Wednesday, March 24, 2004

சின்னா
=======

எப்போது சொன்னாலும் 'சின்னா கம்மினாட்டி' என்று சொல்வதே வழக்கம்.
செல்லமாக கூப்பிடும்போது ஜித்து என்றே கூப்பிடுவேன். இந்திரஜித் என்பதன் சுருக்கம் அது.
பெரியவர்களுடன் பிரச்சினை செய்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக விளையாடுபவன்.
இரண்டு சகோதரிகள், ஆறு சகோதரர்கள் உள்ள குடும்பத்தில் கடைக்குட்டி
யாகையால், பெரியவர்களின் தவறுகள், கபடங்கள், சூது-வாதுகள், அதட்டல்கள்,
அமட்டல்கள் , அலட்டல்கள் எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பம் விட்ட மலை
முழுங்கி மகாதேவன். முறுக்கு மீசை வைத்துக் கொண்டு ஏதோ ஒரு கல்யாணத்தில்
பார்த்தபோது பளபளவென்று 'தேவர்மகன்' கமல் போல இருந்தான்.சொல்லும் வார்த்தையில்
ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். கூரான அடிப்பார்வையோடு, தொண்டைக்குள் எழும்
அவுட்டு சிரிப்போடு அவன் பேசுதைக் கேட்டால் திருவாளர் பசுபதி ' வினை வழியுது பாரு '
என்பார். என்றோ அவர் கூட போட்ட சண்டையில் இன்றுவரை அவன் எங்கள்
வீட்டு வாசல்படி மிதித்து இல்லை. விசேஷங்களுக்கெல்லாம் கல்யாண சத்திரம்
வந்து ஓதியிட்டு , சாப்பிடாமல் போய் விடும் ரோஷக்காரன். குளிரோ மழையோ
25 வருஷமாக காலையில் எழுந்து எங்கள் கோவிலுக்கு நைவேத்தியத்தோடு
பூஜை செய்து விட்டு அரக்க பரக்க திருவள்ளுவர் ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன்
வேலைக்கு செல்வான். 'அக்னி நட்சத்திரம்' பார்த்து விட்டு , எலெக்ட்ரிக் ட்ரேயினில்
தீப்பொறி உதிர்ந்து போவதை முதன் முறையாக எடுத்த பி.சி.ஸ்ரீராமை சிலாகித்ததும்,
பத்தாவது எக்ஸாமில் நான் வாங்கிய 447 மார்க்குக்கு மாயவரம் பஸ் ஸ்டாண்ட்
முக்குக் கடையில் அவன் வாங்கிக் கொடுத்த ஒஸ்த்தி சாக்லேட்டும், ரொம்ப நாள்
கழித்து பார்த்த்போது ' இந்த வண்டி எப்ப வந்தது என்று செல்லத் தட்டுடன் சொன்னதும்
அவனுடனான என் அந்தரங்கத் தருணத்தின் சில சாம்பிள்கள். அதே போலத்தான் திருவாளர்
பசுபதியுடனான சண்டைகளில் அவன் கீழ்த்தரமாக நடந்து கொண்டதும்,
பார்த்து பார்த்து அவரை எல்லா இடங்களிலும் கேவலப்படுத்தியதும். பெரிய குடும்பங்களில்
நிகழும் குடும்ப அரசியலுக்கு பலியாகி, தாயினால் அலைக்கழிக்கப்பட்டு கண்மூடித்தனமாக
அலைந்தவன்.

சிறுநீரகம் பழுதாகிப் போனதால், இருதய வால்வுக்கான அறுவை சிகிச்சை
மேற்கொள்ள இயலாமல் , எல்லா மருத்துவர்களும் கைவிட்டு, நீர் ஆகாரமாக
சாப்பிட்டுக் கொண்டு மாயவரம் மருத்துவமனையில் கிடக்கிறான் அவன் என்று
நேற்றிரவு அப்பா சொன்னபோது , எனக்கு ஏற்பட்ட உணர்ச்சிகளில் இந்த
முழு ஜென்மத்துக்குமான வேதனை இருந்தது.

சின்னா என் சிற்றப்பன் என்று சொல்வதை விட எனக்கு அனுக்கமான
ஸ்நேகிதன் என்று சொல்வதே பொருத்தம்.


அவனுக்கு எது நல்லதோ, அது, சிக்கிரம் நடக்க இறையருள் சித்திக்கட்டும்

No comments:

Post a Comment

இன்னா நாற்பது ....

  மீசை நரை போக்க பொறுமை ஏகம் தேவைப்பட ஆசை நுரை மட்டும் சுழித்துப் பிரவகிக்கிறது இன்னமும்.... யோசித்துக் களைத்த மூளை கொஞ்சம் உருகியும் ...