Thursday, December 18, 2014

சான் ஓசேவில் ஒரு தமிழ்த் திருவிழா - தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்!


ஊர் கூடித் தேர் இழுப்பது என்பது, மக்களின் ஒற்றுமையை ஊக்குவிப்பதற்காக அக்காலத்தில் ஏற்பட்ட வழக்கம். சிதறிக்கிடக்கும்  சக்திகளை  திரட்டி ஒருமுகப்படுத்தினால் இந்த உலகையே நம் உற்சாக நெம்புகோலால் உருட்டி விடலாம் என்பது நாம் அறியாததல்ல. சான் ஓசேவில் 2015 – ஜூலை 3, 4 தேதிகளில் நடக்கும் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழாவும் அப்படிப்பட்ட ஒரு முயற்சியே. தேர் திருவிழாவில் பவனி வரப்போவது நம் சீர்-சிறப்பு பெற்ற தமிழ் அன்னை.   இவ் விழாவில் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் சுவையில் இனிய நிகழ்ச்சிகள் அத்துறை வல்லுநர்களால் நடத்தப்படுகிறது. தமிழ்த்திரை பிரபலங்களின் உற்சாகமான பங்களிப்புடன், பேரவையின் 27 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக சான்பிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதியில் நடக்கப் போகும் இந்த விழா மக்களை கிட்டத்தட்ட 80 மணி நேரங்களுக்கு உவகையூட்டக் கூடிய மாபெரும் கலைவிழா. சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதி தமிழ்மன்றம் தலைமை ஏற்று நடத்தும் இந்த விழாவில் இம்மன்ற உறுப்பினர்கள் பல்வேறு திட்டக் குழுக்களில் முனைப்பாக ஈடுபடுவதுடன், விழா முன்னேற்பாடுகளில் சாக்ரமெண்டோ தமிழ் மன்ற உறுப்பினர்களும் ஆர்வமாக பங்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு அறக்கட்டளை (TNF - Tamilnadu Foundation) மற்றும் அமெரிக்க தமிழ் மருத்துவ அமைப்பு (ATMA - American Tamil medical Association) போன்ற முக்கியமான அமைப்புகளும் தொண்டுக்கு தோள் கொடுத்து வருகின்றன.

இந்த விழாவின் கருப்பொருள்தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்!’ இதன் படி பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. பிரபல பாடகி சௌம்யா வரதன், மற்றும் பட்டிமன்ற/கவியரங்கக் கவிஞர் சுமதிஸ்ரீ ஆகியோர் இசைத் தமிழையும் இயற்றமிழையும் கொண்டாடுகிறார்கள். விஜய் டீவி புகழ் “சூப்பர் சிங்கர்” திறமையாளர்கள்  செல்வன் திவாகர், செல்வி பூஜா மற்றும்  செல்வி பிரகதி ஆகியோர்கல இசை மழையில் நம்மை நனைக்க வருகிறார் திரையிசைப் பாடகர் ஹரிசரண். இவருடைய Bennette and Band  குழுவில் தானும் பாடுவதுடன், தமது புத்தர் கலைக்குழுவினருடன்,   தமிழ்நாட்டின் ஆதி இசையாகிய பறை இசையயை இசைத்து அனைத்துலக தமிழ்ர்களுடன் நடன நிகழ்ச்சி வழங்குகிறார்  “கும்கி” புகழ்  மகிழினி மணிமாறன்..   கலைக்காவிரி கல்லூரி முதல்வர் முனைவர் மார்கரெட் பாஸ்டின்,  தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் திரு தி.உதயசந்திரன் ( ..), பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சார்ந்த திரு சுந்தரராஜன் முதலான மற்ற அறிஞர்களும் சிறப்புரை வழங்க, நடிகை ஏமி ஜாக்சன் தமிழ்த்திரை விரும்பிகளுக்கு உற்சாகமூட்ட விழாவில் கலந்து கொள்கிறார். அது மட்டுமன்றி பல முன்னனி திரைக்கலைஞர்கள் மற்றும் தமிழறிஞர்களின் வருகைக்குமான பூர்வாங்க வேலைகள் நடந்து வருகிறது. உலகத் தமிழர்களுக்கிடையே உறவுப்பாலம் அமைக்க சன் டிவி புகழ்கல்யாண மாலைநிகழ்ச்சியும் இந்த விழாவில் நடைபெற உள்ளது.  இந்த வருட சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற நாவலான “அஞ்ஞாடி” நாவலை எழுதிய ஆசிரியர் திரு.பூமணி அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட உள்ளது.

இவ் விழா சிலிக்கான் பள்ளதாக்கில் நடைபெறுவதால், தொழில் முனைவோருக்கான நிகழ்ச்சி (Entrepreneurship Forum) மிகவும் புதுமையாகவும், பெரிய அளவிலும் ஒழுங்கு செய்யப்படுகிறது. இரு துணை அரங்குகளில் நான்கு முக்கிய சிறப்பு அழைப்பாளர்களோடு இந்நிகழ்ச்சி நடக்கும். தொழில் முனைவோரின் சிறந்த/புதிய/சுய திட்டங்களுக்கு (Best startup ideas) சிறப்பு செய்து ஊக்குவிக்கும் வகையில் மாபெரும் போட்டி நடைபெற உள்ளது. புதுத்தொழில் திட்டங்களின் முதலீட்டாளர்களை (Venture capitalists) நடுவர்களாக கொண்டு, தேர்ந்தெடுக்கப்படும் திட்டங்களுக்கு பரிசும் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் சுயதொழில் முனைவில் விருப்பம் உள்ளோர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டிய அரிய நிகழ்ச்சியிது. அது மட்டுமல்ல, சுயதொழில் முனைவில் யோசனை/ திட்ட முன்வரைவு உள்ளோர் அதை எவ்வாறு வெற்றிகரமான தொழிலாக எடுத்து செல்ல வேண்டும் என்பதை சந்தை ஆராய்ச்சி (Market research), நிதி, திட்டமிடல், சட்டம் என பல  பரிமாணங்களில் விளக்கும் வகுப்புகளும்  நடக்க உள்ளன.மிகப்பெரிய நிறுவனங்களில் உயர் பதவியில் இருப்போர், வெற்றிகரமான தொழில் முனைவர்கள் மற்றும் இந்தியாவில் தொழில் தொடங்குவது பற்றி விவரிக்க அரசு பணியாளர்கள் என பல்முனை நோக்கிலும் கருத்தரங்குகள் நடக்க உள்ளன.உயர்நிலை, நடுநிலைப்பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி ஆகும். அமெரிக்க தமிழ் முன்னோடிகளை (Tamil American Pioneer) கண்டறிந்து அவர்களுக்கு பேரவையின் தமிழ் முன்னோடி விருதும் (TAP Award) அளிக்கப்பட்டு சிறப்பு செய்யப்படவுள்ளார்கள். அமெரிக்க தமிழ் மருத்துவ அமப்பு (ATMA) பேரவையுடன் இணைந்து, மருத்துவர்களுக்கான தொடர்கல்வி நிகழ்ச்சிகள் (CME - Coninuing medical education seminars) ஏற்பாடு செய்யப்படுகின்றன.   

நாடகத் தமிழுக்கு சிறப்பு சேர்க்க வரலாற்று நாடகம் அரங்கேறுகிறது. வரலாற்றுப் புதினங்களுக்கு பெருஞ்சிறப்பு பெற்ற எழுத்தாளர் கல்கியின்பொன்னியின் செல்வன்நாவலை மிகப் பெரிய வெற்றிப்படைப்பாக அமைத்து வழங்கிய, அபிராமி கலை மன்றத்தின் பாகீரதி சேஷப்பன், ஸ்ரீதரன் மைனர், மற்றும் வேணு சுப்பிரமணியன் ஆகியோர், இம்முறை அவரின் மற்றுமொரு படைப்பாகியசிவகாமியின் சபதம்நாவலை அரங்கேற்ற இருக்கிறார்கள். வளைகுடா பகுதி தமிழ் நாடக ஆர்வலர்களை கொண்டு அரங்கேறும் இந்த நாடகம், விழாவின் முக்கியமான ஒரு நிகழ்வு.

பேரவையின் தமிழ் விழாவைக் குறித்து அறிய சுட்டவும் www.fetna2015.org அல்லது www.fetna.org. மேலும் விவரங்களுக்கு coordinator@fetna.org அல்லது secretary@bayareatamilmanram.org ஆகிய மின்னஞ்சல்களுக்கு எழுதவும்.


                                    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’

( தன்னார்வலராக  Fetna 2015 விழாவில் பங்கேற்றபோது எழுதியது. ”தென்றல்”  மாத இதழில் வெளிவந்த கட்டுரை  )
 

Sunday, August 03, 2014

ஜிகிர்தண்டா

நேற்றிலிருந்து மண்டைக்குள் சுற்றிக் கொண்டே இருக்கிறது இந்த படம். எழுதிவச்சா கொஞ்சம் “விட்டாப்புல” இருக்கும் போல ஒரு தோணல்.

படம் ஆரமிச்சதே “நாளைய இயக்குநர்”  நிகழ்ச்சி மாதிரி ஒரு நிகழ்ச்சில. படத்தோட கதை ஓரளவுக்கு தெரிஞ்சதால,  ஹீரோ மதுரைக்கு போவார்னு தெரியும். ஆனா மதுரைக்கு போன பின்னாடி கருணா/சிம்ஹா அறிமுகம், ரவுடிகள் அறிமுகம், அப்புறம் அவங்க வீக்னெஸ், நடு நடுவுல ரத்தம் தெறிக்க தெறிக்க சிலபல கொலைகள், புடவை திருடற ஹீரோயின் அப்படின்னு ஒரு மார்க்கமாவே படம் போயிகிட்டு இருந்துது. கேங்ஸ்டர் படம்னு சொன்னாலும், படம் முதல்லேர்ந்தே காமெடி அங்கங்கே தூவிகிட்டே இருந்தாய்ங்க - அக்மார்க் மதுரை குசும்பு.



படத்துல பாபி சிம்ஹா அதகளம். ஹாலிவுட் படங்கள்ள வர்ற Rob Schneider மாதிரி ஒரு அப்பாவி மூஞ்சிய வெச்சிகிட்டு ....என்ன்..ன்னா ஒரு வில்லத்தனம்...முதல் சீன்லயே அவரு வேண்டாம் வேண்டம்னு சொல்ல சொல்ல, மீறிக்கிட்டு இட்லி வெக்கிற அம்மாவை திட்டும் போது மனசுல பச்சக்குனு வந்து உக்காந்துட்டாரு.

படம் இடைவேளைக்கு அப்புறம் வேற லெவலுக்கு போறதே தமிழ்நாட்டின் சினிமாவை ஆராதிக்கிற மனோபாவத்துனால. செய்யுளிலும் , காவியங்களிலேயும், கதைகளிலும் நாடகங்களிலும் ஊடாடிக்கிட்டு இருந்த நம்ம மக்கள் இன்னைக்கு ரசிக்கிற ஒரே இலக்கியம் சினிமா தானே. சும்மாவா...கால காலமா தமிழ்நாட்டுல கஜானாவையே திறந்து அவங்க கிட்டதானே குடுத்துகிட்டு இருக்கோம்.  இதுக்கு தாதா மட்டும் விதிவிலக்கா..?  ஓவர் நைட்ல “நாயகன்” “தளபதி” பேரைக் கேட்டுட்டு படத்துல கேரக்டர் எல்லாம் தலைகீழாயிடுது. கொஞ்சம் கோமாளித்தனமா ஆகற நேரத்துல கூத்துப்பட்டறை சோமசுந்தரம் வந்து சும்மா “கும்” முனு படத்தை தூக்கி நிறுத்துராரு. சினிமா கிறுக்கோட உச்சகட்டம் அந்த எழவு வீடு. நல்ல பகடி.. :-)

என்னதான் ”டாரண்டினோத்தனமா”  படத்தை கொண்டுபோனாலும், உள்கருத்து என்னன்னா, எல்லா ரவுடியும் அடிப்படைல சாதாரண மனுசந்தான். ஒரு “சம்பவத்தை” பண்ணிட்டதால அவன் அப்படியே மிருகமா மாறிடலை. கம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங் பண்றது ஒரு தொழில் மாதிரி போட்டுத் தள்றது அவனுக்கு ஒரு தொழில்.எனக்குத் தெரிஞ்சு  சமீப கால படங்கள்ள ”நான் மகான் அல்ல” ரவுடிகிட்டேயே டைரக்டர் சுசீந்திரன் லைட்டா இந்த விஷயத்தை காட்டி இருப்பாரு.  இந்தப் படத்துல,  ஒரு கொலை சீன்ல சக- ரவுடி ஒருத்தர் சொல்வாரு - சீக்கிரம் “போடுங்கண்ணே”. காலையில அப்பாவை சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போவணும்னு.  :-)

”தளபதி” மம்முட்டிகிட்ட சாதாரண ஜனங்கள் நெருங்கி வந்து பேசும்போது ஒரு நெகிழ்ச்சி வரும் அவருக்கு. அதே விஷயத்தை அவ்ளோ சாஃப்டா சொல்லாம காரசாசரமா உலகத் திரைப்படங்கள் பாக்கற நம்ம இளைய தலைமுறைக்கு புடிக்கர மாதிரி கொடைக்கானல் மலை கொண்டை ஊசி திருப்பங்களோடு நல்ல கிராண்டா குடுத்துருக்கார் டைரக்டர். படத்துக்கு சிம்ஹா, சந்தோஷ், கேவ்மிக், விவேக், சித்தார்த், விஷ்ணு என்று ஆயிரம் பங்களிப்பாளர்கள் இருக்கலாம்.

ரியல் ஹீரோ டைரக்டர் கார்த்திக் சுப்பாராஜ் தான். அவர் போக வேண்டிய உயரங்கள் காத்திருக்கிறது. வாழ்க வளமுடன். அந்தக் கால நியூட்ரமுல் விளம்பரத்துல வர்ற மாதிரி இருக்கற ஒரு குண்டுப் பையணுக்குள்ள கடவுள் இவ்ளோ பெரிய படைப்பாற்றல் ”திரி”ய பத்த வச்சு விட்டிருக்காரு. சரியான அணுகுண்டு :-)

 

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...