Tuesday, May 03, 2005

நிறமிழந்த வானவில்


ஆனை வந்தது முதலில்

அப்புறம் கலைந்துபோனது

குதிரை மீதில் ஒருவன்

கொஞ்ச நேரம் போனான்

பாட்டன் புரண்டு மல்லாந்தான்

பானை வெடிச்சு மரமாச்சு

அலையாய்ச் சுருண்டது கொஞ்சம்

மணலாய் இறைந்தது கொஞ்சம்

கணத்தில் மாறிடும் மேகம்

உண்மையில் எது உன் ரூபம்

மேகத்தைப் பற்றி மாலன் எழுதிய கவிதை, இந்த சந்தர்ப்பத்தில் ஜெயகாந்தன் பற்றிய என் அபிப்ராயங்களுக்கு உருவம் கொடுப்பது மாதிரி இருப்பது வெறும் தற்செயல்தானா..?? :-)

9 comments:

 1. அய்யோ! அவருக்கு இப்ப ரூபம் இல்லை; அவரே தெய்வீக சொரூபம் ஆயிட்டார். ஜெய ஜெய ஸங்கர!!

  ReplyDelete
 2. "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்."
  -பாரதியார்.
  "எந்த வேற்று மொழி நூலையும் மொழி பெயர்க்காமல் அந்தந்த மொழியிலேயே படிக்க வேண்டும்".
  -வேறு யார், ஜெயகாந்தனே (சென்னைப் பல்கலைக் கழக விழாவில், பொன்.நாவரசு அறக்கட்டளையின் புத்தக வெளியீடென்று நினைக்கிறேன். சுட்டி கிடைக்கவில்லை).

  ReplyDelete
 3. சமஸ்கிருதமும், அதைப் பேசுபவர்களும்/புழங்குபவர்களும் கடவுள் மாதிரி என்று நினைத்துக் கொள்ளும் தாழ்வு மனப்பான்மை இவரிடம் மட்டுமல்ல,நம் நண்பர்கள் பெருவாரியான ஆட்களிடம் இருக்கிறது. போன தலைமுறை போதித்த எண்ணங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, கண்மூடித்தனமாக அதை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள். தன் திறமையிலேயே உச்சங்களை அடையும் திறமை உள்ளவர்கள், துதிபாடியும், பல்லக்கு தூக்கியும் சாதிக்கப் போவதொன்றுமில்லை - வயதான காலத்தில் மக்களிடமிருந்து விலகி மதிப்பிழப்பதைத் தவிர.

  ரமணி/ சுந்தர், நன்றி

  ReplyDelete
 4. இந்த நிலமையிலே இவர்கள் (சம்ஸ்கிருத சமீதியும், ஜெயகாந்தன் மாதிரி ஜால்ராக்களூம்) இப்படி ஆடுகிறார்கள் என்றால் சமஸ்கிருதம் கோலோச்சிய காலத்தில் என்னவெல்லாம் ஆடியிருப்பார்கள். பிறகெப்படி, திருமறைக்காடு வேதாரண்யமாகவும், பழமலை வேதாச்சலமாகவும், இப்படி பல ஊர்பெயர்கள் தொடங்கி சம்ஸ்கிருதமயமாக்கப்பட்டன? இது மணலாறு வேலிஓயா என்று சிங்களமாக்கப்படுவதுபோல.

  இன்னும் தேவபாஷையை தூக்கிச் சுமக்கும் சங்கரருக்கு அடிவருடும் போது தமிழ் நஞ்சாவதில் வியப்பென்ன?

  இதெல்லாம் பாரதியின் சீடன் எனச்சொல்லிக்கொள்வதுதான் கொடுமையிலும் கொடுமை.

  ReplyDelete
 5. // அய்யோ! அவருக்கு இப்ப ரூபம் இல்லை; அவரே தெய்வீக சொரூபம் ஆயிட்டார். ஜெய ஜெய ஸங்கர!!//

  like that ;-)

  ReplyDelete
 6. நல்ல பதிவு சுந்தர். நன்றி.

  ஜெயகாந்தன் அவரின் மிகச் சிறந்த படைப்புகள் மூலம் உருவாக்கிய பிம்பங்களில் இருந்து இன்னும் எவ்வளவு தூரம் தன்னைத்தானே சறுக்கிக் கொள்ளப் போகிறார் என்று தெரியவில்லை.

  தங்கமணி, ஊர்களின் பெயர்களில்கூட சமஸ்கிருத நுழைப்பு என்பது தமிழின் சுயத்தை அழிக்கும் சதியன்றி வேறில்லை. அதில் திருமறைக்காடு "வேதாரண்யம்" ஆனது கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் கூறியிருக்கும் "வேதாச்சலம்" இப்போதுதான் கேள்வியுறுகிறேன். விருத்தாச்சலம் என்ற ஊர்தான் எனக்கு நினைவில் இருக்கிறது. அதுவும் சமஸ்கிருதப் பெயரா?

  ReplyDelete
 7. 'விருத்தாசலம்' தூய சமஸ்க்ருதப் பெயரே. தமிழிலே அதன் பெயர் 'திருமுதுகுன்றம்'. ஆனால் நானறிந்த வரையில் 'வேதாரண்யம்', 'விருத்தாசலம்' போன்றவையே சூட்டப்பட்ட பெயர்கள். பின்னர் பரிதிமாற் கலைஞரின் தனித்தமிழ் இயக்கத்தால் இவற்றிற்கு தமிழாக்கங்கள் உருவாக்கப்பட்டன.

  ReplyDelete
 8. மன்னிக்கவும் செல்வநாயகி அது விருதாச்சலம் (விருதா + அசலம்)தான். தவறாகக் குறிப்பிட்டேன். தமிழ் நாட்டில் ஒரு ஊருக்கு தமிழில் இல்லாமல் சமஸ்கிருத்தில் சூட்டியிருப்பதாக சொல்லப்படுவதை ஐயுறுகிறேன். இங்கு அதைப்பற்றி அறிய எனக்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் என்னால் இறுதியாகச் சொல்லமுடியவில்லை.

  ReplyDelete
 9. நண்பர்களுக்கு நன்றி.

  ஜெயகாந்தன் எனக்குப் பரிச்சயப்பட்டது அவரது புனைவுகளின் மூலம். அவருடைய கருத்துகளைக் கண்டு, வார்த்தைகளில் வெளிப்படும் வேகம் கண்டு பிரமித்து இருக்கிறேன். ஜெயகந்தன் கூட்டங்களுக்கு அப்பா சென்று வந்தாலும், ஜெயகாந்தனுடைய அரசியல் நிலைப்பாட்டை அந்த வயதில் அறிந்ததில்லை. கூட்டங்களுக்கு போய் வந்த அப்பாவுக்கும் அதில் உடன்பாடு இல்லை என்பதை பின்னாளில் அறிந்தேன். ஆனாலும், ஜெயகாந்தன் கதைகளையும், படங்களையும் பார்க்கச் சொல்லி எனக்கு சிபாரிசு செய்தவர் அவர். அப்பாவுடன் உட்கார்ந்து ஒரு மத்தியான நேரத்தில் "உன்னைப்போல் ஒருவன்" தூர்தர்ஷனில் பார்த்தது நினைவுக்கு வருகிறது.

  ஜெயகாந்தனின் அரசியல் நிலைப்பாடுகளை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் பின்னால் வாய்ந்தது. எதற்கென்றே வரையறுத்து சொல்லமுடியாத அவருடைய திராவிட கட்சி எதிர்ப்பு என்னைக் கலவரப்படுத்தியது. என்னால் ஒத்துக் கொள்ள முடியாத எத்த்னையோ அம்சங்கள் திராவிட அரசியலில் இருந்தும், அவரைப் போல என்னால் அதை முற்றும் புறந்தள்ள முடியாத காரனம் - திராவிடக் கட்சிகள் இல்லாதிருந்தால் சென்ற இருபது ஆண்டுகளில் தேசிய கட்சிகளில் உள்ள மேலாதிக்க மனப்பான்மையுடையோர் தமிழகத்தில் எத்த்னை ஆட்டம் போட்டிருப்பார்கள் என்கிற எண்ணம் தந்த - கலவரமே. அதனால்தான் ஜெயகாந்தன் திராவிட அரசியலை முற்றிலுமாக புறக்கணிகும்போதும், அவர்கள் முன்வைத்த தமிழ் மொழி ஆதரவு/சமஸ்கிருத எதிர்ப்பு ஆகியவற்றை எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற குறுகிய மட்டையடி சித்தாந்தம் மூலம் ஜெயகாந்தன் எதிர்கொள்ளும்போதும் கோபம் வருகிறது. நல்லவேளை மக்கள் ஜெயகாந்தனின் அரசியல் கருத்துகளை புறக்கணித்து விட்டார்கள் என்று சந்தோஷம் வருகிறது.

  ReplyDelete

இன்னா நாற்பது ....

  மீசை நரை போக்க பொறுமை ஏகம் தேவைப்பட ஆசை நுரை மட்டும் சுழித்துப் பிரவகிக்கிறது இன்னமும்.... யோசித்துக் களைத்த மூளை கொஞ்சம் உருகியும் ...