Saturday, February 10, 2007

Eternal Sunshine of the Spotless Mind


ரொம்ப நாட்களாகவே பார்க்க வேண்டும் என்று நினைத்து வைத்திருந்த படம்
ஜிம் கேரியும், கேட் வின்ஸ்லெட்டும் நடித்த படம்.

அலுவலக வேலைப்பளுவால் ஒரு வாரமாக அலமாரியில் தூங்கிக் கொண்டிருந்தது. ஒரு முறை பார்க்க ஆரம்பித்து, டைட்டில் ஓடுவதற்குள்ளேயே தூங்கிப் போய் விட்டேன். திருப்பித் தரவேண்டிய நாள் வரவும், அவசர அவசரமாக முதல் நாள் இரவு பார்த்தேன்.

ஒரு சாதாரண கதைக்கு, கொஞ்சம் சயின்ஸ் ஃபிக்ஷன் மசாலா தூவி, அதை மிக வித்தியாசமான முறையில் பரிமாறி இருக்கிறார்கள். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அடிக்கடி Pause பண்ணிவிட்டு, இது நான் நினைப்பதுதானா என்று வீட்டு அம்மணியிடம் ருசுப்படுத்தி விட்டு பார்க்க வேண்டி இருந்தது மொத்தப் படமும்.

பீச் பார்ட்டியில் ஒரு பெண்ணை சந்திக்கிறார் ஹீரோ. காதலாகி சேர்ந்து கொஞ்ச நாள் ஊர் சுற்றுகிறார்கள். பிறகு சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து போகிற அந்தப் பெண் சும்மா இருக்காமல், டாக்டரிடம் போய் தன் மூளையில் ஹீரோவை பற்றிய ஞாபகமே இல்லாமல் போகும்படியான சிகிச்சை செய்து கொள்கிறாள். அடுத்த நாள காலை, தன்னைப் பார்க்க வரும் ஹீரோவை அவள் "நீ யார்..? " என்று கேட்க ஸாருக்கு அதிர்ச்சி. கொஞ்ச நாள் பின்னாலேயே மடிநாய் மாதிரி சுற்றிக் கொண்டிருந்துவிட்டு கழிவிரக்கம் தாங்காமல் தானும் அந்த சிகிச்சை மேற்கொள்ள அதே டாக்டரிடம் செல்ல,
சிகிச்சை நடபெறும்போதே அவள் மேல் உள்ள காதலால் அடிமனது அந்த சிகிச்சைக்கு எதிராக ஆகிவிட, சிகிச்சையை ஏகப்பட்ட கஷ்டத்தோடு முடிக்கிறார்கள் டாக்டர் குழுவினர்.

இதற்கிடையே டாக்டர் கிளினிக்கில் வேலை பார்க்கும் ஒருவன், இவர்களுக்கு இடையேயான நேயத்தை புரிந்து கொண்டு, ஹீரோ கொண்டுவந்திருக்கிற அந்தப் பெண் சம்பந்தப்பட்ட கடிதங்கள்/ பரிசுப் பொருட்கள் துணையுடன் அந்தப் பெண்ணை அடைய முயற்சிக்கிறான். டாக்டரே அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணை உபயோகித்து விட்டு அவளையும் அதே சிகிச்சையின் மூலம் "அலம்பி" விடுகிற டைப்தான். விஷயம் தெரிகிற அந்தப் பெண் தாம் இத்தனை நாள் டாகடரின் செயல்களுக்கு உடைந்தையாக இருந்த பாவத்தைக் கழுவ, சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு முன் எல்லா நோயாளிகளிடமும் பேசி பதிவு செய்யப்பட்ட பழைய வாழ்வு பற்றிய ஒளி நாடாக்களை எல்லோருக்கும் சப்ஜாடாக அனுப்பி விடுகிறது

சிகிச்சை முடிந்து வந்த ஹீரோ ஹீரோயின், விட்ட குறை தொட்ட குறையாக மனசுள் ஊறிப்போயிருக்கும் உறவின் மிச்சங்களால் மறுபடி ட்ரெயினில் அகஸ்மாத்தாக சந்தித்து, மறுபடி காதலாக மாறக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ள உறவு நிலையில் பழகிக்கொண்டிருக்கிறார்கள்.
அப்போது அந்த டாக்டர் பெண் அனுப்பி வைக்கும் ஒலி நாடா வருகிறது.

மிகுதி வெள்ளித்திரையில்.........


மேற்சொன்ன கதையச் சொலவதற்கு நாம் எடுக்கும் பிரயத்தினங்கள், புரிந்து கொள்ள மெனக்கெடும் முயற்சிகளுக்காகவது படத்தை சிலாகிக்க வேண்டி இருக்கிறது. பக்கம் பக்கமாக சிக்கல் கதை எழுதி, சுக்கல் சுக்கலாக கிழித்து விட்டு அதை யாரிடமோ வரிசைப் படுத்தி படிக்கச் சொல்லியது போல் இருக்கிறது படம். பன்னெண்டாவது படிக்கும் போது என் கணக்கு வத்தியார் பி.எம்.சங்கரன் வகுப்பில் கணக்கு ஃபார்முலா கேட்பார்.
மறந்து போய் சொல்லா விட்டால், அவரே நினைவு படுத்தி விட்டு, இனிமே மறப்பியா தம்பி..?? என்பார். நாம் " மறக்க மாட்டேன் சார்" என்று பரிதாபமாக தலையாட்டினால், சிரித்துக் கொண்டே "இல்ல தம்பி ..மறந்துரு. பரிட்சை எழுதி முடிச்சிட்டு மறந்துரு. மறதி இல்லாட்டி உலகத்துல ரொம்ப கஷ்டம்
தம்பி" என்பார். சத்தியமான உண்மை.


இந்தப் படத்தினை தழுவி எடுக்கப்பட்ட படம்தான் எஸ்.ஜே சூர்யாவின் "அ..ஆ " என்று சொன்ன நண்பரை தேடு தேடு என்று தேடிக் கொண்டிருக்கிறேன் - உதைக்க

4 comments:

 1. ஒரு ஆறு மாதங்களுக்கு முன் தான் இந்த படத்தைப் பார்த்தேன். எனக்கு நீங்கள் குறிப்பிட்ட எல்லாம் புரிந்தது. ஆனால், அந்த சிகிச்சை சமயத்தில் ஏற்படும் குளறுபடிகள்தான் புரியவேயில்லை. இரண்டாவது முறை முயற்சி செய்யலாமா என்று நினைத்தேன். அப்புறம், எதுக்கு? ன்னு விட்டுட்டேன்..

  அருமையா சொல்லிருக்கீங்க.... ஆனாலும் அ.ஆ, இந்தப் படத்தோட தழுவல்னு சொல்றதெல்லாம் ஓவரு... :))

  ReplyDelete
 2. சுந்தர், இந்தப்படத்தைப் பார்த்தபோது, கதையைச் சொல்லும் முறையால் சுவாரசியமாய் முடியும்வரை பார்க்கமுடிந்தது. கூடவே, ஜிம் கரியா இப்படி நடிக்கிறார் என்ற சின்ன வியப்பும் வந்தது. கேட் வின்ஸ்லெட் பற்றி எதுவும் சொல்லத்தேவையில்லை :-).

  ReplyDelete
 3. இது எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களில் ஒன்று.

  ReplyDelete
 4. ஜி..இரண்டாம் முறை கட்டாயம் முயற்சி செய்யவும். படத்தின் செய்நேர்த்தியை முழுதாக புரிந்து கொள்ள உதவலாம்.
  டிஜே, ஜிம் காரி கொஞ்சம் லைட்டான ஆசாமிதான். மீ.மைசெல்ஃப் அண்ட் ஐரீனுக்குப் பிறகு மாறிவிட்டார் போல.
  நடராஜன்...உங்களுக்கு வித்தியாசமான ரசனை. :-)

  ReplyDelete

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...