Saturday, April 13, 2013

வெளி

முடிவற்ற விழிப்புணர்வே விடுதலையின் விலையாமென்ற *
மூத்தோரின் வாக்கினை எண்ணும் போழ்தில்
சுதந்திரமென்றெதனைச் சொன்னார் எனும்
கேள்வி முளைக்கும்....
***
வாழுகின்ற வாழ்க்கை நிலை பற்றி பெருமிதம் கொள்ளுகையில்
அதன் நிலையாமயின் நினைவு வந்து சுரீரென்று தைக்கும்
நன்று செய்தாய் நம்பி என பணியிடத்தில் புகழப்படுகையில்
என்னிலும் கூர்மையானோர் நினைவு வரும்
தோற்றப்பொலிவு கண்முண் தெரிகையில் இதனால்
தோற்றோர் பட்டியல் நினைவு வரும்
சுயநலமற்று விட்டு கொடுத்தோமே என இறுமாந்திருக்கையில்
தனைப் பெற்ற தாயவளின் நினைவு வரும்
நாள் முழுக்க வேலை செய்தும் கூலிக்கே அல்லாடும்
ஏழையொருவனின் சாயந்திர நேரத்து சதிராட்டத்தை
விளைவுகளை யோசியாமல் அவன் வீசி வீசி பேசுவதை
மனத்துள் கனம் கொள்ளாது அக் கணத்துக்காய் அவன் வாழ்வதை
சிந்தனைக்குள் குறுகாமல் அவன் குதியாட்டம் போடுவதை
அன்றைய நாளில் அவன் வெற்றியை மனதார ருசிப்பதை
காணுகையில்............
புலம்பலில் இறங்கும் மனது, பொருமலில் தொடர்ந்து
கேள்வியில் திணறும்
*******************
சுதந்திரமென்றெதனைச் சொன்னார்....??
பிரச்சினைகளினின்றும் சுதந்திரமா...
சூழல்களின் சுழல்களினின்றும் சுதந்திரமா...
சிந்தனையற்று சும்மா இருக்கும் சுதந்திரமா...
எனில் இதுவே துறவோ...??

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...