Sunday, April 09, 2017

காற்று வெளியிடை - பானி பூரியில் பருப்பு சாம்பார்

”காற்று வெளியிடை” ன்னா என்ன? என்கிற ஒற்றை வசனத்தை வைத்துக்கொண்டு மணி படங்களில் வந்த பல காட்சிகளை கோத்து ஒரு யூடியூபில் ஒரு வீடியோ சமீபத்தில் ரிலீசானது. “மச்சி.. அதுவே பெட்டர். படம் செம மொக்கை” என்றவர்களை மீறிக்கொண்டு போய்ப் பார்த்த படம்... ஆனால் படம் அவ்வளவு மோசம் எல்லாம் இல்லை.  ஒருமுறை பார்க்கலாம்




படத்துக்கு தேங்காய் உடைக்கும்போதே ”ஹிந்தி”யாவெங்கும் ரிலீஸ் பண்ணி கல்லா கட்டலாம் என்று ஏதோஒரு புண்ணியவதி ஓதியிருப்பார் போல. படத்துக்கு backdrop, லொகேஷன்கள்,  பாடல் எடுத்த விதம்,  கதாபாத்திரத்தின் காஸ்ட்யூம்கள், அவர்கள் பழக்க வழக்கங்கள் (வட இந்தியப் பெண்கள் தன் குடும்பத்து ஆண்களை பார்க்க வரும்போது தலையில்  லைட்டாக முக்காடு இட்டுக் கொள்வார்கள்), பாத்திரங்களின் உடல்மொழி எல்லாவற்றிலுமே சப்பாத்தி/ ராஜ்மா வாசனை. என்னதான் அழுத்தம் திருத்தமாக “சக்ரபாணி பிள்ளை” என்று அழுத்தி அழுத்தி சொன்னாலும் கார்த்தியின் அப்பா படத்தில் “லாலா கடை” சேட்டு மாதிரிதான் இருக்கிறார் . அதிலும் நாயகியின் குடுமபத்துடன் உணவகத்தில் கார்த்தி முரண்படும் அந்த சீன்.. என்ன நடக்குதுனு கொஞ்சம் சொல்லுங்கப்பா என்று உரக்கக் கத்தலாம் போலிருக்கிறது.  பாவம்.... ஒட்டாத குடும்பங்கள். ”செட் ப்ராப்பர்டி” மாதிரி வந்து போகின்றன. ஆனால் ஒன்று.. மணி படங்கள் பார்த்து வளர்ந்த மத்திய வயது மாமாக்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, இளைய தலைமுறையினருக்கு படம் பிடித்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது - கொஞ்சம்  கத்திரி போட்டு  காட்சி அமைப்புகளை வேகமாக வைத்து இருந்தால். அதிலும் மேடிட்ட வயிற்றோடு ”கண்ணாலம்” கட்டிக் கொண்ட இளசுகள் கொஞ்சம் கிளுகிளுத்துப் போயிருப்பார்கள் படத்தில் அது  கிட்டத்தட்ட ”பிள்ளை”வாள் ஃபேமிலி டிரெடிஷன் மாதிரி வருகிறது. மணி சரக்கு தீர்ந்து விட்டதென்றெல்லாம் நான் நம்பத் தயார் இல்லை.  குடும்பத்தில் உள்ள ”தலையணை” ஆலோசகர்களிடம் இருந்து சற்றே விலகி இருந்தாலே போதும்.


கார்த்தி சிவகுமார் அந்த ஆகிருதிக்கும் உடம்புக்கும் ஃபைட்டர் பைலட் வேஷத்தில் செம ஃபிட். கர்வமாகவும் ஆண்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று சொன்னதை அவர் திரையில் கொண்டு வந்த விதம்தான் கொஞ்சம் நெளிய வைக்கிறது. தலையை 23 டிகிரிக்கு சாய்த்துக் கொண்டு சதா ஒரு அசமஞ்சப் புன்னகை- பாகிஸ்தான் சிறையில் இருந்து தப்பி பஸ்ஸின் டாப்பில் தப்பித்து வரும்போது கூட.   க்ளோஸப் காட்சிகளில் ”படக்”கென்று லைட்டைப் போட்டது போல கண்களை அகல விரித்துக் கொண்டு பார்க்கும்போது  தியேட்டரில் பெண்களும் குழந்தைகளும் வீறிட்டு அலறுகிறார்களாக்கும் :-).   தன் இயல்பு தொலைத்து ”டைரக்டர் ” சார் சொன்னபடி நடிக்க வேண்டும் என்ற எண்ணம்  இந்த நல்ல நடிகனை காவு வாங்கி விட்டது. மாதவன் இந்த கேரக்டருக்கு ”பச்சக்”கென்று செட்டாகி இருப்பார். பிரசன்னா கூட சரியாக வந்திருக்க வேண்டும். மணி சாரின் படத்தில் நடிக்கக் கூடிய எல்லாத் தகுதிகளும் மேற்சொன்ன இருவருக்கும் உண்டென்றாலும், கார்த்தியை பிடித்து “இருவர்” பிரகாஷ்ராஜ் போல நடிக்க வைத்து.... ஹூம்.. என்ன சொல்ல?


நாயகி ”அதிதி ராவ் ஹைதரி” பாந்தம். கதைதான் Pan Indian என்றால் கதாநாயகியும் Pan Indian material தான். அம்மிணிக்கு வயசு முப்பதாம். மூஞ்செல்லாம் மூக்கு.  சில க்ளோஸப்புகளில்  பாலில் விழுந்த பாச்சைக் குஞ்சு போலிருந்தாலும் , மிச்ச  காட்சிகளில் அந்த அசத்தல் உடையலங்காரம் / காது கம்மல்களோடு அட்டகாசமாக இருக்கிறார். இந்தக் கிளி ”ராவ் காரு” குடும்பமா, ராவுத்தர் குடும்பமா என்று இணையத்தில் தேடியதில் சரியான கொலாப்ரேஷன் என்று தெரிய வருகிறது .Instagram ல் சர்வ ”சுதந்திரமாக”  இருக்கிறார் :-)  நடனமாடும் நங்கை. பாட்டுப்பாடும் குயில், ராச குடுமபத்து ரத்தம் வேறு.. ஏற்கனவே பல இந்தியப் படங்களில் நடிதத அனுபவம்... பார்ப்போம் இவர் தொடர்ந்து கலைச்சேவை புரிய வருகிறாரா இல்லை கிரிஜா செட்லூர் போல ”one film wonder” ஆ என்று.


நாயகன் நாயகியைத் தவிர பாக்கி அனைவரும் வேஸ்ட். அதிலும் ஆர்.ஜே.பாலாஜி வயிற்றுக் கடுப்பு வந்தவர் போல இருக்கிறார். மனசு விட்டுப் பேசி எல்லாரையும் மரண கலாய் கலாய்க்கும் இந்த இளைஞ்னை இப்படி பார்க்க டைரக்டருக்கு அப்படி என்ன ஆசையோ?  டெல்லி கணேஷும் அதே. அவருடைய நிஜ இளமைக் கால கருப்பு வெள்ளை  புகைப்படம் அவர் சாவு சீனில் வந்து போகிறது அதை தாண்டி இவர் இந்த ரோலுக்கு எதற்கு என்ற எண்ணமே எழுகிறது. கொட்டாப்புளியால் கொசு அடித்திருக்கிரார்கள். ருக்மிணி ரொம்ப சுமார். மற்றவர்கள் யாரையும் அடையாளம் தெரிவதற்குள் படத்தில் அவர்கள் பாத்திரமே  மூழ்கி விடுகிறது. ஜோக்கருக்கு தேசிய விருது வாங்கிய சுந்தர் அய்யர் மாதிரி பிற்காலத்தில் விருதுகள் மூலம் தெரிய வரலாம். ஹி,.. ஹி.


"He met the angel and then they lived happily ever after" என்று சொல்லத் தகுந்த கடைசி காட்சி அற்புதம். உடல் பலமும், ஆண் கர்வமுமே சாஸ்வதம் என்று இறுகாறும் நம்பிய ஒரு ஆத்மா தன் கண்ணெதிரே தன் விதையை அந்த பாலைவன மண்ணில் கண்டதும் கிட்டத்தட்ட தன் எல்லாத் திமிரையும் அந்தப் பிஞ்சின் காலடியில் இறக்கி வைத்துக் கரையும்போது கண்கள் கரிக்கின்றன.


மணி சார்.. தமிழ்ப்படத்துக்கு டைட்டில்  மட்டுமல்ல.. கதையையும் ஜீவனையும் தமிழ் மண்ணிலேயே தேடுங்கள். தலைப்பில் பாரதியை வைத்துக் கொண்டு  பானி பூரியில் பருப்பு சாம்பார் விட்டு எங்களுக்கு படைக்காதீர்கள்.
 

4 comments:

  1. நடு நிலையான அருமையான விமர்சனம்
    இறுதி பத்தி மிக மிக அற்புதம்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  2. பழைய கறுப்பு வெள்ளையில் ’மிஸ்டர் செட்டியார்’ என்று கோட்டு போட்டுக்கொண்டு சாதியை விடாமல் மேற்கத்திய பண்பாட்டுக்குத் தாவியதைக் கிண்டலடித்துக்கொண்டே சக்ரபாணி பிள்ளை என்று பேர்வைத்துக்கொண்டு சாதியோடு ’இந்தி’ய மயமானால் அது மணி ரத்னம்.

    தமிழ் மண்ணில் தேடச்சொன்னீர்களே! மனதில் இருப்பதல்லவா மண்ணில் வரும். இத்தனை படத்துக்குப்பிறகு தமிழ் மண்ணில் தேடி எடுப்பார் என்ற உங்கள் நம்பிக்கை பெரியது.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. நன்றி. உங்கள் இருவருக்கும்.

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...