Tuesday, March 02, 2004

எனக்குப் பிடித்த ரொமாண்டிக் கவிதைகள்
=========================================

உறவில்
தேனாய் உருகித் தழதழத்துக்
கடு மூச்சில் கன்னம் சுட்டு
தெய்வம்...தெய்வம் என்று
நெஞ்சுக்குள் நெருங்கிக் கொண்டாய்....
நான் நம்பவில்லை ..

வம்பாக,
ஊமையிருட்டில் உனைத் தேடும் உள்ளங் கைக்குள்
தாழம்பூ முள் தரித்து
ரத்தம் இயங்கியதும்---
நான் சிரிக்கக் கண்டேன்.
உடல் திறந்து
உனை நாடும் மர்மத்தில்
பட்டதெல்லாம் இன்பமாச்சு...
ரத்தம்--தேன்
உடல்--கை பொம்மை
நீ--நான்
கை கோர்த்த புயல்கள்....

- எஸ். வைதீஸ்வரன்

******************************

வயதின் வாசல்
------------------
இந்த மலையை ஜெயித்தாக வேண்டும்
----- ஜெயித்தாக வேண்டும்..
தினந் தினமாய் உயரமாகிக் கொண்டிருக்கிறது
இந்த மலை -

என் கால்களுக்கு இடையில்
திமிர் அடங்கும் குதிரையாக்கி இதன்
ஆளுமையை ஒடுக்க வேண்டும்.
சூழல் கரடு முரடாகி கால் சறுக்கும்
மேடு பள்ளங்கள்,
என் நரம்புகளை உராய்ந்து
உடலை நீளமாக்குகின்றன..

அதிலேறி
முட்டி மோதும் முயற்சிகளால்
கொட்டும் வியர்வை
எனக்கு ஆனந்தமாகின்றன

அசிங்கமாய் சின்ன வயதில்
வெறுப்புடன் தெரிந்த
பல பாறை இடை வெளிகள்
இன்றெனக்கு ரகஸிய அடையாளங்களை
அங்கங்கே காட்டுகின்றன..

காற்று நின்று புதிராய் கொதிக்கிறது.
உடலின் சில மூலைகள்
நெருப்பு விரல் பட்டு சுடுகிறது..

மேடுகளை வெற்றி கொள்ளும் வேளைகளில்
நீண்ட பசும் புல் வெளிகள்
எனக்கு முன் பரிசாக
விரிகின்றது..

அங்கே ஈட்டித் தலை நீட்டி
புஸ்ஸென்ற பாம்பொன்று
வானப் போர்வையை
கிழித்து விடப் பார்க்கிறது.

பனிக்குடம் வெடித்த தென
எரிமலைக் குழம்புகள்
பாய்கிறது சமவெளியெங்கும்.

வெடிக்கும் பூக்களும்
இசைக்கும் புயலும்
தந்தை- தாய் பரஸ்பரத் தழுவலும்
அன்பின் ஓசையும் புழுக்கமும்
அத்தனையும் கலந்த கனவுக் குழப்பம்.

துயில் மந்திரக் கம்பளமாகி
தூக்கி செல்லும் எனை
மலை உச்சி நட்சத்திறத்துக்கு.

இரவில் எப்படி வெய்யிலடிக்கிறது?
மன வெப்பத்தில்
பயமும் தெளிவும்
ஐயமும் ஆனந்தமும்
ஒரு வினோத வானவில்லாகி
மறைகிறது.

எனக்குள் நிச்சயமாக
ஒரு தந்தை எழுந்து வரக் கண்டேன்....
நீருக்குள் தோன்றும்
நெருப்புப் பந்தம் போல !..

- எஸ்.வைத்தீஸ்வரன்

***********************************

நினைவுக் குமிழிகள் =
ரவிசுப்பிரமணியன்


நினைவறைகளில் எந்த மூலையிலும்
துருப்பு இல்லையேடி
எங்கே பார்த்தேன் உன்னை
எத்தனை வருஷங்கள் இருக்கும்?

ரசம் போன கண்ணாடியில்
கலங்கலான பிம்பம்போல
ஞாபகம் வந்து விட்டதடி.

பாம்பின் சீறலாய்ச் சுவாசம் சிதற
உஷ்ணமாய் வியர்வை கசகசக்க
இரும்பால் நெருக்குமே
அடிக்கடி என் கனவுகளில்
அதுதானே நீ?

நீதன் நீயேதான்
மறதி அவிழ
மெல்ல மெல்ல விடிகிறது
உன் ஞாபகங்கள்.

அது என் மொட்டுப் பருவம்.
இளமையின் சமிக்சைகள் அறியாப் பால்யம்.

அப்போது
அடிக்கடி நிகழும்
நம் சந்திப்பு
உன் தம்பியைப் பார்க்க வரும்போதெல்லாம்.

என்னடா மார்க் என்பாய்
அறுபதுங்க என்பேன்
என் ராஜா எனச் சொல்லி
மார்பு நசுங்க அணைப்பாய்.

பால் கன்னம் எனக்கிள்ளிக்
கன்னத்தோடு கன்னம் இழைப்பாய்.

என்ன சினிமா பார்த்தாய் என்பாய்
சட்டென முத்தம் தருவாய்.

ஐயோ எச்சுங்க போங்க என்பேன்
புறங்கையால் துடைத்து நிற்பேன்.

மெலிதாகக் கடிப்பாய் காதை
கண் கிறங்கித் தவிப்பாய்.

நாக்கின் நுனி நீட்டி
எச்சிலால் பொட்டு வைப்பாய்.

பயமா இருக்குங்க என்ற திமிரலில்
யாரிடமும் சொல்லாதப்பா
சொன்னாச் செத்துடுவேன்
எனக் கும்பிட்டு அழுது
கலங்க அடிப்பாய்.

சீ.. கெட்ட வார்த்தை செய்தாளே
நினைக்கும் மனசு ஒரு நிமிஷம்
மறு நிமிஷம் ஏங்கும்.

சரியா தவறா
குழம்பித் தவிக்கும்.

பின் உன் குடும்பம்
எங்கோ மாற்றலானது.

ஒரு மாப்பிள்ளை
தொடர்ந்து நடத்திய சுயம்வரத்தில்
சட்டென எல்லாப் பொருத்தங்களோடும்
அந்த நாற்பது வயது ராஜகுமாரனை
நீ மணந்ததாய்க் கேள்விப் பட்டேன்.

இப்போது
இந்த ரயில் நிலைய மாடியில்
ஒரு படியில் இருவரும் சந்தித்தோம்.
எதிரெதிர்ப் பருவங்களோடு.

பின்
கடந்தோம்.

திடீரெனத் திரும்பினோம்
ஒரே கணத்தில் இருவரும்
பேசினோம்
தூரத்தில் நின்று
கண்களால்.

(ரவிசுப்பிரமணியனின் 'காத்திருப்பு' தொகுதியிலிருந்து)
**********************************************

பல்லாங்குழி ஆடும்போது
பட்ட விரல்களினால்
மின்சாரம் ஏதும்
சுட்டு விடவில்லை

கரும்பு வெட்டிய என் விரலை
பதறித் துடைத்தழுதபோது
அவள் பார்வையில்
மின்னலெல்லாமில்லை

முல்லைப்பூ பறிக்கையில்
ஏணிப்படி தடுக்கிவிட
அணைத்துப் பிடித்தபோது
நட்சத்திரங்கள் வானில்
கண்சிமிட்டவில்லை

ஒட்டுத் திண்ணையிலும்
மொட்டைக் கிணற்றடியிலும்
ஒரு கோடை முடிந்தது
பதினாறு கழிந்தது

ஊருக்குப் போகுமுன்
ஒருவருக்கும் தெரியாமல்
ஓடி வந்து
அழுத கண்களும்
சிவந்த மூக்குமாய்க்
கசங்கிய காகிதம் ஒன்று
கொடுத்தாளே?
"நீ என்னை மறந்தாலும்
நான் உன்னை மறக்கமாட்டேன்"

எனக்கு மறக்கவில்லை
உனக்கு
நினைவிருக்கிறதோடீ?

---லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் ("வேத எருக்குகள்" கவிதைத் தொகுப்பிலிருந்து)

No comments:

Post a Comment

இன்னா நாற்பது ....

  மீசை நரை போக்க பொறுமை ஏகம் தேவைப்பட ஆசை நுரை மட்டும் சுழித்துப் பிரவகிக்கிறது இன்னமும்.... யோசித்துக் களைத்த மூளை கொஞ்சம் உருகியும் ...