சேவியரின் விமர்சனத்தை முன்வைத்து
============================
இந்த வாரத் திண்ணையில் கவிஞர் யுகபாரதியின் 'தெப்பக்கட்டை'
தொகுப்பைப் பற்றி நம்ம சேவியர் எழுதி இருந்தார். அந்த விமரிசனம் படிக்க
இங்கே க்ளிக்குங்கள்
சேவியரை, அவர் கவிதைகளை, அவர் எழுத்து நடையைப் பற்றி
ஓரளவு அறிந்தவன் என்ற முறையில் , நவீன கவிதைகளைப் பற்றிய
அவற்றின் பூடகத்தைப் பற்றிய, பெரியவர்கள் போற்றும் அந்த 'இறுக்கமான'
சொற்செட்டுகளைப் பற்றி அவரது கருத்துக்கள் எனக்கு ஏற்கனவே தெரியும்
- நானும் கவிதைகளில் எளிமையையே வலியுறுத்துபவன் என்ற முறையில்.
எங்காவது புதுக்கவிதைகளை பரிகசிக்கும் குரல்கள் கேட்டு , அதற்கு நான்
பதில் தந்தால், ரகசியமாவேனும் ஆதரவாய் தோளில் விழும் முதல்
கை அவருடையது.
இந்த விமரிசனத்தில் நவீனகவிதைகளை விமரிசிக்கும்போது , கவிதைகளில்
'பால் உணர்வு' பற்றி எழுதுபவர்களையும் ஒரு ரேக்கு ரேக்கி விட்டார் அவர்.
( உள்ள 'குறுகுறு' ங்குது சார்...) .
பால் உணர்வு கவிதைகளில் வருவது என்ன தவறு..?? ஆகாசத்தில் பார்த்துக்
கொண்டு எங்கோ உகாண்டாவில் நடக்கும் விஷயங்களை , முழுக்க முழுக்க
கற்பனை செய்து எழுதும் எழுத்தில் உயிர் இருக்காது. மனித வாழ்க்கையை,
அதன் அர்த்தங்களை,அதன் அழகை, அவலத்தை, விந்தையை, குரூரத்தை
எழுதும் படைப்பாளிகள் எப்படி பால் உணர்வை விலக்கி வைக்க முடியும்.
எதனால் விலக்க வேண்டும்..? அதை எழுதுவதை ' வெறும் அதிர்ச்சி மதிப்பு '
என்று எப்படி விலக்கி வைக்கப் போயிற்று.
எனக்குப் புரியவில்லை.
இத்தனைக்கும் அவர் எடுத்துக்காட்டியுள்ள கவிதைகள் வக்ர ருசியோடு
காமத்தை பற்றி சொல்லுபவை கூட அல்ல..'முந்தி விலகலையும்,
இடுப்பு மடிப்பையும் சொல்லி, அது எப்படியாவது என் கண்ணில் பட்டுத்
தொலைத்து விடுகிறது, என்று கவிதை செல்லமாய் சிணுங்குகிறது.
நவீன கவிதைகளின் சொல்லப்படாத இலக்கணத்தில் மட்டும்
பால் உணர்வு இல்லை நண்பரே..வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து
நம் சகலவிதமான செயல்களுக்கும், கோபங்களுக்கும், தாபங்களுக்கும்
சலனங்களுக்கும், நெகிழ்வுகளுக்கும், உயிர்த்தல்களுக்கும், உணர்தல்களுக்கும்
அதுவே விதை...உங்கள் கவிதை உள்பட...
மோகத்தை கொன்றுவிடு..அல்லால் என் மூச்சை நிறுத்திவிடு என்று சொன்னானே
அது..... நேர்மை.
No comments:
Post a Comment