கோட்டை கொத்தளத்தின் மேல் நின்று கொண்டு நாம் ஊர் எல்லையை பார்ப்பது போல் இருக்கிறது. ஜய பேரிகைகள், துந்துபிகள் மற்றும் எக்காளம் ஆகியவற்றின் முழக்கங்கள் கேட்கின்றன. வந்து கொண்டிருக்கும் சைன்யத்தின் இரைச்சல், மகிழ்ச்சி கலந்த பேச்சொலிகள்,
நடக்கும் கால்களின் உபயத்தால் கிளம்பும் புழுதி மேகம் இவற்றின் நடுவே நடுநாயகமாக யானையின் மீதேறி வந்து கொண்டிருக்கிறாள் தமிழன்னை. ஆம்.. ஜூலை 3,4, 5 தேதிகளில் குடாப்பகுதி தமிழ்மன்றம் தலைமை ஏற்று நடத்தும் ஃபெட்னா தமிழ்ச் சங்கப் பேரவை விழாவின் ஏற்பாடுகள் முழு வேகத்தில் நடந்து வருகின்றன. இவ் விழாவில், இயல்,
இசை,
நாடகம் ஆகிய முத்தமிழ் சுவையில் இனிய நிகழ்ச்சிகள் அத்துறை வல்லுநர்களால் நடத்தப்படுகிறது.
தமிழ்த்திரை பிரபலங்களின் உற்சாகமான பங்களிப்புடன் நடக்கும் இந்த விழா நம் மக்களை கிட்டத்தட்ட 80 மணி நேரங்களுக்கு உவகையூட்டக் கூடிய மாபெரும் கலைவிழா.
தமிழ்நாடு அறக்கட்டளை
(TNF - Tamilnadu Foundation) மற்றும் அமெரிக்கத் தமிழ் மருத்துவ அமைப்பு (ATMA - American Tamil medical
Association) போன்ற முக்கியமான அமைப்புகள் தொண்டுக்குத் தோள் கொடுத்து வருகின்றன. அமெரிக்கத் தமிழ் மருத்துவ அமைப்பு (ATMA) பேரவையுடன் இணைந்து,
மருத்துவர்களுக்கான தொடர்கல்வி அமர்வு (CME
- Continuing medical
education) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது Emory University School of Medicine, Atlanta வினால் அங்கீகரிக்கப்பட்ட அமர்வாகும்.
வட அமெரிக்க நாடுகளில் வாழும் தமிழ் சமூகம் அந்நாட்டின் வளர்ச்சிக்கு தங்களது சீரிய பங்கினை ஆற்றி வந்திருக்கின்றனர். பல தமிழர்கள் தங்களது துறைகளில் தலைமையிடத்தை அடைந்து சிறப்புப் பெற்றுள்ளனர்.
அவ்வாறான முன்னோடிகளை சிறப்பிக்கவும்,
அவர்கள் நம் வருங்கால தலைமுறையினருக்கு வழிகாட்டிகளாகத் திகழவும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை 2014 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கத் தமிழ் முன்னோடிகள் விருதுகளை
(Tamil American Pioneer Award) வழங்கி வருகிறது. அவ்வகையில்
2015ஆம் ஆண்டின் விருதுகளை, ஜூலை மூன்றாம் நாள் மதியம் பெறப்போகும் தமிழ் முன்னோடிகள் இதோ
1. முனைவர் ரங்கசுவாமி ஸ்ரீநிவாசன், கண்டுபிடிப்பாளர். இவர் லேசர் ஒளியினைக் கொண்டு கண் அறுவை சிகிச்சை செய்யும் முறையினைக் கண்டுபிடித்தவர்.
2. திரு கிருஷ்ணன் சுதந்திரன், தொழில் அதிபர் - டீம் பெஸ்ட் நிறுவனத்தின் தலைவர். http://en.wikipedia.org/wiki/Krishnan_Suthanthiran
3. முனைவர் முத்துலிங்கம் சஞ்சயன், இயற்கை அறிவியலாளர்
4. பேராசிரியர் சேதுராமன் பஞ்சநாதன், கணிப்பொறியியல்,
http://en.wikipedia.org/wiki/Sethuraman_Panchanathan
5. பேராசிரியர் ப்ரியம்வதா நடராஜன், வானியற்பியல், யேல் பல்கலை
7. திரு பி பீமன், இசைக் கலைஞர்,
8. அகிலன் அருளானந்தம், பேராசிரியர் மற்றும் வழக்குறைஞர்,
அது மட்டுமா.
பிரபல பாடகி சௌம்யா வரதன், மற்றும் பட்டிமன்ற/கவியரங்கக் கவிஞர் சுமதிஸ்ரீ, கவிமாமணி அப்துல் காதர் ஆகியோர் இசைத் தமிழையும் இயற்றமிழையும் கொண்
டாடுகிறார்கள். கவிமாமணி அப்துல் காதர் அவர்கள் தலைமையில் ’ஆர்த்தெழு நீ!’ என்ற தலைப்பில் மாபெரும் கவியரங்கத்தில் சுவையான தலைப்புகளில் புலம் பெயர் தமிழ் கவிகள் கவிபாட உள்ளனர். கவிஞர் சுமதி ஸ்ரீ அவர்கள் நெறிப்படுத்தி நடத்தும் அனல் பறக்கும் கருத்துக்களம்
”தமிழன் தன் அடையாளத்தை நிலைநிறுத்த மிகவும் அவசியமானது மொழியா? கலையா”என்ற தலைப்பில் நம் நெஞ்சத்தை கொள்ளை கொள்ளும் என்பது உறுதி.
இசை
மழையில் நனைக்க , விஜய் டீவி புகழ் “சூப்பர் சிங்கர்” திறமையாளர்கள் செல்வி பூஜா மற்றும் செல்வி பிரகதி ஆகியோர்களுடன்
வருகிறார்கள் திரையிசைப் பாடகர்கள் ஹரிசரண், ஆலாப் ராஜு மற்றும் ரோஷினி. பாடகர் ஹரிசரணுடைய
Bennette and Band குழுவில் தானும் பாடுவதுடன்,
தமிழ்நாட்டின் ஆதி இசையாகிய பறை இசையயை இசைத்து, தமது புத்தர் கலைக்குழுவினருடன் அனைத்துலக தமிழர்களையும் இணைத்து புதுமையான நடன நிகழ்ச்சி வழங்குகிறார்
“கும்கி” திரைஇசைப்புகழ்
மகிழினி மணிமாறன். சங்கீத இசைப்பேரறிஞர் ஸ்ரீ பாபநாசம் சிவன் அவர்களின்
125 வது ஆண்டு நினைவாக அவரின் பொன்னான பாடல்களை முன் வைத்து ஒரு இசை, வாத்திய நிகழ்ச்சி நடக்கிறது. சாகித்திய அகாதெமி விருது பெற்ற
"அஞ்ஞாடி” நாவல் எழுத்தாளர் திரு. பூமணி, தமிழ்/இந்தியவியல் அறிஞர்கள் முனைவர் சுடலைமுத்து பழனியப்பன், முனைவர் வி.எஸ்.
இராஜம்,
வைதேகி ஹெர்பர்ட், பேராசிரியர் மைக்கேல் விட்சல் (ஹாவர்டு பல்கலைக்கழகம்)
போன்றோர் கலந்து கொள்ளும் இலக்கிய நிகழ்வு அரங்கேறுகிறது. நடிகை ஏமி ஜாக்சன் தமிழ்த்திரை விரும்பிகளுக்கு உற்சாகமூட்ட விழாவில் கலந்து கொள்கிறார். உலகத் தமிழர்களுக்கிடையே உறவுப்பாலம் அமைக்க ”நவீனத் திருமணம்” நிகழ்ச்சியை சன் டிவி புகழ் ”கல்யாண மாலை” குழு இந்த விழாவில் நடத்துகிறது.
இவ்விழா சிலிக்கான் பள்ளத்தாக்கில் நடைபெறுவதால்,
சுயதொழில் முனைவோருக்கான நிகழ்ச்சி
(http://www.tef2015.org/)இரு துணை அரங்குகளில் முக்கிய சிறப்பு அழைப்பாளர்களோடு பெரிய அளவில் ஒழுங்கு செய்யப்படுகிறது.
தொழில் முனைவோரின் சிறந்த புதிய/சுய திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் மாபெரும் போட்டி நடைபெற உள்ளது. புதுத்தொழில் திட்டங்களின் முதலீட்டாளர்களை நடுவர்களாகக் கொண்டு, தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த திட்டங்களுக்குப் பரிசு கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, சுயதொழில் முனைவில் யோசனை/ திட்ட முன்வரைவு உள்ளோர் அதை எவ்வாறு வெற்றிகரமான தொழிலாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை, சந்தை ஆராய்ச்சி, நிதி,
திட்டமிடல்,
சட்டம் எனப் பல பரிமாணங்களில் விளக்கும் வகுப்புகளும்
நடக்க உள்ளன.மிகப்பெரிய நிறுவனங்களில் உயர் பதவியில் இருப்போர், வெற்றிகரமான தொழில் முனைவர்கள் மற்றும் தொழில் தொடங்குவது பற்றி விவரிக்க எனப் பல்முனை நோக்கிலும் கருத்தரங்குகள் நடக்க உள்ளன.இளைஞர்கள் மற்றும் சுயதொழில் முனைவில் விருப்பம் உள்ளோர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டிய அரிய நிகழ்ச்சியிது.
இளையோர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளக் கூடிய ஒரு பக்க சிறு கதைப் இப்போட்டிக்கான கரு: "புலம் பெயர்ந்த தமிழர்களின் இன்றைய தலைமுறை எதிர்நோக்கும் பண்பாட்டு முரண்பாடுகள்(cultural conflicts)". தலை சிறந்த மூன்று சிறுகதைகள் "சிறகு" தமிழ் இணைய வார இதழில் பிரசுரிக்கப் படும்! இப்போட்டிக்கானசிறுகதையை அனுப்பி வைக்க வேண்டிய கடைசி தேதி ஜூன் 10, 2015
தமிழ் கலாச்சாரத்தையும் வாழ்க்கையையும் பிரதிபலிக்க குறும்படப் போட்டியும்,
இளையர்களுக்கான இளையர்களால் முன்னெடுக்கப்படும்
Youth Meet போன்ற நிகழ்ச்சிகளும், அனைவரும் கலந்து கொள்ளக்கூடிய தமிழ் இலக்கிய வினாடி வினா மற்றும் ஆர்வத்தைத் தூண்டும் தமிழ்த்தேனீ போன்ற கவிதை மற்றும் நிழற்படப் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட உள்ளன. தமிழ்குறும்படப் போட்டியில் பேரவைக் குழுவினருடன் இணைந்து செயல்பட பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜின்
BenchFlix நிறுவனம் முன்வந்துள்ளது. தமிழில் சமீபகாலங்களில் வெளிவந்த ”பீட்சா” மற்றும்
“ஜிகிர்தண்டா” படங்கள் மூலம் அதிக கவனம் பெற்றவர் இளம் தலைமுறை இயக்குநர் திரு.கார்த்திக் சுப்பாராஜ் அவர்கள். இந்நிறுவனம்
தமிழ் குறும்படங்களை அங்கீகரித்து,
அவர்கள் பொதுவெளியில் அங்கீகாரம் பெறவும், ஆர்வத்துடன் செயல்படவும் உதவி வருகிறது. தமிழ் பேரவைக்கான குறும்படப் போட்டியில் பரிசுக்கான படங்களை தெரிவு செய்வதில் நம் பேரவைக்குழுவுடன்
இணைந்து கார்த்திக் சுப்பாராஜ் செயல்பட உள்ளார். தமிழ் பேரவை பரிசை வென்ற படங்கள் அவர் நிறுவனம் மூலம் தமிழக/இந்திய அளவில் அங்கீகாரம் பெற சாத்தியக் கூறுகள் உள்ளன. பேரவையின் தமிழ் விழா வரலாற்றிலே முதன் முறையாக இந்த ஆண்டு தமிழ் விழாவில் சிறந்த தமிழ்த் திரைப்படங்களுக்கான விருது வழங்கப்படவுள்ளது.
பெட்னா திரைப்படவிருது பெறும் திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் குழு மும்முரமாக செயலாற்றிவருகிறது. சிறந்த ஐந்து திரைப்படங்களை இக்குழு ஜூன்
மாத இறுதிக்குள் தேர்ந்தெடுக்கும்.
அந்த ஐந்து
திரைப்படங்களில் சிறந்த திரைப்படம் தமிழ்சங்க
விழாவிற்கு வருகைதர பதிவு செய்துள்ள தமிழன்பர்களால் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும்
நாடகத் தமிழுக்கச் சிறப்பு சேர்க்க வரலாற்று நாடகம் அரங்கேறுகிறது. வரலாற்றுப் புதினங்களுக்குப் பெருஞ்சிறப்பு பெற்ற எழுத்தாளர் கல்கியின் ”பொன்னியின் செல்வன்” நாவலை மிகப் பெரிய வெற்றிப்படைப்பாக அமைத்து வழங்கிய, அபிராமி கலை மன்றத்தின் பாகீரதி சேஷப்பன், ஸ்ரீதரன் மைனர், மற்றும் வேணு சுப்பிரமணியன் ஆகியோர், இம்முறை அவரின் மற்றுமொரு படைப்பாகிய ”சிவகாமியின் சபதம்” நாவலை அரங்கேற்ற இருக்கிறார்கள்.
வளைகுடாப் பகுதி தமிழ் நாடக ஆர்வலர்களைக் கொண்டு அரங்கேறும் இந்த நாடகம், விழாவின் முக்கியமான ஒரு நிகழ்வு.
தமிழன்னையின்
ஆனந்த ஊர்வலம் நெருங்கி வந்து விட்டது. அணியும் மணியும் புனைந்து, அன்பே தகளியாக ஆர்வமே நெய்யாக, அறிவென்ற பெருநெருப்பு எழுந்து நம்மை ஆட்கொள்ள வருகிறது. அணி திரளுங்கள்.
தமிழ்ச் சமூகம் விவேகம் கொள்ள வேண்டிய தருணமிது. தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.
பேரவையின் தமிழ் விழாவைக் குறித்து அறிய சுட்டவும்
www.fetna2015.org அல்லது www.fetna.org. மேலும் விவரங்களுக்கு coordinator@fetna.org அல்லது
secretary@bayareatamilmanram.org ஆகிய மின்னஞ்சல்களுக்கு எழுதுங்கள்.