Tuesday, March 17, 2015

தேஜஸ்வினி

ஆண்டாள் ப்ரியதர்ஷினி
குட்டி ரேவதி
சல்மா
சுகிர்தாராணி
லக்‌ஷ்மி சரவணகுமார்...
ஜெயமோகன்
ஜெயகாந்தன்
பாலகுமாரன்
நீல பத்மநாபன்
தகழி சிவசங்கர பிள்ளை
சுகா
புனத்தில் குஞ்சனப்துல்லா.....
வகை தொலை இல்லாமல்
நீள்கின்ற இந்தப் பட்டியலில்
பெரும்பாலானோரை
உன்னை சுற்றி இருந்தவர்கள்
யாருக்கும் தெரியாது
நீயோ இவர்களின் அணுக்கி...
இத்தனை பேரை தெரிந்தும்
சுற்றி இருந்த அபத்தங்களை
சகித்துக் கொண்டும்
சீறிக் கொண்டும் இருந்தாய்.
புத்தியற்றவர்கள் நிம்மதி
பெற்றவர்கள்.

கோயிலுக்கு நிதம் போய்க் கொண்டு
காய் நறுக்கிக் கொண்டு
கழுவின பாத்திரத்தையும்
அடுப்பு மேடையையும்
திரும்பத் திரும்பக் கழுவிக்கொண்டு
விஜய் டீவியில் ”நீயா நானா” பார்த்துகொண்டு
பண்டிகைக்கு பண்டிகை பட்டுப் புடவைக்கு
மல்லுக் கட்டிக் கொண்டு
இயலாமைகளை எல்லாம் ஒற்றை
உதட்டு மடிப்பில் மூடிவைத்து
என்னுடன் தனியே இருக்கும்
சந்தர்ப்பங்களில் மட்டும்
மளுக்கென்று அழுதுகொண்டு
நீ எங்காவது ஒரு மூலையில்
உயிரோடாவது இருக்கக் கூடாதா?

Saturday, March 14, 2015

காயம்

அரவணைக்க எந்தைக்கு ஆளில்லை
ஆடி ஓடி தோள்கொடுக்க என் தாய்க்கும் உறவில்லை
வறுமையிலும் வலிகளிலும் வளர்ந்தோம்
உழைப்பையும் உறுதியையும் நாவன்மையும்
அன்றி தோள் கொடுக்க யாரும் இல்லை. ...
சத்தமில்லாமல் யுத்தம் செய்தோம் நித்தம் நித்தம்

எங்களுக்கும் விடிந்தது இறைஅருளால்
எம் மகவும் சீர் பெற்றது அவன் பெருங்கருணையால்
உற்றாரும் உரியோரும் விதந்தோந்த
எம்மை பெற்றவர் மகிழ்ந்திருந்தார்
பேருவகையில்
முட்டி மோதி பெற்றெடுத்த
நிம்மதியை...அகமகிழ்வை.. பெருமிதத்தை
கைவிட்டு நிற்கிறோம்
நெட்ட நெடுமரமாய்..
எங்கு சொல்ல..யாரிடம் சொல்ல
எதைச் சொல்ல... எப்படிச் சொல்ல...
மிஞ்சி இருக்கும் வாழ்க்கை முழுதும்
உனை இழந்த துக்கம்தனை
விஞ்சாது எதுவும் எம்மை.....

Thursday, March 05, 2015

பரிகாரம்

பிடித்த கலரில் பாலியஸ்டர் சட்டை
கிடைக்காததையும்
புகை நெடியடிக்க தீபாவளி பட்டாசு
அலுக்க அலுக்க கொளுத்தாததையும்
முழுப்பரிட்சை லீவுக்கு போக...
மாமா வீடு இல்லாததையும்
ஏசி தியேட்டர் லெதர் சீட் இல்லாது பார்த்த
சகலகலாவல்லவனுக்கும்
இரவலில் ஓட்டியே பழகிய சுவேகா
என் வீட்டு வாசலில்
சொந்தமாக நிற்காததையும்
பிடித்த கல்லூரி...
பிடித்த பாடம்...
பிடித்த ஸ்நேகிதி...
பிடித்த வேலை...
இப்படியாக...
கிடைக்காமல் போன எல்லாவற்றுக்கும்
சொல்லி சொல்லி அழுதிருக்கிறேன்.
இன்று....
உன்னை இழந்ததின் சோகம்
என்னை ஊமையாக்கி
உறைய வைத்திருக்கிறது.
என் நம்பிக்கைகளையும்
எதிர்பார்ப்புகளையும்
பொடிப்பொடியாய்
உடைத்திருக்கிறது
அடைய நினைத்தவைகளின் விலகல்
தந்த துயரம் தாண்டியும்
இருக்கும் உறவை இழக்கும் துயரம்
மாபெரும் சோகம்.
இன்னொரு முறை
பிறந்து வாயேன்.....
உனக்கு இழைத்த
துன்பத்துக்கெல்லாம்
பரிகாரம் செய்கிறோம். 

Wednesday, March 04, 2015

சான் ஓசேவில் ஒரு தமிழ்த் திருவிழா - தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்!


விழாக்கோலம் பூண்டு கொண்டு இருக்கிறது வளைகுடாப் பகுதி. சமையலறையில் தயாராகும் உணவுப் பண்டங்களின் மிகுமணத்தில் பந்தியிலே இருப்பவன் வயிற்றை கிள்ளுமே பசி, அப்படியொரு விருந்திற்கு உலகத் தமிழர்கள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். வாராது வந்த மாமணியாய் இம் முறை வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா நம் வீடு தேடி வந்திருக்கிறது.

சான் ஓசேவில் 2015 – ஜூலை 3, 4 தேதிகளில் நடக்க இருக்கும் இவ் விழாவில், இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் சுவையில் இனிய நிகழ்ச்சிகள் அத்துறை வல்லுநர்களால் நடத்தப்படுகிறது. தமிழ்த்திரை பிரபலங்களின் உற்சாகமான பங்களிப்புடன் நடக்கும் இந்த விழா நம் மக்களை கிட்டத்தட்ட 80 மணி நேரங்களுக்கு உவகையூட்டக் கூடிய மாபெரும் கலைவிழா. சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதி தமிழ்மன்றம் தலைமை ஏற்று நடத்தும் இந்த விழாவில் இம்மன்ற உறுப்பினர்கள் பல்வேறு திட்டக் குழுக்களில் முனைப்பாக ஈடுபடுவதுடன், விழா முன்னேற்பாடுகளில் சாக்ரமெண்டோ தமிழ் மன்ற உறுப்பினர்களும் ஆர்வமாக பங்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு அறக்கட்டளை (TNF - Tamilnadu Foundation) மற்றும் அமெரிக்க தமிழ் மருத்துவ அமைப்பு (ATMA - American Tamil medical Association) போன்ற முக்கியமான அமைப்புகளும் தொண்டுக்கு தோள் கொடுத்து வருகின்றன.  

இந்த விழாவின் கருப்பொருள் ‘தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்!’ இதன் படி பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. பிரபல பாடகி சௌம்யா வரதன், மற்றும் பட்டிமன்ற/கவியரங்கக் கவிஞர் சுமதிஸ்ரீ, கவிமாமணி அப்துல் காதர் ஆகியோர் இசைத் தமிழையும் இயற்றமிழையும் கொண்டாடுகிறார்கள். விஜய் டீவி புகழ் “சூப்பர் சிங்கர் திறமையாளர்கள்  செல்வன் திவாகர், செல்வி பூஜா மற்றும்  செல்வி பிரகதி ஆகியோர்களுடன் இசை மழையில் நம்மை நனைக்க வருகிறார் திரையிசைப் பாடகர்கள்  ஹரிசரண் மற்றும் ரோஷினி. பாடகர் ஹரிசரணுடைய  Bennette and Band  குழுவில் தானும் பாடுவதுடன், , தமிழ்நாட்டின் ஆதி இசையாகிய பறை இசையயை இசைத்து,  தமது புத்தர் கலைக்குழுவினருடன் அனைத்துலக தமிழ்ர்களையுன் இணைத்து புதுமையான  நடன நிகழ்ச்சி வழங்குகிறார்  “கும்கி திரைஇசைப்புகழ்  மகிழினி மணிமாறன்.முனைவர் சுடலைமுத்து பழனியப்பன், முனைவர் வி.எஸ். இராஜம், வைதேகி ஹெர்பர்ட், பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட்   உள்ளிட்ட மற்ற அறிஞர்களும் சிறப்புரை வழங்க, நடிகை ஏமி ஜாக்சன் தமிழ்த்திரை விரும்பிகளுக்கு உற்சாகமூட்ட விழாவில் கலந்து கொள்கிறார். உலகத் தமிழர்களுக்கிடையே உறவுப்பாலம் அமைக்க ”நவீனத் திருமணம் நிகழ்ச்சியை சன் டிவி புகழ் ”கல்யாண மாலை குழுவும் இந்த விழாவில் நடத்துகிறது. இந்த வருட சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற நாவலான “அஞ்ஞாடி நாவலை எழுதிய ஆசிரியர் திரு.பூமணி அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட உள்ளது.

இவ்விழா சிலிக்கான் பள்ளதாக்கில் நடைபெறுவதால், சுயதொழில் முனைவோருக்கான நிகழ்ச்சி (Entrepreneurship Forum)இரு துணை அரங்குகளில் முக்கிய சிறப்பு அழைப்பாளர்களோடு மிகவும் புதுமையாகவும், பெரிய அளவிலும் ஒழுங்கு செய்யப்படுகிறது. தொழில் முனைவோரின் சிறந்த புதிய/சுய திட்டங்களை (Best startup ideas)ஊக்குவிக்கும் வகையில் மாபெரும் போட்டி நடைபெற உள்ளது. புதுத்தொழில் திட்டங்களின் முதலீட்டாளர்களை (Venture capitalists) நடுவர்களாக கொண்டு, தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த திட்டங்களுக்கு பரிசு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் சுயதொழில் முனைவில் விருப்பம் உள்ளோர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டிய அரிய நிகழ்ச்சியிது. அது மட்டுமல்ல, சுயதொழில் முனைவில் யோசனை/ திட்ட முன்வரைவு உள்ளோர் அதை எவ்வாறு வெற்றிகரமான தொழிலாக எடுத்து செல்ல வேண்டும் என்பதை சந்தை ஆராய்ச்சி (Market research), நிதி, திட்டமிடல், சட்டம் என பல  பரிமாணங்களில் விளக்கும் வகுப்புகளும்  நடக்க உள்ளன.மிகப்பெரிய நிறுவனங்களில் உயர் பதவியில் இருப்போர், வெற்றிகரமான தொழில் முனைவர்கள் மற்றும்  தொழில் தொடங்குவது பற்றி விவரிக்க இந்திய அரசு உயரதிகாரிகள் என பல்முனை நோக்கிலும் கருத்தரங்குகள் நடக்க உள்ளன.உயர்நிலை, நடுநிலைப்பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டால் வாழ்க்கையை அவர்கள் விரும்பிய பாதையில் செலுத்த பேருதவியாய் இருக்கும்

. அமெரிக்க தமிழ் முன்னோடிகளை (Tamil American Pioneer) கண்டறிந்து அவர்களுக்கு பேரவையின் தமிழ் முன்னோடி விருதும் (TAP Award) அளிக்கப்பட்டு சிறப்பு செய்யப்படவுள்ளார்கள். அமெரிக்க தமிழ் மருத்துவ அமப்பு (ATMA) பேரவையுடன் இணைந்து, மருத்துவர்களுக்கான தொடர்கல்வி நிகழ்ச்சிகள் (CME - Coninuing medical education seminars) ஏற்பாடு செய்யப்படுகின்றன. இத்துடன் தமிழ் கலாசாரத்தையும் வாழ்க்கையையும் பிரதிபலிக்க குறும்பட போட்டியும், இளையர்களுக்கான இளையர்களால் முன்னெடுக்கப்படும் Youth Meet போன்ற நிகழ்ச்சிகளும், அனைவரும் கலந்து கொள்ளகூடிய தமிழ் இலக்கிய வினாடி வினா மற்றும் தமிழ்த்தேனீ போன்ற ஆர்வத்தைத்தூண்டும் கவிதை, நிழற்படப் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட உள்ளன

நாடகத் தமிழுக்கு சிறப்பு சேர்க்க வரலாற்று நாடகம் அரங்கேறுகிறது. வரலாற்றுப் புதினங்களுக்கு பெருஞ்சிறப்பு பெற்ற எழுத்தாளர் கல்கியின் ”பொன்னியின் செல்வன் நாவலை மிகப் பெரிய வெற்றிப்படைப்பாக அமைத்து வழங்கிய, அபிராமி கலை மன்றத்தின் பாகீரதி சேஷப்பன், ஸ்ரீதரன் மைனர், மற்றும் வேணு சுப்பிரமணியன் ஆகியோர், இம்முறை அவரின் மற்றுமொரு படைப்பாகிய ”சிவகாமியின் சபதம் நாவலை அரங்கேற்ற இருக்கிறார்கள். வளைகுடா பகுதி தமிழ் நாடக ஆர்வலர்களை கொண்டு அரங்கேறும் இந்த நாடகம், விழாவின் முக்கியமான ஒரு நிகழ்வு.

பேரவையின் தமிழ் விழாவைக் குறித்து அறிய சுட்டவும் www.fetna2015.org அல்லது www.fetna.org. மேலும் விவரங்களுக்கு coordinator@fetna.org அல்லது secretary@bayareatamilmanram.org ஆகிய மின்னஞ்சல்களுக்கு எழுதுங்கள். நடைபெறுவது நம் வீட்டு விழா. வாருங்கள். வடம் பிடியுங்கள். சேர்ந்து நாம் தமிழ்த் தேர் இழுப்போம். .

                        ’எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...