Tuesday, July 26, 2005

ரவிக்கை

அப்பா அம்மா ஊரிலிருந்து வந்திருக்கிறார்கள். வந்து கிட்டத்தட்ட மூன்று வாரமாகி விட்டது. வார நாள்களில் பகல் நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாது போவதால், சாயந்திர நேரங்களில் குற்ற உணர்ச்சி மேலிட அவர்களை அழைத்துப் போவதும், வார இறுதிகளில் அவசர அவசரமாக தொலைவிடங்களில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு அழைத்துப் போவதும், உடுத்தும் துனிகளை கையால் தோய்க்க வேண்டாம். வாஷிங் மெஷினில் தோய்த்து விடுங்கள் என்று சொன்னதற்கு அவர்கள சொல்கிற பதிலுக்காக சண்டை போடுவதும், இன்ஸ்டண்ட் பொடி பிடிக்காமல் ஊரிலிருந்து காப்பிப்பொடி எடுத்து வந்து காஃபி சாப்பிடுவதற்கு கிண்டல் அடித்துக் கொண்டும், குறைந்து போன என் சாப்பாட்டைப் பார்த்து அவர்கள் படும் கவலைக்கு சிரிப்பதும், படுக்கை ரொம்ப மெத்தென்று இருப்பதால் தூக்கமில்லை. கார்ப்பெட் தரையில் போர்வை போட்டு படுத்துக் கொள்கிறோம் என்று அவர்கள் சொலவதற்கு தலையில் அடித்துக் கொண்டுமாக....

நாட்கள் சர சர வென்று ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆகஸ்ட் 12 முதல் 18 வரை சான் தியாகொ, லாஸ் ஏஞ்சலீஸ், லாஸ் வேகாஸ் என்று வேன் ட்ரிப்பும், ஆகஸ்ட் 26 முதல் 31 வரை நியூயார்க், நயாகரா ட்ரிப்பும்
திட்டமிட்டாகி விட்டது. போன வாரம் மாண்டெரியும், முந்தின வாரம் சான்ஃப்ரான்சிஸ்கோவும் போய் வந்தாகி விட்டது.முடிந்தால் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

எழுதுகிறேனோ இல்லையோ, வலைப்பதிவுகளை தொடர்ந்து படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். நல்ல நண்பர்கள வெறுத்துப் போய் விலகுவதும், பாக்கி எழுதும் மனிதாபிமானம் உள்ள ஸ்நேகங்களின் நோக்கங்கள் சந்தேகப்படுத்தப்படுவதையும் பார்த்து கஷ்டமாக இருக்கிறது. என்றாலும், உரத்து விவாதிக்கப்படுவதில், சில விஷயங்கள் புரிவதுமாக பொழுது போய்க் கொண்டிருக்கிறது.

பெட்டியில் இடம் இல்லாததால், குறைவான புத்த்கங்களே இந்தியாவில் இருந்து வந்தது. குறத்தி முடுக்கும், என் பெயர் ராமசேஷனும் படித்து விட்டு, கோபல்ல கிராமம், சீரோ டிகிரியும் ஓடிக் கொண்டிருக்கிறது. சாருவைத் திட்டிக்கொண்டே சீரோ டிகிரியை படித்தாலும், அவரது இந்தக் கட்டுரை சமீபத்தில் புருவமுயர்த்த வைத்தது.

நண்பர்களே!!! நிறைய எழுதுங்கள் - எனக்கு எழுதுவதை விட படிப்பதுதான் பிடிக்கிறது இப்போதெல்லாம்

சரக்கு தீந்து போனதை இப்படித்தான் பவிஷா சொல்லிக்கணும்...:-)

இந்தப் பதிவுக்கு தலைப்பு இல்லாததால் உங்களுக்கு இப்போது இருக்கும் தலைப்பு "தெரிகிறது" ஹி..ஹி..

3 comments:

 1. சுந்தர்,

  அப்பா அம்மாவையும், மற்றும் குடும்பத்தினரையும் கேட்டதாகச் சொல்லுங்கள். அப்படியே அந்த வேனை ஓட்டிக்கிட்டு இங்கேயும் வந்துட்டுப் போங்க.

  என்றும் அன்புடன்,
  துளசியக்கா

  ReplyDelete
 2. வெகுகாலங்களுக்கு முன்னேயே உடைந்து சிதிலங்களாகிப் போய்விட்ட எனது நம்பிக்கை (dogmas and belief) எச்சங்களுக்கு இடையேதான் சீரோ டிகிரி விழுந்தது. அதன் வடிவம் அதை தமிழ் கூறு நல்லுலகின் இடயில் எழுத/ வெளியிட சாருவுக்கு இருந்த துணிவு இவைதான் எனக்கு அதிர்ச்சி அளித்தது. பிறகு அதிர்ச்சி அடையத்தக்க எதுவுமில்லை என்ற நிதர்சனம் இருக்கையில் அதிர்ச்சி அடையும் அளவுக்கு இருக்கும் தமிழுலுகைப் பற்றிய நம்பிக்கைகள் குறித்தே அதிர்ச்சி அடைந்தேன். அவந்திகாவின் கதையும், கடையில் எழுதப்பட்ட கவிதைகளும் எனக்குப் பிடித்திருந்தது. தொடக்கத்தில் இதை வாசித்துக்கொண்டிருக்கும் வாசகன் அல்ல்து வாசகியாகிய நீ என்ற விளித்தல் நன்றாய் இருந்தது.

  நான் எனது கணிப்பில் சாருவிடம் சில போலித்தனங்களைக் காண்கிறேன்; அவைதான் எனக்கு நெருடும் விசயங்களே அன்றி அவர் எழுதும் விசயங்கள் அல்ல.

  எனக்கு ஜி.நாகராஜனின் 'ஏன் இப்படியெல்லாமென்று எழுதுகிறேன் என்று கேட்காதீர்கள், ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று கேளுங்கள்' என்ற வரிகள் நினைவுக்கு வருகிறது.

  குறத்தி முடுக்கு எப்படி இருந்தது? அது எனக்கு பிடித்த புத்தகங்களில் ஒன்று. அதில் இருக்கும் ஒரு ஆன்மீக அமைத்திக்காக நான் அதை பலமுறை வாசித்திருக்கிறேன்.

  ReplyDelete
 3. கருத்திட்ட நண்பர்களுக்கு நன்றி.

  தங்கமணி, குறத்தி முடுக்கு அருமையான கதை. ஏனோ எனக்கு தப்புத்தாளங்கள் நினைவுக்கு வந்தது. பெண்களில் சிலர் தனக்கு நேர்கின்றது அவலம் என்பது கூடத் தெரியாமல், தன்னை மற்றவர்களுக்கு "உபயோகமாக" இருப்பதற்கே படைத்தார் என்கிற மனோநிலையில் இருப்பார்கள். ( அல்லது அப்படி நமக்குத் தெரியும்..?!!!) அப்படிப்பட்டவர்களின் சோகத்தை நினைத்து வருந்துவதா அல்லது அவர்களின் எண்ணவோட்டத்தை மெய்ப்பிக்கும் விதமாக அந்த ஆற்றில் நாமும் ஒரு மடக்கு தண்ணீர் சேந்தி குடிப்பதா என்று ஆண்பிள்ளைகள் எண்ணி குடிக்காமல் போபவன் வெகு சொற்பம். குறத்தி முடுக்கு மறக்க முடியாத அனுபவம். வித்தியாசமான வாசிப்பு அனுபவம். கிட்டத்தட்ட ரிப்போர்டிங் தான் அது. புனைவென்று நம்புதல் சிரமம் - ஒரு வேளை நாகராஜனைப் பற்றி நண்பர்கள வழியாக கேள்விப்பட்டதனால் அப்படி தோன்றியதோ என்னவோ...

  ReplyDelete

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...