Friday, April 01, 2011

ஆனந்த விகடனின் சேவை


ஆச்சரியமாக இருக்கிறது. என்ன ஆச்சு.. ஆனந்த விகடனுக்கு? ஒரேயடியாக விஜயகாந்தை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டு இருக்கிறது? மறைமுகமாக அம்மாவுக்கு ஆனந்தக் கும்மி வேறு?


தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளரை அடித்ததாக பிரச்சினை கிளம்பி, அதை விஜயகாந்தே ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதை இவர்கள் இந்த வார கட்டுரையில் இல்லவே இல்லை என்று சத்தியம் செய்து வக்காலத்து வாங்கி இருக்கிறார்கள். மக்கள் தொலைக்காட்சி இந்த க்ளிப்பிங்ஸில் எக்ஸ்ட்ரா சத்தம் சேர்த்து, லூப்பில் போட்டு ஆகாத்தியம் செய்கிறார்கள் என்றால், ஆ.வி இதை இல்லவே இல்லை என்று தாண்டவமாடி இருக்கிறது . இவர்களுக்கும் மக்கள் டீவிக்கும் என்ன வித்தியாசம்?


ராமதாஸை, கேப்டன் கேள்விகளாக கேட்டால் விகடனுக்கு குதூகலம் கொப்பளிக்கிறது. இதே ராமதாஸ் கொஞ்ச மாதங்களுக்கு முன்னால் மு.க வை கேள்விகளாக கேட்டுக் கொண்டிருந்தபோது அவரை நாயகனாக்கி விளையாடிப் பார்த்தார்கள். தமிழ்நாட்டு சாணக்கியனோ விஜயகாந்தின் அடிதடி மேட்டரை இதை “ஒரு மேட்டரே இல்லை” என்று திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார்.


மு.கவின் குடும்பம் கொள்ளை அடிக்கிறது என்று சொல்பவர்கள் கண்களுக்கு சசிகலாவும், சுதீஷும், பிரேமலதாவும், அந்தந்த கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்களாக தெரிகிறார்கள் போலும்.


மு.க இலங்கைத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தினால், புலி ஆதரவு, சட்டம் ஒழுங்கு மோசம் என்று நடனம் ஆடுவார்கள். பத்மநாபா கொலைக்கும், ராஜீவ் காந்தி கொலைக்கும் இந்த ஆள்தான் காரணம் என்று கமிஷன் கமிஷனாக இழுப்பார்கள். சர்வதேச அமுத்தல்களுக்கு பயந்து இந்திய அரசே இலங்கை விவகாரத்தில் விழி பிதுங்கி நின்று விலை போனபோது, தமிழக அரசு என்னவோ அமெரிக்க அரசாங்கத்தின் அங்கம்போல அதன் செயலற்ற தன்மைக்கு குறை கூறியதோடு நில்லாமல் தமிழினத்தையே ஏமாற்றி விட்டதாக கூக்குரல் இட்டார்கள்.


எம்.ஜி.ஆர் இலவசங்களை அறிவித்தால் அவரை பொன்மனச் செம்மல் என்பார்கள். கால தேச வர்த்தமானங்களுக்கேற்ப மு.க அதை மாற்றினால் மு.க மக்களை பிச்சைக்காரர் ஆக்குகிறார் என்று நாக்கில் நரம்பில்லாமல் புளுகுவார்கள். சொல்லிவிட்டு அம்மையார் அதையே காப்பி அடித்து தன் தேர்தல் அறிக்கையில் போடுவதையும் ராஜ தந்திரம் என்று மெச்சி உச்சிமோர்ந்து ஆனந்த பாஷ்பம் பெருக்குவார்கள்.


கூட்டிக் கழித்துப் பார்த்தால், எல்லாக் கால கட்டங்களிலும் மு.கவின் எதிரணியில் இருப்பவர்களை பத்திரிக்கைகள் என்ன காரணத்துக்காகவோ போஷாக்குடன் வளர்த்து வந்திருக்கின்றன. காரணம் அவரவர்களுக்கு தெரியும்.


தமிழக அரசியலில் ஊழல் கறை படியாத அரசியல்வாதிகள் வெகு சொற்பம். சமூகத்தில் குறிப்பிட்ட அளவு மாறுதல்களை கடந்த ஐம்பதாண்டு கால அரசியல் பணிகள் மூலம் கொண்டு வந்ததற்காக கருணாநிதியின் ஊழல்களை அவர் தனக்காக வசூலித்துக் கொண்ட சர்வீஸ் சார்ஜ் ஆகத்தான் நினைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. அவர் இருந்ததன் அடையாளம் அவர் இல்லாமல் போகும்போதுதான் தெரியப் போகிறது. அவர் மறைவுக்குப் பின தமிழர்கள் என்ன வேண்டுமானாலும் பண்ணிக் கொள்ளட்டும். அவருடைய கடைசி தேர்தலை கேவலபடுத்தி விட்டால் பழையனூர் நீலியின் புத்தம்புதிய காட்சிகள் மறுபடியும் தமிழக அரசியலில் அரங்கேறும்.

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...