Saturday, December 23, 2017

ஆர் கே . நகர் - விசில் அடிங்கப்பா... !!!

ஆர் கே நகர் தேர்தல்  திமுகவுக்கு   முக்கியமான தேர்தல்.

முடிவு சரியாக வந்தால் திமுகழகத்துக்கு இது திருப்புமுனை தேர்தல்.  இல்லாவிட்டால், அதிமுகவின்  தனிநபர் துதி அரசியலை இன்னும் முப்பதாண்டுகளுக்கு உறுதி செய்யும் தேர்தல். புதிய கட்சிகளை ( கமல் உள்பட) தமிழக  அரசியல் களத்துக்கு கொண்டு வரும் தேர்தல்.  டெல்லி வாலாக்கள் தமிழ்நாட்டில் வாலாட்ட இடம் அளிக்கும்  தேர்தல்.

     கருணாநிதியும் ஜெயலிதாவும்  நேரடியாக களத்தில் இறங்காமல் அடுத்த கட்ட தலைவர்கள் இந்த தேர்தலில் களத்தில் இருக்கிறார்கள். இதில் ஒரு புறம் ஸ்டாலின். நீண்ட நெடிய திராவிட இயக்க வரலாற்றில்  திமு.கழகத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் பொறுப்பு உள்ளவராய்  இருக்கிறார்.  தகப்பனின்  அத்தனை  அறிவும், சாதுர்யமும் , சாணக்கியத்தனமும் கைகூடா விட்டாலும் , ஒரு பொறுப்பான, முதிர்ச்சியான தலைவர் என்று பேரெடுக்க முயன்று கொண்டிருப்பவர்.  இந்த அறுபது வயதுக்கு இன்னமும் ”முயன்று கொண்டிருப்பவர்”   என்று மக்களை நினைக்க வைத்திருப்பதுதான் இவரது பலமும் பலவீனமும்.

தந்தை  மீது உள்ள அளப்பரிய பாசம் ப்ளஸ் மரியாதையின் விளைவாக சரியான சமயத்தில் திமுகவின்  லகானை கையில் பிடிக்காமல், இப்போழுது கொஞ்சம் தவித்துக் கொண்டிருக்கிறர்.  கருணாநிதியின் அதிரடி குணம்  அழகிரியிடமும், அவர் தமிழறிவு கனிமொழியிடமும், அவர்  பொறுப்பு மற்றும் தந்திரம் ஸ்டாலினிடமும் பிரிந்து கிடக்கிறது. இன்றைய அரசியலில்  இவர்களும் மூவரும் இணைந்து அந்த சக்திகளை ஒன்றாக்கி தமிழக அரசியலில் திமுகவின் இடத்தினை ஸ்திரப்படுத்த வேண்டும். இந்த தேர்தலில் இதை உணர்ந்து இவர்கள் மூவரும் இணைந்து வேலை செய்திருந்தால் ”குக்கர்” ஆசாமிகள் முகங்கள்  கலவரத்தில் செக்கர் வானமாக சிவந்து இருந்திருந்திருக்கும். 2ஜி தீர்ப்பு மூலமாக கிடைத்த நற்பெயரையும் கொஞ்சம் உபயோகப்படுத்தி இருந்திருக்கலாம்.

இன்னொரு பக்கம் தின”கரன்சி”. முப்பதாண்டுகளாக  “ஜெ”வின் தொடர்பால் சேர்த்த ஊழல் பணத்தை  அவர் வாரிசாக முயல்வதற்காக அள்ளி விட்டுக் கொண்டு இருக்கிறார். வெறும் பணம் மட்டுமல்ல, அரசியல் சகவாசம் விளைவாக கிடைத்த அனுபவங்கள்,  தொண்டர்  கூட்டத்தில் உள்ள நெருக்கம், கட்சி கட்டுமானம் தெரிந்த தந்திரம், பத்திரிக்கையாளர்களுடன்  உள்ள நெருக்கம், பாஜகவின் எதிரி என்ற பிம்பத்தால் தமிழக மக்களிடம் மரியாதை, இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற எண்ணத்த்தினால் உள்ள அலட்சியம் மற்றும் தன்னம்பிக்கை உள்ள பேச்சு - என்று இந்த தேர்தலில் நாயகர் அவர்தான். அவர் ஜெயித்து வருவதில் தமிழகத்துக்கு ஒரு லாபமுமில்லை. மாறாக  இபிஸ்/ ஓபிஸ் கூடாரம் காலி ஆகவும், டெல்லி பாஜக தலைமை இவர் பக்கம் சாய்ந்து தினகரன்சியை தினகரன்ஜி ஆக்கவும்,    திமுகவின் எதிர்காலத்தினை உதிர் காலமாக்கவும் இவர் வெற்றி பயன்படும்.

ஜெயலலிதா என்ற வலுவான தலைமை  இல்லாமலேயே அதிமுகவை போன்ற ஒரு தரகு கட்சிக்கு ஆர்கே நகரை தாரை வார்த்தால் ஸ்டாலினின் அரசியல் வானத்தில் ”தூமகேது” முளைத்து இருப்பதாய் அர்த்தம்.  அது  அவருக்கு தெரியுமா?  

தேர்தல் முடிவு 24 ஆம் தேதி.

 திமுக தொண்டர்கள் விசில் அடித்தால் திமுகழகத்துக்கு நன்று.

குக்கர் விசில் அடித்தால்????

அது விசில் அல்ல. ஸ்டாலினுக்கு சங்கு !!!


 

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...