சாக்ரமெண்டோ இன்டெல் (Intel) வளாகத்தில் நூற்று ஐம்பது பேர் அமரக்கூடிய உள்ளரங்கத்தில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் e-vite புண்ணியத்தில் வருகிறேன் என்று ஒத்துக் கொண்டவர்களோ வெறும் நாற்பது பேர். மயிலாப்பூர் ரெஸ்டாரெண்டில் இருந்து தேநீரும் சூடான வடைகளும், கொஞ்சம் வாசகர்களும் காத்திருந்தனர்.
நான் சென்னையில் இருந்து இறக்குமதியாகி இருந்த கதர் ஜில்பா மற்றும் சாயம்போன ஒரு உள்ளூர் நீல ஜீன்ஸ் சகிதம் ஒரு இந்திய ஹோட்டல் வாயிலில் காத்திருந்தேன். ஜெயமோகன் முன்னிரவே சாக்ரமண்டோ வந்து எங்கோ திருமலைராஜனின் நண்பர் வீட்டில் தங்கி இருந்தார். முதல் நாளிரவே வீட்டுக்கு அழைக்கலாம் என்று எண்ணமிருந்தாலும், இந்தியாவிலிருந்து வந்திருந்த அன்னை மற்றும் தந்தையை கருத்தில் கொண்டு மறுநாள் சந்திக்கலாம் என்று முடிவு செய்து கொண்டு காத்திருந்தேன்.
இருமுறை அல்லது மூன்றுமுறை தொலைபேசி அழைப்புக்குப் பின் கார் வந்து நின்றது. இறங்கியவுடனேயே கதவைத் திறந்து “ நான் ஜெயமோகன்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். உண்வு உண்ணச் சென்றோம். கொஞ்சமே கொஞ்சம் சோறு சாப்பிட்டார்- கோழி கொறிப்பது போல. ஆனால் கோழியை ஒதுக்கவில்லை. சாளேஸ்வரக் கண்ணாடிக்காரர்களுக்கே உரிய அச்சப்படத் தேவை இல்லாத கீழ்ப்பார்வை. குழந்தைகளைப் போல தாடையை வேகமாக அசைத்து விளையாட்டாக சாப்பிட்டார். சமீபத்தில் தியாகம் செய்த மீசை பல்வரிசையை முழுமையாய் காண்பித்தது. சற்றே கரிய கோடுள்ள பற்கள் புகைப்போதைப் பிரியரோ என்று யோசிக்க வைத்தன. கேட்கவில்லை.
உணவு முடிந்தபின் கூட்ட அரங்கம் நோக்கிய பயணம் தொடங்கியது. தன் புத்தகங்களில் கொற்றவையைப் பற்றி பேசினார். மாயவரம் வந்திருப்பதாக சொன்னார். ஜெயகாந்தனைப் பற்றி பேசினோம். சுந்தரராமசாமி மலேசியாவில் வீட்டுக்காவல் வைக்கப்ட்டதைப் பற்றி பேசினார். சரளமான பேச்சாக இருந்தாலும் சலசலவென்ற பேச்சாக இல்லை. இடையூடும் மெளனங்கள் செறிவாக இருந்தன.
கூட்டம் துவங்கியது. வரவேற்புரை வாசித்த அம்மணி ஜெயமோகனை டாக்டர் என்றும் ப்ரொபஸர் என்றும் விளித்தார். சிறிய புன்சிரிப்புடன் கேட்டுக் கொண்டார். நான் ஒரு சிறிய (எழுத்தாளர் அறிமுகம்) கட்டுரையை எழுதி வாசித்தேன். இலக்கியமும் வாழ்க்கையும் என்ற தலைப்பில் அவரை பேச அழைத்தேன்.
சுருக்கமான பேச்சு. முதல் நாள் பார்த்த மவுண்ட் சாஸ்தா மலையை, திருவண்ணாமலையையும், கயிலாய மலையையும் போல அல்லாமல், அதன் தத்துவ வரலாற்று முக்கியத்துவத்தை மறந்து அமெரிக்க சமூகம் எப்படி நுகர்ச்சிப் பொருளாக ஆக்கி விட்டது என்று சொன்னதோடு, பிழைப்பு/ வாழ்வு மற்றும் இருப்பு இவற்றுக்குமான நுண்ணிய வேறுபாடுகளை புரியுமாறு சொன்னார். அதற்கே கொஞ்சம் பேர் எழுந்து டீ குடித்து விட்டு வந்தார்கள். மொழி இல்லாமல், இலக்கிய பரிச்சயம் இல்லாமல் போனால் வாழ்வு எத்தனை மொண்ணையாக, தட்டையாக உயிரற்றதாக இருக்கும் என்று சொன்னார். இயற்கையையே கடவுளாய் மாற்றி மொழியின் மூலம் ஆன்மிக/தத்துவ செழுமையூட்டிய திருவண்ணாமலையின் வரலாறு சொன்னார். ஐம்பூதங்களில் திருவண்ணாமலை ஏன் அக்னிக்கான ஸ்தலமாக ஆனது என்று என் முக்கண் திறந்தது :-) . அருணகிரிநாதர் இல்லாத அண்ணாமலை தரிசனம் நிறைவாகவே இருந்தது.
வாசகர் கேள்விகள் தொடங்கின.
அவரது எழுத்தின் பாதிப்பு பற்றி, அவர் மலையாளத்தில் முழுக்க எழுதாமல் ஏன் தமிழில் எழுதுகிறார் என்பது பற்றி, கம்யூனிசம் கேரளத்தின் வளர்ச்சியை தடுப்பது பற்றி, எழுத்தாளர்களின் குடுமிபிப்பிடி சண்டையைப் பற்றி, இணைய எழுத்துக்களைப் பற்றி, அவர் என்ன எழுதுகிறார் என்பது பற்றி, எங்கு அவர் புத்தகங்கள் கிடைக்கும் என்பது பற்றி, இலங்கைப் போரின் முடிவு பற்றி, அவருடைய நீண்ட இந்தியப் பயணம் பற்றி, தமிழ்நாட்டின் மேடைப்பேச்சைப் பற்றி, கிரிமினலகள் கல்வித்தந்தை ஆனதால் ஆன பயனைப் பற்றி, பெண் கல்வி பற்றி....
கூட்டம் குறைவாக இருந்தாலும், Intellectual arrogance இல்லாமல், ஜெயமோகனுடன் ஜல்லிக்கட்டு விளையாடாமல், ஜெயமோகனுடன் நெருக்கமான நடிகைகளைப் பற்றிக் கேட்காமல் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் கலந்து கொண்ட வாசகர்கள் நன்றிக்குரியவர்கள். சிறிய நினைவுப்பரிசு வழங்கியபின் விழா இனிதே முடிந்தது. சிற்றுண்டியை புறக்கணித்துவிட்டு வேக வேகமாக குடாப்பகுதி சென்றார்.
குடாப்பகுதி கூட்டங்கள் ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் ஐந்து தேதிகளில் நடக்கின்றன. முடிந்தால் போகலாம் என்று ஒரு தோணல். பார்க்கலாம்.