Saturday, June 19, 2010

அப்பா - மீள்பதிவு



Unsung Heroes என்ற வரிசையில் தாராளமாக சேர்க்கலாம் இந்த உறவை. இலக்கியங்களிலும் புராணங்களிலும் அம்மா 'பாடல்' பெற்ற அளவிற்கு அப்பா பெறவில்லை. வீட்டில் குழந்தைகளை பராமரித்தும் , உறவுகளை அனுசரித்தும் காலம் முழுக்க வாழும் அம்மாவை பற்றி பேசும்போது , குடும்பத்துக்காக வெளியிலே சிலுவை சுமக்கும் தந்தையின் தியாகம் கண்டுகொள்ளப்படாமல்தான் போகிறது. எனக்குத் தெரிந்த வரையில் அம்மா பிள்ளைகள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாக, கொஞ்சம் சுயநலமும், அதிகம் உழட்டிக் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். அப்பாவுடன் நல்ல உறவு நிலையில் இருக்கும் பையன்களுக்கு இவர்களைவிட திடமும், முதிர்ச்சியும் அதிகமாகவே இருக்கிறது.கல்யாணம் ஆனபின் பொதுவாக இந்த 'அம்மா கோண்டுகள்' எல்லாம் சகதர்மிணி வசம் தன்னை ஒப்படைத்து விடுகிறார்கள். 'சம்போகமே தாயின் கருவறையில் மறுபடியும் புகுந்து கொள்ளும் முயற்சி வகையை சேர்ந்ததுதான் ' என்று எங்கோ படித்ததை என் நண்பர் ஒருவரிடம் சொல்ல என்னை 'ஏற இறங்க' பார்த்தார் அவர். இது மாதிரி விஷயங்களை கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம் என்று தியோடர் லிட்ஸ் எழுதிய " The person" என்ற புத்தகத்தை வாங்கி வைத்து கொஞ்சம் படிக்க முயற்சித்தேன். தலை கால் புரியவில்லை.என் மனைவி படித்துப் பார்த்து விட்டு 'புக் நல்லா இருக்கே..இதுல என்ன புரியலை'என்றாள். கொஞ்சம் பயமாக இருந்தது. இன்னொரு விஷயம்...தாயிடமும், பழகும் பெண்களிடமும் மரியாதையும் , ஸ்நேகமுமாக இருப்பவர்கள்தான் , விலைப்பெண்கள் விஷயங்களில் எல்லாம் தாராளமாக இருக்கிறார்கள். தீவிரமாக இதை யோசித்துப் பார்த்தால் காரணம் புரியும் என நினைக்கிறேன். எல்லா படைப்பாளிகளும் கிட்டத்தட்ட அம்மா பிள்ளைகள்தான். விதிவிலக்கு சுஜாதா. சுஜாதாவின் அப்பா இறந்தபோது அவர் எழுதிய 'அப்பா..அன்புள்ள அப்பா' மிகப் பிரபலம். அப்பா இறந்து போகும்போது பையன் அப்பா ஸ்தானத்துக்கு வருவதை எல்லாம் சினிமாக்களில் பார்த்து விட்டு கெக்கே பிக்கே என்று சிரித்திருக்கிறேன். ஆனால் நிஜவாழ்க்கையில், அந்த தருணத்தில் அதுதான் நிகழ்கிறது என்று தோன்றுகிறது. அப்பா கவிதை வரிசையில் நான் படித்த மிகச்சிறந்த கவிதையாக இரா.மு வின் இக்கவிதையை குறிப்பிட விரும்புகிறேன்.

அப்பாவின் மரணமும் அடுக்குமாடிக் குடியிருப்பும்
-------------------------------------------------

காலையில் வென்னீர் போட்டுத்தரச் சொன்ன குரலிலும்
குளிகை தேடித்தரக் கொடுத்த துணிப்பை மேலும்
சாவின் ரேகைகள் இல்லை.

செம்மண் பூமியில் எண்பது வருடம் முன்னால்
மாற்றாந்தாய்ப் பாலோடு தொடங்கியது
உஸ்மான்வீதி காப்பி கிளப் சர்க்கரை ஜாஸ்தி
பிற்பகல் காப்பியோடு முடிந்தது.

மழை ராத்திரியில் ஐஸ்பாளம் இறக்கிய
ஆட்டோக்காரர் சொன்னார்
'போட்டுக் கொடு சார். பொணம் கனம்'.

எல்லா மாடியிலும் தெரிந்த முகங்கள்
பார்த்தபடி நிற்கப் பாளம் உருட்டி
மாடியேற்றி நண்பர்கள் கைகொடுக்கக்
குளிரக் குளிரப் படுக்க வைத்தோம்.

'காலையிலே தானா மற்றதெல்லாம்?
சீக்கிரம் எடுத்துடுவேளா? எனக்குப்
பசி தாளாது. அல்சர் வேறே'.
தொலைபேசியில் சேதி சொல்ல
உறவு முறையிட்டது.

காலையில் லுங்கியோடு வந்த
முதல் மனிதர் நேர்மேலே மூன்றாம் தளம் -
'இந்துவிலே இப்பத்தான் படிச்சேன்.
அனுதாபங்கள்'.
டிவியில் சொல்லியிருந்தால்
எதிர்வீட்டிலிருந்தும் வந்திருப்பார்கள்.

நெய்யை ஊற்றி ஹோமம் பண்ணனும்.
சாஸ்திரி சொல்லியபடி
ஜர்தாபான் டப்பாவில்
வனஸ்பதி வாங்க
ஆள் அனுப்பினார்.

'எண்ணூறு சதுர அடி வீடா?
எவ்வளவுக்கு வாங்கினது?'
ஈரம் மிதித்துக் கேட்டவர்
குடையை மாட்ட இடம் தேடினார்.

'எடுத்துப் போக வண்டி வரலியா?'
எல்லோரும் கேட்கச் சங்கடம் தாங்காது
'போகலாம் வா' என்றார் அப்பா.
எப்போதும் போல் மழை.




இதைப் படித்து விட்டு கவிஞர் ஹரி எழுதியது கீழே:


'இன்னிக்கு ராத்திரி
எங்கிட்ட படுடா'
சொன்னவர் குரலில்
பயணம் தொனித்தது.

ஒற்றைக் கட்டில் - நான்
உதித்த கட்டில்
அந்தக் காலத் தேக்குப் பலகையும்
ஆயுள் பெருத்த ரோஸ்வுட் சட்டமும்
பற்றிக் கொண்டு நிற்கும் கட்டில்.

பெற்றவன் முதுகை மார்பிலணைத்து
ஒட்டிப் படுக்க தாகம் வலுக்க,
பற்றிய காலில் பயணச்சுவடு.

அறிவும் மனமும் எதிரெதிர் நிற்க
அம்மா உறங்கும் இடத்தைக் கடந்து
கங்கைச் சொம்பின் வாயைப் பிளந்து
கண்ணீர் படாமல் தொண்டை நனைத்தேன்.

ஒன்றரை மணிக்குக் கட்டிப் படுத்து
மூன்றரை மணிக்குக் கண்ணை விழித்தால்
பற்றிய கையில் அப்பாக் கூடு.
பயணம் ஆனதும் எக்கணம் அறியேன்.

உறங்கும் அம்மா.
உலுப்பிட வேண்டாம்.
காலை வரட்டும்.
கண்ணீர் எனக்குள்.

--ஹரி கிருஷ்ணன்


அன்புள்ள முருகன்,

எந்த எழுத்து இன்னொரு மனத்தைத் தொட்டு எழுப்புகிறதோ, எந்த எழுத்து இன்னொரு மனத்தின் அனுபவத்துக்குள் எட்டிப் பார்க்கிறதோ, அந்த எழுத்துக்கு என் வணக்கம்.


என் வணக்கமும்........

தந்தையர் தின வாழ்த்துக்கள். !!!!!!!!!!!!


மணிராவணன்


விக்ரம் - அட்டகாசமான நடிப்பு. ஆண்மையும் வெறியும் நிரம்பிய பாத்திரத்தில் காதலும், சற்றே காமமும் அம்சம்

சந்தோஷ்சிவன்/ மணிகண்டன் - அருமை. தியேட்டருக்குள் தண்ணீரில் ஊறிய பச்சை இலை வாசனைகள் அடிக்கும் அளவுக்கு தரமான ஒளிப்பதிவு. கொஞ்சம் அதீதமான அழகுணர்ச்சியக் குறைத்திருந்தால் கதை மேலேறியிருக்கும்.


ஐஸ் - வயசானாலும் ஐஸ் ஹாட். சொந்தக் குரலாம். பரவாயில்லை. எஸ்.பி யின் மனையாளாக இலக்கணம் மாறாமல் பரதநாட்டியம் கற்றுக் கொடுத்து, அழகு ஆன்டியாக வந்து போகிறார். எத்தனை பதவிசாக இருந்தாலும் எல்லாப் பெண்களுக்குள்ளும் இருக்கும் காட்டுச் சிறுக்கியை வெளியே அவ்வப்போது உலவ விட்டு உள்ளே அனுப்புகிறார். வீரய்யாவைப் பார்க்கும் அவரது பார்வையில் ஏற்படும் மாற்றங்களினை மணி மெல்ல மெல்ல வெளியே கொண்டு வந்திருப்பது - நச்.

ப்ருத்விராஜ் சரியான NPK. இதை வைத்து இன்னம் எத்தனை ஆட்டம் போடப் போகிறாரோ. கனாக்கண்டேன் படத்துக்குப் பிறகு அவர் நடிக்கவே இல்லை. ப்ரியாமணி கொஞ்சம் வந்தாலும் கச்சிதம். அண்ணன் கூப்பிட, கல்யாண மருதோன்றியோடு அந்தக் குண்டுக் குயில் “யாங்” என்று கூவும்போது கண்ணில் பூச்சி பறக்குது. பிரபு/ கார்த்திக்கை இந்தப் படத்தில் பார்க்கும் போது அந்த நாள் அக்கினிநடசத்திர ஞாபகங்கள் வந்து போயின. முதுமை கொடிது.

சுஹாசினி- சுஜாதா(த்தா)வின் அருமையை, அவர் இல்லாத வெறுமையை உணர வைத்திருக்கிறார். புது பேனா வாங்கி இருப்பார் போலிருக்கிறது. குடம் குடமாக இங்க் ஊத்தி வள வளத்திருக்கிறார். மணியின் எடிட்டிங்கால் நம் தலை தப்பியது. “ உன் பொண்டாட்டிக்காவே உன்னைக் கொல்லலாம்.அவளுக்காகவே உன்னைக் காப்பாத்தலாம்” என்று விக்ரம் பேசுகிற கிளைமாக்ஸ் வசனம் மட்டும் ”அட” . ராமாயணத்தை பார்வையாளர்களுக்கு புரிய வைக்க வசன ரீதியாக அவர் எடுத்திருக்கிற முயற்சிகள் சிறுபிள்ளைத்தனம். மணி ஜெயமோகனையோ, எஸ்.ராவையோ முயன்றிருக்கலாம்

இசை - வழக்கம்போல ரஹ்மான் பாட்டுக்கள் கேட்க கேட்கத்தான் பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன.

மணி - டிபிகல் மணி படம். படமாக்கம், பாணி, ஸ்டைல் பளிச். சிட்டி பையன்களுக்காகவே படம் எடுக்கிற பார்ட்டி, இப்போது non-stick cookware ல் ப்ரியாணி பண்ணியது போல ராவணனை எடுத்து இருக்கிறார். வெகு மக்கள் ரசிப்பதற்காக, அவர்கள் விருப்பத்திற்காக, ராமாயண வில்லனை தன் நாயகனாக ஆக்கி கல்லா கட்டியிருக்கும் நுண்ணரசியலை அறிவு ஜீவிகள் எழுதிக் கொள்வார்கள். நமக்கு ஒரு வெள்ளிக்கிழமை மாலை, முதல் ஷோ, சாக்ரமண்டோவில் Big Cinemas புண்ணியத்தில் இஷ்ட மித்திர பந்துக்களுடன் சுகமான பொழுதுபோக்கு. கமர்ஷியல் கட்டாயங்கள் இல்லாமல், லோ பட்ஜெட்டில் இளம் நாயக/ நாயகிகளுடன் அவ்வப்போது Classics வகை படங்களையும் அவர் முயற்சி செய்ய வேண்டும். வேறு பாணிகளில், வேறு format களில் பரிட்சித்துப் பார்க்க வேண்டும். சரக்கு இருக்கு. ஆனால் காந்தித் தாத்தா சிரிக்கிறார். பாவம் Moneyரத்னம்

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...