Wednesday, March 03, 2004

எழுத்தாள சந்திப்புகள்
======================

மரத்தடியில் ஜெயமோகனின் பதில்கள் அருமை. கேட்கிறவர்களின்
மேதாவிலாசங்களை கேள்வி கேட்காமல் , இதமாக எல்லோருக்கும்
பதில் தந்தது நிறைவாக இருக்கிறது. முக்கியமாக உஷாவின் கேள்விக்கு
அவர் தந்த பதில் , எனக்கே பதில் சொன்னாற் போல இருந்தது. கேள்வி
கேட்டவர்களும் கரடிகுளம் ஜெயபாரதிபிரியா, கொங்கணாபுரம் செந்தில்
அயன்புரம் சத்தியநாராயணன் டைப்பில் கேட்காமல் உருப்படியாக
கேள்வி கேட்டதைப்போலவே இனியும் கேட்டால் எழுத்தாளர்களும்
'பொளந்து' கட்டிவிடுவார்கள்

0 0 0

பிரபலமானவர்களிடம் கேள்வி கேட்பதும், கையெழுத்து வாங்குவதும்,
அவர்கள் வீட்டுக்குச்சென்று பார்ப்பதும் தமிழர்களின் நிரந்தரகுணங்கள்.
'இதில் ஒரு சோகம் இருக்கிறது ' என்று சொன்ன வாத்தியார் கூட
அம்பல அரட்டை அடிப்பது வேறு விஷயம்.

என் நண்பன் ஒருவன் பாலகுமாரனின் தீவிர வாசகன். ஒரு முறை அவரைப்
பார்க்கப் போனானாம்.

என்ன பேசினீங்க - நான்

ஒண்ணும் பேசலை. வாங்க என்றார். அமைதியாக உட்கார்ந்திருந்தேன் - அவர்

வேற என்ன பண்ணீங்க..?? ஏன் பேசலை

ஒண்ணும் பேசத் தோணலை..கொஞ்ச நேரம் கழிச்சு ' உங்க வயித்துல
ஏதோ ப்ராப்ளம் இருக்கு. டாக்டரை போய் பாருங்க அப்டீன்னாரு.
எனக்கே ஆச்சரியமா இருந்துது. ஆனா கொஞ்ச நாள் கழிச்சு
ஏதோ வயித்து வலின்னு டாகடரை பார்க்கப் போனேன். டாக்டர்
எனக்கு 'அல்சர்' ங்கிறார். அசந்து போயிட்டேன்

மேற்சொன்ன 'உரையாடல்' முடிந்த பிறகு அந்த அப்பாவி
நண்பரை நான் ஓட்டியது கொஞ்ச நஞ்சமல்ல.

இன்னமும் கூட வரிடம் பேசும்போது மட்டும் , நான் பாலகுமாரனை
'உங்க டாக்டர் ' என்றே குறிப்பிடுகிறேன்.


0 0 0


முதல் பத்திக்கும் இரண்டாம் பத்திக்கும் தயவு செய்து யாரும் தொடர்பு
கண்டுபிடிக்க வேண்டாம். எனக்கும் எழுத்தாளர்களையும் அவர்கள்
எழுத்துக்களயும் பிடிக்குமே தவிர, அவர்களை ஆராதிப்பது, சந்திக்க
முயல்வது , கையெழுத்து கேட்பது என்ற விஷயங்களிலெல்லாம் ஈடுபாடு
இல்லை.

எழுத்துக்களை படித்து விட்டு எழுத்தாளர்களை சந்திக்கும்போது அந்த
பிம்பம் சுக்குநூறாக கலைவது பற்றி பலர் சொல்லி இருக்கிறார்கள்.
என் நண்பன் ராஜ்குமாரின் மாமா ' பாபா' என்ற மதுரைக் கவிஞர்
பத்திரிக்கையாளர் அடியாரையும் , எழுத்தாளர் இந்துமதியையும் தான்
சந்தித்தபோது அடைந்த அதிர்ச்சியை சொன்னார். விகடன் நிருபர்
லோகநாயகி பிரபல எழுத்தாளரை ஒரு முறை சந்தித்தபோது அவர்
நடந்து கொண்டாதாக சொன்ன முறை அதிர்ச்சியளித்தது. 'விரும்புகிறேன்'
டைரக்டர் சுஜாதாவுடன் தனக்கேற்ப்பட்ட அனுபவத்தை குமுதத்தில் படித்த
போதும் மிக வருத்தப்பட்டேன்.

எனக்கே சிங்கப்பூரில் ஜெயகாந்தனை சந்தித்தபோது ஏற்பட்ட ஏமாற்றத்தை
இங்கே எழுதி இருக்கிறேன். எனவே பேப்பரோடும், ஈமெயிலோடும்
எழுத்தாள சங்காத்தத்தை நிறுத்திக் கொள்வது உத்தமம். அதுவேதான்
எழுத்தாளர்களுக்கும் நல்லது.

தெய்வமாயிருந்தால் கூட, அது வீடு தேடி வந்து வரம் கொடுத்தால்
மவுசு குறைச்சல்தான்


No comments:

Post a Comment

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...