Thursday, March 25, 2004

கோவில் ...???
=========

நான் இருக்கும் இடம் கலி·போர்னியா மாநிலம் என்றாலும், தென்னிந்தியர்கள்
அதிகமில்லை. எனக்கு இருக்கும் நண்பர் கூட்டத்திலே பாதிக்கும் மேல்
மராட்டியர்கள். எனவே கோயில்கள் என்று அதிகம் ஏதும் கிடையாது.
அல்லது கோயில் என்று நான் நினைக்கும் லட்சணங்களோடு ஒன்றும்
இல்லாமல் இருந்தது. லிவர்மூர் என்ற இடத்தில் இருக்கும் பிரசன்ன
வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு போக வேண்டுமென்றால் கிட்டத்தட்ட
200 மைல் போகவர ஆகும். எனவே கடந்தும் உள்ளும் இருப்பவனை,
'உள்'ளேயே கும்பிட்டு வந்தேன்.

மளிகை சாமான் வாங்கும் கடையில் புது கோவில் ஒன்று
வருவதாய் எழுதி இருந்தது. முதன்முறை சென்றபோது சந்தோஷமாய்
இருந்தது. ஆனாலும் தலைமை போல தெரிந்தவர், எப்போது பார்த்தாலும்
'சிலை வாங்க வேண்டும், நகை வாங்க வேண்டும். மண்டபம் கட்ட
வேண்டும் ' என்று ஒரே அறிவிப்பாக செய்து கொண்டிருந்தார்.
'சரி..பரவாயில்லை,,,ஆரம்ப நிலையில் இருக்கும் கோயிலுக்கு இம்
மாதிரியான வியாபார முகம் இருப்பது தப்பில்லை ' என்று சமாதானப்படுத்திக்கொண்டு,
விசேஷமான பூஜைகள் இல்லாத, கோயிலில் அதிகம் கூட்டம் இல்லாத வார
நாள் மாலை நேரங்களில் சென்று வந்தேன். இம்மாதிரியான தருணங்களில்
அங்கு கிடைத்த அமைதியும் , நிம்மதியும், விடுதலை உணர்வும்,
ஸ்ரீ அபயாம்பிகா சமேத ஸ்ரீகெளரிமாயூரநாதர் சன்னிதியில் எனக்குக்
கிடைத்ததை ஒத்ததாக இருந்தது.

அங்கு இருந்த அர்ச்சகர் ஒருவரைப் போல இந்தியக் கோவில்களில் கூட
நான் கண்டதில்லை. அவ்வளவு பணிவு. பக்தி. ஈடுபாடு. பூஜை செய்வதிலும்,
மந்திரங்கள் சொல்வதிலும், கோவிலை அமைதியாக , சுத்தமாக வைத்துக்
கொள்வதிலும் அவ்வளவு நேர்த்தி. குளிரெடுக்கும் பின்னிரவு வேலைகளிலும்
கூட கோவிலை திறந்து வைத்துக்கொண்டு , வருபவர்களை நன்றாக நடத்திக்
கொண்டு இருந்தார். தலைமைக் குருக்கள் கோவிலை பிரபல்யப்படுத்தும்
முயற்சியிலும், நன்கொடை வ்சூலிலும் ஊர் ஊராக சென்று கொண்டிருக்க ,
இவருடைய ஆத்மார்த்தமான பணி எந்தக் குறைவும் இல்லாமல்
கோவிலில் தொடர்ந்தது. வீடுகளில் பூஜைகள் செய்ய அழைக்கப்பட்டபோதும்,
கோவிலுள் தரும் ஒவ்வொரு பைசாவுக்கும் அவர் சிரத்தையாக ரசீது கொடுத்தபோது
நிஜமாகவே சந்தோஷம்.ஆர் (religious) விசாவில் வந்த இவர், அமெரிக்கா வந்த
வெகு நாட்கள் கழித்தே மனைவியையும் , மகனையும் அழைத்துக்கொள்ள
முடிந்ததை அவருடன் பேசின சந்தர்ப்பங்களில் அறிந்து கொண்டேன்.

போன வாரம் கோவிலுக்குப் போனபோது அவர் இல்லை. யாரோ
இன்னொருவர், இடுப்பில் கைகளை வைத்து அடியாள் போல் நின்றுகொண்டு,
'என்ன ஆச்சு தெரியுமா....இங்க முன்னாடி இருந்தவர் ரொம்ப மோசமா
நடந்துண்டாராம். பூஜை சரிவர பண்ணாம, கோயிலை நேரா நேரத்திற்கு திறக்காம,
அட்டூழியம் பண்ணியிருக்கார். கோவில் பணத்தைக் கூட கொஞ்சம் சுருட்டீட்டதா
கேழ்வீ...அதனால நிர்வாகத்துல அவரை வேலைய விட்டு அனுப்பீட்டா ' என்று வந்திருந்த
பக்தர்களிடம் வம்பு பேசிக்கொண்டிருந்தார்.

திரும்பி கர்ப்பக்கிரகத்தில் உள்ள மூலவரைப் பார்த்தேன்.

நின்றாவது கொன்றால் சரிதான்.


No comments:

Post a Comment

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...