Monday, September 20, 2010

சொல்ல மறந்த....


வாழ்த்துஅட்டை வாங்க
நேரிடும் நேரமெலாம்
நீளும் கணங்கள்
யுகங்களாய் அந் நாளில்
வண்ணங்களும் வார்த்தைகளும்
அழகான பொய்களுமாக
குழைத்து குழைத்து
காதலிழை நெசவில்
சிரிக்குமவை ஆயிரம் ஆயிரமாய்
எதை எடுக்க எதை விடுக்கவென
திண்டாடி திரிந்ததோர் காலங்கள் அவை
உன் தகப்பனைப்போலொருவனை நீயும்
என் தாயின் சாயலை ஒத்த்வளை நானும்
மணந்து வயதாகி மனமுதிர்ந்து
நமக்கு பொதுவானதாய்
நம் கடந்தகாலம் மட்டுமே ஆகிவிட்ட
இந்நாளிலும் உனக்காய்
ஓர் வாழ்த்துஅட்டை தேட
கனநேரமாயிற்று
எதையும் வெளிப்படுத்தாததாய்
எதுவும் தளும்பாததாய்
தேடித்தேடி களைத்து
இறுதியில் கிடைத்த
வார்த்தைகள் அற்ற
ஓர் ஒற்றைப்பூ அட்டை
என் மேசை இழுப்பறையில்
இன்னமும் தேம்புகிறது
கொடுக்கப்படாமல்

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...