Friday, November 12, 2004

என்னமோ நடக்குது

ஆச்சரியமாகத்தான் இருக்கிறது நடந்திருக்கும் கைது சம்பவம். அதே சமயத்தில் எந்த அளவுக்கு இது போகப்போகிறது...என்பதும் புரியவில்லை. ஹிந்து மதம் என்றால் அது சங்கரமடம் என்று நினைப்பவர்களின் நம்பிக்கையில் பெரிய அடி விழுந்திருக்கிறது. அது ஒருவகையில் நல்லதுதான். ஹிந்து மதத்திற்கும், கடவுள்களுக்கும், சுலோகங்களுக்கும், ஆசார அனுஷ்டானங்களை பேணுவதற்கும் நாங்கள்தான் அத்தாரிடி என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள்தான் ஜெயேந்திரரை போற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களைத்தான் "அவா" என்கிற பொதுபெயரில் அருண் சொன்ன வலைப்பதிவர் அழைத்திருக்கிறார் என நினைக்கிறேன். மற்றபடி,
வகுப்பு வித்தியாசம் இல்லாமல், யோசிக்கத் தெரிந்த எல்லாருமே காலம் காலமாக ஜெயேந்திரரின் நடவடிக்கைக்களை கண்டித்தே வந்திருக்கிறோம்.
திருவாளர் சோ கொடுத்திருக்கும் பேட்டியைப் பார்த்தால் சாமியாரை இந்த வழக்கில் கோர்க்க வலுவான சாட்சியங்கள் கிடைத்த பிறகே அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது என நினைக்கிறேன்.

ஹிந்து மதத்தை சாமியார்களின் பிடியிலிருந்தும், மடங்களின் பிடியிலிருந்தும் விடுவிக்க காலமும் நேரமும் கூடி வந்திருப்பது போல தோன்றுகிறது. இறை வழிபாட்டின் உண்மையான அர்த்தத்தையும், நாத்திகவாதிகளின் விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் விதமாக கடவுள் முன் அனைவரும் சமம் என்கிற கருத்தை அழுத்திச் சொல்லவும் இம்மாதிரியான நடவடிக்கைகள் உதவுமானால், குரல் உயர்த்தி உயிர் விட்ட அந்த ஏழை பிராமணனுக்கும், ஜெயலலிதாவுக்கும் நன்றிகள்.

என்ன நியாயம் கிடைக்கப் போகிறது சங்கரராமனுக்கு என்று பார்ப்போம்.

Thursday, November 11, 2004

சென்னையில் அபார்ட்மெண்ட் தேவை

சென்னை அமிஞ்சிக்கரை/அண்ணாநகர் பகுதியில், மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு Single Bedroom Apartment தேவை. சிஸ்கோவில் பணிபுரியும் என் நண்பன் பணி விஷயமாக சென்னை வருகிறான். தனது குடும்பத்துடன் அங்கே தங்க உத்தேசித்துள்ளான். திசம்பர் முதல் தேதியிலிருந்து கிடைத்தால் வசதியாக இருக்கும். வேறு வழிகளிலும் முயற்சி செய்யப் போகிறேன்.இருந்தாலும் இங்கே போட்டு வைக்கலாம் என்றொரு எண்ணம். அபார்ட்மெண்ட் மட்டுமல்ல, அதை ஏற்பாடு செய்துதரும் ஏஜென்ஸிகள்/ புரோக்கர்கள் இருந்தாலும், உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

Wednesday, November 10, 2004

சூட் போட்ட நரகாசுரன்

நேத்து நவன் பகவதியோட வலைப்பூவில் Sorry சொல்லும் நூற்றுக்கணக்கான ஃபோட்டோக்களை பார்த்ததும், எனக்கு எலெக்ஷன் ரிசல்டைப் பற்றி ல்ண்டன் டெய்லி மிர்ரர் போட்ட கவர் தான் நினைவுக்கு வந்தது. அது கீழே :

C:\Documents and Settings\spasupat\My Documents\My Pictures\daily_miiror

விஷயம் அதோடு முடியவில்லை. இன்று காலை NPR சானலில் கேட்ட பல தகவல்கள் அண்ணனின் பிரதாபங்கள் இன்னமும் எத்தனை தூரம் போகப் போகிறது என்பதை புட்டுப்புட்டு வைத்துக் கொண்டிருந்தன. தன்னை Conservative என்று பகிரங்கமாக சொல்லிக்கொண்ட, அவர்கள் எடுக்கும் நிலைகளுக்காக பாடுபடுகிற ஒரு அதிபர் இரண்டாம் முறை பலத்த செல்வாக்கோடு தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால், என்னென்ன செய்யப்போகிறார் என்று பழுத்த கன்சர்வேட்டிவ் ஒருவர் விவரித்துக் கொண்டிருந்தார். வயிற்றுக்குள் ஆட்டோ ஓடியது.

பிறகு பொருளாதார வல்லுநர் ஒருவரிடம் அமெரிக்காவின் வரலாறு காணாத 425 பிலியன் டாலர்கள் பற்றாக்குறை பற்றிக் கேட்கப்பட்டது. மேலும் பேபிபூமர்களின்( Baby Boomers) முதல் அலை ஓய்வுபெறும் போது, பற்றாக்குறை ஆகக்கூடிய ஃபெடரல் அரசாங்கத்தின் கையிருப்பும் சேர்ந்து கொண்டால் என்ன ஆகும்..?? அத்தோடு புஷ் அரசாங்கம் கொடுக்கும் வரி விலக்கும் கஜானாவை காலி செய்து விடுமே எனக் கேட்க, அவர், " ஆமாம்..நிலைமை கவலை அளிப்பதென்னவோ உண்மைதான். ஆனால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, புதிதாக போர் ஏதும் வராதவரை பிரசினை வெளித் தெரியாது. ஆனால் இருக்கிற பற்றாக்குறை தீரவே பல வருடங்களாகி விடும். social security benefits இப்போது கிடைப்பதைக் காட்டிலும் இன்னமும் குறைந்து விடும், அப்படியும் பிரச்சினை சமாளிக்க முடியாமல் போனால், வெளியிலிருந்து ஏகத்துக்கு கடன் வாங்க வேண்டி இருக்கும். அல்லது வட்டி விகிதத்தை எக்கச்சக்கத்துக்கு ஏற்ற வேண்டி இருக்கும். பொருளாதார வல்லரசு என்று பெயர் பெற்றிருந்த அமெரிக்கா, அதிக கடன் வாங்கி, விரலுக்கு மீறி வீங்கி விட்ட நாடாக உலகத்தின் முன் தலைகுனிந்து நிற்க வேண்டும்" என்றார். அமெரிக்காவை Bankrupt ஆக்குவதுதான் லட்சியும் என்று முழங்கிக் கொண்டிருக்கிற லேடன் மனதில் வந்து போனார்.

எல்லா தீபாவளியும் நரகாசுரன் வதத்துக்காகத் தான் கொண்டாடுவாங்க. ஆனா, இந்த தீபாவளி மட்டும் இந்த நவீன நரகாசுரனுக்கு கையில பதவிங்கிற தீவட்டி கொடுத்துட்டு, அதை அவன் எங்க வைப்பானோ...எதைக் கொளுத்துவானோ ன்னு புலம்பற மாதிரி ஆயிட்டுது.

நீங்களாச்சும் தீபாவளியை சந்தோஷமா கொண்டாடுங்க. எங்க சின்னா சித்தப்பா போன வருஷம் தவறிப் போனதால எனக்கு தீபாவளி கிடையாது.




வாங்க பாய்...

Toastmaster, எம்.ஜி.ஆர், கஸல், இந்திப்படங்கள், கானா, அமீரகவாழ்க்கை, "தினம் ஒரு கவிதை" கவிதைகள், மார்க்க சிந்தனை, திர்லக்கண்ணி, யாத்கார் பாயா, மரத்தடி, ராயர் காப்பி க்ளப், OTIS போன்றதொரு ரகளையான கலவைக்கு சொந்தக்காரர் அபுல் கலாம் ஆசாத். ரா.கா.கி யில் என்னுடைய அந்த நாள் சகா. மடலாடற்குழுக்களையும், கவிதைகளையும் தொடர்ந்து வாசிப்போருக்கு அறிமுகமான பெயர். வயதில் அனுபவத்தில் பெரியவர்களிடத்தில் அவர் காட்டும் மரியாதையை தூரத்திலிருந்து பார்ப்பவருக்கு "அது பசப்பலோ..? " என்ற் சந்தேகம் கூட சில சமயங்களில் வரும். ஆனால் கொஞ்ச நாள் பாய் சாஹேபை தொடர்ந்து கவனிப்பவர்க்கு அது அப்படி தெரியாது. பாய் எழுதிய கானாக்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. வாத்தியார் சுஜாதாவால் சிலாகிக்கப்பட்ட கானாக்களுக்கும், வெண்பாவுக்கும் சொந்தக்காரர். எழுத்துகளில் தெரியும் மனித நேயத்துக்காகவும், பழசை மறக்காத பண்புக்காகவும், இந்தியனாக தன்னை உணரும் முஸ்லிமாக இருப்பதாலும். நாப்பது வயசு என்பதெ பிரதிபலிக்காத துள்ளல் எழுத்துக்காகவும் ஆசாத் பாயை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

இந்த நதியும் இங்கே வந்து கலந்து இருக்கிறது இப்போது.

வாங்க பாய்..வணக்கம்...


Tuesday, November 09, 2004

ஸ்பெஷல்

deepa18

கன்னம் மட்டுமல்ல, எல்லாமே குண்டு குண்டா இருக்கும் அந்தப் பெண்ணுக்கு. கீச்சுக் குரலில் பேசுவாள். நடந்து போவதே உருண்டு உருண்டு போவது மாதிரிதான் இருக்கும். வயசுக்கு ஏத்த மாதிரியும், அதுக்கு மெலும் வாளிப்பா இருந்தாலும், மூஞ்சு மட்டும் குழந்தை மாதிரி இருக்கும். நான் காலேஜில் கடைசி வருஷம் படிக்கும்போது, முதல் வருஷ மாணவியா வந்து சேந்தா. மெட்ராஸ் பொண்ணு.

காலெஜில படிக்கும்போது இந்த மெட்ராஸ்கார பசங்க பண்ற அழும்பு தாங்க முடியாது. எல்லாரும் தயங்கி தயங்கி, பொண்ணுக கிட்ட பேச ட்ரை பண்ணும்போது, இவனுங்க சர்வ சாதாரணமா போய் கடலை போட்டுட்டு வருவானுக. கேட்டா இதெல்லாம் பெரிய விஷயமாங்கிற மாதிரி அல்ப ஜந்துவை பாக்கிற மாதிரி பார்ப்பானுங்க. ஊருக்கு போவும்போது பஸ்/ட்ரெயின்ல சேந்து புக் பண்றதென்ன...வீக் எண்டுல சேந்து ட்ரீட் போறதென்னனு ஒரே அலம்பல்தான்...

நாலாவது வருஷம ஏதோ எக்ஸாம் எழுதறதுக்கு நான் மெட்ராஸ் போக வேண்டி இருந்தது. பாத்தா நம்ம பொண்ணும் பஸ்ல, ரெண்டு சீட்டு முன்னாடி அவ ஃப்ரெண்ட்ஸோட வந்திருக்கிறா. பேர்தான் ஃபைனல் இயர் பையனே ஒழிய, மனசுக்குள்ள இன்னமும் பால் ஐஸ் பொடியந்தான் நான். யார் வந்தா நமக்கென்னன்னு, நானும் என் ஃப்ரெண்டும், எங்க சீட்லேயே சமத்தா உக்காந்து அவங்களை சைட் அடிச்சுகிட்டு இருந்தோம். வண்டி கிளம்பி கொஞ்ச நேரம் ஆயிருக்கும். ரெண்டு பொண்ணுகளும் எழுந்து எங்க சீட்கிட்ட வந்தாங்க. எனக்கு எல்லா ஹார்மோன் சுரப்பியும் ஓவர்டைம் பண்ண ஆரம்பிச்சிட்டுது. தயங்கி தயங்கி " ஹலோ...எங்க சீட்டுக்கு பின்னாடி உட்கார்ந்திருக்க யாரோ ரெண்டு பேரு, சீட் இடைவெளி வழியா கையை நுழைச்சி கன்னா பின்னான்னு நடந்துகிறாங்க...அதனால நம்ம சீட்டை swap பண்ணிக்கிலாமா " ன்னு சாட்டிலைட் டீவி தமிழ்ல கேட்டாங்க.

மூக்கன் என்ன பண்ணியிருப்பான்..." ஆஹா..கவலையே படாதே. உன் ஃப்ரெண்டை இங்க அனுப்பு..நான் அங்க வந்து உக்காந்துகிறேன். அப்ப அவன் என்ன பண்றான்னு பார்ப்போம்" அப்படின்னு எல்லாருக்கும் பிடிச்ச ஒரு சொல்யூஷன் கொடுத்திருப்பான். ஆனா, அந்த நாள் வீணாப்போன சுந்தர்ராஜன் என்ன பண்ணான்...?? சத்தமே போடாம எழுந்து, தன் ஃப்ரெண்டையும் கூட்டிகிட்டு, அந்த பெண்கள் உட்கார்ந்திருக்கிற இடத்துக்கு போயிட்டு, அவங்களை தன் சீட்டுக்கு அனுப்பி, ஒரு நா ராத்திரி முழுக்க குஜாலா கடலை போடற அற்புதமான வாய்ப்பை இழந்துட்டான்.
அதுக்கு அப்புறம் தீபாவளி வரும்போதெல்லாம், மேற்படி சம்பவத்தை நினைச்சு நினைச்சு அவன் மனசெல்லாம் வலி.

அந்த பொண்ணு பேரு தீபா.. ( ஹி..ஹீ..இதுதான் நம்ம தீபாவளி ஸ்பெஷல்.படம் சினிமா தீபா )

Monday, November 08, 2004

வாசகன் படுத்தும் பாடு

காலையில் இருந்து படித்துக் கொண்டே இருக்கிறேன். ஆபிசிலும் வெட்டி முறிக்கிறார் போல வேலை ஒன்றுமில்லை. மடலாடற்குழுக்களில் இருந்து, கவனிக்க மறந்த நல்ல பதிவுகள் வரை, ஒரே படிப்புதான். ராயர் காப்பி க்ளப் களைகட்டி இருக்கிறது. கொலட்கரின் கவிதைகளை மொழிபெயர்த்து இரா.மு வரிசையாக இட்டுக் கொண்டு இருக்கிறார். தியோ வான்காவை பற்றி ஒரு திரி கிளம்பி வழகமான பாட்டையில் ஓடிக் கொண்டிருக்கிறது. பொடிச்சியின் பதிவை முழுக்க படித்து முடித்தேன். அம்மணிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அந்த வலைப்பதிவிலும் சரக்குக்கு குறைச்சலில்லை. தொடர்ந்து படிக்கலாமெண்டு ...ஸாரி..படிக்கலாமென்று ஒரு உத்தேசம். ரா.சுப்புலட்சுமி முக்காட்டை விலக்கிய நேரத்தில் இந்த வீரலச்சுமி.....!! பாரா அடித்த கமெண்டில் இருந்த /- குறியை பதிவெங்கும் தேடிப்பார்த்தேன். அது, அந்தக் கமெண்டுக்கு பிறகு அழிக்கப்பட்டிருந்தால், அது அவரோ...? :-). இருக்கலாம். யார் கண்டது...!!

மக்கள் இப்படி தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும்போது, நாமளும் என்னத்தையாவது எழுதணும் என்று தோன்றவே இல்லை. உள்ளுக்குள் இருக்கும் வாசகன் " பொத்திக்கிட்டு பேசாம படி முதல்ல " என்கிறான். சுத்திச் சுத்தி எழுதனதையே திரும்ப திரும்ப என்னத்தை எழுத...

தளும்பினா ஏதும் எழுத வாய்ப்பிருக்கிறது. இல்லாவிட்டால், பின்னூட்டங்களில் சந்திப்போம்.

Friday, November 05, 2004

craiglist.org

தலைப்பில் உள்ள தளம் உங்களுக்குத் தெரிந்தால், இங்கே நேரத்தை வீணாக்காதீர்கள். இது உங்களுக்கல்ல....

இணையத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற classifieds தளம் இது. சான்ஃப்ரான்சிஸ்கோவில் வசிக்கும் க்ரெய்க் என்கிற ஒரு டெக்னோ ஆசாமியின் தளம். அமெரிக்க டெக்னிக்கல் ஆசாமிகளில் ரெண்டு வகை...!! ரெண்டே வகை. விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள நோட்பேட் உபயோகிக்கக்கூட தெரியாமல், இந்திய/சீன மென்பொருளாளர்களை மேய்த்துக் கொண்டு, மீட்டிங் போய் வந்து, வெகேஷன்களில் நடுவே ஆபீசுக்கு வருபவர்கள் ஒரு வகை என்றால், இரண்டாவது பஸ் மண்டை வகை. பயங்கர சீரியஸ் ஆசாமிகள் இவர்கள். தனக்குப் பிடித்த சப்ஜெக்ட் இதுதான் என இனம் கண்டுகொண்டு, அதன்மேல் சரியான வெறியோடு அலைபவர்கள்.
அதைத் தவிர வேறு ஏதும் அவர்களுக்குத் தெரியாது. நமது இந்திய ஆசாமிகளோ, பலபட்டறைகள். இன்னது என்றில்லாமல், நாய் வாயை வைத்த மாதிரி எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொண்டு தேவைக்கேற்றார் போல சட்டை உரித்துக் கொள்வார்கள். இன்று D2K , PB என்றால் நாளை VB , நாளன்னைக்கு java, c# என்று survival க்காக நிறம் மாறும் நிரலாளர்கள்.

க்ரெய்க் அண்ணாச்சி ரெண்டாவது வகை அமெரிக்கர் போல. தனக்கென்று ஒரு வலைப்பதிவு வைத்திருக்கிறார். அதைவிட அவருடைய தளம் ரொம்ப புகழ் பெற்றது . ரொம்ப உபயோகமானது. கலர், படம், ஜிகிடி ஒன்றும் கிடையாது. content ஐயா content..!! அதில் உள்ள வரி விளம்பரங்களை படிப்பது எனக்கு சுவாரசியமான பொழுதுபோக்கு. Best of Craiglist என்று தான் ரசித்த விளம்பரங்களை வேறு பட்டியலிட்டிருக்கிறார். தளத்திற்கு ஒரு விசிட் உடுங்களேன்.. இதனை உபயோகப்படுத்திக்கொள்ள மிகக் கவர்ச்சிகரமான விலை வேறு...ஹி..ஹி..ஹி..தேசிகளுக்கு பிடித்த விலை.

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...