Sunday, July 19, 2015

இடமாற்றம்


விண்மீனொன்று
வீதியிறங்கி வந்தது ...
வாசல் மாந்தர்க்கது
வெறும் விளக்காய் தெரிந்தது
அண்மித்த விண்மீனின்
வெம்மை தகிக்க
விளக்கெண்ணை எரித்து
வெளிச்சம் கண்டோர்க்கு
விண்மீன் புரியவில்லை
அதியுஷ்ணம் அதன்
இயல்பென்று விளங்கவில்லை
அவருள்ளில் பொருந்தா
விண்மீன் பாவமாயினும்..
இங்குறைய விதிக்கப்பட்ட
சாபம் அதன் வாழ்வு
தனைநொந்த அது
நுகரப்படா வீரியத்தை
வெளியில் வெறுமனே
வெறுப்புடன் பாய்ச்ச
மண்ணின் மெளடீகம்
தாக்கி அகாலத்தில்
விண்வீதி திரும்பியது
வெந்நீர் அடுப்புகளிலும்
சோற்றுப்பானை சூட்டிலும்
சுருட்டுக் கங்கிலும்
ஆலையின் ஜூவாலையிலும்
சூளையின் தணலிலும்
விளக்குகளிலும்
விழாப் பந்தங்களிலும்
விடா பந்தங்களிலும்
பிறர் அறியாது
தன் வீரியஇயல்பை
பகிர்ந்துவிட்ட
தரையிறங்கிய
மற்றெல்லா விண்மீன்கள்
வான்நோக்கி தேம்புகின்றன.
விண்மீன்கள் வீதிக்கு
இறங்கிவர வேண்டாம்
சுயம் கெடாமல்
அவை இங்கே
இருக்கக் கடவதில்லை
சார்ந்தோர்க்கிரங்கி
சுயம் கெட்டவை
விண்மீனாய்
தொடர்வதில்லை.


Sunday, July 05, 2015




சமத்துவம் காண

ஆன்றோரே அவையோரே
அன்புள்ளம் கொண்டோரே...
சமத்துவ நாற்றாங்கால் தமிழகம் தன்னில்
வளமேவ வளர்ந்து விட்டு
தமிழ்நாட்டின்பால் கொண்ட நேசம்
இன்னமும் மாறாமல்
அயலக மண்ணில் நலமும் வளமும்
பலமும் பெற்று உரைபவரே...
தான் பெற்ற உதவியனைத்தும்
தன்னிலும் இன்னும் தாழ்ந்தோர்
பெறவேண்டுமென்ற உள்ளம் கொண்டு
தொண்டிலே பழுத்த பழமாகி விட்ட
தூய எண்ணம் கொண்டோரே.....
கேளுங்கள் நான் செப்புவதை...

கவியரங்க தலைப்புகளில்
இதுவரை எடுக்காத தலைப்பு என்று
வழங்கினர் இத் தலைப்பு..
சமத்துவம் காண...
அதுவே என் தலைப்பு..

என்னடா அதிசயம் இதுவா யாரும்
எடுக்காத தலைப்பு ?
அத்துணை இலகுவா இவ் விடயம் ?
என்று நான் வியக்கும் வேளையில்.....
வசிப்பது அமெரிக்கா என்பது
சிந்தையில் எட்டியது.
வெள்ளையும் பழுப்பும் கருப்பும்,
ஆணும் பெண்ணும்
திருநங்கையும்
சனநாயகம் குடியரசு
பச்சை கட்சிகளும்
சரிநிகர் சமானமாய்
சமத்துவம் பூண்டு
அரசாட்சி செய்யும் தேசத்தில்
சமத்துவம் காண -என்பது
ஏக்கமாய் எப்படித் தோன்றும்?
வெள்ளை மாளிகையையே
நிறம் கடந்த மாளிகையாய்
மாற்றிய
நிஜமான தலைவர்கள்
இருக்கும் தேசத்தில்
சமத்துவம் காண என்பது
ஏக்கமாய் எப்படித் தோன்றும்??.
இல்லாது போனால் தானே
எல்லாரும் ஏங்குவர்..
இத்தலைப்பு நாடி
எல்லோரும் ஏகுவர்

சமத்துவம் காண என்பது
ஏக்கமாய் இன்னும் ஒலிக்க
இது என்ன இந்தியாவா...?  ...
நல் இமயமும் நலங்கொழிக்கும் கங்கைநதியும்
வெல்லத் தமிழ்நாட்டிம் மேன்மை மிகு பொதிய மலையும்
செந்நெல் வயல்களும் செழுங் கரும்புத் தோட்டங்களும்
தின்னக் கனிகளும் தெவிட்டாப் பயன்மரங்களும்
இன்பமும் செறிந்திருக்கும் இப் பெரிய தேசத்தில் ….
காவி அங்கே
மேவி வரும் வேளையிது
பிறப்புசார் தகைமைகள்
பல்லக்கேறும் தருணமிது
நம்நாடு நீங்கினாலும் விழிப்புடன்
சற்றே நாம் இருந்திடல் வேண்டும்
இல்லையேல் சமத்துவம் என்பதை
வீதியில் விட்டுவிட்டு
வலிமையுள்ளது எஞ்சும் என்ற
காட்டு வேதத்தை
நாட்டுக்குள் கொண்டு வந்து
பேதம் வளர்ப்பர்
வயிறு புடைத்தவனுக்கும்
வாழ்வே பசிப்போராட்டமாய்
போனவனுக்கும் ஒரே அளவில்
உணவு படைப்பர்...
பிறப்பிலேயே கால் இழந்த முடவனை
பந்தயத்தில் ஓடச் சொல்வர்.
இவர்கள் சொல்லும் சமத்துவம்
சமத்துகள் சொல்வது.....

சமத்துவம் அஃதன்று.

சமத்துவம் காண என்பது
வாடிய பயிரைக் கண்டு தானும்
வாடிய வள்ளலார் போல
கடையனுக்கும் அன்பு காட்டும்
கருணைப் பெருங்கடலாய் உறைவதே
வரப்புயர நீர் உயரும் நாட்டில்
சிலர் மட்டும் தன் தரப்பு உயர
தன் அறிவு உயர உயர
வறண்டு போவர்
கனியாது இருண்டு போவர்.....
காயிலேயே வெம்பிப் போவர்.   
நாயினும் கீழாய் போவர்.
ஒதுக்கீடு வேண்டாம் என்ற
எண்ணத்தோடு சமத்துவம்
சாகடிக்கும் இவர் சொல்லட்டும்
எந்த ஒதுக்கீடு கொண்டு
அமெரிக்காவில் இத்தனை
எளியர் சிறக்கின்றார்
விண்ணிலேறி பறக்கின்றார்

சமத்துவம் காண என்பது
நலம் பயக்கும் செயல் செய்ய
விழையும் நானிலத்தின்
தலைவனுக்கு
ஒரு தீராப் பெருங்கனவு
தன்குடிகள் அனைவர்க்கும்
நாட்டின் வளங்களை
சரியாய் பகிர்ந்து தரும்
உத்தம யோசனை இது
இல்லையேல்
பள்ளிக்கு வரமுடியாத
பசிவாதை தீர்க்க
மதிய உணவு எங்கே கிடைத்திருக்கும்?
நிஜ வாழ்க்கை நியாயங்களுக்கு
நெருங்கியும் வராத
நீச ஞாயங்களால்
ஒரு தலைமுறையே
தவித்திருக்கும்
அறிவொளி கிட்டா
அந்தகாரத்தில் ...
கிளரொளி இளமை
கெட்ட பின்னும்......

சமத்துவம் காண என்பதே அரசின்
தலையாய தத்துவம் என்ற
பெருங்கொள்கையாய் போன
நாற்பதாண்டில்
தமிழகம் கல்வியில் தலை
நிமிர்ந்து நிற்கிறது.
செல்வத்தின் சாயல்
செம்மையாய் விழுகிறது.
வறியவர்கெல்லாம் வாழ்வு
வந்தது
எனவே இப்போதே
எழுதி வைப்போம்
எளியவர்களின் சரித்திரம்
கடையனுக்கும் கலைமகளும்
தனலட்சுமியும்
தயை செய்தார்ளென..
இல்லையேல் களப்பிரர்களின்
காலம் மீண்டு எழுந்தது என்று
முதுகுடுமி பெருங்கனவான்
மீளவும் எழுதி வைப்பர்.

சமத்துவம் காண என்பது
பிறப்பிலே பெற்ற இழிவை
பெற்ற கல்வி வாயிலாக
துடைத்தெறியும் தூய வேள்வி...
பெற்ற கல்வியை ஆதாரமாக்கி
அதிகாரம் படைத்தோரை
கேள்வி கேட்கும் அற்புத வேள்வி
நிலத்திலே பார்க்கின்ற கண்களை
நிமிர்ந்து நேரே நின்று
நிலவு பார்க்கச் சொல்லும்
நிசமான அக்கறை கொண்ட
நீண்டநாள் ஆசையில் விளைந்த
வசமான யோசனை.

சமத்துவம் காண என்பது
பிறப்பு தாண்டியும்
ஆண் பெண்
சாதி மதம்
உயர்ந்தோர் தாழ்ந்தோர்
உடல் மன  ஊனமுற்றோர்
என்ற எல்லைகள் கடந்து
பெருங்கடலாய் பொங்கும்போது
நாடு சிறக்கும் வீடு சிறக்கும்
நம்பிக்கை பிறக்கும்
நீதி பிழைக்கும்
நானில மாந்தர்க்கு.
அதுவரை கொண்ட உறுதி
குறையாமல்
வரும் தலைமுறைக்கும்
அளித்து வருவோம்
எம் படிப்பினைகள்.
நாற்றங்காலில் பயிர்கள்
செழிக்கட்டும்.
பிறப்பின்பால்  இழிவுறாத
இறுதி உயிர் வளரும்வரை
சமத்துவம் காண என்பது
நம் கொள்கையாய் தொடரட்டும்



நன்றி வணக்கம்.

Friday, July 03, 2015

வட அமெரிக்க தமிழ்சங்கப்பேரவை விழா - விழுதுகள் ஜூலை 2015


சிறகுள்ள பறவைக்கு வானமே வீடு. வருடந்தோறும் வேடந்தாங்கலுக்கு கண்காணாத தூர தேசங்களில் இருந்து வந்து போகும் பறவைகளை பார்த்திருக்கிறீர்களா? எது அவர்களை தடம் மாறாமல் இங்கு கொண்டு வந்து சேர்க்கிறது? எது அவர்களை மறுபடியும் தாய்நாட்டுக்கு செலுத்துகிறது. நாமறியோம்.. ஆறறிவில்லாத புள்ளினங்களுக்கே தாய்மடி தெரியும்போது இனத்தாலும், மொழியாலும் அதன் பாரம்பரியத்தாலும் மிகு பெருமை கொண்டு விம்முகின்ற நெஞ்சம் கொண்ட தமிழனுக்கா தன் தாய்மடி தெரியாது?  புலம் பெயர் நாடுகளிலும் தன் வேர்களை மறக்காமல் மேலும் மேலும் விழுதுகளை மண்ணுக்கு அனுப்பி உரம் சேர்க்கும் வழிகளில் அவன் கண்ட ஒன்றுதான் தமிழ்ச் சங்கப்பேரவை விழா. ..உலகெங்கிலும் இருந்து கூட்டம் கூட்டமாய் வந்து தமிழைக் கொண்டாடுவதில் அவனுக்கு இருக்கும் ஆர்வம் இம் முறையும் வெளிப்படுகிறது-  ஆம்.. ஜூலை 3,4, 5 தேதிகளில் குடாப்பகுதி தமிழ்மன்றம் தலைமை ஏற்று நடத்தும் ஃபெட்னா தமிழ்ச் சங்கப் பேரவை விழாவின் ஏற்பாடுகள் முழு வேகத்தில் நடந்து வருகின்றன.  இவ் விழாவில், இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் சுவையில் இனிய நிகழ்ச்சிகள் அத்துறை வல்லுநர்களால் நடத்தப்படுகிறது. தமிழ்த்திரை பிரபலங்களின் உற்சாகமான பங்களிப்புடன் நடக்கும் இந்த விழா நம் மக்களை கிட்டத்தட்ட 80 மணி நேரங்களுக்கு உவகையூட்டக் கூடிய மாபெரும் கலைவிழா. 

இசை மழையில் நனைக்க , விஜய் டீவி புகழ்சூப்பர் சிங்கர்திறமையாளர்கள் செல்வி பூஜா மற்றும்  செல்வி பிரகதி ஆகியோர்களுடன்  வருகிறார்கள் திரையிசைப் பாடகர்கள்  ஹரிசரண், ஆலாப் ராஜு மற்றும் ரோஷினி. பாடகர் ஹரிசரணுடைய  Bennette and Band  குழுவில் தானும் பாடுவதுடன், தமிழ்நாட்டின் ஆதி இசையாகிய பறை இசையயை இசைத்து,  தமது புத்தர் கலைக்குழுவினருடன் அனைத்துலக தமிழர்களையும் இணைத்து புதுமையான  நடன நிகழ்ச்சி வழங்குகிறார்  கும்கிதிரைஇசைப்புகழ்  மகிழினி மணிமாறன். சங்கீத இசைப்பேரறிஞர் ஸ்ரீ பாபநாசம் சிவன் அவர்களின் 125 வது ஆண்டு நினைவாக அவரின் பொன்னான பாடல்களை முன் வைத்து ஒரு இசை, வாத்திய நிகழ்ச்சி நடக்கிறது. சாகித்திய அகாதெமி விருது பெற்ற "அஞ்ஞாடிநாவல் எழுத்தாளர் திரு. பூமணி, தமிழ்/இந்தியவியல் அறிஞர்கள் முனைவர் சுடலைமுத்து பழனியப்பன், முனைவர் வி.எஸ். இராஜம், வைதேகி ஹெர்பர்ட், பேராசிரியர் மைக்கேல் விட்சல் (ஹாவர்டு பல்கலைக்கழகம்) போன்றோர் கலந்து கொள்ளும் இலக்கிய நிகழ்வு அரங்கேறுகிறது. நடிகை ஏமி ஜாக்சன் தமிழ்த்திரை விரும்பிகளுக்கு உற்சாகமூட்ட விழாவில் கலந்து கொள்கிறார். உலகத் தமிழர்களுக்கிடையே உறவுப்பாலம் அமைக்கநவீனத் திருமணம்நிகழ்ச்சியை சன் டிவி புகழ்கல்யாண மாலைகுழு இந்த விழாவில் நடத்துகிறது. பிரபல பாடகி சௌம்யா வரதன், மற்றும் பட்டிமன்ற/கவியரங்கக் கவிஞர் சுமதிஸ்ரீ, கவிமாமணி அப்துல் காதர் ஆகியோர் இசைத் தமிழையும் இயற்றமிழையும்   கொண் டாடுகிறார்கள்.                                                   கவிமாமணி அப்துல் காதர் அவர்கள் தலைமையில்ஆர்த்தெழு நீ!’ என்ற தலைப்பில் மாபெரும் கவியரங்கத்தில் சுவையான தலைப்புகளில் புலம் பெயர் தமிழ் கவிகள் கவிபாட உள்ளனர். கவிஞர் சுமதி ஸ்ரீ அவர்கள் நெறிப்படுத்தி நடத்தும்  அனல் பறக்கும்  கருத்துக்களம்தமிழன் தன் அடையாளத்தை நிலைநிறுத்த மிகவும் அவசியமானது மொழியா? கலையாஎன்ற தலைப்பில் நம் நெஞ்சத்தை கொள்ளை கொள்ளும் என்பது உறுதி.

இளையோர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளக் கூடிய ஒரு பக்க சிறு கதைப் இப்போட்டிக்கான கரு: "புலம் பெயர்ந்த தமிழர்களின் இன்றைய தலைமுறை எதிர்நோக்கும் பண்பாட்டு முரண்பாடுகள்(cultural conflicts)". தலை சிறந்த மூன்று சிறுகதைகள் "சிறகு" தமிழ் இணைய வார இதழில் பிரசுரிக்கப் படும்! இப்போட்டிக்கானசிறுகதையை அனுப்பி வைக்க வேண்டிய கடைசி தேதி ஜூன் 10, 2015

தமிழ் கலாச்சாரத்தையும் வாழ்க்கையையும் பிரதிபலிக்க குறும்படப் போட்டியும், இளையர்களுக்கான இளையர்களால் முன்னெடுக்கப்படும் Youth Meet போன்ற நிகழ்ச்சிகளும், அனைவரும் கலந்து கொள்ளக்கூடிய தமிழ் இலக்கிய வினாடி வினா மற்றும் ஆர்வத்தைத் தூண்டும் தமிழ்த்தேனீ போன்ற  கவிதை மற்றும் நிழற்படப் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட உள்ளன. தமிழ்குறும்படப் போட்டியில் பேரவைக் குழுவினருடன் இணைந்து செயல்பட பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜின் BenchFlix நிறுவனம் முன்வந்துள்ளது. தமிழில் சமீபகாலங்களில் வெளிவந்தபீட்சா  மற்றும்ஜிகிர்தண்டா  படங்கள் மூலம் அதிக கவனம் பெற்றவர் இளம் தலைமுறை இயக்குநர் திரு.கார்த்திக் சுப்பாராஜ் அவர்கள். இந்நிறுவனம்  தமிழ் குறும்படங்களை அங்கீகரித்து, அவர்கள் பொதுவெளியில் அங்கீகாரம் பெறவும், ஆர்வத்துடன் செயல்படவும் உதவி வருகிறது. தமிழ் பேரவைக்கான குறும்படப் போட்டியில் பரிசுக்கான படங்களை தெரிவு செய்வதில் நம் பேரவைக்குழுவுடன்  இணைந்து கார்த்திக் சுப்பாராஜ் செயல்பட உள்ளார். தமிழ் பேரவை பரிசை வென்ற படங்கள் அவர் நிறுவனம் மூலம் தமிழக/இந்திய அளவில் அங்கீகாரம் பெற சாத்தியக் கூறுகள் உள்ளன. பேரவையின் தமிழ் விழா வரலாற்றிலே முதன் முறையாக இந்த ஆண்டு தமிழ் விழாவில் சிறந்த தமிழ்த் திரைப்படங்களுக்கான விருது வழங்கப்படவுள்ளது. பெட்னா திரைப்படவிருது பெறும் திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் குழு மும்முரமாக செயலாற்றிவருகிறது. சிறந்த ஐந்து திரைப்படங்களை இக்குழு ஜூன் மாத இறுதிக்குள் தேர்ந்தெடுக்கும். அந்த ஐந்து  திரைப்படங்களில் சிறந்த திரைப்படம் தமிழ்சங்க விழாவிற்கு வருகைதர பதிவு செய்துள்ள  தமிழன்பர்களால் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும்

நாடகத் தமிழுக்கச் சிறப்பு சேர்க்க வரலாற்று நாடகம் அரங்கேறுகிறது. வரலாற்றுப் புதினங்களுக்குப் பெருஞ்சிறப்பு பெற்ற எழுத்தாளர் கல்கியின்பொன்னியின் செல்வன்நாவலை மிகப் பெரிய வெற்றிப்படைப்பாக அமைத்து வழங்கிய, அபிராமி கலை மன்றத்தின் பாகீரதி சேஷப்பன், ஸ்ரீதரன் மைனர், மற்றும் வேணு சுப்பிரமணியன் ஆகியோர், இம்முறை அவரின் மற்றுமொரு படைப்பாகியசிவகாமியின் சபதம்நாவலை அரங்கேற்ற இருக்கிறார்கள். வளைகுடாப் பகுதி தமிழ் நாடக ஆர்வலர்களைக் கொண்டு அரங்கேறும் இந்த நாடகம், விழாவின் முக்கியமான ஒரு நிகழ்வு.

இவ்விழா சிலிக்கான் பள்ளத்தாக்கில் நடைபெறுவதால், சுயதொழில் முனைவோருக்கான நிகழ்ச்சி (http://www.tef2015.org/)இரு துணை அரங்குகளில் முக்கிய சிறப்பு அழைப்பாளர்களோடு பெரிய அளவில் ஒழுங்கு செய்யப்படுகிறது. தொழில் முனைவோரின் சிறந்த புதிய/சுய திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் மாபெரும் போட்டி நடைபெற உள்ளது. புதுத்தொழில் திட்டங்களின் முதலீட்டாளர்களை நடுவர்களாகக் கொண்டு, தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த திட்டங்களுக்குப் பரிசு கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, சுயதொழில் முனைவில் யோசனை/ திட்ட முன்வரைவு உள்ளோர் அதை எவ்வாறு வெற்றிகரமான தொழிலாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை, சந்தை ஆராய்ச்சி, நிதி, திட்டமிடல், சட்டம் எனப் பல  பரிமாணங்களில் விளக்கும் வகுப்புகளும்  நடக்க உள்ளன.மிகப்பெரிய நிறுவனங்களில் உயர் பதவியில் இருப்போர், வெற்றிகரமான தொழில் முனைவர்கள் மற்றும்  தொழில் தொடங்குவது பற்றி விவரிக்க எனப் பல்முனை நோக்கிலும் கருத்தரங்குகள் நடக்க உள்ளன.இளைஞர்கள் மற்றும் சுயதொழில் முனைவில் விருப்பம் உள்ளோர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டிய அரிய நிகழ்ச்சியிது.

 தமிழ்நாடு அறக்கட்டளை (TNF - Tamilnadu Foundation) மற்றும் அமெரிக்கத் தமிழ் மருத்துவ அமைப்பு (ATMA - American Tamil medical Association) போன்ற முக்கியமான அமைப்புகள்  தொண்டுக்குத் தோள் கொடுத்து வருகின்றன. அமெரிக்கத் தமிழ் மருத்துவ அமைப்பு (ATMA) பேரவையுடன் இணைந்து, மருத்துவர்களுக்கான தொடர்கல்வி அமர்வு (CME - Continuing medical education) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இது Emory University School of Medicine, Atlanta வினால்  அங்கீகரிக்கப்பட்ட அமர்வாகும்.

வட அமெரிக்க நாடுகளில் வாழும் தமிழ் சமூகம் அந்நாட்டின் வளர்ச்சிக்கு தங்களது சீரிய பங்கினை ஆற்றி வந்திருக்கின்றனர். பல தமிழர்கள் தங்களது துறைகளில் தலைமையிடத்தை அடைந்து சிறப்புப் பெற்றுள்ளனர். அவ்வாறான முன்னோடிகளை சிறப்பிக்கவும், அவர்கள் நம் வருங்கால தலைமுறையினருக்கு வழிகாட்டிகளாகத் திகழவும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை  2014 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கத் தமிழ் முன்னோடிகள் விருதுகளை (Tamil American Pioneer Award) வழங்கி வருகிறது. அவ்வகையில் 2015ஆம் ஆண்டின் விருதுகளை, ஜூலை மூன்றாம் நாள் மதியம் பெறப்போகும் தமிழ் முன்னோடிகள் இதோ 

1. முனைவர் ரங்கசுவாமி ஸ்ரீநிவாசன், கண்டுபிடிப்பாளர். இவர் லேசர் ஒளியினைக் கொண்டு கண் அறுவை சிகிச்சை செய்யும் முறையினைக் கண்டுபிடித்தவர்.


2. திரு கிருஷ்ணன் சுதந்திரன், தொழில் அதிபர் - டீம் பெஸ்ட் நிறுவனத்தின் தலைவர். http://en.wikipedia.org/wiki/Krishnan_Suthanthiran

3. முனைவர் முத்துலிங்கம் சஞ்சயன், இயற்கை அறிவியலாளர் 


 4. பேராசிரியர் சேதுராமன் பஞ்சநாதன், கணிப்பொறியியல், http://en.wikipedia.org/wiki/Sethuraman_Panchanathan

5. பேராசிரியர் ப்ரியம்வதா நடராஜன், வானியற்பியல், யேல் பல்கலை


6. மருத்துவர் ராமநாதன் ராஜூ, மருத்துவம். http://www.nycpm.edu/newsEvents/commencement2014.pdf

7. திரு பி பீமன், இசைக் கலைஞர்,


 8. அகிலன் அருளானந்தம், பேராசிரியர் மற்றும் வழக்குறைஞர்,


இயல் , இசை , நாடகம் மட்டுமின்றி தமிழ்ச்சமூகத்தின்  அறிவுக்கும் திறமைக்கும் சான்றாக,  உலகத்தோர் உணர்ந்து கொள்ள மட்டுமின்றி சகதமிழர்கள் உணர்ந்து கொள்ளவும், உள்ளொளி பெறவும் தகைசால் அறிஞரகளைக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் படைக்கப்படுகின்றன. மானமும், வீரமும் , உழைப்பும் அணிகலனெக் கொண்டு வாழ்ந்த தமிழ்ப் பெருங்குடி,  நவகாலத்துக்கென விவேகமும் என்னும் வீரத்திலகமும் இட்டுத் திகழ்ந்திட பெருமை பெற்று உயர்ந்திட  வாருங்கள் குடாப்பகுதிக்குதமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.

பேரவையின் தமிழ் விழாவைக் குறித்து அறிய சுட்டவும் www.fetna2015.org அல்லது www.fetna.org. மேலும் விவரங்களுக்கு coordinator@fetna.org அல்லது secretary@bayareatamilmanram.org ஆகிய மின்னஞ்சல்களுக்கு எழுதுங்கள்.

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...