Wednesday, December 23, 2009

விகடன் - கவிதை

நேற்றொரு கூட்டத்தில் பார்த்தேன்! ( தமிழ்நதி)

குறுக்கித் தறித்து
இதை எழுதிக்கொண்டிருக்கிறபோது
'காட்டுப் பூபோல மலர வேண்டும் கவிதை'
என்ற வரி உள்ளோடிச் சுடுகிறது.
காற்றில் தனித்தசையும் காட்டுப் பூவை
நின்று கவனிக்க எவருமில்லை
எல்லோருக்கும்
வேண்டித்தானிருக்கிறது
வெளிச்சம்!

புளிய மரங்கள் கிளையுடல் வளைத்து
கூடல் நிகழ்த்தும்
சாலையின் வழியே
மிதந்து செல்கிறார்கள்
கார் காலத்தில்
மானசியும் ஜான்சனும்.
இளவேனிலில்
மானசியும் மௌலியும்.
ஆகஸ்ட்டின் கொதி வெயிலில்
மானசியும் தாமோதரனும்
ஒன்றிற்கொன்று குறைவிலாத
புதிர்ப் பெண்ணின் காதலின் மேல்
படர்ந்துகொண்டிருக்கிறது வெயில்
பொழிந்துகொண்டிருக்கிறது மழை!

ழல் சாந்து குழைத்த கட்டட
இடிபாடுகளினின்று
தப்பிப் பிழைத்த பால்புட்டியைப்
பார்த்துக்கொண்டிருக்கிறாள் தாயருத்தி.
சட்டத்தில் ஒரு கொலையின் விலை
ஒரு மாத வாடகையிலும்
மலிவானதெனச் சொல்லியபடி
காற்சட்டைக்குள் தன்னை நுழைத்துக்கொண்டிருக்கிறான்
பதினெட்டு வயதுப் பையனொருவன்
எப்போதும்
வெட்டரிவாள் சின்னத்துக்கே
விழுந்துகொண்டிருக்கிறது ஓட்டு.
நீங்கள் விரைந்துகொண்டிருக்கிறீர்கள்
வண்ணத் தொலைக்காட்சியை வாங்க!

'ன்னை மறந்தால் இறப்பேன்'
என்றவனை
நீண்ட நாட்களின் பின்
நேற்றொரு கூட்டத்தில் பார்த்தேன்
கருநீலமும் சிவப்பும் அழுத்தமாய்
மேலும் கீழும் ஓடும் மேற்சட்டையும்
காக்கி கலர் காற்சட்டையும்
தோள் தொங்கும் ஜோல்னாப் பையுமாய்
அழகாகத்தானிருந்தது
ஆவி!


ரு சொல் உதிர்க்கும் வரை
தேவதை
கண்ணிறங்கிக் கலந்தால்
மானுடத்தி
முயங்கிக் களித்துச் சலித்த பின்னே
ராட்சசி
தாபித்துத் தொடர்ந்தாலும்
காதலித்துக் கரைந்தாலும்
மணந்து புணர்ந்தாலும்
உனக்கென்ன
நீ மட்டும்
எப்போதும் தேவகணம்!

கொலைகாரர்கள்
நீதிமான்களாக இருக்கும் தேசத்திலும்
அடித்துப் பொழிகிறது மழை
பட்டாம்பூச்சிகள்
வண்ணங்களை உதிர்த்துவிடவில்லை
குழந்தைகள் சீவிக்கிறார்கள்
உனது காதல்
ஆன்மாவிலிருந்து புறப்பட்டு வருவதாக
நீ கண்ணீர் வழியச்
சொல்லிக்கொண்டிருக்கிறாய்!

ணவனைப் பின்னிருத்தி
இரு சக்கர வண்டியை ஓட்டிச் செல்லும்
தாட்டியான பெண்ணை
வினோதரசம் மிதக்கும் விழிகளால் ஏறிடுகிறீர்கள்.
மது விடுதிக்குள் சுவாதீனமாக நுழையும்
இளம்பெண் குறித்த சித்திரமும்
உவப்பானதாக இல்லை.
'அவள்' எழுதும் கெட்ட வார்த்தைகளை மட்டும்
அவளை மறந்துவிட்டு வாசிக்க முடிவதில்லை.
நண்பரின் வீட்டில்
அதிசயமாக அரசியல் பேசுகிற பெண்
சமையலறைக்குள் எழுந்து போகும் வரை
மனஅவச மௌனம் காத்துப்
பின் விட்ட இழையிலிருந்து
விவாதத்தைத் தொடர்கிறீர்கள்
அடைபடலுக்குப் பழக்கப்பட்ட விலங்குகள்
கை மறதியில் திறந்திருக்கும்
கூண்டுக் கதவை
விசித்திரம் படர்ந்த கண்களால்
வெறித்துக்கொண்டிருக்கின்றன!


வசரமாய் கவிதையன்றைத்
தயாரிக்க வேண்டியிருக்கிறது.
அனுப்பிவைக்கக் கேட்டவரின் அனுக்கமும்
வாசிப்பவள்/ன்
கைவண்டி இழுத்துக் களைத்தவனா
சமையல் விடுமுறையில்
கூடத்தில் குப்புறக் கவிழ்ந்திருந்து படிப்பவளா
இலக்கிய நுணுக்குக்காட்டி அணிந்தவனா
சன்னல்களும் பூட்டப்பட்ட அறையினுள்
புத்தகங்களோடு மட்டும் வசிப்பவனா
இக்கவிதை
திறந்த இடுப்பருகில் இடம்பெறுமா
கொலைப் படுகளத்தைச் சித்திரிக்கும் கட்டுரைக்கு
எதிர்ப் பக்கத்தில் வெளிவருமா
இறக்குவதா ஏற்றுவதா
இருண்மை செய்வதா
வெளிச்சம் விழுத்துவதா
ஏதேதோ கேள்விக் கொக்கி
பிடித்திழுக்கப் பிடித்திழுக்க
பொறாமல் முகம் சிணுங்கி
தெருவிறங்கிப் போகிறதே என் கவிதை
என் செய்வேன்
இல்லாத என் தெய்வமே!

மாடியை ஒட்டிய
புத்தக அறையினுள் எப்படியோ
சேர்ந்துவிடுகின்றன சருகுகள்
வாசிப்பினிடை தலைதூக்கினேன்
செல்லமாய் சிணுங்கி
ஒன்றையன்று துரத்திச் சரசரத்தன
கட்டிலுக்கடியில் பதுங்கின மேலும் சில
பெருக்க மனதின்றி விட்டுவைக்கிறேன்
ஈரமனைத்தும் உறிஞ்ச
வெயில் வெறிகொண்ட
கொடுங்கோடையில்
எந்த வடிவிலேனும்
இந்த மாநகர வீட்டினுள்
இருந்துவிட்டுப்போகட்டுமே
மரம்!

வாக்குப் பெட்டிகளுக்காக
பணப் பெட்டிகள்
பணப் பெட்டிகளிலிருந்து
ஆயுதப் பெட்டிகள்
ஆயுதப் பெட்டிகளிலிருந்து
சவப் பெட்டிகள்
சவப் பெட்டிகளிலிருந்து................
எந்தப் பெட்டியை
எந்தப் பெட்டி
முதலில் குட்டி போட்டதென்று
உங்களுள் எவராவது
சொல்ல முடியுமா நண்பர்களே?

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...