Monday, November 22, 2004

தேவையா...???

மிகப் பழமையான சரித்திரம் உள்ள தெரு அது. அழகு கொஞ்சும் தோட்டங்களுடன் வீடுகள். ஏற்கனவே வெவ்வேறு பகுதிகளில் இருந்து மனிதர்கள் வந்து தொந்தரவுபடுத்தி விட்டுப் போயிருந்தாலும், தெருவின் அமைதிக்கு அந்த அளவு பங்கமில்லை. கடைசியாய் உள்ளே வந்த மனிதர்கள் கத்தி எடுத்து சண்டை போடவில்லை. கொள்ளை அடித்துக் கொண்டு ஓடவில்லை. அந்தத் தெருவில் ஏற்கனவே இருந்த வீடு ஒன்றில் குடி புகுந்து இருக்கத் தலைப்பட்டார்கள். எதனாலோ அவர்களை வீட்டில் இருந்தவர்களுக்கும் பிடித்துப் போனது. புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துகிறார்கள் என்பதாலோ, நாடோடிகளுக்கு உலக ஞானம் இருக்கும் என்பதாலோ, நிறத்தாலோ, நாகரீகத்தாலோ, தங்களுடைய ஒற்றுமை இன்மையாலோ, எது வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். வீட்டுக்கு வந்தவர்கள் தங்களிடம் உள்ள அறிவாலும், தீட்சண்யத்தாலும் கற்பிக்கும் தொழிலை ஏற்றனர். இதனால் தெருவில் உள்ள பணக்காரத் தலைமையிடமும் செல்வாக்கு பெற்றனர். எல்லோரும் போற்றிப் புகழ்ந்ததுவும், புகழ் தந்த போதையிலும், தங்களுக்கு தகுதி அதிகம் என்று நினைத்துக் கொண்ட அவர்கள், வீட்டில் ஏற்கனவே இருந்தவர்களை ஆள விழைந்தார்கள். அவர்களுக்குள் அடுக்குகளை, பல்வேறு நிலைகளை கற்பித்து,
நீ கழிப்பறையை சுத்தம் செய், நீ கொல்லையில் வேலை பார்த்து, மாடு கன்றுகளை பார்த்துக் கொள். நீ வீட்டை நிர்வகித்து , வியாபாரம்
பார்த்துக் கொள். நான் பூஜை செய்து, ஊருக்கு கற்பிக்கிறேன். உங்களுக்குள்ளேயே பல்வேறு நிலையில் உள்ளவர்களை நீங்கள் அடிமைப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் மேலானவாக இருந்து நான் மேய்த்துக் கொள்கிறேன் என்றார்கள். பூஜை செய்தவர்களுக்குள் புகுந்த புல்லுருவிகள், பின்கட்டுக்காரர்களை இன்னமும் அடக்கி வைக்க என்னென்ன வழிகள் உண்டோ, அத்தனைக்குமான காரணங்களை வீட்டு உறுப்பினர்களின் கடமை/விதிமுறைகளுக்கு என்று உருவாக்கப்பட்ட புத்தகத்தில் புகுத்தினர். பின்கட்டுக்காரர்களில் பிழைக்க விருப்பிய புல்லுருவிக் கூட்டமும், பூஜை செய்தவர்களை அண்டிப் பிழைத்தால், தாங்கள்
பின்கட்டுக்காரர்களிடையே சண்டியர்த்தனம் செய்யலாம் என்று யோசிக்க, வழக்கம்போல ஒற்றுமையின்மை குடிகெடுக்க, காலம் உருண்டோடியது. பூஜைக்காரர்கள் தங்களுக்குள்ளேயே சிலரை பூஜைக்காரியங்களுக்கும், கற்பிக்கும் வேலைக்கும் அமர்த்திவிட்டு, அவர்களில் ஒரு தலைவரை ஏற்படுத்திவிட்டு வெளிவிவகாரங்களில் கவனம் செலுத்தலாயினர். அவர்கள் வேறு வேலை செய்தாலும், தாங்கள் இன்னார்...இன்னது செய்து கொண்டு இருந்தோம் என்பதற்கு அடையாளமாக பூஜைக்காரியத் தலைவரை அடையாளப்படுத்தி வைத்திருந்தனர். அவ்வப்போது முன்கட்டுக் காரர்களிடையே பின்கட்டுக்காரர்களுக்காக பரிதாப்படுபவர்களும் ஏதாவது சொல்லிக் கொண்டு இருந்தனர். இந்த வாழ்வு இனி ஏலாது என்று பின்கட்டுக்காரர்களில் சிலர் வீட்டை விட்டு வெளியேறி வேறு வீடு செல்லவும் விழைந்தனர். கடைசியில் ஒரு நாள், பூஜைக்காரர்களிடையே, பூஜை ரூமுக்குள்ளேயே நடந்த தகாத காரியங்கள் வெளிவந்தன. இத்தனை நாள் உயர்வென்றும், தெய்வீகமென்றும், தங்களுக்கு உரியதும், உகந்ததும் ஆகும் என்று சொல்லி கற்பிக்கப்பட்ட ஒரு விஷயத்தில் நடந்த அநியாயம் கண்டு பின்கட்டுக்காரர்கள் எள்ளி நகையாடினார்கள். தங்கள் மேன்மையை உணர்த்துவதற்கான அடையாளமாக தான் வைத்திருந்த ஒரு அமைப்பின் முகம் கிழிந்தது கண்டு கொதித்தார்கள் பூஜைக்காரர்கள். " இத்தனை கேள்விகள் இங்கே கேட்கிறாயே..பக்கத்து வீட்டு மனிதர்கள் இவ்வளவு அநியாயம் எல்லாம் செய்தார்களே...அங்கு போய் கேட்க முடியுமா..?? என்று கேட்கிறார்கள்.

தன் வீட்டுக்குள் இத்தனை அவலங்களை வைத்துக் கொண்டு, அந்நிய வீட்டானைப் பற்றி என்ன சொல்ல...?? தாங்கள் இழந்த தங்கள் வீட்டின் உரிமையை, தங்களுக்கு தகுதி அதிகமாக இருக்கிரது என்று தாங்களே சொல்லிக் கொண்ட ஒரு கூட்டம் தவறிழைத்த பிறகும் விட்டுக் கொடுத்து விட்டு பஜனை பாடிக் கொண்டிருக்க முடியுமா..?? இனி வேறு எந்த வெளிக்கூட்டம் வந்து இதே வேலையை செய்தாலும் வீட்டில் இருப்பவர்கள் நம்பக்கூடாது என்பதற்காக, இந்தக் கூட்டம் செய்த வேலையை பின்கட்டுக்காரர்கள் தோண்டித் துருவி அகழ்வாராய்ச்சி செய்கிறார்கள்.

( சங்கராச்சாரி- யார் என்ற பேட்டிக்கட்டுரையிலிருந்து - கீழே ஒரு பகுதி - நன்றி. பி.கே. சிவகுமார்)

ஸ்வாமிகள்: (ஞாநி சொன்னதைத் தொடர்ந்து) எல்லாம் சரி, உங்கள் பிரச்சாரம் எல்லாம் இந்து மதத்தை கன்னாபின்னாவென்று பேசுவதில்தானே இருக்கிறது. கிறிஸ்துவ மதத்தையோ, இஸ்லாமிய மதத்தையோ நீங்கள் விமர்சிப்பதில்லையே" என்றார்.

சின்னக்குத்தூசி: "ஏன் இல்லை; பகுத்தறிவு இயக்கத்தினர் எல்லா மதங்களிலும் உள்ள கேடுகளையும்தாம் விமர்சித்து வருகிறார்கள்."

ஸ்வாமிகள்: "இந்தக் கேள்விக்கு மட்டும் நீங்கள் யாருமே சரியாக பதில் சொல்வதில்லை. நழுவுகிறீர்கள். இப்படித்தான் இதே கேள்வியை வீரமணியிடம் சோ கேட்டபோது அவரும் மழுப்பிவிட்டார்.'சோ'வை நான்தான் வீரமணியிடம் அனுப்பினேன். நான் தயாரித்துத் தந்த கேள்விகளைத்தான் சோ - வீரமணியிடம் கேட்டார்."

சி.கு.: "தாங்கள் அப்படிக் கருதுவது தவறு - இந்தப் புத்தகக் கட்டில் கூட ஜீன் மெஸ்லியரின் நூல் - நான் ஏன் கிறிஸ்துவன் இல்லை என்பது போன்ற கிறுஸ்துவ மதத்தை விமர்சிக்கும் நூல்கள் இருக்கின்றன.மற்றொன்று எங்களது பிரதான வேலை இந்து மதத்தின் கேடுகளை அம்பலப்படுத்துவதுதான்.எனக்கு மதம் இல்லை; சாதி, கடவுள் ஆகியவைகளில் நம்பிக்கை கிடையாது. ஆனாலும் என்னைப் பற்றி அரசாங்கப் பதிவேடுகளில் என்னை இந்து என்றும் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவன் என்றும்தான் குறித்து எழுதுகிறார்கள். இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் இந்துக்களே; இந்தியாவை அலைக்கழித்து வரும் இந்து மதத்தைப் பற்றி விமர்சிப்பதையே நாங்கள் முதல் வேலையாகக் கருதுகிறோம்.கிறிஸ்துவர்கள் - முஸ்லீம்களை விமர்சிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியமல்ல; உங்களோடும் விசுவ இந்து பரிஷத்தோடும், இந்து முன்னணியோடும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களோடும் நாங்கள் ஒத்துழைத்தாலே போதுமே! அதைத்தானே நீங்கள் செய்து வருகிறீர்கள். எங்கள் நோக்கமும் செயலும் உங்களிடமிருந்து முற்றிலும் வித்தியாசமானது. நீங்கள் இந்துமத ஒற்றுமையின் பேரால் பிற மதங்களை ஒழிக்கவும் ஒடுக்கவும் பார்க்கிறீர்கள்; அது எங்கள் வேலையல்ல. இந்துமத முத்திரை குத்தப்பட்டவர்களிலும் 97 சதவீத மக்களை நீங்கள் சூத்திரர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும் மதத்தின் பேரால் ஒடுக்கி ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள். அந்தக் கொடுமைக்கு எதிரானதுதான் எங்கள் இயக்கம் எல்லாம்."

முடியுமா என்று கேட்கும் நண்பர் அருணுக்கு என் பதில் தேவையா என்பதுதான்....!!!

மற்றபடி நான் சன் டீவி பார்க்கவில்லை. அவற்றில் உள்ள விமர்சனப் பிரசாரம் எந்த அளவு என்பது எனக்குத் தெரியாது. சன் டீவி இந்துக்களின் பிரச்சார பீரங்கியல்ல. தன் பிழைப்பை இன்னமும் வளப்படுத்த விரும்பும் ஏமாற்றுக்காரர்களில் இன்னொரு பகுதி அவர்கள்.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...