விஷயம் அதோடு முடியவில்லை. இன்று காலை NPR சானலில் கேட்ட பல தகவல்கள் அண்ணனின் பிரதாபங்கள் இன்னமும் எத்தனை தூரம் போகப் போகிறது என்பதை புட்டுப்புட்டு வைத்துக் கொண்டிருந்தன. தன்னை Conservative என்று பகிரங்கமாக சொல்லிக்கொண்ட, அவர்கள் எடுக்கும் நிலைகளுக்காக பாடுபடுகிற ஒரு அதிபர் இரண்டாம் முறை பலத்த செல்வாக்கோடு தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால், என்னென்ன செய்யப்போகிறார் என்று பழுத்த கன்சர்வேட்டிவ் ஒருவர் விவரித்துக் கொண்டிருந்தார். வயிற்றுக்குள் ஆட்டோ ஓடியது.
பிறகு பொருளாதார வல்லுநர் ஒருவரிடம் அமெரிக்காவின் வரலாறு காணாத 425 பிலியன் டாலர்கள் பற்றாக்குறை பற்றிக் கேட்கப்பட்டது. மேலும் பேபிபூமர்களின்( Baby Boomers) முதல் அலை ஓய்வுபெறும் போது, பற்றாக்குறை ஆகக்கூடிய ஃபெடரல் அரசாங்கத்தின் கையிருப்பும் சேர்ந்து கொண்டால் என்ன ஆகும்..?? அத்தோடு புஷ் அரசாங்கம் கொடுக்கும் வரி விலக்கும் கஜானாவை காலி செய்து விடுமே எனக் கேட்க, அவர், " ஆமாம்..நிலைமை கவலை அளிப்பதென்னவோ உண்மைதான். ஆனால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, புதிதாக போர் ஏதும் வராதவரை பிரசினை வெளித் தெரியாது. ஆனால் இருக்கிற பற்றாக்குறை தீரவே பல வருடங்களாகி விடும். social security benefits இப்போது கிடைப்பதைக் காட்டிலும் இன்னமும் குறைந்து விடும், அப்படியும் பிரச்சினை சமாளிக்க முடியாமல் போனால், வெளியிலிருந்து ஏகத்துக்கு கடன் வாங்க வேண்டி இருக்கும். அல்லது வட்டி விகிதத்தை எக்கச்சக்கத்துக்கு ஏற்ற வேண்டி இருக்கும். பொருளாதார வல்லரசு என்று பெயர் பெற்றிருந்த அமெரிக்கா, அதிக கடன் வாங்கி, விரலுக்கு மீறி வீங்கி விட்ட நாடாக உலகத்தின் முன் தலைகுனிந்து நிற்க வேண்டும்" என்றார். அமெரிக்காவை Bankrupt ஆக்குவதுதான் லட்சியும் என்று முழங்கிக் கொண்டிருக்கிற லேடன் மனதில் வந்து போனார்.
எல்லா தீபாவளியும் நரகாசுரன் வதத்துக்காகத் தான் கொண்டாடுவாங்க. ஆனா, இந்த தீபாவளி மட்டும் இந்த நவீன நரகாசுரனுக்கு கையில பதவிங்கிற தீவட்டி கொடுத்துட்டு, அதை அவன் எங்க வைப்பானோ...எதைக் கொளுத்துவானோ ன்னு புலம்பற மாதிரி ஆயிட்டுது.
நீங்களாச்சும் தீபாவளியை சந்தோஷமா கொண்டாடுங்க. எங்க சின்னா சித்தப்பா போன வருஷம் தவறிப் போனதால எனக்கு தீபாவளி கிடையாது.
No comments:
Post a Comment