Thursday, January 05, 2006

இரண்டு முறை காணாமல் போன பதிவு

1. சீன சமூகத்தில் படிப்பு

சீனர் தம் பிள்ளைகளின் படிப்பில் அளவுக்கு அதிகமான நாட்டம் காட்டுவர். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சீனர்கள் வீடு வாசல்களை விற்று தம் பிள்ளைகளை படிக்க வைப்பது என்பது ஒரு மிச சாதாரண நிகழ்வு. இப்போது எல்லா இன மக்களும் தம் பிள்ளைகளின் படிப்பின்பால் அதிகமான நாட்டம் காட்டுகிறார்கள் என்பது உண்மைதான் என்றாலும், சீனர்களிடம் இந்த தாக்கம் எப்போதும் சற்று கூடுதலாகவே இருந்திருப்பதாக தான் நான் நினைக்கிறேன். எனக்கு தெரிய மலேசியாவில் ஒரு 30 - 40 வருடங்களாக மார்க்கட்டில் காய்கறி விற்கும் சீனர் கூட இரவு பகலாக உழைத்து தம் பிள்ளைகளை ஐரோப்பா, அமெரிக்கா என்று அனுப்பி சிறந்த பல்கலைகழகங்களில் நல்ல படிப்புக்களை படிக்க வைத்து விடுவார். இது ஏதோ அத்தி பூத்தார் போல் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் நிகழ்வு என்று நினைக்காதீர்கள். மலேசியா முழுவதும் உள்ள ஒவ்வொரு நகரங்களிலும், சிற்றுர்களிலும் இது ஆயிரக்கனக்கான சீன குடும்பங்களால் செயல் படுத்தப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வு.
சீனர்கள் படிப்பிற்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், எல்லா இனங்களுக்கும் பொருந்தும் பொதுவான காரணங்களை எல்லாம் தாண்டி அவர்களுக்கென்று பிரத்தியேகமான பாரம்பரிய சரித்திர காரணங்கள் சில உள்ளன. அவற்றில் முக்கிய இரண்டை இங்கு விளக்குகிறேன் :-

அ). ( Confuciunism ) கன்பியூசியனிசத்திின் தாக்கம்

சீனர்களின் பாரம்பரியத்தில் ( confucius ) /'கன்பியூசியஸ்'/ என்று அழைக்க படும் தத்தவ ஞானியினுடைய சிந்தனையின் தாக்கம் அளவிற்கறியது. இவர் கி.மு. 551 லிருந்து, கி.மு. 479 வரை சீனாவில் வாழ்ந்த ஒரு மாமேதை. இவர் வாழ்ந்த காலத்தில் சீன நாட்டில் இவருக்கு ஓரளவே வரவேற்பே இருந்தது என்றாலும், இவர் இறப்புக்கு பின்னர் இவரிடம் கல்வி கற்ற 3,000 மாணாக்கர்களில் பலர் முக்கியமான அரச பதவிகளில் அமர்த்தப் பட்டனர், கால போக்கில் இப்படி அரசாங்க நிர்வாகஸ்தர்களான ஆன சிஷ்யபாடிகள் தங்கள் குருவினுடைய போதனைகளை பரவலாக மக்கள் மத்தியில் பரப்ப, /கன்பியூஷியனிஸம்/ எனும் வாழ்க்கை வழிமுறை தத்துவம் சீன நாட்டில் மெது மெதுவாக வேர் ஊன்ற ஆரமிபித்தது.

கன்பியூஷியஸின் சிந்தனைகளில் படிப்பை பற்றினஅடிப்படை கூறு என்ன வென்றால், "கல்வி கற்க உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்கிற பாகுபாடு எல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் கல்வி கற்கலாம். கல்வி கற்பதற்கு வேண்டிய திறமையும் மனிதருக்கு, மனிதர் பெரிதாக வித்தியாசப் படுவதுமில்லை. சிலர் சூழலின் காரணமாக கற்பது யாவற்றையும் சிறிது எழிதாக கற்ப்பர், வேறு சிலர் சிறிது தாமதமாக கற்பர். அவ்வளவே. கல்வியை கொண்டுதான் மனிதனை பாதை தவறி போகாமல் நல் வழிப் படுத்த முடியும். ஆதலால் நாடாளும் அரசனின் பல கடமைகளிலுல், பொது மக்களுக்கு கல்வி புகட்டும் கடமையும் ஒன்று" என்பதுதான்.

காலப் போக்கில் கன்பியூஷியஸின் சிந்தனைகள் சீன மக்கள் மத்தியில் மிக ஆழமாக வேர் ஊன்றவே, கி.மு. 220 ஆம் ஆண்டு வாக்கில் சீனாவில் கன்பியூஷியஸின் காப்பியங்களையும், தத்துவங்களையும், இதர எழுத்துகளையும் மையமாக வைத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரச பாடசாலைகள் நிறுவப் பட்டன. அன்றிலிருந்து தொடர்ந்து 2,000 வருடங்களுக்கு மேலாக இந்த கன்பியூஷியனிஸத்தை மையமாக கொண்ட பாட முறையே சீன நாட்டின் பாடசாலைகளில் அமல்படுத்த பட்டு வந்துள்ளது. இந்த நிலை 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் வேறு பாடத் திட்ட முறைக்கு மாற்ற பட்டுள்ளது.
ஆதலால் 2,000 வருடங்களுக்கு முன்பிருந்தே படிப்பின் ஆழமும், அதன் தன்மையும் மற்ற இனங்களை காட்டிலும் சீனர்களுக்கு மிகப் பரவலாக தெரிந்தும், புரிந்தும் இருந்திருக்கின்றது.

1 ஆ). (Chinese Imperial Examination) சீன அரசு தேர்வு பரிட்சையின் தாக்கம்

சின நாட்டின் சரித்திரத்தில் கி.பி. 600 ஆம் ஆண்டின் வாக்கில் 'சுயி' என்ற அரசன் தான் பல பாகங்களாக சிதறுண்டு கிடந்த சீன நாட்டை ஒன்று சேர்த்தவன். அப்படி ஒன்று சேர்க்க பட்ட நாடு மிக பெரிய, பறந்த பிரதேசமாக இருந்ததால், அதன் நான்கு திசைகளிலும் இருந்த நகரங்களையும், சிற்றுர்களையும், கிராமங்களையும் நிர்வகிக்க அரசனுக்கு திறமையான பல நிர்வாகிகள் தேவை பட்டனர். அதற்கு முன் அரசு நிர்வாகத்தை பார்த்து வந்த அரச குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மீது அரசனுக்கு அதிகமான நம்பிக்கை இல்லாது இருந்ததால், நாடு முழுவதிலும் உள்ள திறமைசாலிகளை அடையாளம் காண வேண்டி 'அரசு தேர்வு பரிட்சை' (imperial examination) என்ற தேர்வு முறையை துவக்கினான். ஆறிலிருந்து, பன்னிரண்டு நிலைகளை உடைய இந்த பரிட்சை முறை எத்தனையோ மன்னர்களும், சாம்ராஜியங்களும் வந்து போயிருந்த சூழ்நிலையிலும் நிறுத்த படாமல் இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரை தொடர்ந்து 1,300 வருடங்கள் அமுலில் இருந்திருக்கின்றது.

இந்த பரிட்சையில் சீன நாட்டில் பிறந்த யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம் என்ற நிலை இருந்திருக்கின்றது. காப்பியங்கள், சீன இலக்கியம், ராணுவ வியூகங்கள், வரி மற்றும் நிதி நிர்வாகம், விவசாயம், பூலோகம், சட்டம், எழுத்து வண்ணம் (calligraphy), ஓவிய கலை என்று பல கலைகளை உள்ளடிக்கிய இந்த பரிட்சை முறையின் கடைசி நிலையில், பரிட்சைக்கு அமர்பவர்கள் தொடர்ந்து 72 மணி நேரம் வரை பரிட்சிக்க பட்டிருப்பதாக சரித்திர ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். பண்டைய சீனாவில் இந்த பரிட்சைகளில் வெற்றி பெற்றவர்கள்தான் நாட்டின் வெவ்வேறு பாகங்களில் அரச நிர்வாகிகளாக அமர்த்த பட்டனர்.

ஏழ்மை நிலையில் பாமர வாழ்க்கை வாழ்ந்து வந்த அன்றைய சீனர்கள், இந்த பரிட்சையை தங்களை ஏழ்மையிலிருந்து மீள வைக்க கூடிய ஒரு ஏணியாகவே நினைத்தனர். ஒரு குடும்பத்தை சார்ந்த ஆண்மகன் ஒருவர் இந்த பரிட்சையில் தேர்ச்சியுற்று அரசாங்க அதிகாரியாக நியமிக்க பட்டால், அவரால் அவரின் குடும்பம் மட்டுமல்லாது, அவர் பிறந்த கிராமமே வளமடைந்துள்ளது. இதனால் 1,400 வருடங்களுக்கு முன்பிருந்தே சீனர்கள் தம் பிள்ளைகளை படிக்க தூண்டும் இயல்பு உடையவர்களாக இருந்திருக்கின்றார்கள். இந்த பரிட்சை முறை பண்டைய சீனாவிலிருந்து ஜப்பான், கொரியா, வியட்னாம் அகிய நாடுகளுக்கும் பறவியுள்ளது. பிறகு சமீபமாக, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பத்திலிருந்து ஆங்கிலேயரும், பிரஞ்சுக்காரர்களும் உலகம் முலுவதும் பரந்து விரிந்து கிடந்த தங்கள் காலனிகளை நிர்வாகம் செய்வதற்கென்று அனுப்பிய நிர்வாகிகளை, சீனர்களின் இந்த பரிட்சை முறையை உதாரணமாக கொண்டுதான் தேர்வு நடத்தி தேர்ந்தெடுத்தனர் என்று சீன ஆராய்ச்சிளார்கள் கூறி வருகின்றனர)்.

2. சீனர்களும் உழைப்பும்

சீனர்கள் மிக மிக கடினமான உழைப்பாளிகள். அவர் பள்ளியில் படிக்கும் மாணாக்கராக இருந்தாலும் சரி, கடையில் வேலை செய்யும் சிப்பந்தியாக இருந்தாலும் சரி, காரியாலயத்தில் பணிபுரியும் நிர்வாகியாக இருந்தாலும் சரி, ஒரு பெரிய ஸ்தாபனத்தை வழிநடத்தும் தொழில் அதிபராக இருந்தாலும் சரி சீனர்கள் பெரும்பாலும் மிக கடின உழைப்பாளிகளாக தான் இருப்பார்கள். கடின உழைப்பு என்பது அவர்களிடமுள்ள மிக மிக அடிப்படையான ஒரு கூறு. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 50 கோடி பல இன மக்களிடமும் சென்று, இங்கு அவர்களோடு வாழுந்து வரும்்் சீனர்களை ஒரே ஒரு வார்த்தையில் சித்தரிக்கும்படி கூறி ஒரு ஆய்வு நடத்தினால், அதற்கு கிடைக்கும் பதில் "உழைப்பாளிகள்" என்பதாக தான் இருக்கும்.

3). தொழில் போட்டியாளர்களாக சீனர்கள்

சீனர்கள் வியாபாரத்தில் பயங்கரமான போட்டியாளர்களாக் இருப்பார்கள். இது சீனாவில் உள்ள சீனர்களுக்கும் பொருந்தும், தென் கிழக்கு ஆசியாவில் உள்ள 'வெளிநாட்டு சீனர்களுக்கும்' பொருந்தும். தொழிலில் போட்டி என்று வந்து விட்டால் அடுத்தவரை நிலைபெற சீனர்கள் விடுவதே கிடையாது். இதற்கு எத்தனையோ உதாரணங்களை உள்ளன, ஆனால் ந்ம யாவருக்கும் பரிச்சயமான சூழலிலிருந்து ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கு கோடி காட்டிவிட்டு செல்கிறேன்.
இந்தியாவிலிருந்து, குறிப்பாக தெற்கு மாநிிலங்களிருந்து ஆயிரக்கணக்கான டன் வெங்காயம் வருடா வருடம் மலேசியாவினுல் எனக்கு தெரிய 40 - 50 வருடங்களாக இறக்குமதி ஆகிகொண்டு இருக்கின்றது. ஆனால் இதை இறக்குமதி செய்பவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள்? ஆம், சீன வியாபாரிகள்தான். இந்த வியாபார்த்தினுல் நுழைய எத்தனையோ மலேசிய இந்திய வணிகர்கள் முயன்றிருக்கின்றனர். அப்படி நுழைய முற்பட்ட எந்த இந்திய வியாபாரியையும் சீனர்கள் நிலை பெற விட்டதில்லை. இந்திய வியாபாரி ஒருவர் வெங்காயத்தை இந்தியாவிலிருந்து தருவிக்க விளைகிறார் என்று தெரிந்த உடனேயே, சீன வியாபாரிகள் இங்கு தங்களின் விலையை சட்டென்று குறைத்து விடுவார்கள். இறக்குமதி செய்ய முற்பட்ட இந்திய வியாபாரியும் எதிர்பார்த்த விலை கிடைக்காமல், வாங்குவதற்கு ஆள் இல்லாமல், கடைசியாக வேறு வழி தெரியாமல்் சீன வியாபாரிகளிடமே தாங்கள் கொண்டு வந்த சரக்கை கை மாற்றிவிட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி விடுவார்்்.

4). சீனர்களும் எண்களும், வர்ணங்களும்

சீனர்கள் அதிர்ஷ்டத்தை அதிகம் நம்புபவர்களும் கூட. சீனர்களுக்கு '8' மிகவும் அதிர்ஸ்டமான எண். அதேபோல் '4' துரதிர்ஷ்டமான எண். இதற்கு காரணம் சீன மொழியில் எட்டு என்ற சொல் தனம், பொருள் எனும் ஒலியை ஒட்டியதாக இருக்கும். அதே சமயம் நான்கு என்ற சொல் மரணம் என்ற ஒலியை ஒட்டியதாக இருக்கும். இதனால்தான் தென் கிழக்கு ஆசியாவின் பெரும்பாலான மாநகரங்களில் பல மாடி கட்டிடங்களில் நான்காவது மாடியை '3A' என்று குறிப்பிடுவார்கள், அதே போல வர்ணங்களில் சீனர்களுக்கு பரவலாக பிடித்த வர்ணம் சிவப்பு. அவர்கள் கலாச்சாரத்தில் சிவப்பு வர்ணம் சந்தோஷம், புகழ், செல்வம் ஆகியவற்றை குறிக்கும்.

5). புது வருட பிறப்பின் போது சீனர்கள் கடைபிடிக்கும் சில சம்பிரதாயங்கள்

சீனர்கள் புது வருட பிறப்பின் முதல் நாள் இரவிலிருந்து மூன்று நாட்களுக்கு வீட்டை பெருக்க மாட்டார்கள். காரணம் வீடுக்கு வந்த அதிர்ஷ்டத்தை நாமே கூட்டி வெளியே தள்ளினால்் போல் ஆகிவிடும் என்று அவர்களுக்கு ஒரு ஐதீகம்.
சீன புத்தாண்டின் முதல் நாள் இரவு சீனர்கள் ஒரு பெரிய குடும்ப விருந்தை சமைத்து, மூதாதையர்களை வணங்கி, அவர்களுக்கு உணவு படைத்து, குடும்பத்தோடு ஒன்றாக உட்கார்ந்து யாவரும் உண்பர். அடுத்த 15 நாட்களுக்கு அனுசரிக்க படும் புத்தாண்டு வைபத்திலேயே, குடும்ப உறுப்பினர் ஒருவர் இந்த விருந்தில் கலந்து கொள்வதுதான் மிக முக்கியமான சம்பிரதாயமாக கருதப் படுகிறது். பொருள் ஈட்டுவதற்கென்றும், படிப்பிற்கென்றும் குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் யார் எந்த திசைக்கு போய் வசித்து வந்தாலும சரி், இந்த விருந்தில் கலந்து கொள்ளும் பொருட்டு சீன புத்தாண்டின் போது அவரகள்் குடும்பத்தோடு நிச்சயமாக தகப்பன் வீட்டிற்கு வந்தாக வேண்டும். இது இன்றளவும் சீனர்கள் போற்றி கடைபிடித்து வரும் சம்பிரதாயங்களில் ஒன்று. நடைமுறையில் இந்த குறிப்பிட்ட சம்பிரதாயத்தின் ் தாக்கம் என்ன வென்றால், புது வருட பிறப்பின் போது வீட்டிற்கு போகும்போது கடந்த வருடம் எப்படி இருந்தது என்று எல்லோரும் கேட்பார்களே, என்ற உத்வேகத்திலேயே சீனர்கள் வருடம் முழுவதும் தம்மை மேம்படுத்தி கொள்ள இன்னும் கூடுதளாக உழைப்பார்கள்.

6). வேலை செய்யும் இடங்களில் சீனர்களை அனுகுவதற்கான டிப்ஸ்

அமெரிக்க, கனேடிய ், ஐரோப்பிய சீனர்களை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆதலால் நான் இங்கு கூறுவது அந்த சூழ்நிலைகளுக்கு பொருந்தாமல் இருக்கலாம். இந்த பாரா மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் இந்தியாவிலிருந்து போய் சீனர்களோடு வேலை செய்யும் இந்தியர்களுக்காக எழுத பட்டது.

- இயல்பிலேயே சீனர்கள் சிறிது arrogantஆன பேர்வழிகள் தான். மற்றவர்களின் உணர்ச்சிகளை பற்றி அவர்கள் அதிகம் கவலை கொள்ள மாட்டார்கள். இது ரூட்டீனான ஒரு உண்மை. இதை பற்றி அவர்களோடு வேலை செய்யும் நாம் கவலை பட்டோ, மனம் வெதும்பியோ ஆக போவது ஒன்றுமில்லை. ஆதலால் சீனர்கள் மெஜாரட்டியாக உள்ள நிர்வனங்களில் வேலை செய்பவர்கள் சிறிது எதார்த்தமாக எதையும் எடுத்து கொள்வது நல்லது.

- சீனர்களோடு வேலை செய்யும் இந்தியர்கள் தங்களின் உடை உடுத்தலில் அக்கறை காட்டுவது மிக மிக முக்கியம். காரணம், மண்டையின் உள்ளே உள்ள மூளை நன்றாக வேலை செய்வது தான் முக்கியம்் என்று நினைப்பது நமது கலாச்சாரம். ஆனால் மூளை எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு மனிதனின் வெளி தோற்றமும் இருக்க வேண்டும் என்று நினைப்பது சீனர்களின் கலாச்சார கூறு. அதனால், ஒரு சராசரி சீனர் நம்மை விட துணிமணிக்கென்று இரண்டு, மூன்று மடங்கு அதிக பணம் செலவு செய்வார். அவரோடு ஒத்த லெவலில் நாம் பழக வேண்டிய நிர்ப்பந்தம் என்று ஒன்று உண்டு என்றால்், அதற்கான முதல் கட்ட தயார் நிலை, நமது உடுப்பை தயார் செய்வது கொள்வது தான்.

- வேலையில் உங்கள் திறமையை பலரும் உணரும் வகையில் காண்பியுங்கள். தேவை பட்டால் internal memo மூலம் நீங்கள் செய்து முடித்த வேலையின் கூறுகளை பட்டியலிடும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். இப்படி நீங்கள் உங்களின் வேலை சம்மந்த பட்ட விஷயங்களை ரெக்கார்டு பண்ணுகிறீர்கள் என்று தெரிந்தாலே, உங்கள் மேல் அனாவசியமான extra work load ஐ தினிக்க பொதுவாக மற்றவர்கள் பயப்படுவார்கள். நான் சீனர்களோடு வேலை செய்த காலத்தில் இந்த அனுகுமுறை எனக்கு மிகவும் உதவியாக இருந்ததது.

- சீனர்களை விட நமக்கு அபாரமாக வாய்த்த வித்தை 'சொல் வித்தை'. நமக்கு உள்ள அளவுக்கு சீனர்களுக்கு மொழி வளம் ஏற்படுவது கிடையாது. இந்த உண்மை சீனர்களுக்கும் மிக நன்றாக தெரியும். ஆதலால் உங்களுக்கு ஆங்கில மொழி வளம் நன்றாக இருந்தால், அவர்களிடம் பழகும்போது அந்த அட்வாண்டேஜை உங்களுக்கு சாதகமாக பல வகையில் பயன் படுத்தி கொள்ளலாம்.


- முற்றும் -

இந்த பதிவோடு நண்பர் சுந்தரராஜனின் வலைபதிவில் என் கட்டுரைகளை பதிப்பதை நிறுத்தி கொள்ள விரும்புகிறேன். இதற்கு மேலும் நண்பரை நான் சிரம படுத்துவது முறையாக பட்வில்லை. இதற்கு பின்னர் நான் எதுவும் எழுத விழைந்தால் எனக்கென்று ஒரு தனி வலைபதிவை துவக்கி, அதில் என் கட்டுரைகளை பதிப்பிடுகிறேன். நன்றி. வணக்கம்.

1 comment:

  1. அருமையான கட்டுரை.
    தொடர்ந்து இது போன்ற கட்டுரைகள் எழுதுங்கள்

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...