Saturday, October 01, 2022

பொன்னியின் செல்வன்  - 1 



 நம் தோட்டத்தில் செடி வளர்ப்போம். நமக்குத்  தெரிந்த அளவில் அதை பாதுகாத்து,  அதற்கு உரம் போட்டு, தண்ணீர் ஊற்றி, நிழல் பார்த்து வளர்த்த காய்களை வீட்டில் சமைத்து, சாப்பபிடும்போது - அந்த ருசியில் அல்ல - அந்த செயலில் ஒரு நிறைவு வருமே - அப்படி ஒரு நிறைவு பொன்னியின் செல்வன் பார்த்ததில். புத்தமங்கலத்து புண்ணியவான் கனவில் நிர்மாணித்த பொன்னுலகம் வெள்ளித்திரையில் நனவாகி இருக்கிறது. வாழ்த்துகள். 

  • த்ரிஷா, கார்த்தி, ஜெயராம் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பும், உடல் மொழியும், பார்வையும், அர்த்தமுள்ள மெளனங்களும் அருமை.  என்னளவில்,  இவர்கள் தனக்கு கொடுத்த வேலையை ஒழுங்காக செய்திருக்கிறார்கள்.
  • பிரகாஷ் ராஜ், சரத்குமார் , விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு - ஒகே. விக்ரம் சில பல படங்களின் சாயல் வர நடித்திருக்கிறார். ஜெயம் ரவிக்கு உடல் ஒத்துழைத்த அளவுக்கு குரல் மற்றும் கண்கள் ஒத்துழைகவில்லை. 
  • பூங்குழலியை கதையில் பார்த்தவர்கள் திரையில் பார்த்தால் ஏமாற்றமே வரும்  கத்தரிக்கு தப்பிய காட்சிகளில் அவள் குண விசேஷம் வெளிப்படவே இல்லை 
  • பார்த்திபன், ரகுமான், அஷ்வின் , மோகன் ராமன், நிழல்கள் ரவி போன்றோர் அய்யோ பாவம் ரகம். மோகன் ராமனுக்கு  அநிருத்தரின் தலைப்பாகையும் இல்லை. மிடுக்கும் மிஸ்ஸிங். 
  • வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானுக்கும் கதையில் ஒரு சிநேகபாவமான உறவு இருக்கும். படத்தில் வந்தியன், திருமலையை கொஞ்சம் முரட்டுத்தனமாக நடத்துவது போல் இருந்தது. ஒரு வேளை தமிழ்நாட்டில் ரசிகர்களுக்கு இது பிடிக்கும் என்று மணி நினைத்தாரோ? ;-) போலவே, இலங்கை அரசர்கள் எல்லாம் ஜேப்படித் திருடர் களையோடு இருக்கிறார்கள். 
  • பல நடிகர்களை கண்டு கொள்வதே பெரிய பாடாக இருந்தது. தாடிக்குள் தோண்டி எடுத்து பார்த்ததில் கிஷோர் மட்டும் புலனானது. ரியாஸ் கான், லால், மற்றும் பலரை அகழ்ந்து எடுத்தால் சொல்லுங்கள். 
  • சாய் பல்லவி, நயனதாரா, அஞ்சலி, ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், பசுபதி, சமுத்திரக்கனி, விஜய் சேதுபதி, சத்யராஜ், மாதவன், பிரசன்னா, அர்விந்த் சாமி, சித்தார்த் போன்றோர்கள் பாத்திர வடிவமைப்பின் போது மணியின் நினைவில் வந்தார்களா என்று தெரியவில்லை. 
  • வசன உச்சரிப்பு பல பாத்திரங்களுக்கு, பல இடங்களில் ததிங்கிணதோம். ஆனால் நவயுக தமிழனுக்கு அது பெரிய குறையாக தெரிய வாய்ப்பில்லை. அதே போலவெ கதையை படித்த தலைமுறைக்கு இந்த படம் நெஞ்சில் ஒட்டுவது போல, படிக்காதவர்களுக்கு புரியுமா/ பிடிக்குமா என்று விளங்கவில்லை. வசூலானால் சரி. அத்தனை செலவு செய்யாததால் லைகா will like it. ;-) 
  • ஏ ஆர் ரஹ்மான் படத்தினை “ரோமாபுரி பாண்டியன்”  என்று நினத்தாரோ என்னவோ, பொன்னியன் செல்வன் பிஜிஎம் மில் நிறைய அன்னிய வாடை. இளையராஜா செய்திருந்தால், இசையின்  தாக்கம் படத்துக்கு வேறு உயரத்தினை  அளித்திருக்கும். 
  • ஜெயமோகன் பேனா பல இடங்களில் அமரர் கல்கியின் ஒரிஜினல் வசனங்களை எடுத்தாண்டிருக்கிறது. வணிக சினிமாவுக்கு, வணிக எழுத்தாளர் வசனம்தான் ஒத்து வரும் என்று ஆசான் கண்டுணர்ந்தமைக்கு வாழ்த்துக்கள். :-) 
  • குமரவேல், மணி மற்றும் ஆசானின் திட்டமிடலை மீறியும் பல இடங்களில் கதையோட்டத்தில் தொய்வு இருந்தது. 
  • படத்தின் ஆகப்பெரிய பலம் மணிரத்னம். ஒரு வாசக மனநிலையில் இருந்து, இந்தக் கதையை தான் பார்த்த,  தான் புரிந்து கொண்ட விதத்தில் , தன் திரைமொழியுடன் படத்தில் கொடுத்திருக்கிறார். அந்த தைரியத்துக்கு என் தலைவணக்கம்.  
  • கல்கியின் தாக்கம் தலைமுறை கடந்தும் வீரியம் பெரிதும் இழக்காமல் திரையில் மலர்ந்திருக்கிறது 
பொன்னியன் செல்வன் இரண்டாம் பகுதிக்கும்,  பிறகு சிவகாமியின் சபதத்திற்கும் காத்திருகிறேன். :-) 


 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...