின் தாக்கம்

சீனர்களின் பாரம்பரியத்தில் ( confucius ) /'கன்பியூசியஸ்'/ என்று அழைக்க படும் தத்தவ ஞானியினுடைய சிந்தனையின் தாக்கம் அளவிற்கறியது. இவர் கி.மு. 551 லிருந்து, கி.மு. 479 வரை சீனாவில் வாழ்ந்த ஒரு மாமேதை. இவர் வாழ்ந்த காலத்தில் சீன நாட்டில் இவருக்கு ஓரளவே வரவேற்பே இருந்தது என்றாலும், இவர் இறப்புக்கு பின்னர் இவரிடம் கல்வி கற்ற 3,000 மாணாக்கர்களில் பலர் முக்கியமான அரச பதவிகளில் அமர்த்தப் பட்டனர், கால போக்கில் இப்படி அரசாங்க நிர்வாகஸ்தர்களான ஆன சிஷ்யபாடிகள் தங்கள் குருவினுடைய போதனைகளை பரவலாக மக்கள் மத்தியில் பரப்ப, /கன்பியூஷியனிஸம்/ எனும் வாழ்க்கை வழிமுறை தத்துவம் சீன நாட்டில் மெது மெதுவாக வேர் ஊன்ற ஆரமிபித்தது.

கன்பியூஷியஸின் சிந்தனைகளில் படிப்பை பற்றினஅடிப்படை கூறு என்ன வென்றால், "கல்வி கற்க உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்கிற பாகுபாடு எல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் கல்வி கற்கலாம். கல்வி கற்பதற்கு வேண்டிய திறமையும் மனிதருக்கு, மனிதர் பெரிதாக வித்தியாசப் படுவதுமில்லை. சிலர் சூழலின் காரணமாக கற்பது யாவற்றையும் சிறிது எழிதாக கற்ப்பர், வேறு சிலர் சிறிது தாமதமாக கற்பர். அவ்வளவே. கல்வியை கொண்டுதான் மனிதனை பாதை தவறி போகாமல் நல் வழிப் படுத்த முடியும். ஆதலால் நாடாளும் அரசனின் பல கடமைகளிலுல், பொது மக்களுக்கு கல்வி புகட்டும் கடமையும் ஒன்று" என்பதுதான்.

காலப் போக்கில் கன்பியூஷியஸின் சிந்தனைகள் சீன மக்கள் மத்தியில் மிக ஆழமாக வேர் ஊன்றவே, கி.மு. 220 ஆம் ஆண்டு வாக்கில் சீனாவில் கன்பியூஷியஸின் காப்பியங்களையும், தத்துவங்களையும், இதர எழுத்துகளையும் மையமாக வைத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரச பாடசாலைகள் நிறுவப் பட்டன. அன்றிலிருந்து தொடர்ந்து 2,000 வருடங்களுக்கு மேலாக இந்த கன்பியூஷியனிஸத்தை மையமாக கொண்ட பாட முறையே சீன நாட்டின் பாடசாலைகளில் அமல்படுத்த பட்டு வந்துள்ளது. இந்த நிலை 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் வேறு பாடத் திட்ட முறைக்கு மாற்ற பட்டுள்ளது.
ஆதலால் 2,000 வருடங்களுக்கு முன்பிருந்தே படிப்பின் ஆழமும், அதன் தன்மையும் மற்ற இனங்களை காட்டிலும் சீனர்களுக்கு மிகப் பரவலாக தெரிந்தும், புரிந்தும் இருந்திருக்கின்றது.

1 ஆ). (Chinese Imperial Examination) சீன அரசு தேர்வு பரிட்சையின் தாக்கம்

சின நாட்டின் சரித்திரத்தில் கி.பி. 600 ஆம் ஆண்டின் வாக்கில் 'சுயி' என்ற அரசன் தான் பல பாகங்களாக சிதறுண்டு கிடந்த சீன நாட்டை ஒன்று சேர்த்தவன். அப்படி ஒன்று சேர்க்க பட்ட நாடு மிக பெரிய, பறந்த பிரதேசமாக இருந்ததால், அதன் நான்கு திசைகளிலும் இருந்த நகரங்களையும், சிற்றுர்களையும், கிராமங்களையும் நிர்வகிக்க அரசனுக்கு திறமையான பல நிர்வாகிகள் தேவை பட்டனர். அதற்கு முன் அரசு நிர்வாகத்தை பார்த்து வந்த அரச குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மீது அரசனுக்கு அதிகமான நம்பிக்கை இல்லாது இருந்ததால், நாடு முழுவதிலும் உள்ள திறமைசாலிகளை அடையாளம் காண வேண்டி 'அரசு தேர்வு பரிட்சை' (imperial examination) என்ற தேர்வு முறையை துவக்கினான். ஆறிலிருந்து, பன்னிரண்டு நிலைகளை உடைய இந்த பரிட்சை முறை எத்தனையோ மன்னர்களும், சாம்ராஜியங்களும் வந்து போயிருந்த சூழ்நிலையிலும் நிறுத்த படாமல் இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரை தொடர்ந்து 1,300 வருடங்கள் அமுலில் இருந்திருக்கின்றது.

இந்த பரிட்சையில் சீன நாட்டில் பிறந்த யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம் என்ற நிலை இருந்திருக்கின்றது. காப்பியங்கள், சீன இலக்கியம், ராணுவ வியூகங்கள், வரி மற்றும் நிதி நிர்வாகம், விவசாயம், பூலோகம், சட்டம், எழுத்து வண்ணம் (calligraphy), ஓவிய கலை என்று பல கலைகளை உள்ளடிக்கிய இந்த பரிட்சை முறையின் கடைசி நிலையில், பரிட்சைக்கு அமர்பவர்கள் தொடர்ந்து 72 மணி நேரம் வரை பரிட்சிக்க பட்டிருப்பதாக சரித்திர ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். பண்டைய சீனாவில் இந்த பரிட்சைகளில் வெற்றி பெற்றவர்கள்தான் நாட்டின் வெவ்வேறு பாகங்களில் அரச நிர்வாகிகளாக அமர்த்த பட்டனர்.

ஏழ்மை நிலையில் பாமர வாழ்க்கை வாழ்ந்து வந்த அன்றைய சீனர்கள், இந்த பரிட்சையை தங்களை ஏழ்மையிலிருந்து மீள வைக்க கூடிய ஒரு ஏணியாகவே நினைத்தனர். ஒரு குடும்பத்தை சார்ந்த ஆண்மகன் ஒருவர் இந்த பரிட்சையில் தேர்ச்சியுற்று அரசாங்க அதிகாரியாக நியமிக்க பட்டால், அவரால் அவரின் குடும்பம் மட்டுமல்லாது, அவர் பிறந்த கிராமமே வளமடைந்துள்ளது. இதனால் 1,400 வருடங்களுக்கு முன்பிருந்தே சீனர்கள் தம் பிள்ளைகளை படிக்க தூண்டும் இயல்பு உடையவர்களாக இருந்திருக்கின்றார்கள். இந்த பரிட்சை முறை பண்டைய சீனாவிலிருந்து ஜப்பான், கொரியா, வியட்னாம் அகிய நாடுகளுக்கும் பறவியுள்ளது. பிறகு சமீபமாக, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பத்திலிருந்து ஆங்கிலேயரும், பிரஞ்சுக்காரர்களும் உலகம் முலுவதும் பரந்து விரிந்து கிடந்த தங்கள் காலனிகளை நிர்வாகம் செய்வதற்கென்று அனுப்பிய நிர்வாகிகளை, சீனர்களின் இந்த பரிட்சை முறையை உதாரணமாக கொண்டுதான் தேர்வு நடத்தி தேர்ந்தெடுத்தனர் என்று சீன ஆராய்ச்சிளார்கள் கூறி வருகின்றனர)்.

2. சீனர்களும் உழைப்பும்

சீனர்கள் மிக மிக கடினமான உழைப்பாளிகள். அவர் பள்ளியில் படிக்கும் மாணாக்கராக இருந்தாலும் சரி, கடையில் வேலை செய்யும் சிப்பந்தியாக இருந்தாலும் சரி, காரியாலயத்தில் பணிபுரியும் நிர்வாகியாக இருந்தாலும் சரி, ஒரு பெரிய ஸ்தாபனத்தை வழிநடத்தும் தொழில் அதிபராக இருந்தாலும் சரி சீனர்கள் பெரும்பாலும் மிக கடின உழைப்பாளிகளாக தான் இருப்பார்கள். கடின உழைப்பு என்பது அவர்களிடமுள்ள மிக மிக அடிப்படையான ஒரு கூறு. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 50 கோடி பல இன மக்களிடமும் சென்று, இங்கு அவர்களோடு வாழுந்து வரும்்் சீனர்களை ஒரே ஒரு வார்த்தையில் சித்தரிக்கும்படி கூறி ஒரு ஆய்வு நடத்தினால், அதற்கு கிடைக்கும் பதில் "உழைப்பாளிகள்" என்பதாக தான் இருக்கும்.

3). தொழில் போட்டியாளர்களாக சீனர்கள்

சீனர்கள் வியாபாரத்தில் பயங்கரமான போட்டியாளர்களாக் இருப்பார்கள். இது சீனாவில் உள்ள சீனர்களுக்கும் பொருந்தும், தென் கிழக்கு ஆசியாவில் உள்ள 'வெளிநாட்டு சீனர்களுக்கும்' பொருந்தும். தொழிலில் போட்டி என்று வந்து விட்டால் அடுத்தவரை நிலைபெற சீனர்கள் விடுவதே கிடையாது். இதற்கு எத்தனையோ உதாரணங்களை உள்ளன, ஆனால் ந்ம யாவருக்கும் பரிச்சயமான சூழலிலிருந்து ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கு கோடி காட்டிவிட்டு செல்கிறேன்.
இந்தியாவிலிருந்து, குறிப்பாக தெற்கு மாநிிலங்களிருந்து ஆயிரக்கணக்கான டன் வெங்காயம் வருடா வருடம் மலேசியாவினுல் எனக்கு தெரிய 40 - 50 வருடங்களாக இறக்குமதி ஆகிகொண்டு இருக்கின்றது. ஆனால் இதை இறக்குமதி செய்பவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள்? ஆம், சீன வியாபாரிகள்தான். இந்த வியாபார்த்தினுல் நுழைய எத்தனையோ மலேசிய இந்திய வணிகர்கள் முயன்றிருக்கின்றனர். அப்படி நுழைய முற்பட்ட எந்த இந்திய வியாபாரியையும் சீனர்கள் நிலை பெற விட்டதில்லை. இந்திய வியாபாரி ஒருவர் வெங்காயத்தை இந்தியாவிலிருந்து தருவிக்க விளைகிறார் என்று தெரிந்த உடனேயே, சீன வியாபாரிகள் இங்கு தங்களின் விலையை சட்டென்று குறைத்து விடுவார்கள். இறக்குமதி செய்ய முற்பட்ட இந்திய வியாபாரியும் எதிர்பார்த்த விலை கிடைக்காமல், வாங்குவதற்கு ஆள் இல்லாமல், கடைசியாக வேறு வழி தெரியாமல்் சீன வியாபாரிகளிடமே தாங்கள் கொண்டு வந்த சரக்கை கை மாற்றிவிட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி விடுவார்்்.

4). சீனர்களும் எண்களும், வர்ணங்களும்

சீனர்கள் அதிர்ஷ்டத்தை அதிகம் நம்புபவர்களும் கூட. சீனர்களுக்கு '8' மிகவும் அதிர்ஸ்டமான எண். அதேபோல் '4' துரதிர்ஷ்டமான எண். இதற்கு காரணம் சீன மொழியில் எட்டு என்ற சொல் தனம், பொருள் எனும் ஒலியை ஒட்டியதாக இருக்கும். அதே சமயம் நான்கு என்ற சொல் மரணம் என்ற ஒலியை ஒட்டியதாக இருக்கும். இதனால்தான் தென் கிழக்கு ஆசியாவின் பெரும்பாலான மாநகரங்களில் பல மாடி கட்டிடங்களில் நான்காவது மாடியை '3A' என்று குறிப்பிடுவார்கள், அதே போல வர்ணங்களில் சீனர்களுக்கு பரவலாக பிடித்த வர்ணம் சிவப்பு. அவர்கள் கலாச்சாரத்தில் சிவப்பு வர்ணம் சந்தோஷம், புகழ், செல்வம் ஆகியவற்றை குறிக்கும்.

5). புது வருட பிறப்பின் போது சீனர்கள் கடைபிடிக்கும் சில சம்பிரதாயங்கள்

சீனர்கள் புது வருட பிறப்பின் முதல் நாள் இரவிலிருந்து மூன்று நாட்களுக்கு வீட்டை பெருக்க மாட்டார்கள். காரணம் வீடுக்கு வந்த அதிர்ஷ்டத்தை நாமே கூட்டி வெளியே தள்ளினால்் போல் ஆகிவிடும் என்று அவர்களுக்கு ஒரு ஐதீகம்.
சீன புத்தாண்டின் முதல் நாள் இரவு சீனர்கள் ஒரு பெரிய குடும்ப விருந்தை சமைத்து, மூதாதையர்களை வணங்கி, அவர்களுக்கு உணவு படைத்து, குடும்பத்தோடு ஒன்றாக உட்கார்ந்து யாவரும் உண்பர். அடுத்த 15 நாட்களுக்கு அனுசரிக்க படும் புத்தாண்டு வைபத்திலேயே, குடும்ப உறுப்பினர் ஒருவர் இந்த விருந்தில் கலந்து கொள்வதுதான் மிக முக்கியமான சம்பிரதாயமாக கருதப் படுகிறது். பொருள் ஈட்டுவதற்கென்றும், படிப்பிற்கென்றும் குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் யார் எந்த திசைக்கு போய் வசித்து வந்தாலும சரி், இந்த விருந்தில் கலந்து கொள்ளும் பொருட்டு சீன புத்தாண்டின் போது அவரகள்் குடும்பத்தோடு நிச்சயமாக தகப்பன் வீட்டிற்கு வந்தாக வேண்டும். இது இன்றளவும் சீனர்கள் போற்றி கடைபிடித்து வரும் சம்பிரதாயங்களில் ஒன்று. நடைமுறையில் இந்த குறிப்பிட்ட சம்பிரதாயத்தின் ் தாக்கம் என்ன வென்றால், புது வருட பிறப்பின் போது வீட்டிற்கு போகும்போது கடந்த வருடம் எப்படி இருந்தது என்று எல்லோரும் கேட்பார்களே, என்ற உத்வேகத்திலேயே சீனர்கள் வருடம் முழுவதும் தம்மை மேம்படுத்தி கொள்ள இன்னும் கூடுதளாக உழைப்பார்கள்.

6). வேலை செய்யும் இடங்களில் சீனர்களை அனுகுவதற்கான டிப்ஸ்

அமெரிக்க, கனேடிய ், ஐரோப்பிய சீனர்களை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆதலால் நான் இங்கு கூறுவது அந்த சூழ்நிலைகளுக்கு பொருந்தாமல் இருக்கலாம். இந்த பாரா மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் இந்தியாவிலிருந்து போய் சீனர்களோடு வேலை செய்யும் இந்தியர்களுக்காக எழுத பட்டது.

- இயல்பிலேயே சீனர்கள் சிறிது arrogantஆன பேர்வழிகள் தான். மற்றவர்களின் உணர்ச்சிகளை பற்றி அவர்கள் அதிகம் கவலை கொள்ள மாட்டார்கள். இது ரூட்டீனான ஒரு உண்மை. இதை பற்றி அவர்களோடு வேலை செய்யும் நாம் கவலை பட்டோ, மனம் வெதும்பியோ ஆக போவது ஒன்றுமில்லை. ஆதலால் சீனர்கள் மெஜாரட்டியாக உள்ள நிர்வனங்களில் வேலை செய்பவர்கள் சிறிது எதார்த்தமாக எதையும் எடுத்து கொள்வது நல்லது.

- சீனர்களோடு வேலை செய்யும் இந்தியர்கள் தங்களின் உடை உடுத்தலில் அக்கறை காட்டுவது மிக மிக முக்கியம். காரணம், மண்டையின் உள்ளே உள்ள மூளை நன்றாக வேலை செய்வது தான் முக்கியம்் என்று நினைப்பது நமது கலாச்சாரம். ஆனால் மூளை எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு மனிதனின் வெளி தோற்றமும் இருக்க வேண்டும் என்று நினைப்பது சீனர்களின் கலாச்சார கூறு. அதனால், ஒரு சராசரி சீனர் நம்மை விட துணிமணிக்கென்று இரண்டு, மூன்று மடங்கு அதிக பணம் செலவு செய்வார். அவரோடு ஒத்த லெவலில் நாம் பழக வேண்டிய நிர்ப்பந்தம் என்று ஒன்று உண்டு என்றால்், அதற்கான முதல் கட்ட தயார் நிலை, நமது உடுப்பை தயார் செய்வது கொள்வது தான்.

- வேலையில் உங்கள் திறமையை பலரும் உணரும் வகையில் காண்பியுங்கள். தேவை பட்டால் internal memo மூலம் நீங்கள் செய்து முடித்த வேலையின் கூறுகளை பட்டியலிடும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். இப்படி நீங்கள் உங்களின் வேலை சம்மந்த பட்ட விஷயங்களை ரெக்கார்டு பண்ணுகிறீர்கள் என்று தெரிந்தாலே, உங்கள் மேல் அனாவசியமான extra work load ஐ தினிக்க பொதுவாக மற்றவர்கள் பயப்படுவார்கள். நான் சீனர்களோடு வேலை செய்த காலத்தில் இந்த அனுகுமுறை எனக்கு மிகவும் உதவியாக இருந்ததது.

- சீனர்களை விட நமக்கு அபாரமாக வாய்த்த வித்தை 'சொல் வித்தை'. நமக்கு உள்ள அளவுக்கு சீனர்களுக்கு மொழி வளம் ஏற்படுவது கிடையாது. இந்த உண்மை சீனர்களுக்கும் மிக நன்றாக தெரியும். ஆதலால் உங்களுக்கு ஆங்கில மொழி வளம் நன்றாக இருந்தால், அவர்களிடம் பழகும்போது அந்த அட்வாண்டேஜை உங்களுக்கு சாதகமாக பல வகையில் பயன் படுத்தி கொள்ளலாம்.


- முற்றும் -

இந்த பதிவோடு நண்பர் சுந்தரராஜனின் வலைபதிவில் என் கட்டுரைகளை பதிப்பதை நிறுத்தி கொள்ள விரும்புகிறேன். இதற்கு மேலும் நண்பரை நான் சிரம படுத்துவது முறையாக பட்வில்லை. இதற்கு பின்னர் நான் எதுவும் எழுத விழைந்தால் எனக்கென்று ஒரு தனி வலைபதிவை துவக்கி, அதில் என் கட்டுரைகளை பதிப்பிடுகிறேன். நன்றி. வணக்கம்.

Monday, January 02, 2006

பொங்கும் பூம்புனல்


சிலோன் ரேடியோ மேட்டர் இல்லை..லோக்கல் நியூஸ் இது.

சென்னையிலும் சிதம்பரத்திலும் டீவி வழியாக பார்த்த வெள்ளம் சாக்ரமண்டோவுக்கும் வரும் என்று நினைத்தேனா..?? கடந்த ஒரு வார காலமாக கனமழை, சுற்றிசுழன்று அடிக்கும் காற்று என்று எங்கள் ஏரியா அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மக்கள் வயிற்றில் பயமூட்டை கட்டிக் கொண்டு மணல் மூட்டை மேல் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். மழையினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பல நெடுஞ்சாலைகள் மண்சரிவுகளால் மூடப்பட்டிருக்கின்றன. சில பகுதிகளில் மின்சாரம் இல்லை. வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் அவசர அவசமாக தண்ணீரை வழித்து கொட்டிவிட்டு, மேக்கப் போட்டுக் கொண்டு மீடியாவுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பல வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட லெவிகள் எல்லாம் காற்றுக்கும் மழைக்கும் முன்னால் எப்படி தள்ளாடுகின்றன என்று நீர்மானகைத் துறை அதிகாரிகள் கவலை படிந்த முகத்துடன் புள்ளிவிவரம் சொல்கிறார்கள். எங்கள் அலுவலகத்துக்கு முன்னே உள்ள ராட்சத மரம் ஒன்று வேரோடு பெயர்ந்து, சாலையில் போய்க் கொண்டிருந்த கார் மேல் விழுந்திருக்கிறது. நல்ல வேளை காரோட்டிக்கு காயம் இல்லை. எல்லாருக்கும் கட்ரீனா ஞாபகம் வந்து தொலைக்க, ஓஃபிஸ் ஓஃப் எமர்ஜென்சி மேனெஜ்மெண்டிலிருந்து கொடுத்திருக்கும் வெள்ள முன்னேற்பாடுகளை பத்திரப்படுத்தி வைக்கிறார்கள். சாக்ரமண்டோவுக்குள்ளே பின்னி ஓடும் அமெரிக்கன் ஆறும், சாக்ரமண்டோ ஆறும் கரைபுரண்டால், நாங்கள் எல்லாம் தரை புரள வேண்டியதுதான். அதிலும் எங்கள் வீட்டீற்கு முப்பது அடி சமீபமாக சாகரமண்டோ ஆற்றிம் வெள்ள நீர் வடிகால் வாய்க்கால் ஓடுகிறது.

வெளியே இவ்வளவு களேபரம் என்றால் என் இல்லத்தில் அதைவிட அதிகம். பள்ளிக்கு செல்லும் பாலகர்கள் எல்லாம் இந்த சீஸனில் அறிவோடு கொஞ்சம் வைரஸையும் விட்டுக்கு எடுத்து வருவார்கள் - மற்ற குழந்தைகளிடம் இருந்து. சூர்யா போன வாரம் எடுத்து வந்த ஃப்ளூ வைரஸ் முதலில் அவனைத் தாக்கி, அவனிலிருந்து வீட்டம்மாவுக்கும் பரவி, இரண்டு பேரும் தும்மலிலும் ஜூரத்திலும் இருமலிலும் கடந்த ஒரு வாரமாக எசப்பாட்டு பாடிக்கொண்டிருக்க, நான் கிலியோடு தனி ரூமுக்கு ஒதுங்கி விட்டேன். காரணம்- டாக்டர் கொடுத்த எச்சரிக்கை - அடுத்த இலக்கு நான் என்று. வீட்டு நிலவரத்தால் வெள்ள நிலவரம் தெரியாது, இன்றுதான் விலாவரியாக படித்து பயந்து போய் உட்கார்ந்திருக்கிறேன்.

சில நேரம் நியூஸ் பார்க்காமல் இருப்பதே நல்லதுதான்.

Wednesday, December 28, 2005

சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா..தானா டோய்



சீனர்களின் சமூக, கலாச்சார கூறுகளும் சம்பிரதாயங்களும்

நான் இதற்கு முன் எழுதிய ' கிழட்டு அநுபவங்கள்' தொடரில் சீனர்களைப் பற்றி இரண்டு பகுதிகள் எழுதியிருந்நேன். அதை படித்த சில வாசகர்கள் சீனர்களை பற்றி மேலும் விவரங்களை அறிந்து கொள்ள விரும்புவதாக பின்னூட்டம் விட்டிருந்தனர். அதன்படி நானும் டிசம்பர் மாதம் ஒரு பதிவை எழுதுகிறேன் என்று கூறி சென்றிருந்தேன். அதை இப்போது நிறைவு செய்ய வந்துள்ளேன். துளசி கோபால, பெத்த ராயுடு, சிகிரி நீங்கள் கேட்டு கொண்டதற்காக இதோ சீனர்களின் இயல்பை குறிக்கும் மற்றோரு பதிவின் இரண்டு பகுதிகளில் முதற் பகுதி .....

1. இனம், மொழி , மதம் ஆகியவற்றின் தாக்கம்

சீனர்களிடம் ஒருமைபாட்டு தன்மை மிகவும் அதிகம். எந்த சூழ்நிலையிலும் - அது விளையாட்டானாலும் சரி, தர்ம காரியங்கள் என்றாலும் சரி, தொழில் சார்ந்த விஷயங்கள் ஆனாலும் சரி, பேரிடர்களின்போது வெளிப்படும் தனி மனித சேவைக் குணங்களானாலும் சரி, தம் சொந்த இனத்தை குறித்த எந்த நிகழ்வென்றாலும் உடனே அரவணைக்க, தோள் கொடுக்க அனைத்து சீனர்களும் ஒன்று திரண்டு விடுவர். மற்ற நாடுகளுக்கும் இனங்களுக்கும் கூட இந்த இயல்பு வெகுவாக பொருந்தும் என்றாலும், சீனர்களிடம் இந்த இயல்பின் தாக்கம் சற்று அதிகம் என்றே நான் நினைக்கிறேன். இதற்கு பல காரணங்கள் உண்டு. அவை அனைத்திற்கும் மூல காரணம் என்ன வென்றால் பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் சீன கலாச்சார, சரித்திர பின்னணியில் மக்களை பிளவு படுத்தகூடிய அடிப்படை அம்சங்கள் மிக மிக குறைவு என்பதுதான். இனத்தால் சீனர்களில் 95 விழுக்காட்டினர் /'ஹான்'/ என்று அழைக்க படும் ஒர இன வம்சாளியைச் சேர்ந்தவர்கள். மொழி என்பதும் அதே போலத்தான். சீன மக்கள் அனைவரும் பேசுவது , எழுதுவது, படிப்பது எல்லாம் /'மாண்டரின்'/ என்கிற ஒரே மொழியில்தான். மதம் என்பதின் தாக்கமும் சீனாவில் அதிகம் கிடையாது. ஜனத்தொகையில் 7 விழுக்காட்டினர் புத்த மதத்தை சார்ந்தவர்களாகவும், 4 விழுக்காட்டினர் கிருஸ்த்துவர்களாகவும், 4 விழுக்காட்டினர் இஸ்லாமியர்களாகவும் இருப்பர். மீதி 85 விழுக்காட்டினர் எந்த மதத்தையும் தழுவாதவர்கள். அதனால் வாழ்க்கை தர வித்தியாசங்களை தவிர சீன மக்களிடம் வேறு எந்த ஏற்ற தாழ்வுகளையும் நடைமுறையில் நீங்கள் பார்க்க முடியாது.

சீனாவில் தென் துருவத்தின் கடைசியில் உள்ள ஒரு ஆண், நாட்டின் வட துருவத்திலோ, மேற்கு துருவத்திலோ, கிழக்கு துருவத்தில உள்ள ஒரு பெண்ணை தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம். அதனால் மொழிப் பிரச்சன, இனப் பிரச்சனை, மத பிரச்சனை என்று எந்த பிரச்சனையும் பொதுவாக வராது இதனால்தானோ என்னவோ சீன தாய்தகப்பனமார் தம் வயதுக்கு வந்த பிள்ளைகளின் காதல்களுக்கு என்றுமே தடையாக நிற்பதில்லை. சீன இனத்தில் 95 விழுக்காட்டு திருமணங்கள் காதல் திருமணங்களாகவே இருக்கும். சீனப் பிள்ளைகள் 16, 17 வயது முதலே ஊரே அறிய காதல் வயபட்டு விடுவர். காதல் என்பது சீன கலாச்சாரத்தில இயல்பான, இலகுவாக ஏற்று கொள்ளப்பட வேண்டிய வாழ்க்கைப் பரினாமங்களில் ஒன்று.

மனிதருள் பிறப்பால் வேறுபாடுகள் கிடையாது என்பதே சீன கலாச்சாரத்தின் அடிப்படை மனிதநேயக் கூறு. இன்றும் சீனருள் ஒரு கடையின் முதலாளியும் தொழிலாளியும் ஒரே மேஜையில், ஒன்றாக உட்கார்ந்து ஒரே பாத்திரத்தில வைக்க பட்டிருக்கும் சாப்பாட்டை பகிர்ந்து உண்பதை மலேசியா, சிங்கப்பூர், வியட்னாம், சீனா போன்ற சீனர்கள் வசிக்கும் அத்தனை நாடுகளிலும் பரவலாக பார்க்கலாம். மலேசியாவில் சில சமயங்களில் சீன வியாபார ஸ்தலங்களில் சீனர் அல்லாத பிற இனத்தவர்கள், பெரும்பாலும் இந்தியர்கள், வேலை ஆட்களாக இருப்பார்கள். சாப்பாட்டு நேரத்தில் பார்த்தால் அந்த இந்திய தொழிலாளிகளும் முதலாளியோடு சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்து, சீனர்களை போல மூங்கில் குச்சிகளைக் கொண்டு சாதம் பரிமாறப் படும் வட்ட கிண்ணத்தை வாயருகில் வைத்து குச்சியை கொண்டு சாதத்தை வாயினுல் தள்ளி, பாரம்பரிய சீனர் பாணியில், முதலாளியும் தொழிலாளியும் ஒரே பாத்திரத்திலிருந்து உணவை எடுத்து உண்பதை மலேசியாவின் அத்தனை சிற்றூர்களிலும் அவ்வப்போது பார்க்கலாம்.

2. தன்மான உணர்வு

அண்டை வீட்டானாகவும், நண்பனாகவும் , சக ஊழியனாகவும, சமீபமாக உறவினனாகவும் சீனர்களோடு ஐம்பது வருடங்களாக சேர்ந்து வாழ்ந்தவன் என்கிற வகையில் ( நான்கு வருடங்களுக்கு முன்பு என் பெரிய தகப்பனார் ஒருவரின் பேரன் தன்னோடு வேலை செய்த ஒரு சீன பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அது ஒரு சுவாரஸ்யமான அநுபவம். ஆரம்பத்தில் "இனம் மாறி திருமணமா?" என்று நாங்கள் குழம்பினாலும், பின்னர் எல்லோருமே ஒருமித்து அமோதித்து, அந்த திருமணத்தை நடத்தி வைத்தோம். ஆனால் அதே நேரத்தில அந்த பையன் ஜாதியத்தில் குறைந்த ஒரு தமிழ்பெண்ணை தான் காதலிப்பதாக வீட்டுக்கு கூட்டி வந்திருந்தால், எங்கள் குடும்ப சூழலில் அவரின் விருப்பம் பரவலாக ஆமோதிக்க பட்டு ஏற்று கொள்ள பட்டிருக்குமா என்று என்னை நானே அடிக்கடி கேட்டு கொள்வது உண்டு .

:-) ...... "என்ன புன்முறுவல் ?" என்று கேட்கிறீர்களா ? .... நம் இனத்தோடு ஒட்டி பிறந்த சாதியம் என்ற சாபத்தை நினைத்து பார்க்கிறேன், ஒரு சிறு வரண்ட விரக்திப் புன்முறுவல் என்னையும் அறியாமல் பூக்கின்றது. சமயம் கிடைக்கும் போது சாதியத்தை பற்றி எனக்கு ஏற்பட்ட அநுபவங்களையும், எண்ணங்களையும் ஒரு கட்டுரையாக எழுதுகிறேன்....இது மேலோட்டமாக எழுதப்பட முடியாத, ஆழமாக யோசித்த பின்னரே எழுதக் கூடிய ஒரு விஷயம் என்பதனால், இந்த கட்டுரையை தாமதித்தே பதிப்பிக்க முடியும் ), சீனர்களை பற்றி எனக்கென்று சில ஆழமான தனிமனித அபிப்பிராயங்கள் உண்டு. இந்த வகையில் சீனர்களிடம் தன்மான குணம் அதிகமாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன். இது ஐம்பது வருட அன்றாட வாழ்க்கை அநுபவத்தை மையமாக கொண்ட ஒரு தனிமனித கருத்து என்றாலும், இந்த கூற்றுக்கு ஆதரவாக ஒரு சில நடைமுறை உதாரணங்களையும் என்னால் காண்பிக்க முடியும்

3. 'டிப்ஸ்' வாங்குதல்

சீனாவின் உட்புறங்களில் குறிப்பாக பெய்ஜிங், சாங்ஹாய், குவாங்ஸ்ஷாவ், ஹாங்காங், சென்ஷன் போன்ற மாநகரங்கள் அல்லாது உட்பகுதியில் உள்ள பெரும்பாலான ஊர்களில் உணவருந்தும் விடுதிகளிலும், பார்களிலும், கேளிக்கை மையங்களிலும் அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் வாடிக்கையாளர்களிடம் /\' டிப்ஸ்\'/ வாங்க இன்றைக்கும் மறுத்து விடுவார்கள். இதற்கு காரணம் என்னவென்று பல சீன நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில் - " பெரிய மாநகரங்களில் வெளிநாட்டு தாக்கம் வந்து விட்டதால், அங்கு உள்ள சீனர்களின் இயல்பு சமீபமாக மேல்நாட்டு பாணியில் மாறியுள்ளது. ஆனால் சீனாவின் உட்பகுதிகளில் இன்னமும் சீன பாரம்பரிய இயல்புகள் அப்படியே உள்ளன. எங்களின் பாரம்பரிய முறைப்படி செய்யும் வேலைக்கு உள்ள ஊதியத்தில் யாவரும் குறியாக இருப்போம். அது அல்லாது, யாராவது \'சன்மானம்\' எனறு கொடுப்பதை வாங்குவது எங்கள் கலாச்சாரத்தில் ஒரு இழிவான செயலாகவே கருதப் பட்டு வந்திருக்கிறது. ஆதலால் \'டிப்ஸ்\' வாங்கும் பழக்கம் இங்கு பொதுவாக பழக்கத்தில் இல்லை. நீங்களும் யாருக்கும் \'டிப்ஸ்\' கொடுக்காதீர்கள். அது அவமரியாதையான செயலாக கருதப் படும்" என்றார்கள்.

இதுகுறித்து நான் என் கண்ணால் நேரில் கண்ட ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை கூறுகிறேன், கேளுங்கள். நான் ஒரு முறை சீனாவில் உள்ள ' ஹுனான்' மாநிலத்தில் தலைநகரமான 'சங்ஸா' என்கிற ஊருக்கு போயிருந்தேன். இது சீனாவின் 12 வது பெரிய நகரம். அங்கு ஒரு நாள் இரவு நானும் அங்கு வசித்து வரும் சத்தியமூர்த்தி என்கிற என் தமிழ் நண்பரும் அவரின் சீன மனைவியும் ஒரு உணவகத்தில் உணவருந்தி கொண்டு இருந்தோம். அப்போது எங்கள் மேசைக்கு அடுத்து உள்ள மேசையில் நடுத்தர வயதுடைய அமெரிக்க தம்பதிகள் இருவர் உணவருந்தி கொண்டிருந்தனர்.

தங்களின் சாப்பாட்டிற்கான பில் செட்டில் செய்யப்பட்டு, மீதியாக வந்த சில்லறையிலிருந்து 30 யுவானை ( US$3.50) எடுத்து அந்த அமெரிக்கர் தங்களுக்கு உணவு பறிமாறின பணிப் பெண்ணிடம் 'டிப்ஸாக' நீட்டினார். அதை எப்போதும்போல அந்த சீன பணிப் பெண் வாங்க மறுத்து விட்டார். அந்த அமெரிக்க தம்பதிகள் எவ்வளவோ வற்புறுத்தியும் அப் பெண் அந்த பணத்தை பிடிவாதமாக வாங்க மறுக்கவே, அமெரிக்கர் தன் புருவங்களையும், கைகளையும் , தோழ்களையும் 'சரணடைந்தேன' என்கிற பாணியில் உயர்த்தி காட்டிவிட்டு, அந்த பணத்தை எடுத்து தன் சட்டை பாக்கெட்டில் வைத்து கொண்டு மனைவியோடு உணவகத்தின் வாசல் வரை சென்றார். பிறகு மனைவியிடம் பேசி கொண்டே திரும்பி பார்க்கும் பொழுது, அப்பணி பெண் கையில் சில தட்டுக்களோடு உணவகத்தின் பின்புறமிருந்த கதவை தள்ளிக் கொண்டு சமையற்கட்டின் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். உடனே அந்த அமெரிக்கர் மிகுந்த களிப்புடன், சிறு பிள்ளைபோல் தன் சட்டை பையில் வைத்த அந்த 30 யுவானை எடுத்து கொண்டு கிடு கிடு என்று ஒடி வந்து அவர் சாப்பிட்டு முடித்த மேசையின் மீது வைத்து விட்டு, கிடு கிடு என்று ஒடி மனைவியோடு வெளியில், வீதியில் சென்ற கூட்டத்தோடு கலந்து விட்டார்.

சமையற்கட்டிலிருந்து வெளிவந்த அந்த பணிப்பெண் மேசை மீது இருந்த பணத்தை பார்த்ததும், பணத்தை சட்டென்று கையில் எடுத்து கொண்டு உணவகத்தின வெளியில் ஒடி வீதிக்கு வந்தார். இதற்கிடையில் எங்களின் சாப்பாடு முடிந்து நானும், சத்தியமூர்த்தியும், அவர் மனைவியும் உணவகத்திலிருந்து கிளம்பி வீதிக்கு வந்து விட்டோம். இது மற்ற இருவருக்கும் அன்றாட நிகழ்வு என்றாலும், எனக்கு இந்த நாடகம் எப்படி முடிகிறது என்று பார்க்க ஆவல் அதிகமாக இருந்ததால் "நீங்கள் இங்கேயே இருங்கள், நான் என்ன நடக்கிறது என்று பார்த்து விட்டு வருகிறேன்" என்று கூறி அப் பெண்ணை நொடர்ந்து நானும் சென்றேன்.

அந்த பணிப்பெண் அந்த அமெரிக்க தம்பதிகளை தேடியபடி ஒரு நான்கைந்து நிமிடங்கள் இங்கும் அங்குமாக அலைந்த பிறகு் உணவகத்திலிருந்து ஒரு 50 மீட்டர் தூரத்தில், ஒரு குறுக்கு சாலையில் அவர்கள் ஒரு டாக்சியில் ஏறிகொண்டிருப்பதை பார்த்து, அவர்களை நோக்கி ஓடினார். பின் தொடர்ந்து சென்ற நான் டாக்சி நின்றிருந்த இடத்திற்கு ஒரு 10 மீட்டர் தூரத்திலேயே என் நடையை நிறுத்திக் கொண்டு, என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்த்தபடி நின்றேன். டாக்ஸியை அணுகிய அப்பெண் ஓட்டுனரின் கதவை தட்டி டாக்சியை நிறுத்திவிட்டு, ஜன்னல் வழியாக பின்புறம் அமர்ந்திருந்த அமெரிக்க தம்பதிகள் முன் அந்த 30 யுவானை நீட்டியபடி, தான் வேண்டி கேட்டு கொள்வதற்கு அடையாளமாக முதுகையும், தலையையும் குனிந்து குனிந்து சீனத்தில் ஏதேதோ கூறி கெஞ்சினார். வேறு வழியில்லாமல் அந்த அமெரிக்கர் அந்த பெண்ணின் கையிலிருந்த பணத்தை திரும்ப பெற்று கொண்ட பின்னரே, அப்பணிப் பெண் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

நான் 40 நாடுகளுக்கு போய் வந்த அநுபவம் உள்ளவன். இந்தகைய "தன்மான உணர்வை வெளிக்காட்டும்" ஒரு சம்பவத்திற்கு ஒப்பான ஒரு சுற்று பயண நிகழ்வை நான் வேறு எங்குமே பார்த்தது கிடையாது.

4. கல்விக் கடனுதவி

மலேசியாவில் அரசாங்கம் மேற்கொள்ளும் சமூக சீரமைப்புகளும், திட்டங்களும் போக பெருவாரியான சமூக சேவைகள் இங்கு அரசாங்க சார்பற்ற இனவாரியான சமூக ஸ்தாபனங்களாலேயே மேற்கொள்ள பட்டு வருகின்றன. அந்த வகையில் குழந்தைகளின் படிபபு மேம்பாட்டிற்கென இங்கு பல ஸ்தாபனங்கள் இயங்குகின்றன. அவறறில் நம் இன மாணாக்கர்களுக்கு என்று \'ராம சுப்பையா எஜுக்கேஷன் பண்டு\' , \'எஸ்டேட் வர்கர்கஸ் ரீஹெபிலிடேஸன் பண்டு\', \'மலேசியன் இந்தியன் டெவலப்மெண்ட் பண்டு\' என்று பல ஃபண்டுகள் உள்ளன. இந்த ஃபண்டுகளின் குறிக்கோள் என்னவென்றால், வசதி குறைந்த இந்திய குழந்தைகள் பல்கலைகழகஙகளில் படித்து பட்டம் பெற ஏதுவாக அவர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி செய்து கொடுப்பது தான். இந்த ஃபண்டுகள் வழியாக எத்தனையோ ஆயிரக்கணக்கான இந்திய மாணாக்கர்கள் பல்கலைகழக பட்டம் பெற்று இன்று வாழ்க்கையில் நல்ல நிலைகளில் உள்ளனர். ஆனால் இவர்களில் பெரும்பாலோர் படிப்பிற்கென்று பெற்ற கடனை திருப்பி கொடுப்பது கிடையாது. வக்கீல் நோட்டீஸ் அனுப்பி, கோர்ட்டுக்கு கொண்டு செல்வேன் என்று பயமுறுத்தி, அடித்து பிடித்து வாங்கினால் ஒழிய இவர்களில் பெரும்பாலோர் பெற்ற கடனை திரும்ப கொடுப்பதை பற்றி நினைத்து பார்க்ககூட பார்ப்பது கிடையாது. அதே போல தான் இந்த நாட்டில் \'பூமிபுத்திராக்கள்\' என்று அழைக்கபடும் மலாய்காரர்களும் - படிப்பிற்கென்று வாங்கிய கடனை திருப்பி கொடுப்பது என்பது அவர்கள் அகராதியிலேயே கிடையாது.

ஆனால் சீனர்களின் நிலைமை வேறு. இந்திய ஸ்தாபனங்கள் கொடுப்பதை காட்டிலும், சீன ஸ்தாபனங்கள் படிப்பிற்காக ஆணடுதோரும் வழங்கும் கடன் உதவிகள் பற்பல மடங்குகள் பெரிதாக இருக்கும். நம்மை காட்டிலும் கூடுதலான எண்ணிக்கையில்தான் அவர்கள் தம் இன பிள்ளைகளுக்கு கடன் உதவி வழங்குவார்கள். ஆனால் அப்படி கடன் வாங்கி பட்டம் படித்து முடித்த அத்தனை சீன குழந்தைகளும், வேலை செய்ய ஆரம்பித்த உடனேயே கடனை திருப்பி கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். சீன ஸதாபனங்கள் வெளியிடும் கணக்குபடி இப்படி குறித்த நேரத்தில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கும் சீன மாணாக்கர்களின் விகிதாச்சாரம் 95 விழுக்காடு. நம் இந்திய ஸ்தாபனங்களில் வக்கில் நோட்டீஸ் அனுப்பி, அடித்து, பிடித்து திரும்ப பெரும் கடன்களின் விகிதாச்சாரம் 15 லிருந்து 20 விழுக்காடே. மீதிப் பேர் என்ன செய்தாலும் கல்வி கடனை திருப்பி கொடுப்பது கிடையாது.

இதனால் நடைமுறையில் என்ன ஆகிவிடுகின்றது என்றால், நம் இனத்தில் குருவி சேர்ப்பதுபோல் சேர்க்கப் பட்டு ஏற்படுத்தபடும் கல்விக் கடனுதவி பண்டுகள், கால ஓட்டத்தில் பண பற்றாக்குறையின் காரணமாக முற்றாக நிறுத்த பட வேண்டிய நிர்பந்தத்திற்கோ, சுருக்கபட வேண்டிய சூழ்நிலைக்கோ தள்ளப் பட்டு விடுகின்றன. ஆனால் சீனர்கள் ஏற்படுத்தும் சமூக சீர் அமைப்பு / கடன் உதவி பண்டுகள் வருடா வருடம் திரும்ப வசூலிக்கபடும் பணத்தோடு, கடனுதவி பெற்ற பழைய மாணாக்கர்கள் அவ்வப்போது வளங்கும் நன்கொடைகளையும் சேர்த்து செழித்து ஓங்கி வளர்கின்றன.

இது ஒரு சிறு உதாரணம்தான். ஆனால் இதன் மூலம் நமக்கு தெரிய வரும் உண்மை என்னவென்றால் மலேசிய இந்தியர்களையும், மலாய்காரர்களையும் விட, மலேசிய சீன சமூகத்திடம் தன்மான உணர்வு அதிகம் என்பது தான்.

தொடரும்

மலேசியா ராஜசேகரன்

தொடர்பான சுட்டிகள்:

ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து

Tuesday, December 27, 2005

என்ன விலை அழகே..??


எப்போ ஹோட்டல் போனாலும் பக்கத்தில் சாப்பிடறவன் என்னமோ சூப்பரா சாப்பிடறான்னு தோணுமா உங்களுக்கு..??

வாழ்க்கையை உயிர்ப்போட வச்சிருக்கறதே இந்த மாதிரியான விஷயங்கள்தான்னு தோணினாலும், பக்கத்தில் இருக்கறவன் சாப்பாட்டை பாத்துட்டு தான் பட்டினியாவே இருந்துட்டா கஷ்டம்தான். அப்பதான் பிரச்சினையே ஆரம்பம்.

விஷயத்துக்கு வர்றேன். ஊடகங்கள் கட்டி எழுப்பும் உருவம் பற்றிய பிரக்ஞை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. புகைப்படம் எல்லாம் பார்க்கும்போது பிரமிப்பாக இருப்பதும், அதைப் போல உருவத்தை மாற்றுவதற்காக இளசுகள் வீட்டிலுள்ளவர்களின் பாக்கெட்டுகளை காலி செய்வதும், அந்தப் பணத்தினால் பூதாகரமாக வீங்கிக் கொண்டிருக்கும் அழகு சாதனப் பொருட்களின் மார்க்கெட்டும், அடேயப்பா....நியூக்ளியர் செயின் ரீயாக்ஷனை விட தொடர் கொடுமை.

இந்தப் படத்துல, அழகா இருக்கக்கூடிய பொண்ணை "மீடியா" அழகாக மாற்ற செய்திருக்கும் டெக்னோ ஜிகிடிகளை படம் படமாக , பாகம் பாகமாக காட்டி இருக்கிறார்கள். படா தமாசா கீது.. ஒரு முறை நீங்களும்தான் அந்தக் கண்றாவிய கண்ணால பாருங்க.

இதுக்கே இப்படின்னா, நம்ம நடிகைகள் மேக்கப் போடறதை படிப் படியா ஃளாஷ் ப்ளேயர்ல காமிச்சா என்னா ஆகுமோன்னு பயம்மா இருக்கு.
சேத்து வச்சிருக்கிற கலர் படம் எல்லாத்தயும் டெலிட் பண்ணிடுவேன்னு நினைக்கிறேன்.

நன்றி : ஜில்லி அண்ணா

ஈதென்ன பேருறக்கம்..??

வருடா வருடம் ஏற்படக்கூடியதுதான். ஆனால் இந்த வருடம் சொல்லி வைத்தது மாதிரி பெருவாரியான வலைப்பதிவர்கள் மெளனமாக இருக்கிறார்கள்.
இந்த அலுப்பிலும் தொடர்ந்து எழுதுபவர்களைப் பார்த்தால் சந்தோஷமாக இருக்கிறது - எழுத்துக்கு பின்னிருக்கும் நோக்கம் அத்தனை சிலாக்கியமாக இல்லை என்றாலும். எப்படியாவது ஏதாவது எழுதிக்கொண்டிருந்தால் சரிதான்.
இந்த நவசாமியார்களுக்கும், அவர்கள்து அக்மார்க் ஆன்மிகத்துக்கும் யாராவது சிஷ்யகோடிகள் இருக்கத்தானே வேண்டி இருக்கிறது.

பணியிடத்தில், நான் வேலைபார்த்துக் கொண்டிருக்கும் குழு பிரிந்து வெவ்வேறு திசைகளில் பயணித்துக் கொண்டிருக்கிறது. காரணம், நாங்கள் சப்போர்ட் செய்து கொண்டிருக்கும் அப்ளிகேஷனின் ஆயுட்காலம் முடிவடைய இன்னமும் ஓராண்டே. அதை ஜாவாவுக்கு கடத்தும் வேலைகள் ஏற்கனவே ஆரம்பித்து விட்டதால், நானும் ஜாவா அப்ளிகேஷன் சர்வர் குழுவுக்கு என்னைக் கடத்தி விட்டேன். பயனாக - நிறைய வேலைகள் - படிக்க வேண்டிய, செய்ய வேண்டிய, பயில வேண்டிய எல்லாமுமாக.

அவ்வப்போது வந்து படித்துக் கொண்டிருக்கிறேன் என்றாலும், உடம்பு வணங்கி எழுதுவது என்பது குதிரைக் கொம்பாகி விட்டது. நான் அகஸ்மாத்தாக பின்னூட்டம் கொடுத்த ஒன்றிரண்டு கூட சில நண்பர்களின் காதுகளில் தேனாக விழுந்து, மாங்கு மாங்கென்று பதிலியிருந்தார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. அவரவர்க்கு அதது. ஆனால் தனக்கு ஒப்புமை இருக்கின்ற கருத்தையோ வாதத்தையோ யாராவது வைத்தால், தொடர்ந்து பாராட்டுதலை சொல்லத்தான் வேண்டி இருக்கிறது.

மந்தமான பருவநிலை, மழை நச நசக்கும் சாலைகள், டவுன்லோடு செய்து பார்க்கும் திராபை தமிழ் சினிமா க்ளிப்பிங்குள், (உள்ளே/வெளியே போடும்) ஹீட்டரால் எழும் கண்ணெரிச்சல், தலைலவலி இத்யாதி இத்யாதி, என்று ஒரே சோகராகம்தான். இதற்கு நடுவே மலேசிய பெரிசு ராஜசேகரன் சீனர்களைப் பற்றி எழுதி ஒரு கட்டுரை அனுப்பி இருக்கிறார். அதை அறிவிக்கவாவது ஒரு பதிவு போட வேண்டும் என்று நினைத்து, ஒரு வழியாக....

ஹி..ஹி..

நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Tuesday, December 13, 2005

காப்பி க்ளப்

நாராயணன் பதிவின் பாதிப்பில் புதுப்பேட்டை பாடல்களைக் கேட்டேன். ஒன்றும் ஒட்டுகிற மாதிரி தெரியவில்லை. ஒருவேளை காட்சிகளுடன் கலந்து பார்த்தால் பிடிபடுமோ என்னவோ..முக்கியமாக செல்வாவின் படங்களில் பாட்டு எப்போது வருகிறது என்பதே தெரியாத அளவுக்கு காட்சிகளும் பாட்டும் அம்சமாக கலந்து வரும். ஆகவே படத்துக்கும், கிருஷ்ணவேணிக்கும் ஆவலோடு வெயிட்டிங். (அமெரிக்காவில் இணையத்திலிருந்து இறக்கிப் பார்க்கிறவராக இருந்தால், wisetamil.net அல்லது tamiltricks.com முயற்சித்துப் பார்க்கவும்.)

சுத்திச் சுத்தி ஏழு ஸ்வரம்தான். என்ன பல்டி அடிச்சாலும் அதுக்குள்ளதான் என்று மதிப்புக்குரிய மொட்டை சொல்லும்போது, பின்ன இவர் ஏன் இன்னமும் புதுசா பாட்டு போடறேன்னு சொல்றாருன்னு நினைக்கத் தோணும். ஆனா, கலர் கலரா புது இசைஞர்கள் உள்ளே புகுந்திருக்கும் இந்த நேரத்தில்
அது பல பாடல்களில் தெளிவாக தெரிகிறது. லலிதா ராம் மாதிரி கர்நாடக சங்கீத ஸ்பெஷலிஸ்டுகள் இன்னமும் நிறைய கண்டுபிடிக்கலாம். என் சமீபகால ஃபேவரைட் பாடல்களில் பழைய சாயல் அடிக்கும் பாடல்கள் இவை.


ஒரு பொற்காலம் தொடங்கும்(கஸ்தூரிமான்) - என்னைத் தாலாட்ட வருவாளா (காதலுக்கு மரியாதை)

தொட்டுத் தொட்டு என்னை ( காதல்) - என்னவளே அடி என்னவளே ( காதலன்)

பம்பரக் கண்ணாலே பச்சக் குத்த வந்தாளே (பம்பரக் கண்ணாலே) - அடி என்னாடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சு குலுங்குதடி (பட்டிக்காடா பட்டணமா..)

ரா..ரா ( சந்திரமுகி) - வான் போலே வண்ணம் கொண்டு ( சலங்கை ஒலி)

பனித்துளி பனித்துளி ( கண்டநாள் முதல்) - ராப்போது ஆனது. ராத்தூக்கம் போனது ( படம்- ???? )

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...