நேற்று நான் 'ஙே' ஆகிப் போனேன்.
=====================================
டோக்கியோ.
பளபளக்கும் வெளிச்சப்பூக்கள் நடுவில் சோம்பலாக ஊர்ந்து போகும்
அந்தக் காரினுள் பாப் ஹாரிஸ். நடுவயதைக் கடந்திருக்கும் அந்த அமெரிக்க நடிகன்
விஸ்கி விளம்பரத்தில் நடிக்க அங்கே வந்திருக்கிறான். எதிலும் ஒட்டுதல் இல்லாத
கண்கள், சோம்பலான நடை. கலாச்சார/மொழி குழப்பத்தில் தடுமாறி, ஆங்கிலமே
தெரியாத அந்த விளம்பர ஏஜென்ஸியுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறான்.
25 வருட மணவாழ்க்கையில் அவன் அருகாமை தேவைப்படாத, அவனுக்கு
அன்பைத்தர விழையாத மனைவி. புருஷன் என்றால் 'பொருளாக' பார்க்கத் துவங்கி
விட்ட அவள், அலமாரி டிசைனையும், கார்ப்பெட் கலரையும் அகாலத்தில் ·பேக்ஸில்
அனுப்பி, கடனுக்கு அவ்வப்போது தொலை பேசுகிறாள். ( மம்மி...ஐ காண்ட் ஈட் -
குழந்தையின் தொலைபேசிக் குரல்).மொத்தத்தில் மிட் ·லைப் க்ரைஸிஸ்.
அதே டோக்கியோ ஹோட்டலில் இன்னொரு ஜீவன். யேல் பல்கலையில்
பிலாஸபி படித்த இளம்பெண், தன் கணவனுடன் தங்கி இருக்கிறாள்.
பகலில் ·போட்டொகிராபர் வேலை..இரவில் கடுந்தூக்கம் என்றிருக்கும் அந்தக்
கணவன் அவளுக்கு வெறும் அலுப்பு. அவனை கோபித்துக் கொள்ளக்கூட
தெரியாமல், பரிதாபத்துடன் பார்க்கும் மனைவி. அகாலத்தில் டீவி பார்த்துக்
கொண்டு, புகைத்துக் கொண்டு, குடித்துக் கொண்டு அவள்.
இந்த இரு கேரக்டர்களயும் சுற்றிப் போகிறது கதை. சில வசனங்கள்,
சில காமிரா ஆங்கிள்கள், சில மெளனங்கள், எடிட்டிங் எல்லாம் அசத்தல் ரகம்.
படம் முழுக்க மிக மெலிதாக இன்டெக்சுவல் அரகன்ஸ் விரவி கிடக்கிறரது.
அங்கங்கே சட் சட் என்று சமாசாரங்களை தூக்கிப் போட்டு 'இந்தா ராசா...உன் சமத்து'
என்று சோபியா கப்போலா விளையாடிப் பார்த்திருக்கிறார். பில் முர்ரேவும்,
ஸ்கார்லட்டும் நடித்திருக்கும் இந்தப் படம் ஸ்ஸ்ஸ்சரியான ...படம்
படத்தின் கடைசி காட்சி என்னை 'ஙே' ஆக்கியது நிஜம்.
பாப் , கதாநாயகி காதில் சொன்னது என்ன என்பதை பார்ப்பவர்களின் ஊகத்துக்கு
விட்டு விட்டது கூட ஒரு நக்கல்தான்.. உன் உயரம் என்னவோ, அதற்கு தகுந்தாற்போல்
நினைத்துக்கொள் என்று டைரக்டர் சொன்னதாகவே நான் நம்புகிறேன்.
Lost in Transalation நம்ம ஊரில் வந்து இருந்தால் இதையே USP ஆக்கி
இருப்பார்கள். 'ஊகித்து விடை சொல்பவருக்கு அஞ்சால் அலுப்பு மருந்து குப்பி
இலவசம்' என்று அதகளம் பண்ணியிருப்பார்கள்.
No comments:
Post a Comment