இங்கேதான் ஒரு காலத்தில்
நெக்ஸஸ் சர்வீஸ் செண்டர் இயங்கிக் கொண்டிருந்தது. முக்கிய கிளை 15-20 ஊழியர்களோடு திருச்சியில் இயங்கிக் கொண்டிருந்தாலும், தஞ்சாவூர் / மாயூரம்/ திருவாருர்/ கும்பகோணம் பகுதி வாடிக்கையாளர்களுக்கு உடனடி கவனிப்பு வேண்டுமென்பதால் ஒரு சேல்ஸ் ஆசாமியையும், சர்வீஸ் பிரகஸ்பதியையும் பிடித்து, கும்பகோனத்தில் ஒரு வீட்டை பிடித்து, கம்யூட்டர்/ போன்/டெலக்ஸ் மெஷினோடு கொஞ்சம் ஸ்பேர்ஸ் கொடுத்து, உட்கார்த்தி வைத்திருந்தார்கள்.
சர்வீஸுக்கு நான். சேல்ஸுக்கு வெங்கடேஷ் ராமானுஜம். பேரென்னவோ ரெண்டுபேருக்கும் சுத்த ஐயங்கார் பேரென்றாலும், பண்ணுவதெல்லாம் அதற்கு சம்பந்தமில்லாத வேலைகள். காலை மாயவரத்திலிருந்து சரவணாவோ, தாஜுதீனோ, செந்திலோ பிடித்து நான் வர, ஆர்வி தஞ்சாவூரிலிருந்து வருவான்.
வந்தவுடனேயே Menthol plus/ Gold kings உடன் கொஞ்சம் கதை அடித்து காப்பி செலுத்தி விட்டு, திருச்சிக்கு போன் பண்ணி மேனேஜருக்கு மஸ்கா போட்டு விட்டு, ஒரு பதினோரு மணிக்கு எழுத்து (கொசு விரட்டியாகவும்) உபயோகித்துக் கொண்டிருந்த என் வெஸ்பாவில் உலா போவோம். சோழனோ, சிட்டி யூனியன் பேங்கோ, டெலிகாம் டிபார்ட்மெண்டோ கொஞ்ச நேரம் போய் ஜல்லி அடித்து விட்டு, மாமி மெஸ்ஸில் போய் அவர்கள் பெண்ணை சைட் அடித்துக் கொண்டே நன்றாக கொட்டிக் கொண்டு, மறுபடியும் ஒரு மெந்த்தால்/கிங்க்ஸ்ஸுக்கு பிறகு ஆபிசுக்கு வந்து பேசிக் கொண்டே கொஞ்சம் குட்டித்தூக்கம் போட்டுவிட்டு ( ஆமாம்...மதியம்தான்..) , 2:30 போல எழுந்து, மடத்துத் தெரு வெங்கட்ரமனாவில் கடப்பா/அசோகாவுடன் ஒரு ரவாதோசை/ காப்பி சாப்பிட்டுவிட்டு வேட்டை மறுபடியும் தொடரும். வேலை என்னவோ இப்படி ஜாலியாக போனாலும், வியாபாரம் ஏகத்துக்கும் செழித்துக் கொண்டிருந்தது. துடியான சர்வீஸ் இஞ்சினியர் காரணமோ ..என்னவோ..?? :-). அருமையான காலங்கள் அவை. மேற்பார்வை பண்ண யாரும் இல்லாமல், பெருமைக்கும் எங்கள் சிறுமைக்கும் நாங்களே காரனமாக இருந்ததால் எனக்கும் ஆர்விக்கும் மிக அருமையான நட்பு உருவாகியது. வாழ்வில் முப்பது வயதுக்கு முன்பு ஏற்படும் நட்புகளை போல பிற்காலத்தில் ஏதும் அவ்வளவு புரிந்துணர்வுடனும், அருமையாகவும் தோன்றுவதே இல்லை என்று நெகிழ்சியோடு நினைக்கிற வகையில் ஆர்வியுடனும், இன்னும் பல நெக்ஸஸ் நண்பர்களுடனும் நட்பு தொடர்கிறது.
பல காரனங்களால், நெக்ஸஸில் இருந்து மூலைக்கொன்றாக 1999ல் பலரும் பறந்தோம். அல்கோபாரிலும், சவூதியிலும், துபாயிலும், சென்னையிலும், நியூஜெற்ஸியிலும், சன்னிவேலிலும், சாக்ரமண்டோவிலும் தினாரும், ரியாலும், டாலரும், லட்சங்களுமாக எல்லோரும் இருக்க, ஆர்வி மட்டும் தஞ்சாவூரிலேயே இருக்கிறான். காரணம்,நாங்கள் எல்லோரும் வெளிக்கிளம்பிய 1999-2000ல் ஆர்வியின் தகப்பனார் தவறிப் போனார். அதனால் மூத்தபிள்ளையாகிய அவன் மட்டும் குடும்பத்துடன் தங்க வேண்டிய நிர்ப்பந்தம். உடல்நிலை சரியில்லாத சகோதரி மற்றும் அம்மா, இவற்றுடன் அவன் குடும்பம், இரண்டு பெண் மகவுகள் என்று சூழ்நிலை அவனை அங்கே கட்டி வைக்க, தளராமல் HCL/ WIPRO/ ACER கம்ப்யூட்டர்களுக்கு டீலர்ஷிப் எடுத்து, கம்பெனி நடத்தி வந்தான் ஐந்து வருடமாய். குறைந்து கொண்டே வரும் profit margin, கட்டுப்படுத்த முடியாத establishment expenses என்று பூதாகாரமாக வளர்ந்து போக, நேற்று இரவு பேசிக் கொண்டிருக்கும் போது பிஸினஸை மூடிவிட்டு வேலை பார்க்கப் போகிறேன் என்று சொல்கிறான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்த மாதிரி ஒரு பருவத்தில் வாழ்க்கையில் ஆறு வருடங்களை இப்படி இழந்து விட்டானே என்று ஒரே வருத்தம்.
ஆர்விக்கு வெளிநாட்டில் வேலை செய்ய ஆர்வம் இருப்பதாக தெரிகிறது. நான் சிங்கப்பூரில் இருந்தவன் என்றாலும் வெளிவந்து ஆறு வருடம் ஆனதால் நடப்பு நிலவரம் தெரியவில்லை. எப்படி வேலை வாங்குவது என ஐடியா இல்லை. யாராவது ஸ்பான்சர் செய்வார்களா, ஏஜெண்டுக்கு பணம் கொடுத்தால் ஆகுமா என்ற எந்த விவரமும் இல்லை. சிங்கை நண்பரகள், மற்றும் அமீரக நண்பர்கள்/மலேசிய/UK நண்பர்கள் யாராவது ஏதேனும் வழிகள் சொன்னால் சந்தோஷப்படுவேன். ஆர்விக்கு பன்னிரண்டு வருஷம் மார்க்கெட்டிங் எக்ஸ்பீரியன்ஸ், சரளமான ஆங்கிலப் பேச்சு, பேசுபவர்களை நம்ப வைக்கும் திறமையோடு நல்ல (கணிணி) டெக்னிக்கல் அறிவும் உண்டு. இந்த உதவியை செய்தீர்கள் என்றால் என் சொச்ச காலத்துக்கு நிம்மதியாக தூங்குவேன். ஏதாவது பணம் கொடுத்து செய்ய வேண்டும் என்றாலும் பிரச்சினை இல்லை.
உங்கள் தகவல்/உதவிக்கு எனது முன்கூட்டிய நன்றிகள்.