Tuesday, April 17, 2007

The Bridges of Madison County(1995)


ஆக்ஷன் ஹீரோ க்ளிண்ட் ஈஸ்ட்வுட் டைரக்ஷனில் 1995ல் வெளிவந்த படம். அவரே கதாநாயகன். நாவலாக எழுதப்பட்டு பெருவெற்றி பெற்ற கதையை படமாக்கி இருக்கிறார். ஆர்ப்பாட்டமில்லாத கதை, யோசிக்க வைக்கும் கரு, தெளிந்த நீரோடை போன்ற திரைக்கதை மற்றும் வசனம்.

அயோவா மாகாணத்தின் கிராமம் ஒன்றில் பதின்ம வயது பிள்ளைகளுடன், பழிபாவம் இல்லாத நல்ல கணவனுடன், ப்ரான்ஸெஸ்கா (Merryl streep) தன் பண்ணை வீட்டில் வசித்து வருகிறாள். நூற்றைம்பது வருடமாக கணவன் குடும்பத்தார்க்கு பழக்கப்பட்டு போயிருக்கும் அந்த வீட்டில் இத்தாலி கிராமத்திலிருந்து வந்து அவள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு ஆண்டுகள் பலவாகின்றன. குழந்தைகள் மற்றும் கணவனுடனா அவள் பழக்க வழக்கத்தில் அன்பும், நெருக்கமும் தெரிந்தாலும், கொஞ்சம் அலுப்பும் தெரிகிறது. மத்திய வயது, பறக்கத் துவங்கி சற்றே விலகத் தலைப்பட்டு இருக்கும் குழந்தைகள், இத்தனை வருடங்களான தாம்பத்தியத்தில் தன்னுடைய ஆகர்ஷிப்புக்கு வெளியே போய்விட்ட கணவன், என நாட்கள் நகர்ந்து கொண்டு இருக்கின்றன.

ஏதோ வேலையாக கணவனும், குழந்தைகளும் ஒரு வாரம் வெளியே செல்கிறார்கள். தினசரி கடமைகளில் இருந்து அவளுக்கு சற்றே ஓய்வு கிடைக்க, வீட்டு முன்புறம் அருகே உலாத்திக் கொண்டிருக்கும் அவளிடம்
பாலத்துக்கு வழி கேட்க வந்த நேஷனல் ஜியாக்ரஃபி போட்டோகிராஃபர் ஒருவன் ஆச்சரியமூட்டுகிறான். காற்றுக்கு சொந்தக்காரனைபோல சொந்த பந்தம் இல்லாமல் விட்டு விடுதலையாகி, உலகம் முழுக்க அலைந்து கொண்டு இருக்கும் அவன், குடும்பப் பொறுப்பு/ பாரத்தின் பொருட்டு அவள் வாழ முடியாத வாழ்க்கையை, வாழ்வதால் அந்த சுதந்திரத்தின் மீதான ஏக்கம் அவனுடன் பேச ஆரம்பித்த ஒரு நாட்களுக்குள்ளேயே அவன் மீதான ஏக்கமாக, பின் விரகமாக மலர்கிறது. அவனிடம் மனசு விட்டுப் பேசலாம் என்று தோன்றி விட வெட்கப்பட்டுக்கொண்டே தன் மனசைப் பகிர்ந்து கொள்கிறாள். பின்னர் தன்னையும்....

அந்த மூன்று நாட்களும் அவர்களிருவரும் பதின்ம வயது குழந்தைகளைப் போல சுற்றித் திரிகிறார்கள். பியர்/சிகரெட்/பிராந்தி வெள்ளமாக பொழிய, அயோவா சாலைகளில், பூங்காங்களில், பாலத்தின்விளிம்புகளில், குளியலறை தொட்டியில், வீட்டின் சாப்பாடு அறை நடனத்தில் காதல் பொறி பறக்கிறது. யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத தன் ரகசியக் கனவுகள் எல்லாம் அவளுக்கு நான்கு நாட்களில் நனவாகிறது. பிரியும் நாளுக்கு முன், அவளுக்கு சந்தேகம் வந்து விடுகிறது. மற்ற பெண் நண்பிகளைப் பற்றி எல்லாம் தன்னிடம் கதைத்த அவன் அவளைப் பற்றி மற்றவர்களிடம் என்ன சொல்லப்போகிறான்??? தன்னை, தன் உணர்வுகளை எப்படி புரிந்து கொண்டானோ என்கிற குமைச்சலில் அவனிடம் தங்கள் உறவை கொச்சைப்படுத்திக் கூறுவதுபோல சுடுசொற்கள் சிலவை வீசிப் பார்க்கிறாள். அதை அமைதியாக எதிர்கொள்ளும் அவன், தன் மனதை, அதில் அவளுக்கான இடத்தைப் புரிய வைக்கிறான். தன்னுடன் வந்து விடுமாறு அவளை அழைக்கிறான். குழந்தைகள் வாழ்க்கைக்காவும், கணவன் உடைந்து போகக்கூடாது என்பதற்காகவும், காமிராக்காரனுக்கான தன் உணர்வுகள் அவனுடன் ஓடிப்போவதால் கேவலப்படுத்தப்படும் அபாயமும் கூடவே இருப்பதால், அவள் கண்ணீருடன் அவனுக்கு விடை கொடுக்கிறாள். மற்ற குடும்பக் கடமைகள் ஊடே சாகும் மட்டும் அந்த நான்கு நாட்களை நினைத்துக் கொண்டே உயிர் விடுகிறாள்.

தன் உயிலில், தான் இறந்தவுடன் தன்னை எரித்து பின் சாம்பலை , (என் வாழ்க்கையைத் தான் உங்களுக்கு கொடுத்து விட்டேன். அதையாவது அவனுக்கு கொடுக்க வேண்டும்) அவனைச் சந்திக்க வைத்த பாலத்தில் இருந்து தூவ வேண்டும் என்கிற வேண்டுகொளை வைக்கிறாள். அம்மாவின் இறப்புக்குப் பின் அவள் உயிலுடன் இருக்கிற டயரிக் குறிப்புகளை படிக்கிற அவள் பிள்ளைகள் (அண்ணனும் தங்கையும்) தன் அம்மாவின் கடந்த காலம் தெரிந்து பலவித உணர்ச்சிகளுக்கு ஆளாகிறார்கள். அதிலும் பிள்ளையால் தன் அம்மாவின் "ஒழுக்கம் கெட்ட" நடத்தையை ஜீரணிக்கவே முடியவில்லை. பின்னர், வாழ்கின்ற ஒவ்வொருவருக்குள்ளும், வாழவே முடியாத இன்னொரு பிரதியும் உள்ளே இருப்பதன் நிதரிசனம் புரிந்து கொண்டு, அம்மா அந்த பிரதியை நாலு நாளாவது வாழ விட்டாள் என்கிற பெருமூச்சோடு தங்கள் உடைந்த வாழ்க்கையை சரி செய்ய தங்கள் கூடுகளுக்கு திரும்புகிறார்கள்.

கொஞ்சம் பிசகி இருந்தாலும், காமிராக்காரனின் காம லீலைகள் என்று தடம் புரண்டு விடக் கூடிய கதையை, அதன் சிக்கலை, மனசுப்படி யாருமே வாழ முடியாத குடும்பத்தின் அமைப்புச் சிக்கலை, கண்ணீரும் காவியமுமாக சொல்லி இருக்கிறார்கள். படத்தைப் பார்க்கும்போது அஸ்தித்வ என்கிற தபுவின் இந்திப்படமும், மிஸ்டர் அண்ட் மிஸஸ் அய்யர் என்கிற கொங்கனா சென் படமும் நினைவுக்கு வந்தன.

என் கண்ணுக்கு முன்பே இது நடந்திருக்கிறது. மூன்று இருபது வயது பெண்களையும், இரண்டு பத்து வயது ஆண் பிள்ளைகளையும் விட்டு விட்டு, கனவர் இறந்த கொஞ்ச நாளில், மனசுக்குப் பிடித்த ஆணோடு ஒரு அம்மாள் போய் விட்டார். என் தோழியின் அம்மா அவர். அப்போது கேட்டபோது ச்..ச்சீ என இருந்தாலும், பழிச் சொல்லுக்கு பயப்படாமல், தியாகி ஆகி பொய் வாழ்க்கை வாழாமல், திடமாக தடம் மாறிப் போனாரே என்று இப்போது தோன்றுகிறது. பலர் நடக்க நடக்கத் தானே தடங்கள் உருவாகின்றன.

உண்மையான காதல் இணைவதில் முடியவேண்டாம்.காதல் ஜீவிதமாக இருக்கட்டும் என்று எங்கோ படித்த நினைவு. ஆனால் காதல் ஜீவிதமாக
இருக்க மனுசப்பய மனசு அல்லவா செத்துப் போகிறது. யாருக்குமே நிறைவு தராத குடும்ப அமைப்பை என்ன இழவுக்கு தாங்க வேண்டும் / கட்டிக் காக்க வேண்டும் என்றுதான் எனக்குப் புரியவில்லை. ஆனால் ஒரு ஆச்சரியம். விருப்ப வாழ்வின் மீதான ஆணின் விழைவை உடல் சார்ந்தது என்று (ஆண்களே) வகைப்படுத்துவதும், பெண்ணின் விழைவை உள்ளம் சார்ந்தது என வகைப்படுத்துவதும் நம் எல்லோருக்கு நம் அம்மாக்கள் மீதான அன்பு கலந்த மரியாதையையே ஸ்திரம் செய்கிறது. ஒரு ஆண் தன் இச்சைகளினை கெளரவப்படுத்தாமல், சமூகத்தின் சட்டங்களுக்கும், குடும்பத்தின் இறுக்கத்துக்கும் பயந்து பலகாலம் புழுக்கத்தில் வாழ்ந்து, அவ்வப்போது அதற்கு மரியாதைக் குறைவான வடிகால்கள் தேடி, தன்னிரக்கத்தில் அதற்காகவும் துயருற்று வாழ்ந்து விடமுடியும். ஆனால் ஒரு பெண் நினைத்து விட்டால், அவள் எதற்காகவும் காத்திருப்பதில்லை. எந்த பெயர் வாங்கவும் அஞ்சுவதில்லை என்பது தான் எனக்கு இப்போதைய நடப்பாக தோன்றுகின்றது.

பார்த்து விட்டு நீங்களும் யோசியுங்கள்.

பிற விமரிசனங்கள் : ஒன்று இரண்டு

12 comments:

  1. இன்னொரு பட விமரிசனம் - இதே எண்ணங்களின் தொடர்ச்சியாக :

    http://mynose.blogspot.com/2005/10/end-of-affair.html

    ReplyDelete
  2. மூக்கரே,

    இப்பதான் பார்க்கிறீங்களா?

    இந்தப்படத்தைப்பற்றிப்போகிற போக்கில் எழுதிய சில வரிகள்..

    //ஹொலிவூட் காதல் படங்களில் மிகவும் பிடித்த ஐந்து படங்களில் Bridges of Madison Countyக்கு ஓரிடம் இருக்கிறது. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்துவிடுவேன். பார்க்கவேண்டியது, இரண்டு நாட்களுக்கு இந்தப் பட நினைவிலேயே சுற்றவேண்டியது என்று இது ஒரு தீராத சுற்று. Meryl Streep அருமையான நடிகை. ஆனால், க்ளிண்ட் ஈஸ்ட்வூட்டை இந்தமாதிரியான பாத்திரத்தில் எதிர்பார்க்கவேயில்லை. அதுமட்டுமல்லாமல் படத்தை இயக்கிதும் கிளிண்ட்தான். PHEW! Not the Cowboy/Dirty Harry Clint Eastwood I was introduced to. That’s for sure.//

    இந்தப்படத்தைப்பற்றி பலமுறை பல நண்பர்களுடன் அலசி, ஆராய்ந்து, உச்சுக்கொட்டி, இன்னும் என்னமெல்லாவோ பேசியிருந்தாலும், திரும்பத்திரும்பப் பேசுவதற்கு விதயங்களைக் கொடுக்கும் படம்.

    out of africa, the way we were, bridges of madison county எல்லாம் இந்தமாதிரிப் பேச்சுகளை எண்ணங்களைத் தூண்டும் படங்கள்.

    நீங்களும் யோசிக்கச் சொல்லியிருக்கீங்க. :)

    இந்தப் படம் பற்றி Ebert சொல்லியிருப்பது, எனக்குப்பிடிக்கும்..

    //"The Bridges of Madison County" is about two people who find the promise of perfect personal happiness, and understand, with sadness and acceptance, that the most important things in life are not always about making yourself happy. //

    நல்ல இடுகை. நன்றி மூக்கர்.

    -மதி

    ReplyDelete
  3. அம்மணி, ஒரு படம் உட்டு வைக்கிறதில்லை போல..!!!!!!! :-)

    Out of Africa பார்த்திருக்கிறேன்.
    The way we were- இனிதான்.
    பரிந்துரைப்புக்கு நன்றி.

    இதுல இன்னொரு ஆச்சரியம் என்னன்னா...இந்தப் படத்தைப் பத்தி ரெகமண்ட் பண்ணது மயிலாடுதுறை சிவா. !!!!!!!

    எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குன்னே தெரியலை வரவர!!:-)

    ReplyDelete
  4. :)) அவருக்கு யாரு ரெக்கமெண்ட் பண்ணினாங்கன்னு விசாரிக்கிறதில்லையா? :D

    out of africa பார்த்திட்டு நீங்க ஒரு இடுகை எழுதினமாதிரி நினைவு..

    the way we were-ஐயும் பார்த்திட்டு எழுதுங்க.. :)

    அதேமாதிரி இன்னும் இரண்டு படங்கள். பார்க்கலைன்னா பாருங்க.

    மொதல்ல பார்க்க வேண்டியது:

    Before Sunrise

    ரெண்டு படத்துக்கும் நடுவுல இடைவெளி விட்டாலும் சரி.. இரண்டை கொண்டுவந்து தொடர் மாரத்தன் ஓட்டம் விட்டாலும் சரி..

    என்னைக்கேட்டா, கொஞ்சம் இடைவெளி விடுறது நல்லது.. :)

    Before Sunset


    இடுகைகளோ, கட்டுரைகளோ எழுத விரும்பாத படங்களில் இவையும் அடக்கம்.

    ஆனா, நீங்க எழுதினா, படிக்க நான் ரெடி. :)

    -மதி

    ReplyDelete
  5. //:)) அவருக்கு யாரு ரெக்கமெண்ட் பண்ணினாங்கன்னு விசாரிக்கிறதில்லையா? :D //

    ஓஹோ..அப்படியா சேதி. தொண்டு தொடரட்டும்.


    Before sunrise/ sunset ம் பார்க்கிறேன்.

    நன்னி

    ReplyDelete
  6. 1995-ல் நான் இங்கு(அமெரிக்கா) வந்தபோது, ஊடகங்களில் நிறையப் பேசப்பட்ட படம். படத்தில் பியானோ இசை மற்றுமொரு பாத்திரமாக வரும். ரொமாண்டிக் படங்களைக் கண்டாலே ஒடும்(நன்றி, தமிழ்/இந்தி தறுதலைக் காதல் படங்கள்) என்னை உட்கார வைத்ததில் இதுவும் ஒன்று.

    குறிப்பாக, கணவர் ஃப்ரான்செஸ்காவிடம் இறுதியில் படுக்கையில் மன்னிப்புக் கேட்கும் இடம்...Simply great.

    ReplyDelete
  7. //குறிப்பாக, கணவர் ஃப்ரான்செஸ்காவிடம் இறுதியில் படுக்கையில் மன்னிப்புக் கேட்கும் இடம்//

    அது எதற்கென்றே தெரியவில்லை. ப்ரான்ஸெஸ்கா தன்னுடைய கனவுகளை எப்பொழுதாவது கணவரிடம் பகிர்ந்து கொண்டாளா என்பது தெரியவில்லை.
    பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களைக் கூட கண்டுபிடித்து வாழ்ழ்வேண்டுமானால், ஒவ்வொரு கணவனும், மனைவியும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.அழுவுற பிள்ளைக்குத்தான் பால் கெடைக்கும்!!!!

    அப்பிராணியான அக் கணவர் அந்தக் காட்சியில் நிஜமாகவே மனதினை அசைத்து விட்டார்.வெள்ளந்தியான ஆசாமியாய் இருப்பதினை தவிர அவர் வேறெந்த குற்றமும் செய்யவில்லை. If he seems to be boring/ordinary for somebody, it is not his fault...!! மரச்சிற்பம் செய்யும் சிற்பியினை விறகு பிளக்கும் வேலைக்கு சேர்ப்பதும், சுவையாக சமைப்பதில் ஆர்வமுள்ளவனை உணவின் ருசி தெரியாதவர் மாக்கான்களுக்கு சமைக்க விடுவதும், மாபெரும் கவிஞன் ஒருவனை வரிவிளம்பரங்கள் எழுதும் வேலைக்கு தள்ளுவதும் கடவுள்தான். வேறென்ன் சொல்ல...

    ReplyDelete
  8. //If he seems to be boring/ordinary for somebody, it is not his fault...!! //
    - Agreed.

    யோசித்ததில், ஃப்ரான்செஸ்காவின் கணவர் சதாரணமாக உரையாடும் போதும் அவள் ஈடுபாட்டுடன் பேசுவது இல்லை. படத்தில் குறைந்த காட்சிகளே இருவரும் இணைந்து வந்தாலும், அது குறிப்பாகக் காட்டப்பட்டிருக்கும்(என்று நினைவு). மீண்டும் பார்க்கும்போது, கவனிப்பேன்.

    ReplyDelete
  9. இப்பட டிவிடி வாங்கியிருக்கிறேன். பார்க்க வேண்டும்.

    நலம்தானே?

    அன்புடன்

    ராஜ்குமார்

    ReplyDelete
  10. ராஜ்குமார்,

    கண்டிப்பாக பார்க்கவும். மதி கந்தசாமியின் ரொமாண்டிக் படங்கள் பற்றிய பதிவையும் பார். மேலும் பல சுவாரசியமான படங்கள் அ
    தில் உண்டு.

    http://mathy.kandasamy.net/movietalk/

    நான் நலம்தான்.நீ எப்படி இருக்கிறாய்..???

    ReplyDelete
  11. வணக்கம் சுந்தர்

    வரலாற்று காவியத்தை மனைவி இந்தியா சென்ற நேரம் அமைதியாக(!) பார்த்துவிட்டு விமர்சனம் எழதி வீட்டீர்கள். சூப்பர். என் மனதை மிக அழமாக பாதித்த படம். மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் படம்.

    மதியாரே! நலமா? உங்கள் காதல் திரைப்பட பட்டியல் பார்த்தேன்...அதில் பலவற்றை முன்னரே பார்த்து விட்டேன். நன்றி

    மயிலாடுதுறை சிவா

    ReplyDelete
  12. //வரலாற்று காவியத்தை மனைவி இந்தியா சென்ற நேரம் அமைதியாக(!) பார்த்துவிட்டு விமர்சனம் எழதி வீட்டீர்கள்//

    அந்த பாக்கியம் கிடைக்க இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.:-)

    ஜூன் மாதத்தில் தான் செல்கிறாள். :-)

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...