ஒரு தண்ணிமாஸ்டரின் டயரிக் குறிப்புகள்
========================================
நேற்று என் மராத்தி நண்பன் குழந்தையின் பர்த்டே பார்ட்டிக்கு
சென்றிருந்தேன். கேக் வெட்டி முடிந்த பிறகு வழக்கம் போல்
குழந்தைகளெல்லாம் ஒரு ரூமில் விளையாட, பெண்டுகள் எல்லாம்
இன்னொரு ரூமில் உட்கார்ந்து பேச ஆரம்பிக்க, கன்சல்டண்டுகள்
ஹாலில் உட்கார்ந்து கொண்டு குடிக்க ஆரம்பித்தோம். அமெரிக்கா
வந்த புதிதில் இந்த மாதிரியான பார்ட்டிகளை எல்லாம் பார்க்க
கொஞ்சம் விநோதமாக இருந்தது. இப்போது இதெல்லாம் பழகிப்போய்
நானும் ஜோதியில் ஐக்கியமாகி விட்டேன்.
இதுதான் புதிதே தவிர குடிப்பது எனக்குப் புதிதல்ல. கல்லூரி
நாட்களிலெல்லாம் , நான் Golden Eagle கூடக் குடிக்காத சூரப்பழம்.
ஹாஸ்டல் தினங்களில், என்னை யாரவது கலாட்டா செய்ய வேணுமென்றால்,
லேசாக பீர் தெளித்துக் கொண்டு மிரட்டினால் போதும், ஸ்தலத்திலேயே
'உச்சா' போய் விடுவேன். காலேஜ் ·பைனல் இயர் வரை அப்படித்தான்.
கல்ச்சுரல் ·பெஸ்டிவல் சந்தர்ப்பங்களிலும், பிரிவுபசார விழாக்களிலும்
கூட நான் தைரியமாய் 'நோ' சொல்லி வந்தேன். அப்பா கொடுக்கும் பணத்தில்
குடிக்க வேண்டாம் என்று நினத்திருப்பேனாக்கும் என்று இப்போது
தோன்றுகிறது.
பம்பாயில் வேலை பார்த்த முதல் ஒரு வருடம் கூட அதே தொடர்ந்தது.
இத்தனைக்கும் டோம்பிவிலியில் கூடத் தங்கியிருந்த சேட்டன்மார்
சரியான சரக்கு வண்டிகள். வெள்ளம் அடிச்சிட்டு, 'கொல்லம் கோயில்'
வார்த்தைகள் சொல்லிக்கொண்டு , வார இறுதியில் மணிக்கணக்காக
உட்கார்ந்திருப்பார்கள். என்னையும் பலமுறை வற்புறுத்தி இருக்கிறார்கள்.
'செய்யலாம்...ஆனால் இன்னொருவர் சொல்வதற்காக செய்யக் கூடாது ' என்று
தழங்கிக் கொண்டிருந்தேன் அப்போது.
அந்த நாளும் வந்தது. ஜெனித் கம்ப்யூட்டர்ஸ் என்ற கம்பெனியில்
வேலை பார்க்க ஆரம்பித்து நான்கு மாதங்கள் ஓடி இருக்கும். வேலை தேடி
வெளிவரும் ·ப்ரெஷ்ஷருக்கான சோதனைக்காலம் முடிந்து, கையில் கொஞ்சம்
'பசை' வந்த நேரம். தலால் ஸ்ட்ரீட் பக்கம் போனபோது, அங்கு அசோகா
ஹோட்டல் வாசலில் chilled beer served here என்று கண்டிருந்தது. அது ஒரு
மழை நேர வெள்ளி மாலை. சரக்கென்று உள்ளே புகுந்து, 'ஒரு லண்டன் பில்ஸ்னர்
கொடுப்பா ' என்றேன் இந்தியில். மழைகாலத்தில் பீர் கேட்கும் மதராஸியை
விநோதமாக பார்த்தபடி, கொண்டு கொடுத்தான்.
'கடவுளே...கெட்டு, குட்டிச்சுவராகி விடாமல் காப்பாத்து ' என்று அபிராமியை
வேண்டிக் கொண்டு முதல் ஸிப் அடித்தேன். அவ்வளவுதான்...மீதி பாட்டில் எப்படி
முடிந்தது என்று எனக்கே தெரியவில்லை. கால்கள் , முதுகு எல்லாம் லைட்டாக
மரத்துப் போனாற்போல இருக்க, குடை கூட பிடித்துக் கொள்ளாமல்
பூந்தூறலில் கிட்டத்தட்ட 3 கிலோ மீட்டர் நடந்து விக்டோரியா டெர்மினஸ்
வந்து ரயில் பிடித்தேன். இது நடந்தது 1993.
அதற்குப் பிறகு Heywards 2000, Canon 5000, Blue Ribond Jin, Golgonda wine,
Aristocrat , Fenny , old Monk, Old Cask, Officer's choice , VSOP, Vintage, Morcopolo,
Bagpiper , Teacher's, Cutty Sark, Jim Beam, Black Label, Crown Royal, Johnny walker,
Captain Morgan , Port wine என்று கடந்த 11 வருடங்களாக பல வகை திரவங்களில்
கால் நனைத்து, இறங்கி, குதித்து, மூழ்கி , நீந்தியாகி விட்டது. ஆர்வக்கோளாறினால்
ஏற்பட்ட ஆரம்ப கால 'உவ்வே' சம்பவங்களைத் தவிர , இன்று வரை ஏதும் கோளாறு
இல்லை.
என்றாவது ட்ரீட்மெண்டுக்கு போகும்போது, டாக்டர் ' லிவர் எங்கேய்யா..? " என்று கேட்பாரோ
என்று பயந்து கொண்டே..இன்னமும் குடித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
No comments:
Post a Comment